தமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்

[தமிழ் ஹிந்து ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம். அதிலிருந்த அனைத்து மின்னஞ்சல்களுக்கும் அனுப்பினேன். திரும்பி வந்துவிட்டது. ஆகவே இங்கே வெளியிடுகிறேன். ]

index4
ஆசிரியருக்கு

இன்றைய இந்து நாளிதழில் கொரிய மொழி தமிழ் போலிருக்கிறது, கொரிய இளவரசி தமிழ்ப்பெண் என்பது போல ஓர் ஆய்வாளர் வெளியிட்ட கருத்தை செய்தி என கொடுத்திருக்கிறீர்கள். [பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்: தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்] அதை ஒரு நிருபர் அறிக்கையாக்கியிருக்கிறார்

இது இதழியலின் அடிப்படை விதிகளை மீறியதாகும். ஒரு கருத்து எப்போதும் செய்தியாவதில்லை. அக்கருத்தைச் சொல்பவர் நன்கு அறியப்பட்ட ஓர் ஆய்வாளராக இருக்கையிலும்கூட அதை பேட்டியாக, கட்டுரையாகவே வெளியிடவேண்டும். அதன் மறுதரப்புகளையும் வெளியிட்டு விவாதமாகவே முன்வைக்கவேண்டும்.

இவ்வகைக் கருத்துக்களை செய்தி என ஒரு நாளிதழ் வெளியிடுகையில் கருத்துக்கள் உருவாகிச் செயல்படும் விதம் குறித்து அறியாதவர்கள் அதை ஒரு தகவலாக , புறவயமாக நிரூபிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இதை ஆங்கில இந்து செய்வதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேற்படிக் கருத்து ஒர் அபத்தம். பலகாலமாக இவ்வகை அசட்டுத்தனங்கள் தமிழில் ஆய்வு என்ற பேரில் செய்யப்படுகின்றன. உலகமொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமையைப் பற்றி உலகப்பண்பாடுகளுக்கிடையே உள்ள ஊடுபாவுகளைப்பற்றி ஏதுமறியாதவர்கள் தங்கள் பார்வையில் தமிழின் சாயல் கொண்ட அல்லது அப்படி விளக்கமளிக்கத்தக்க எதைக்கண்டாலும் தமிழிலிருந்து சென்றது, அவையெல்லாம் தமிழே என்றெல்லாம் பேசுவது எப்போதும் நிகழ்கிறது.

இப்படி எவர் எதைச்சொன்னாலும் அதை உடனே புளகாங்கிதத்துடன் எடுத்துக்கொண்டு கூத்தாடுமளவுக்கு தமிழ்நாட்டின் பொதுவான மனநிலை தாழ்வுணர்ச்சியுடன் உள்ளது. இந்த அசட்டு ஆய்வுகளால் உண்மையிலேயே உலகளாவியிருக்கும் தமிழ்ப்பண்பாட்டுச் செல்வாக்கை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச ஆய்வுப்புலத்தில் எந்த விதமான மரியாதையும் இல்லாமலாகியிருக்கிறது.

ஆய்வு என்பது அதற்கான முறைமைகளுடன் புறவயமான தகவல்களைச் சார்ந்து முன்முடிவுகளில்லாமல் செய்யப்படுவது. குறிப்பாக பண்பாட்டு ஆய்வுகளில் மேலும் நிதானம் தேவை. பெருமிதங்களைத் தேடிச்செல்வதும் புளாகாங்கிதம் அடைவதுமெல்லாம் ஆய்வுக்கு எதிரான மனநிலைகள்.

உலகத்தமிழறிஞர்கள் ஆராய்கிறார்கள் என்கிறது செய்தி. யார் அவர்கள் என்று தேடினால் செய்தியில் இருப்பது காந்திகிராமத் தமிழ்ப்பேராசிரியர் சிதம்பரம் என்பவர். இவர் எப்போது யாருக்கும் தெரியாமல் உலகத்தமிழறிஞராக ஆனார்?

இவ்வகை செய்திகளை அறியாமையால் சில நிருபர்கள் அளிக்கையில் அப்படியே வெளியிடத்தொடங்கினால் இதேபோன்று இங்கு பெருகியிருக்கும் அரைவேக்காட்டு ’ஆய்வுமுடிவுகள்’ உங்கள் மேஜைகளில் வந்து குவியும். கணிசமானவை சாதிப்பெருமித வரலாறுகளாகவும் இருக்கும். தமிழ் இந்துவே ஓர் அரைவேக்காட்டு நாளிதழாக மாறிவிடும்.

தயவுசெய்து செய்திக்கும் கட்டுரைக்கும் பேட்டிக்குமான வேறுபாடுகளை பேணுங்கள். செய்தி என்பது அந்த நாளிதழால் முன்வைக்கப்படுவது. அதன் நம்பகத்தன்மைக்கு அவ்விதழின் ஆசிரியர்குழு பொறுப்பேற்கவேண்டும்

ஜெயமோகன்

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்: தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்

நாளைக்கான நாளிதழ்

முந்தைய கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 61