கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

1

ஒரு கவிஞரின் முழுத்தொகுப்பை வாசிக்கையிலேயே அவரைப்பற்றிய சித்திரம் நம்முள் அமைகிறது. பொதுவாக சிற்றிதழ்களில் அள்ளிக்குவிக்கப்படும் கவிதைகளை சலிப்புடன் கடந்துசெல்லக் கற்றுவிட்டிருக்கிறேன். காரணம் மிக அரிதாகவே அவற்றில் அரிய கவிதைகள் தட்டுப்படுகின்றன என்பது மட்டும் அல்ல. இன்றைய கவிதைகள் மொழி, கூறுமுறை, கூறுபொருள் ஆகியவற்றில் பொதுத்தன்மைகொண்டு ஒற்றைப்படலமாக, ஒரே பிரதியாக ஆகிவிட்டிருக்கின்றன என்பதுதான்.

ஆகவே நல்ல கவிதைகளை அவற்றிலிருந்து பிரித்தெடுப்பதே அரிதான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. இந்நிலையில் கவனம்பெறும் கவிதைகள் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. அந்த மாறுபாடே அளவுகோலாகக் கொள்ளப்படும்போது அடங்கிய குரலில் பேசும் கவிதைகள் கவனம் பெறுவதில்லை. அந்த மாறுபாடு என்பது சற்றே மிகையோசைதான் என்னும்போது பலசமயம் பிற்பாடு நினைவிலெழுகையில் பொருட்படுத்தத்தக்கதல்ல என்று தோன்றும் கவிதைகளும் முதல்வாசிப்பில் கவரக்கூடியவை ஆகிவிடுகின்றன

இக்காரணத்தால்தான் முழுத்தொகுப்புகளை தேடிவாசிக்கிறேன். அவை அக்கவிஞரின் அனைத்துக்கவிதைகளையும் ஒரே பிரதியாக ஆக்குகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைத்து நிரப்பிக்கொண்டு நிறைகின்றன. அவரை நன்கு மதிப்பிட அது உதவுகிறது

ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் நூலை நண்பர் பவா செல்லத்துரையின் வீட்டு மாடியில் தங்கியிருக்கையில் வாசித்தேன். அதை அவருடைய அனுமதியுடன் கையோடு எடுத்துவந்து சிறிது சிறிதாக நாலைந்து மாதங்கள் வாசித்தேன். இளங்கவிஞர் ஒருவருக்கு முழுத்தொகுப்பு வருவது அரிது. அவ்வகையில் முக்கியமானது இத்தொகுதி.

நவீனக்கவிதை என்றால் அது உரைநடைக்கவிதை மட்டும் அல்ல என்பதை நிறுவ சிற்றிதழ்ச்சூழலில் அரைநூற்றாண்டு ஆகியிருக்கிறது. அது நவீன நுண்ணுணர்வு. உரைநடை என்பது அந்த நவீன நுண்ணுணர்வுக்கு பொருந்துவது என்பதனால்தான் கையாளப்படுகிறது.

நவீன நுண்ணுணர்வை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். கவிதைக்குரிய மனநிலைகள், பேசுபொருட்கள் என சிலவற்றை வகுத்துள்ள நம் முன்முடிவுகளுக்கு அப்பால் சென்று அன்றாட வாழ்க்கையின் தருணங்களில் இருந்தும் அன்றாட மனநிலைகளில் இருந்தும் கவிதைக்கான தருணங்களைக் கண்டடைதல். இருப்பின் புதிரை, முடிவிலி அளிக்கும் திகைப்பை, அறியமுடியாமையின் தனிமையை எவ்வகையிலேனும் தொடும் கணங்கள் அனைத்தும் கவித்துவமானவையே

அன்றாடவாழ்க்கைப்புலத்திலிருந்து அத்தகைய கணங்களை கண்டடையும் கவிதைகள் என இத்தொகுப்பின் கவிதைகளை பொதுவாக வரையறைசெய்யலாம். இவ்வாறு அன்றாடப்புறவய வாழ்க்கையை நோக்கி கவிதை செல்லும்போது அது நேரடிச்சித்தரிப்பாக ஆகிவிடுவதுண்டு. அந்நிலையில் புனைவும் கவிதையும் வேறுபாட்டை அழித்துக்கொள்கின்றன. அவ்வகையில் நுண்சித்தரிப்பு என்னும் வடிவை கவிதை அடைகிறது. அதற்கு உதாரணமான கவிதைகளும் இதில் உள்ளன.

இவ்வகை அழகியலைக் கொண்டிருப்பதனால்தான் இக்கவிதைகள் மிகநேரடியான எளிய மொழியை கையாள்கின்றன. தான் சொல்லவருவதை மிகுந்த வேகத்துடன் சொல்லும் கவிதைப்பாணிக்கு மாறாக ‘ஒன்றும் பெரிய விஷயமில்லை’ என்ற தோரணையைக் கொள்கின்றன.

தமிழில் இவ்வகை கவிதைகளுக்கு ஒரு மரபு உள்ளது. எழுத்து கவிஞர்களில் தி.சொ.வேணுகோபாலன், பின்னர் தேவதச்சன், எம்.யுவன். இக்கவிதைகள் அவ்வழியில் முன்னகர்ந்தவை என்று சொல்லலாம்.

Picture_746__21624_zoom


காகங்கள் வந்த வெயில்

சிறுமி விமலா இறந்துவிட்டாள்
எப்போதும் சத்தமிடும் விரல் அகலக்குருவிகள்
ஏனோ இன்று வரவில்லை
செவலைப்பூனை
மரணத்தை ஏற்கனவே அறிந்திருந்தது போல்
ககளை திறந்து மூடியபடி
உலகுக்கு துக்கத்தை கையளித்துவிட்டு
படுத்துக்கிடந்தது
நான் உள்ளே வந்திருக்கக் கூடாது
திரும்பத்திரும்ப சொன்னார்
விமலாவின் அப்பா
விமலாவின் வீட்டில்
காகங்கள் கரைந்துகொண்டிருந்தன
பறிகொடுத்த முகங்களுடன்
வெவ்வேறு மூலைகளில் அமர்ந்திருந்தனர்
விமலாவின் அம்மாவும் உறவினரும்
வெயில்
விமலாவின் மறைவை
வீடுகள் தோறும் சொல்லிக்கொண்டிருந்தது

இவ்வகைக் கவிதைகளின் சிறந்த உதாரணமான இப்படைப்பில் காகங்கள் வெயில் போன்றவை படிமங்களாகி மேலதிக எடைகொள்ளவில்லை. நுண்சித்தரிப்பாகவே கவிதை நின்றுவிட்டது. எனினும் அந்தத் தருணத்தின் கையறுநிலையை, அங்கு அனைவரும் உணரும் முடிவிலியின் வெறுமையைச் சொல்ல முடிகிறது.

நான் உள்ளே வந்திருக்கக்கூடாது, திரும்பத்திரும்பச் சொன்னார் விமலாவின் அப்பா என்னும் எளிய வரியில் இக்கவிதையின் அனுபவம் குவிமையம் கொள்கிறது. அவர்களுக்குரிய உலகில் அவர்களுக்குரிய துயரை மௌனமாக மென்று அசைபோட்டு அமைய அவர்களை அனுமதிக்கும்படி கோரப்படுகிறது. அத்தனை எடைமிக்க குளிர்ந்த துயரம் அது.

பெரும்பாலான கவிதைகள் நவீன வாழ்க்கையில் செயலின்மையின் பிரம்மாண்டத்தை நாம் உணரும் பிரிவு, இழப்பு என்னும் இரு புள்ளிகளில் மையம் கொள்கின்றன.

மிகக்கூரிய முனைகொண்ட பென்சிலால் தேர்ந்த ஓவியனின் கை சுழன்று வரைந்த கோட்டோவியங்கள் போலிருக்கின்ன்றன இக்கவிதைகள். மிகக்குறைவாகவே தகவல்கள். ஓரிரு சாயல்கள். ஆனால் கற்பனையில் முழுமையாகவே ஒரு வாழ்க்கைச்சித்திரத்தை உருவாக்கிவிடமுடிகிறது.

கௌரி அம்மாள்

மேல்மாட முகப்பில்
கிருஷ்ணர் பொம்மை பதித்த
தன் வீட்டைவிட்டு வெளியேறும்போது
கௌரி
கௌரியம்மாள் ஆகவில்லை
கணித ஆசிரியராக பணிபுரிந்த
ஜோசப் தெய்வநாயகத்தின்
மனைவியாகி சிலகாலத்துக்குள்ளேயே
கௌரி
கௌரி அம்மாளாகி போனாள்
அம்மாள் என்னும் வார்த்தையைச் சேர்த்து
மூப்பு அவளைச் சீக்கிரமே அழைத்துக்கொண்டது


கௌரி
கௌரி அம்மாள் ஆனபோது
கைகள் தடிமனாகி
அவளின் பழைய ரவிக்கைகளை இறுக்கின
முட்டைக்கண்ணாடியும் முகத்தில் ஏறி
வயதைக் கூட்டியது
கௌரி
கௌரி அம்மாள் ஆகும் நாட்களில்
கிருஷ்ணர் பொம்மை பதித்த வீட்டை நோக்கி
பதில்களைச் சொடுக்கி
சொடுக்கி
கௌரியம்மாளின் முகம் கண்டிப்பானதாய்
மாறிவிட்டது


அப்போது
ஜோசப் தெய்வநாயகம்
லேட் ஜோசப் தெய்வநாயகம் ஆனார்
விடிவிளக்குகள்
மின்னி மின்னி எரியும்
பகல் இருட்டில
கிறிஸ்துவும்
ஜோசப் தெய்வநாயகமும்
படங்களில் ஆசீர்வதிக்க
அறைகளின் மௌனத்துடனேயே
பூஞ்சையாய் வளர்ந்தாள்
மூத்தமகள் ராணி
ஆய்ந்த மீன் தலைகளைத் தின்ன
ஞாயிற்றுக்கிழமைகளில்
பூனைகள் வரும்போது
கௌரி அம்மாளுக்கு தன் தனிமை
நினைவுக்கு வரும்


ஜோசப் தெய்வநாயகத்தின் மறைவுக்குப்பின்
மூன்றே மூன்றுமுறைதான் சிரித்தாள்
கௌரி அம்மாள்
தெருவிலேயே
முதல்முறையாக
அவள் வீட்டுக்கு நவீனக்கழிப்பறை
கட்டப்பட்டபோது
ராணியின் திருமணப்புகைப்படத்தில்
[தலைமையாசிரியையின் இறுக்கமான சிரிப்பு]
ஜோசப் தெய்வநாயகத்தின் சாடையைக் கொண்டு
பிறந்த
ராணியின் இரண்டாவது மகனை
கையில் வாங்கும்போது


கௌரி
கௌரி அம்மாளாகிப்போனதும்
பால்யத்தில் விளையாடிய
கிருஷ்ணனை பாதிவில் விட்டதும்
விடிவிளக்கின் மின்னும்
கிறிஸ்துவுக்கு இன்னும் வருத்தம்தான்

இக்கவிதையை முற்றிலும் புனைவின் கருவிகளைக் கொண்டு எழுதப்பட்டது என்றே சொல்லவேண்டும். நவீனச்சிறுகதை அதன் கவித்துவத்தைச் செறிவுபடுத்திக்கொண்டு இந்த தளத்தை அடைந்து நெடுநாட்களாகின்றன. இவ்வரிகளைக் கவிதையாக்குவது இதன் குவிதல்தான். சிறுகதை இந்தக்குவிதலை அடைவதற்குப்பதில் ஒரு வாழ்க்கைத்துண்டாக இதை மாற்றவே முயலும்.

கிருஷ்ணன் வைத்த வீட்டை நோக்கி பதில்களைச் சொடுக்கிச் சொடுக்கி முதுமையைச் சூடிக்கொண்ட கௌரி அம்மாளின் வாழ்க்கையின் சித்திரத்தில் எவை மேலதிகப் பொருள் அளிக்குமோ அவை மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. கௌரி கௌரியம்மாள் ஆவதைப்பற்றிய வரி திரும்பத்திரும்ப மீட்டப்பட்டு அழுத்தம் பெற்று இப்புனைவு வெளியை குவித்து கவிதையாக்குகிறது.

இந்த மொழி தன்னை மெல்லிய புன்னகையுடன் விலக்கிக்கொண்டுவிட்டது. கனிவும் ஆர்வமும் தெரியும்போதும்கூட எவ்வித எழுச்சியையும் அது அடைவதில்லை. அந்த விலக்கம்தான் இவரது கவிதைகளின் தனித்தன்மை என்று சொல்லத்தோன்றுகிறது. தமிழில் இவ்வகைக் கவிதைகளுக்கு உடனடியான இவரது முன்னுதாரணம் தேவதச்சன் எனத்தெரிகிறது. [ஆனால் கௌரி அம்மாள் தேவதேவனின் ஒரு கவிதைக்கு மிக அணுக்கமானது. இக்கவிதைக்கு நேர்மாறாக மளிகைக்கடைக்குள் இருந்து புன்னகைக்கும் டீச்சரின் முகம் அது]

உணர்வெழுச்சி மிக்க தருணங்களைக்கூட இந்த வருடிச்செல்லும் மொழி எளிதாக ஆக்கிவிடுகிறது

என் ரோஜாவே

உன் இடைவிளிம்பி பேண்டிஸிலிருந்து
நழுவும் நீல சிவப்புப் பூக்கள்
இந்த மாலைச்சூரிய வெளிச்சம்
ஹரும்
அகாரண சந்தோஷம்
நிச்சயமின்மையின் சமுத்திரத்தில்
மிதக்கும்
என் ரோஜாவே
மூன்று சாலைகள்
பிரிந்துசெல்லும்
இந்தப்பாலத்தின் முனையில்
சிதறிக்கிடப்பதையெல்லாம்
என்காதல்
என்றா [என்று]
தொகுப்பேன்?

*
கசாப்புக்கத்தியின் நளினம் கொண்ட வரிகள் என இத்தொகுப்பின் பல கவிதைகளைச் சொல்லமுடியும். மிக எளிதாக பல தளங்களைத் தொட்டு கீறிச்சென்றபடியே உள்ளன. கீறல் அழகுற விழுந்து நெடுநேரம் கடந்தே குருதித்துளிகள் உருவாகத் தொடங்குகின்றன

இந்த வகைக் கவிதைகளுக்கு வழக்கமான கவிதை வடிவம் கூடத்தேவையாக இல்லை. கணிசமான கவிதைகள் உரைநடைவடிவிலேயே உள்ளன. அப்போதும் அந்த தன்னிச்சையான சித்தரிப்பும் படிமம் ஆக மாறுவதற்கு ஒரு படி முன்னதாகவே நின்றுவிடும் காட்சிகளும் அவற்றைக் கவிதைகளாக்குகின்றன

யோயோ

இரும்புக்குண்டுகளுடன் உலோகச்சங்கிலியை இணைத்துக்கட்டிய போர்ச்சாதனம் அது. அதன் பெயர் யோயோ. யானைகளையும் மனிதர்களையும் போர்களில் கொல்ல பயன்பட்டது. கையாள்வதன் சிரமத்தை முன்னிட்டு 16 ஆம் நூற்றாண்டுவாக்கில் பயனிழந்து போனது. 19 ஆம் நூற்றாண்டில் யோயோவின் வடிவத்தை மாற்றி ரப்பர் பந்துடன் எலாஸ்டிக் இணைத்து விளையாட்டுப்பொருளாய் ஒருவர் மாற்றினார். மனிதர்கள் அனைவரும் ஒருவரை பார்த்து ஒருவர் வாலுயர்த்திய காலம் அது. ரத்தம் கண்டுகொண்டிருந்த யோயோவை சரித்திரத்தில் குழந்தைகளின் விளையாட்டுப்பொருளாக்கியவன் பெயர் மார்க்ஸ்

இத்தொகுப்பின் முக்கியமான சிறப்பியல்பை சுட்ட ஒன்றைக் குறிப்பிடலாமெனத் தோன்றுகிறது. பொதுவாகக் கவிதைத்தொகுதிகளை வாசித்தபின் பளிச்சிடும் தனிவரிகளை எடுத்துச் சொல்ல முடியும். இத்தொகுப்பில் முழுக்கவிதைகளைத்தான் குறிப்பிட முடிகிறது. ஏனென்றால் நவீனப்புனைவின் கருவிகளைக்கொண்டு நுண்புனைவுகளாக அமைக்கப்பட்டவை இவை. வரிகள் அல்ல மொத்த அமைப்பும் சேர்ந்தே பொருள் அளிக்கின்றன.

நவீன வாழ்க்கையின் உறவையும் பிரிவையும் கொந்தளிப்புகள் இல்லாமல், ஆழ்ந்த வினாக்களும் இல்லாமல் , எளிமையான பாவனையுடன் பார்த்துச்செல்கின்றன இக்கவிதைகள். தீர்ப்புகள் சொல்லாமல் அவதானிப்புகளைக்கூட நிகழ்த்தாமல் எளிய சித்தரிப்புகளாகவே நின்றுவிடுகின்றன. அவற்றில் உருவாகும் கொள்ளும் புன்னகையின் குவியம் வழியாகவே கவிதையாகின்றன.

தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள தொகுதிகளில் முக்கியமானது இது. முழுத்தொகுப்பாக பார்க்கையில் ஒன்றை ஒன்று தொட்டு தொட்டு விரியும் பல கவிதைகள் அரிய வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன. புன்னகைக்குப்பின் அடியில் மெல்லிய கசப்பை விட்டுச்செல்லும் அழகிய சித்தரிப்புகள் இவை

ஆயிரம் சந்தோஷ இலைகள்
ஷங்கர்ராமசுப்ரமணியன்
பரிதி பதிப்பகாம் ஜோலார்பேட்டை வேலூர்

முந்தைய கட்டுரைபாண்ட்
அடுத்த கட்டுரைசகிப்பின்மை -கடிதங்கள்