இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 5

யோககர்த்தா நகரினூடாக செல்லும்போது ஒன்றைக் கவனித்தேன், நகரெங்கும் பல இடங்களில் உள்ள வண்ணச் சுவரெழுத்துக்கள். இவ்வகைச் சுவரெழுத்துக்களை அமெரிக்காவின் பெருநகரங்களின் நிழலான பகுதிகளில் அதிகமாகக் காணமுடியும். நமக்கு அவை என்ன சொல்கின்றன என்று புரிவதில்லை.

பீய்ச்சியடிக்கும் சாயங்களைக் கொண்டு மிக விரைவாக வரையப்பட்ட பிரம்மாண்டமான ஆங்கில எழுத்துக்கள். ஒன்றுடன் ஒன்று பின்னிய உருவங்கள். எந்த மொழி என்றறியாத எழுத்துக்கள். பல வரைவுகள் கலையழகுடன் இருக்கும். வழக்கமான ஓவியங்களின் அழகியல் அல்ல அது. ஒரு அலட்சியம், திமிர், மீறல் தெரியும் கலை. தூரிகைக்குப்பதில் சாயங்களை பீய்ச்சிகளால் வீசியடிப்பதனால் அந்த அலட்சியம் உருவாகிறது

அவை அமெரிக்காவிலும் உலகநாடுகள் பலவற்றிலும் பரவிக்கிடக்கும் அரசிலி மக்களால் தங்களுக்குள் செய்திப்பரிமாற்றத்துக்கென எழுதப்படுபவை. அவை தொடர்ந்து மாறிக்கொண்டும் இருப்பவை என்பதனால் பிறர் எளிதில் பொருளறிய முடியாது.

போதைப்பொருள், கட்டற்ற காமம், காவலர்தொல்லை போன்ற பலவற்றை அவை குறிக்கின்றன. அத்துடன் கேலிகள் விமர்சனங்கள் என ஒரு வகையான செய்தித்தாள்களாகவும் கலைவெளிப்பாடாகவும் உள்ளன. அவற்றில் சுதந்திர காமம் போர் எதிர்ப்பு ஆகியவற்றுடன் அரசு எதிர்ப்பும் ஆதிக்க எதிர்ப்பும் உள்ளது. இந்தோனேசியாவில் டாலருக்கு மிகமிக மதிப்பு என்பதனால் அங்கு இவ்வகை பயணிகள் நிறைய வருகிறார்கள் போலும்

610-01577380

இந்தோனேசியா போன்ற சுற்றுலாவை நம்பியிருக்கும் நாடுகள் அனைத்தையும் ஏதோ ஒருவகையில் அனுமதிக்கின்றன. இங்கு அரசிலிகள் வருவதற்கான முக்கியமான காரணம் அதுதான். அவர்களுக்கான ‘குகைகள்’ இங்கே மிக அதிகமாக உள்ளன.

அத்துடன் இந்தோனேசியாவில் சிறார் காமத்தொழிலும் அதிகம். நம்மூர் கோவா போல. மலேசியாவில் கெண்டிங் மலையில் உள்ள சிறார் விபச்சாரிகளில் கணிசமானவர்கள் இந்தோனேசியர்கள். ஒரு நாட்டின் பொருளியல் வீழ்ச்சி அடைகையில் விபச்சாரம் மேலெழுகிறது. ஏனென்றால் கைவிடப்பட்ட அன்னையருக்கும் பெண்களுக்கும் உடலன்றி விற்க ஏதுமில்லை

இந்தோனேசியாவின் மொழி முன்பு இந்தியாவின் தொன்மையான வட்டெழுத்து போன்ற எழுத்துருவில் எழுதப்பட்டிருந்தது. சுல்தான் ஆட்சிக்காலத்தில் அரபுமொழிச்சாயல் கொண்ட எழுத்துருக்கள் வந்தன. இப்போது முழுக்கமுழுக்க ஆங்கில எழுத்துருவிலேயே எழுதப்படுகிறது

எங்குபார்த்தாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விளம்பரங்கள். பெயர்களை நாம் வாசிக்கமுடியும். பிறசொற்கள் இந்தோனேசிய மொழிகளில் அமைந்தவை. எங்குமிருக்கும் ஆங்கிலம் ஒருவகையான அணுக்கத்தன்மையை அளிக்கிறது.

தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதமுடியாது என்றெல்லாம் இங்கே பேசப்பட்டது. ஆங்கிலத்தை எழுத்துருவாகக் கொண்டுள்ள பல மொழிகள் சீனச்சாயல் கொண்டவை. நம்பவே முடியாத ஒலிகள் உடையவை. அவையெல்லாம் எழுதப்பட்டு வாசிக்கபப்டுகின்றன. எழுத்துக்களுக்கும் உச்சரிப்புக்குமான தொடர்பு என்பது ஒரு பொதுப்புரிதல்தானே ஒழிய எந்த மொழியையும் முழுமையாக எழுதிவிட முடியாது.

அச்சு வடிவில் உள்ள மொழிக்கும் வாசிக்கப்படும் மொழிக்கும் இடையேயான உறவும் கூட ஒரு பொதுப்புரிதலே. ஆகவேதான் தனிப்பயிற்சி இல்லாமல் நம்மால் சென்றகால உரைநடையை வாசிக்கமுடியவில்லை. இந்த விஷயங்கள் மொழியை பற்றி ஓரளவு அறிந்தவரும் சொல்வதே. தமிழில் ‘அறிஞர்களுக்கே’ நாம் அவற்றைச் சொல்லிப்புரியவைக்க முடியாதென்னும்போது வாசிப்புப்பழக்கம் இல்லாத ஃபேஸ்புக் பாய்ஸிடம் என்ன சொல்லமுடியும்?

இந்தோனேசியாவில் ஏறத்தாழ எழுநூறு மொழிகள் இன்றுள்ளன. கணிசமானவை எழுத்துரு இல்லாத நாமரபு மொழிகள். ஆஸ்திரேலிய இனக்குழுமொழிகள் பப்புவா இனக்குழு மொழிகள். மலாய்மொழியின் திரிபு போன்ற பஹாசா என்னும் மொழியே மையமான இணைப்பு மொழி

இந்தமொழிகள் ஏழு வகையான எழுத்துருக்களில் எழுதப்பட்டு வந்தன. அவற்றை ஆங்கில எழுத்துருவில் எழுதத் தொடங்கியபோது அவற்றுக்கிடையேயான வேலி தகர்ந்தது. எல்லா இந்தோனேசிய மொழிகளிலும் அறிவிப்புகள் எழுதப்படுகின்றன. வாசித்தே பிற இந்தோனேசிய மொழிச் சொற்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மிக எளிதாக அது நிகழ்கிறது

இன்று பெரும்பாலான இந்தோனேசியர்கள் பிற இந்தோனேசிய மொழிகளை புரிந்துகொள்ளக்கூடியவர்கள். இந்தோனேசியாவிலிருந்த இனப்ப்பூசல்களை இந்த எழுத்துமாறறம் ஓரளவு சீரமைத்து வருகிறது என்றார்கள்.


அத்துடன் ஆங்கிலம் கற்பதும் இங்கு எளிதாக உள்ளது. இந்தோனேசியா கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் அடைந்த கடுமையான அரசியல் பொருளியல் வீழ்ச்சியினால் இங்கே நவீனக் கல்வி உருவாகவே இல்லை. ஆனால் மக்களில் ஓரளவு கல்வியுடையவர்கள் கூட இந்த ஆங்கில எழுத்துரு காரணமாக முக்கிமுக்கி ஆங்கிலம் பேசவும் வாசிக்கவும் அறிந்திருக்கின்றனர்.

இதை நான் ஆங்கில எழுத்துருக்களில் உள்ளூர் மொழிகள் எழுதப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் ஆப்ரிக்காவிலும் கண்டிருக்கிறேன். இந்த மொழியறிவு காரணமாகவே அடித்தள மக்கள் முழுமையாக பொருளியல் வீழ்ச்சியை நாடு அடைந்தபோது கிளம்பி பிறநாடுகளில் வீட்டுவேலைசெய்யச் செல்லமுடிந்தது. இன்றைய இந்தோனேசியா மெல்ல எழுந்து வரும் நாடு

உடனே இந்தியர்கள் இரக்கம் கொள்ளத்தேவையில்லை. வீழ்ச்சியடைந்த நிலையிலேயே நம்மைவிட மேலானநிலையிலேயே இந்நாடு உள்ளது. இங்கே தெருவில் தங்குபவர்களையோ சாக்கடைக்குள் அமைந்த சேரிகளையோ தெருப்பிச்சைக்காரர்களையோ காணமுடியாது. வறுமை என்பது இங்கே சுற்றுலாப்பயணிகளிடம் கைவணிகம் செய்வதும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைபார்ப்பதும்தான்

ஒரு ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். சுற்றுலாப்பயணிகளை உத்தேசித்துக் கட்டப்பட்ட உணவகம். வெளியே அமர்ந்து சாப்பிடுவதற்கான சிறிய கொட்டகைகள். மேலைநாட்டு பயணிகளுக்கு உகந்த வகையில் மேஜை நாற்காலிகள் முட்கரண்டிகள் கரண்டிகள் . அவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்படி இந்தோனேசியபாணியில் கால்மடித்து அமர்ந்து குள்ளமேஜையில் சாப்பிடுவதற்கான வசதி.

இந்தியாவில் சுற்றுலாப்பயணிகள் வரும்போது அவர்களுக்குரிய உணவகங்கள் இல்லை என்பதை பெரும்குறையாகச் சுட்டிக்காட்டுவதை அறிந்திருக்கிறேன். இந்தியவகை உணவகங்கள் நெரிசலானவை. விரைந்து அள்ளிப்போட்டுக்கொண்டு எழவேண்டியவை. அவை ஐரோப்பியருக்கு வசதியானவை அல்ல. இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கு இதைப்போன்ற மேலைநாட்டுப்பயணிகளை உத்தேசித்து உள்ளூர் அழகுடன் அமைக்கப்படும் விடுதிகள் தேவை

ஆனால் சைவம் என்பதே இல்லை. ராஜ மாணிக்கம் கண்ணீர் மல்கினார். சோறு உண்டு, அதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை. காரமான சாஸை அதில் ஊற்றி குழப்பி உண்டோம். மீன் நீரிலிருந்து பிடித்து அப்படியே எண்ணையில் பொரித்து அளிக்கப்பட்டது. கோழி இனிப்பாக இருந்தது. அசைவம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் விசித்திரமான சுவையாகப்பட்டலும் சாப்பிட்டுவிடலாம்.


மதியம் பரம்பனான் ஆலய வளாகத்திற்குச் சென்றோம். இந்தியாவிற்கு வெளியே உள்ள இரண்டாவது பெரிய இந்து ஆலய வளாகம் இது. உலக பாரம்பரியச் செல்வமாக யுனெஸ்கோவால் பேணப்படுகிறது. அங்கோர்வாட் பேராலய வளாகத்திற்குப் பின் இந்துக்கள் இந்தியாவுக்கு வெளியே சென்றாகவேண்டிய ஆலயம் இதுவே

கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் யோககர்த்தாவை ஆண்ட ஸ்ரீவிஜயப்பேரரசின் சஞ்சய வம்சத்தைச் சேர்ந்த ராக்காய் பிக்காதன் என்னும் அரசரால் இந்த வளாகத்தின் பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன.பின்னர் லோகபாலர் மற்றும் பாலிதுங் மகாசம்பு ஆகிய மன்னர்கள் இதை விரிவாக்கம் செய்தனர். நூறாண்டுக்காலம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது இது

சிவக்கிரகம் என இந்த ஆலயவளாகம் அழைக்கப்பட்டிருக்கிறது. இதனருகே ஓடிய சிவக்கிரகா என்னும் ஆற்றை அணைகட்டித்தடுத்து ஒரு பெரிய பாசனத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பதை இங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. இன்று ஓபக் என அழைக்கப்படும் அந்த ஆறு தடம் மாறி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த ஆலயவளாகம் மத்தார பேரரசின் தக்ஷர் மற்றும் டுலாதோங் அரசர்களால் மேலும் விரிவாக்கிக் கட்டப்பட்டது. இவ்வாலயத்தைச் சுற்றி பல்லாயிரம்பேர் வாழ்ந்த ஒரு மதத்தலைநகரம் இருந்தது. ஒரு காலத்தில் மிகப்பெரிய பிராமணக் குடியிருப்பு இங்கு இருந்தது என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன

தொல்லியல் ஆய்வுகளின்படி இங்கே 240 ஆலயங்கள் இருந்துள்ளன. இன்று இடிபாடுகளாக எஞ்சியிருப்பவை 70 ஆலயங்கள். ஓரளவு முழுமையாக இருப்பவை 17 ஆலயங்கள். பிற ஆலயங்களைச் சீரமைக்கும் பணி யுனெஸ்கோவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிபி 930 வாக்கில் ம்பு சிந்தோக் மன்னரின் ஆட்சிக்கலாத்தில் இங்கிருந்து மதத்தலைநகரம் கிழக்கு ஜாவாவுக்கு மாற்றப்பட்டது. அதற்கு அருகே மௌண்ட் சிரோபி உள்ள எரிமலை வெடித்தது காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.


ஜாவாவின் இந்து அரசுகளின் அழிவுக்குப்பின்ன்னர் பரம்பனான் கைவிடப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் வெடித்த எரிமலையின் நில அதிர்வால் இடிந்தழிந்து மண்மூடி கிடந்தது. காலப்போக்கில் முற்றாகவே மறக்கப்பட்டது.

உள்ளூர் மக்கள் இந்த இடிபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால் இதன் வரலாறு தெரிந்திருக்கவில்லை. ஆகவே இதைப்பற்றி பல நாட்டார் கதைகள் உருவாயின. இது பூதங்களால் கட்டப்பட்ட ஆலயம் என்று நம்பினர். இக்காலகட்டத்தில் தஞ்சைப் பெரியகோயிலும் இப்படித்தான் இருந்தது. தஞ்சை மக்களே அதை பூதங்கள் கட்டினர் என்ற அளவிலேயே அறிந்திருந்தனர். அதன் மேல் மண்மூடிக்கிடக்க கொடிகளும் செடிகளும் அடர்ந்திருந்தன. ஆங்கிலேயரால்தான் அது மீட்கப்பட்டது

பரம்பனான் இடிபாடுகள்

இந்தோனேசியாவை ஆண்ட போர்ச்சுக்கீசிய டச்சு அரசுகளுக்கு அதன் தொல்வரலாற்றில் ஆர்வமிருக்கவில்லை. குறுகியகாலம் இங்கு பிரிட்டிஷ் ஆட்சி அமைந்ததே இந்தோனேஷியாவின் நல்லூழ் எனச்சொல்லலாம்.

1811ல் அன்று கீழைநாடுகளின் பொறுப்பிலிருந்த தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்சின் ஊழியராக இருந்த காலின் மக்கின்ஸி இவ்வாலய வளாகத்தைப் பார்க்க நேர்ந்தது. அவரது பெருமுயற்சியால் இவ்வாலயம் சர்வதேச வரலாற்றாய்வாளர்களின் கவனத்திற்கு வந்தது. அதன்பின்னரே ஓரளவு மறுஅமைப்புப் பணிகள் தொடங்கின. ஆயினும் பெரிய அளவில் நிகழவில்லை. இதைப்பற்றி தொடர்ந்து எழுதிய மக்கின்ஸி இந்த ஆலயங்களை மேலைநாட்டு ஆய்வாளர் கவனத்திற்கு கொண்டுவந்தார்

காலின் மெக்கின்ஸி இந்தியாவில் ஆய்வுசெய்கிறார்

காலின் மெக்கின்ஸி கிழக்கத்தியப் பண்பாடுகள் மேல் பெருங்காதல் கொண்ட நிலஅளவையாளர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் சென்னையில் நெடுங்காலம் பணியாற்றினார். தென்னிந்தியத் தொல்பொருட்சின்னங்கள் மீட்டுப் பாதுகாக்கப்பட்டதில் பெரும்பங்காற்றியவர். இந்தியாவின் பண்டைய ஏட்டுச்சுவடிகளையும் சேகரித்தார்.

எந்த இந்தியத் தேசியத்தலைவருக்கும் நிகராக இந்தியர்களால் கொண்டாடப்படவேண்டியவர் மெக்கின்ஸி. அவர் இல்லையேல் தென்னிந்தியக் கலைக்கோயில்கள் அழிந்திருக்கக் கூடும். சென்னையின் மெக்கின்ஸி ஆவணக்காப்பகம் அவர் பேரில் இயங்குகிறது. மெக்கின்ஸிக்கு ஒரு நல்ல சிலை சென்னையில் அமைப்பது நம் கடமை.

IMG_6514

1953ல்தான் பரம்பனான் கோயில்வளாகம் ஓரளவேனும் சீரமைத்து முடிக்கப்பட்டது. அன்றைய இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ அதை திறந்துவைத்தார். ஆலயத்தின் இடிபாடுகளில் கணிசமானவை திருடப்பட்டு கட்டுமானப்பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தமையால் மீண்டும் செதுக்கப்பட்ட கற்களைக் கலந்து அடுக்கித்தான் இதை எழுப்பவேண்டியிருந்தது

2006ல் நடந்த நிலநடுக்கத்தால் இந்த ஆலயம் மீண்டும் சரிந்தது. அதன்பின்னர் யுனெஸ்கோவால் மீண்டும் அமைக்கப்பட்டது. இன்னமும் கட்டுமானப்பணி நாலாபக்கமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றுள்ள பரம்பனான் ஆலயம் என்பது யுனெஸ்கோவால் சிற்பக்கலை வல்லுநர்களைக்கொண்டு 70 சதவீதம் மறுநிர்மாணம் செய்யப்பட்டது

இவ்வாலயவளாகத்தை சூழ்ந்து நிலம் தனியாரிடம் நெல்வயல்களாக இருந்தது. ஒரு சந்தை உருவாகி ஆலயம் சூழப்பட்டிருந்தது. சீரமைப்புக்குப்பின் அவை முழுமையாக அகற்றப்பட்டு ஆலயத்தைச்சூழ்ந்துள்ள பெரிய நிலப்பரப்பு அகழ்வாய்வுக்குரியதாக பேணப்படுகிறது

இந்தியாவிலும் பெரும்பாலான முக்கியமான ஆலயங்களைச் சுற்றி சில்லறை வணிகர்களின் கடைகள் அமைந்து அத்தனை ஆலயங்களும் சந்தைக்குள் அமைந்துள்ள உணர்வு ஏற்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற பல ஆலயங்களின் கோபுரங்களைப் பார்ப்பதற்கே வழியில்லை. நெல்லை போன்ற சில இடங்களில் பயணிகளை இந்த வணிகர்கள் விரட்டியடிக்கிறார்கள். இந்தியாவில் இதைப்போன்ற பல கலைக்கோயில்கள் கைவிடப்பட்டு அழிந்துகொண்டிருக்கின்றன.

இந்த ஆக்ரமிப்புகள் மற்றும் சந்தைகளை சட்டபூர்வமாக அகற்றி ஆலயத்தைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பை திறந்தவெளியாக பூங்காவாக பேணவேண்டியது மிக அவசியமானது. ஆலயங்கள் அழியாமல் தூய்மையாகக் காக்க அதைச்செய்தே ஆகவேண்டும்

இந்தோனேசியாவின் பண்பாடு என்பது இந்துப்பண்பாட்டின் மிகமுக்கியமான ஓரு பகுதி. இந்துக்களில் அறிஞர்கள்கூட இன்னும் அதைப்பற்றி ஏதுமறியாமலிருப்பது இந்தச் செய்தியுகத்தில் ஓர் அவலம். இணையத்தில் கிடைக்கும் Monumental Java [ J. F. Scheltema ] ஓர் அற்புதமான நூல். அதை எவரேனும் தமிழாக்கம் செய்து கொண்டுவரலாம்.


ஸ்ரீகண்டி ஜாவாத்தீவுகளின் நாயகி- ஜாவா குமார் கட்டுரை

மணிமேகலையின் ஜாவா- ஜாவா குமார் கட்டுரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59
அடுத்த கட்டுரைதமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்