அன்புள்ள ஜெ,
ஸ்ரீநாராயண குருவின் வாழ்க்கையில் அவ்வளவாகக் கேள்விப் படாத சம்பவங்கள் இவை. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
குரு கிராமக் கோயில்களில் பலியிடுவதை நிறுத்தியது பற்றி சுவாமி தன்மயாவும் சொன்னார். சிறுதெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைவது என்பது ஒருவகையில் ஒரு சமூகத் தொகுப்பு செயல்பாடு தான் அல்லவா? நாராயண குரு போன்ற விளிம்பு நிலை மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு வேதாந்தியே இத்தகைய ‘மேல்நிலையாக்கத்தை’ ஊக்குவித்திருக்கிறார். பிரசாரம் செய்திருக்கிறார். எனவே, இப்போது தமிழகத்தில் சிறிய, கூரையில்லாத கிராமக் கோயில்கள் பெரிய, ஆகம வழிபாட்டுக் கோயில்களாக ஆவதையும் நாம் இந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கவேண்டும் இல்லையா?
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு
நாராயணகுரு அவரது சீர்திருத்தங்களில் முதன்மையாக செய்தவை மூன்று1. சிறுதெய்வ வழிபாட்டு நீக்கம் 2. குடிமறுப்பு 3.புலால் மறுப்பு
இவை மூன்றுமே மேல்நிலையாக்கம் சம்பந்தமானவை. அக்காலத்திலேயே அவர் பிராமணர்களை போல பிறரையும் மாற்ற முயல்வதாக நடராஜகுருவின் அப்பா டாக்டர் பல்பு குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் குருவுக்கு அதற்கான காரணங்கள் இருந்தன. அவர் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னுரிமைகளையும் ஆழ்மனக்கட்டமைப்பையும் மாற்ற விரும்பினார். அவர்களைக் கட்டிப்போடும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளையும் குறியீடுகளையும் அவர்கள் உதறாமல் முன்னேற்றம் சாத்தியமல்ல என்று நினைத்தார்.
ஒரு சிறுதெய்வம் இன்றைய ஆய்வாளனுக்கு ஓர் அபூர்வமான ஆய்வுப்பொருள். ஆனால் அன்று அதை வழிபட்ட மக்களுக்கு உண்மையான ஓர் இருப்பு. பல சிறுதெய்வங்கள் சென்றகால நிலப்பிரபுத்துவ கால மதிப்பிடுகளின் குறியீடுகள். ஈழவர்கள் வழிபட்ட பல தெய்வங்கள் நேரடியாகவே வன்முறையின் சின்னங்கள். வன்முறை நிறைந்த சென்ற காலகட்டத்தின் பிம்பங்கள். குரு ஈழவர்கள் அவற்றை விட்டுவிட்டு நவீன கால சின்னங்களுக்கு வரவேண்டும் என்று விரும்பினார். அறுகொலை போன்ற தெய்வங்களை தூக்கி வீசிவிட்டு சரஸ்வதி தேவியை அவர் நிறுவினார். அத்வைதியாக, வழிபாட்டுமுறைகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்தும் சரஸ்வதிதேவிக்கு துதிப்பாடல்கள் எழுதினார். இதை மிக விரிவான கோணத்தில்தான் பார்க்க வேண்டும்
இந்த மேல்நிலையாக்கத்தின் இழப்புகள் என்ன ,சரியா தவறா என்பதெல்லாம் ஒரு பக்க அறிவுத்தள விவாதங்கள் மட்டுமே. குறிப்பாக மேலைநாட்டு கோட்பாடுகளால் அவை முன்வைக்கப்படுகின்றன. கிறித்தவ அமைப்புகள் இந்து மதத்தை ஓர் அழிவுசக்தியாக காட்ட அவற்றை பயன்படுத்துகின்றன. ஒட்டுமொத்த நாட்டார் பழங்குடி நம்பிக்கைகளையே வேருடன் கெல்லி வீசிய பின்னரே கிறித்தவம் பரவியது- பரப்பப்படுகிறது என்பதை மறைத்து இந்து மதத்தின் உள்ளிழுக்கும் போக்கை மகாக்கொடுமை என அவர்கள் சித்தரிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் மேல்நிலையாக்கம் தவிர்க்க முடியாததாக நிகழ்கிறது. அதை எவரும் திணிக்கவில்லை. அது ஈராயிரம் வருடங்களாக நிகழ்ந்து வரும் ஒரு இடைவிடாத சமூகச் செயல்பாடு. அது ஏன் நிகழ்கிறதென ஆராயவே முடியும். நிகழக்கூடாதென சொல்வதற்கு ஆய்வாளர் சமூகத்திற்கு நீதிபதி அல்ல.
கடவுள்களின் வடிவங்களை மூன்றாகச் சொல்வது வழக்கம். செயல்தெய்வங்கள் அல்லது சிறுதெய்வங்கள். இவர்கள் குறிப்பிட்ட செயலுக்கான தெய்வங்கள். குறிப்பிட்ட சடங்குகளுடன் இடங்களுடன் குலங்களுடன் தொடர்புடையவை. இரண்டாவதாக , பெருந்தெய்வங்கள் அல்லது முழுமைத்தெய்வங்கள். படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்யும் கடவுள்கள். மூன்றாவதாக தத்துவ தெய்வங்கள். வழிபாடானது முதல் படியில் இருந்து மூன்றாவதை நோக்கி இயல்பாக நகர்ந்துகொண்டே இருக்கும். அந்தச் சமூகம் எந்த அளவுக்குப் பண்படுகிறதோ அதற்கேற்ப அந்த முன்னகர்தல் சாத்தியமாகிறது
ஒரு சமூகம் பழங்குடித்தன்மையுடன் இருக்கையில் சிறுதெய்வங்கள் இருக்கின்றன.பழங்குடித்தன்மையை இழக்க இழக்க அது பெருந்தெய்வத்தை நோக்கி நகர்கிறது. இன்று நம் கிராமங்களில் பல சிறு சமூகங்கள் படிப்பு மற்றும் செல்வத்தால் முன்னகரும்தோறும் அவர்களுக்கு பெருந்தெய்வம் தேவையாகிறது. ஆகவே பெருந்தெய்வங்களுடன் தங்கள் தெய்வங்களை இணைத்துக்கொள்கிறார்கள். பெருந்தெய்வங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தபப்ரிணாமம் வரலாறு முழுக்க இந்தியாவில் நடந்து வந்த ஒன்று. இன்று ஏன் இது ஒரு பேரழிவு என்றும், இவ்வாறு சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களுடன் இணைக்கப்படுவது ‘இந்துமயமாதல்’ என்றும் சொல்லப்படுகிறதென்றால் கிறித்தவ மதமாற்ற அமைப்புகளின் உள்நோக்கம் உள்ளே செயல்படுவதனால்தான். சிறுதெய்வங்களில் இருந்து வரலாற்றுப்போக்கில் விலகும் சமூகங்கள் கிறித்தவ பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் செல்ல வேண்டும் என்பதற்காகவே.
இந்து பெருமதத்துக்குள் செல்லும்போது சிறுதெய்வங்கள் அழிவதில்லை. அவை உருமாறுகின்றன. பெருந்தெய்வங்களாக காலப்போக்கில் உருவம் கொள்கின்றன. சிவனும் முருகனும் கூட அப்படி பெருந்தெய்வங்களாக ஆனவர்களே. சங்க காலத்தில் முருகன் சாதாரண குன்றுத்தெய்வம்தான். சங்கம் மருவும் காலத்தில் -திருமுருகாற்றுப்படை காலத்தில்- பெருந்தெய்வம். கண்ணெதிரே பெருந்தெய்வமாக ஆன சிறுதெய்வம் என்றால் அது அய்யப்பன் தான். இது இந்து மத செயல்பாடின் மிக இயல்பான ஒரு கூறு. வரலாற்று பின்புலமும் சமூகவியல் காரணங்களும் உடையது. நாராயணகுரு செய்ததும் அதையே. அய்யா வைகுண்டர் செய்ததும் அதையே. குரு விலக்கச்சொன்ன உக்கிரமான கிராம தேவதைகள் எல்லாமே கேரளத்தில் இன்று பெரிய பகவதிகளாக ஆகிவிட்டனர்.
ஒரு வன்முறைத்தெய்வம் ’அருள்மிகு’ தெய்வமாக மாறுவதென்பது அச்சமூகத்தின் உளவியலில் நிகழும் ஒரு முக்கியமான மாற்றம்.
ஜெ