இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6

பரம்பனான் ஆலய வளாகம் திரிமூர்த்தி கோயில். நடுவே சிவன். வலப்பக்கம் பிரம்மன்.இடப்பக்கம் சிவன். தொலைவிலிருந்து பார்க்கையில் மாமல்லபுரத்தின் பஞ்சபாண்டவர் ரதம்போலவோ நார்த்தாமலையின் விஜயாலய சோளீச்வரம் ஆலயத்தொகை போலவோ தோன்றும்.

இவ்வகை ஆலயங்களில் கருவறைக்குமேலேயே கோபுரம் அமைந்திருக்கும். முன்பக்கம் ஒரு சிறிய மண்டப நீட்சி இருக்கும். உயர்த்த அடித்தளம் மேல் ஆலயம் நின்றிருக்கும். சுற்றுமண்டபங்களோ முகமண்டபம் மீது கோபுரங்களோ இருப்பல்லை. ஆகவே இவை பல இடங்களில் தேர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒருநோக்கில் நம்மூர் ஆலயத் தேர்கள்.

விஜயாலய சோழீச்சுவரம்
விஜயாலய சோழீச்சுவரம்

ஆனால் அணுகிச்செல்லும்தோறும் பரம்பனான் ஆலயங்களின் பேருருவம் வியக்கவைத்தது. அடித்தளங்களே மிக உயரமானவை. ஆலயத்தின் தளத்திற்குச் செல்லவே பல படிகளை ஏறி மேலே செல்லவேண்டும். அவ்வகையில் கஜுராகோ கோயில்களை நினைவூட்டின. பின்னர் கலிங்கத்தின் சூரியர் கோயிலை.

கூரிய சிகரங்கள் கொண்ட கோபுர அமைப்பும் வட இந்திய நாகர பாணி ஆலயங்களுக்குரியது. ஒரு பகுதியின் கோயிலமைப்பில் அங்குள்ள மலைகளின் இயற்கை அமைப்பின் காட்சிச்செல்வாக்கு இருக்கும். இவை எரிமலை உருகி வழிந்த கூம்புகள் போலிருந்தன.

காந்தரிய மகாதேவர் ஆலயம் கஜூராகோ
காந்தரிய மகாதேவர் ஆலயம் கஜூராகோ

நாகரபாணி கோபுரங்கள் சிறியசிகரங்களின் தொகுதியாக இருக்கும். தென்னிந்திய தக்‌ஷிணபாணி கோயில்களில் கோஷ்டங்கள் என்னும் வளைவுகளின் அடுக்குகளாக கோபுரங்கள் இருக்கும். அவற்றில் தெய்வங்கள் அமைந்திருக்கும்

தென்னிந்திய ஆலயக்கோபுரங்களில் உச்சிக்கலசம் அல்லது வேதிகைமாடம் முக்கியமானது. கவிழ்க்கப்பட்ட கூடை போன்ற ஒற்றைக் கலசம் முதல் ஏழுகலசங்கள் கொண்ட பட்டைமுனை வரை. நாகரபாணி ஆலயங்களில் கோபுர முனைகளில் பௌத்த தூபிகளின் பாணியில் வட்டமான வேதிகை அமைப்போ கூரிய அடுக்குக்கலசங்களோ இருக்கும்

கொனார்க் சூரியர்கோயில்
கொனார்க் சூரியர் கோயில்

பரம்பனான் ஆலயக்கோபுரங்கள் முதல்பார்வையில் தென்னிந்திய ஆலயங்கள் எனத்தோன்றுகின்றன. ஆனால் கோட்டங்களோ கலசங்களோ இல்லாத கோபுரங்கள் செங்குத்தான நீட்சிகளாக மேலேறுவது உடனே அவை நாகரபாணி என நினைக்கவைக்கின்றன. ஆனால் நாகரபாணியும் அல்ல என்று பின்னர் தோன்றுகிறது. இவை ஜாவாவுக்குரிய கலப்பு அழகியல் கொண்டவை

இக்கோபுரங்கள் கட்டப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பேராலயங்கள் இல்லை. பல்லவர் காலகட்டத்து ரதங்கள் போன்ற சிறிய ஆலயங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் வடக்கே நாகர பாணி கட்டிடக்கலைசெழித்திருந்தது. இவை வடக்கின் செல்வாக்கு மிகுந்த கட்டுமானங்கள். குறிப்பாக கலிங்கத்தின் பாணி


இங்கு திரிமூர்த்திகளுக்கு மூன்று பேராலயங்கள் வரிசையாக உள்ளன. மூன்று வாகன கோயில்கள் அருகே நான்கு முனைகளிலுமாக அமைந்துள்ளன. மூன்று அபித் கோயில்கள் ஊடாக உள்ளன. பல சிறிய கோயில்கள் ஊடாக பரவியிருக்கின்றன.

மும்மூர்த்தி கோயில்களுக்குள் மட்டுமே மூலச்சிலைகள் உள்ளன. பிற கோயில்களில் கருவறை ஒழிந்துகிடக்கிறது. எங்கும் வழிபாடென்பது இல்லை. ஜாவாவின் இந்து சமூகம் வருடத்திற்கு ஓரிருமுறை இங்கு வந்து பூசைகள் செய்து மீள்கிறது.


இன்று முழுமையான கட்டிட அமைப்புடன் இருப்பவை எட்டு பெரிய ஆலயங்களும் எட்டு சிறிய ஆலயங்களும் மட்டுமே. இப்பகுதியெங்கும் கற்குவியல்களாக கிடக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறிய ஆலயங்களை திரும்ப கட்டி எழுப்பும் பணி யுனெஸ்கோவின் ஆதரவில் நடந்தபடியே உள்ளது

ஆறுபட்டை எட்டுபட்டை மடிப்புகளாக அமைந்துள்ள வெளிச்சுவர் அம்மடிப்புகளைக் கூர்மையாக்கியபடியே மேலெழுந்து சென்று கோபுர அடுக்குகளாக மாறி மேலே இணைந்து நிற்கிறது. எரிமலைப்பாறையில் செதுக்கப்பட்டவை என்பதனால் வெளிப்பக்கம் உள்ள சிற்பங்கள் அனைத்தும் பெரும்பாலும் மழுங்கிய வடிவிலேயே உள்ளன

நிதானமாக இவ்வாலயங்களைப் பார்க்க ஒருநாள் தேவைப்படும். இவற்றின் சிற்ப அமைப்பு இந்தியர்களுக்கு அயலானது. முதலில் இவ்வாலயங்கள் பெருந்திரளான மக்கள் வழிபடுவதற்குரியவை அல்ல. அரசகுடியினருக்குரியவை. சிலரே இதனுள் ஒரே சமயம் செல்லமுடியும்

குறுகலான படிகளில் ஏறினால் உள்ளே சுற்றிவருவதற்கான பாதை. அதன் இருபக்கச் சுவர்களிலும் புடைப்புச்சிற்பங்கள் அடர்ந்த பரப்பு. கருவறைக்கு முன்னால் பத்துபேர் நெருக்கமாக நிற்கமுடியும். ஆனால் கருவறை மிகப்பெரியது. மூலச்சிலையும் பேருருவம் கொண்டது


இங்குள்ள சிற்பங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பரந்தவை. தனி அழகியலும் குறியியியலும் கொண்டவை. தொடர்ச்சியாக ஆலயங்களைப்பார்ப்பவர்களுக்குக் கூட பல சிற்பங்களை கண்டுபிடிப்பது கடினம். அடையாளங்களும் கைமுத்திரைகளும் வேறு. ஏதேனும் ஒன்றிலிருந்து முடிவெடுக்கவேண்டும்

உதாரணமாக கமண்டலமும் தாடியுமாக நின்றிருக்கும் சிலை விஸ்வகர்மர் என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் அகத்தியர். இங்கே அகத்தியரும் லோபாமுத்திரையும் பரவலாக வணங்கப்பட்டிருக்கின்றனர்.
சிற்பங்கள் தனித்தனிக் கற்களில் செய்யப்படாமல் கற்களை அடுக்கி அதன்பின் செதுக்கப்பட்டவை போலுள்ளன. பக்கவாட்டுத்தோற்றத்தில் நகரும் படைகள். நகரக்காட்சிகள். புராணங்களின் முக்கியமான தருணங்கள்

இவ்வாலயங்களின் சுற்றுச்சுவர்களில் ராமாயணமும் கிருஷ்ணனின் கதையும் இன்றைய படக்கதைகள் போல தொடர்ச்சியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் அன்று தென்னாசியா முழுக்க மிகப்பிரபலமாக இருந்துள்ளன.

ராமன் ஏழுமரங்களை ஒரே அம்பால் அடிப்பது, வில்லொடித்து சீதையை ஏற்பது, சீதையை அனுமன் சந்தித்து கணையாழி அளிப்பது போன்ற காட்சிகள் கம்பராமாயணத்தின் காட்சிகள் போல இருந்தன. கம்பராமாயணத்திற்கு முன்னரே புராணக்கூற்று மரபில் இக்கதைகளின் தருணங்கள் புகழ்பெற்றிருக்கலாம்.

சிற்பங்களை திரும்பத்திரும்ப நோக்கியபடி சுற்றிவருவது ஒரு கனவனுபவம். சிற்பவெளியில் அவ்வப்போது ஒரு சிற்பத்தை நாம் அடையாளம் காண்கிறோம். உடனே அவை நம்மை நோக்கத் தொடங்குகின்றன. கிருஷ்ணலீலையில் கிருஷ்ணனுக்கு இருக்கும் இந்தோனேசியக் களை மனதை மலரச்செய்கிறது.

இந்தோனேசியத் தொன்மங்களில் அனுமன், கடோத்கஜன், சிகண்டி [அல்லது ஸ்ரீகண்டி] முக்கியமான கதாபாத்திரங்கள். பரம்பனான் சிற்பங்களில் கிஷ்கிந்தைவாசிகளின் விதவிதமான முகபாவனைகளையும் சிரிப்புகளையும் பார்ப்பது ஓர் அரிய அனுபவம்.

பேராலயங்களில் நான்கு பக்கமும் வாயில்கள் உண்டு. நான்கு பக்கமும் திறந்த கருவறைகளில் தெய்வங்கள். சிவன் ஆலயத்தில் கிழக்குநோக்கிய மையக்கருவறையில் சிவன். நேர்பின்னால் பிள்ளையார். வடக்கு நோக்கி அகத்தியர். தெற்கு நோக்கி துர்க்கை. இந்த அமைப்பை இந்தியாவில் காணமுடியாது

நேர்த்தியான பெரிய சிலைகள். துர்க்கை இந்தோனேசிய முகம் கொண்டவள். நாராயணி. ஆகவே சங்குசக்கரம் ஏந்தியிருக்கிறாள். இது கேரளபாணி ஆலயங்களில் காணப்படும் தனித்தன்மை. அகத்தியருக்கு இத்தனை பெரிய கருவறை எங்குமில்லை.

பழுத்த சைவர்கள் கூட இங்கே நின்றபெருங்கோலத்தில் கருவறையின் அரையிருளில் தோற்றமளிக்கும் சிவனை அடையாளம் கண்டுகொள்வது கடினம். சடாமுடியில் மண்டையோடும் நெற்றிக்கண்ணும்தான் சிவனுக்கான அடையாளங்கள். திரிசூலம் உள்ளது. ஒருகையில் சாமரம். இன்னொரு கையில் வஜ்ராயுதம். புயலுக்கும் மின்னலுக்கும் சின்னங்கள் இவை. இங்குள்ள இயற்கையை கையிலேந்திய சிவம்

பிள்ளையார் அமர்ந்திருக்கும் கோணமும் சாதாரணமாக இந்தியாவில் காணமுடியாதது. அது யோக அமர்வு அல்ல. இரு உள்ளங்கால்களையும் சேர்த்துவைத்து அமர்ந்திருக்கிறார். கைகளில் இங்குள்ள ஆயுதங்கள் இருப்பது ஓர் ஆறுதல். எப்படியானாலும் பிள்ளையாரை மட்டும் எங்கும் அடையாளம் கண்டுகொள்ளலாம். இருண்ட கருவறையின் பீடத்தில் தலைக்குமேல் எழுந்த பிள்ளையாரை பார்ப்பது ஓர் அரிய தியானநிலை.

பிரம்மன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன் நீண்ட தாடியுடன் முனிவர் கோலம் கொண்டவர் . கையில் இங்குள்ள அக்‌ஷமணிமாலை இல்லை. வஜ்ராயுதம் உள்ளது. பிரம்மனுக்கு இந்தியாவில் இப்படி மையக்கருவறையில் பதிட்டைசெய்யப்பட்ட ஆலயம் ஏதுமில்லை என நினைக்கிறேன்.ஆனால் இந்தியாவில் அப்படி எதையும் சொல்லிவிடமுடியாது, எதுவும் எங்காவது இருக்கும்

விஷ்ணு ஆலயத்திலும் மையக்கருவறைக்குள் பதிட்டை உள்ளது. நின்றிருக்கும் கோலத்தில் சங்குசக்கரம் கதை ஏந்தி விஷ்ணு மணிமுடியுடன் நின்றிருக்கிறார். செண்டும் தாமரை மலரும் ஏந்திய விஷ்ணுவை இங்கன்றி வேறெங்கும் காணமுடியாது விண்ணளந்த திருமேனி என்னும் சொல் மனதில் வந்தது.

கருவறைகள் கற்களைச் சாய்வாக அடுக்கிச்சென்று மையத்தில் கூட்டி அமைக்கப்பட்ட சதுரக்கூம்பி வடிவம் கொண்டவை. நடுவே ஆளுயரபீடங்களின் மேல் நின்றிருக்கின்றன தெய்வங்கள். இத்தெய்வங்களுக்கு நேராக அன்றாட பூசனை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னிலோ கல்லிலோ சிறிய திருமேனிகள் காலடியில் அன்றாட பூசனைக்கென வைக்கப்பட்டிருக்கலாம்.

இங்குள்ள சிற்பக்கலையில் தாமரை முக்கியமான வடிவம். தாமரைப்பீடங்கள், தெய்வங்கள் ஏந்திய தாமரைகள். ஆலயங்களின் சுற்றுச்சுவர்களில் கூட தாமரை இதழ்களின் அமைப்பு வரும்படி வளைந்த கலசம் போன்ற அமைப்புகள் இருப்பதைக் காணலாம். ஆலயங்களின் கட்டமைப்பில் தாமரை நடுவே புல்லிவட்டம் போன்ற வடிவம் இருப்பதை சற்று கூர்ந்து நோக்கினால் காணமுடியும்

சிலைகளை பார்ப்பது என்பது ஒரு பக்கம் நுடபங்களைப்பார்ப்பது மறுபக்கம் எதையும் பாராது பிரமித்த விழிகளுடன் சுற்றிச்சுற்றி வருவது. நம்முள் சென்றுகொண்டிருப்பவை எனை என நாம் அறிவதில்லை. உண்மையில் இப்பயணங்களில் நான் அடைந்தவை எவை என வெண்முரசு எழுதும்போது என்னுள் கனவு மூண்டெழும் தருணங்களிலேயே அறிகிறேன்

மீண்டும் சுற்றுவழியில் சிற்பங்களை நோக்கியபடி நடந்தேன். அவை அனைத்தும் என்னை நோக்கத்தொடங்கியிருந்தன இப்போது. நானறியாத இறந்தகாலத்தைச் சேர்ந்தவை அவை. என் முன்னோருடையவை. உலகமே ஒருகுடும்பமாக இந்துப்பண்பாடு அணைத்துக்கொண்ட ஒரு காலகட்டம் இருந்தது. அதன் அழிவின்மேல்தான் இன்றைய ஆசியா கட்டி எழுப்பப்பட்டுள்ளது

ஆனால் அதுதான் அடித்தளம். இன்றும் இங்குள்ள அனைத்துத் தொன்மங்களிலும் இந்துப்புராணங்களின் கட்டுமானம் உள்ளது. இவர்களின் சிந்தனைகளின் ஆழ்நிலைகளை வடிவமைத்திருப்பதே இந்துமதம்தான். பெரும்பாலான ஊர்ப்பெயர்கள் உள்ளூர் தொன்மங்கள் இந்துப்பண்பாட்டிலிருந்து எழுந்தவை. இவர்களின் தேசிய அடையாளம் கருடன். எந்த பெயரை வாசித்தாலும் அதில் சம்ஸ்கிருதத்தின் வேரை எடுத்துவிடமுடியும்.

ஆனால் இன்று இம்மக்களுக்கு இவ்வாலயங்கள் வெறும் கற்கள். இவர்களின் பாடத்திட்டங்களில் மிகக்குறைவாகவே இவை உள்ளன. இங்கு வரும் வெள்ளையர் அறிந்த அளவுக்குக்கூட இவற்றைப்பற்றி இந்தோனேசியர் அறிந்திருப்பதில்லை. காரணம் இங்குள்ள இஸ்லாமிய மதம் இதை ஏற்பதில்லை என்பது

IMG_6609

சீனாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் தாய்லாந்தில் இருந்தும் வந்த சுற்றுலாப்பயணிகளே எண்ணிக்கையில் அதிகம். அவர்களுக்கு செல்ஃபி எடுப்பதில் மட்டுமே ஆர்வம். பொதுவாக மஞ்சளின மக்கள் செல்பிக்காகவே உயிர் வாழ்கிறார்களோ என்று தோன்றும். அந்தக் கற்கோயில்கள் மேல் அமர்ந்தும் எழுந்தும் ஓசையிட்ட குருவிகளுக்கும் அம்மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அந்த வேளையில் அவ்வாலயங்களுடன் தன்னந்தனிமையில் நிற்பதைப்போல் உணர்ந்தேன். ஆழ்ந்த தொல்வரலாறு தன் இயல்பான கம்பீரத்துடன் எழுந்து ஓங்கி நின்றிருக்கிறது. காலம் அதன் வழியாக ஒழுகிச்செல்வதைக் காணமுடிந்தது. அது உருவாக்கும் சோர்வும் கனவும் நிறைந்த பெருநிலை

IMG_6575

முந்தைய கட்டுரைசூடாமணி விகாரை -தவறான தகவல்
அடுத்த கட்டுரைதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்