பட்டாம்பூச்சி-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

பாப்பில்லன் பற்றி எழுதியது நன்றாக இருந்தது. பத்தாம் வகுப்பில் Reade’rs Digest புத்தகமாக நான் படித்தது அது. அதன் பல காட்சிகள் பல ஆண்டுகள் கழித்து நன்றாக ஞாபகம் இருக்கின்றன.

தனிமைச் சிறையில் இருக்கும் ஷாரியர் தன் மீது ஒரு உடும்பு (அ பல்லி) விழ திடுக்கிட்டு எழுகிறான். நாட்கள் செல்ல அதுவே பின்னர் அவனுக்கு துணையாகிறது. ” என் நிர்வாண உடம்பில் உடும்பு ஓட நான் சலனமில்லாமல் கிடந்தேன்” என்னும் வரி ஞாபகம் வருகிறது.

நீங்கள் குறிப்பிட்டது போல் தொழு நோயாளிக் கைதிகள் தீவுக்கு போகும் கட்டம், தப்பி சென்று காட்டில் வசிக்கும் பழங்குடியினருடன் வாழ்ந்து அங்கு ஒரு பெண்ணை மணப்பது, அந்த பெண்ணின் தங்கைக்கும் ஷாரியர் மேல் ஆசை பிறக்க அக்காளே தங்கையை அவனுக்கு கட்டி வைப்பது போன்றவை நினைவில் நிற்கின்றன.

கடைசியில் சிறை பிடிக்கப்பட்டு மீண்டும் தப்பும் போது பன்றியோடு கூட வரும் சக கைதி ஒருவன். சதுப்பு நிலத்தில் புதையாமல் நடந்து தப்பிக்க அந்த பன்றி உதவுகிறது. ஷாரியருக்கு அதை உண்ண ஆசை. பயமென்னவென்றால் அந்த கைதி பின் தொடர்ந்து வரும் காவலாளிகளை கத்தியால் குத்திக் கொன்று செங்கல் சூளையில் போட்டவன். ஷாரியரின் விருப்பத்தை நிராகரித்து விடுகிறான். படகில் ஒரு இரவு தூங்கி எழும் ஷாரியர் தன் முகத்தில் ரோமங்கள் இல்லாதிருப்பதை உணர, சக கைதி “நீ தூங்கும் போது நான் தான் கத்தியால் சவரம் செய்து விட்டேன்” என்று கூறுகிறான். தப்பித்த பின்னும் உதவின பன்றியை உணவாக்க ஒப்புக்கொள்ள மறுத்து விடுகிறான் அவன்.

கதை முழுக்க வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் மானுட உணர்ச்சியே துடிக்கிறது. கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாகும் ஷாரியர் அதனை பற்றி எழுதும் போது அந்த நிகழ்வுகளை சுய பச்சாதாபம் சிறிது கூட இல்லாமல் நகைச்சுவை கலந்து எழுதுவது மிக சிறப்பு. படித்த வயதில் சாகச கதை போல் படித்தாலும் பலவித பயங்கர குற்றங்களுக்காக அங்கே இருக்கும் சக கைதிகளில் ஷாரியர் எப்போதுமே மனித நேயத்தை, சகோதரத்துவத்தை அடையாளம் காண்பிப்பது அப்போதே சிறிது புரிந்தது.

சிவா

அன்புள்ள சிவா,

ஆம், நீண்டநாட்களுக்குப் பின்னர் இந்த படத்தைப் பார்க்கும்போது நினைத்துக்கொண்டேன் ஓர் உலக இலக்கியம் எந்தவித இலக்கிய கவனமும் பெறாமல் நம் வணிக இதழொன்றில் சாகச நாவலாகவே வந்து மறைந்ததை. பட்டாம்பூச்சி இன்றும் ஒரு முக்கியமான இலக்கியமே. மொழிபெயர்ப்பாளர் ரா.கி.ரங்கராஜன் நன்றிக்குரியவர்

ஜெ

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – பதிவு -2
அடுத்த கட்டுரைஆழ்வார் பாடல்கள்…