‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58

பகுதி ஐந்து : தேரோட்டி – 23

அர்ஜுனன் துவாரகையை அடைவதற்கு முன்னரே நகரம் மணவிழவுக்கென அணிக்கோலம் கொண்டிருந்தது. அதன் மாபெரும் தோரணவாயில் பொன்மூங்கில்களில் கட்டப்பட்ட கொடிகளாலும் இருபுறமும் செறிந்த செம்பட்டு சித்திரத்தூண்களாலும் பாவட்டாக்களாலும் பரிவட்டங்களாலும் மலர்க்காடு என வண்ணம் கொண்டிருந்தது. அவர்கள் அணுகும் செய்தியை முன்னரே சென்ற புரவித் தூதன் கொடியை அசைத்து தெரிவித்ததும் தோரண வாயிலுக்கு இருமருங்குமிருந்த காவல்மாடத்துக்கு மேல் இருந்த பெருமுரசுகள் முழங்க தொடங்கின. கொம்புகள் உடன் எழுந்து பெருங்களிற்றுநிரையென பிளிறலோசை எழுப்பின.

சில கணங்களுக்குள் நகரின் நூற்றுக்கணக்கான காவல் மாடங்களில் இருந்த முரசுகள் ஒன்றிலிருந்து ஒன்றென வந்த ஒலி பற்றிக்கொண்டு முழங்கத் தொடங்க நகரமே களிகொண்ட இளங்களிறென குரல் எழுப்பியது. நீண்ட பயணத்தால் சலிப்புற்று கால் சோர்ந்திருந்த யாதவர் அவ்வோசை கேட்டு உயிர் மீண்டனர். அவ்வோசைக்கு எதிரோசை என யாதவர்நிரையும் ஒலியெழுப்பியது. அரிஷ்டநேமியையும் சுபத்திரையையும் இளைய யாதவரையும் துவாரகையையும் யாதவர் குலக்குழுக்களையும் வாழ்த்தும் கூச்சல்கள் எழுந்து அலையடித்தன.

அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “வாழ்த்தொலி எழுப்புகையில் மட்டுமே தங்களை குடிமக்களென உணருகின்றனர் மானுடர் என்று விதுரர் சொல்வதுண்டு” என்றான். சுபத்திரை “ஆம்” என்று சொல்லி திரும்பி யாதவர்களை நோக்கியபின் “சேர்ந்து குரல் எழுப்புகையில் அச்சொற்களை அவர்களே நம்பத்தொடங்குகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் சிரித்தபடி “ஆம், இவ்வாழ்த்து வரிகளுக்கு நடுவே அவர்கள் இக்கணம் வரை எண்ணியிராத சில பெயர்களையும் சேர்த்தால் அவர்களும் வாழ்த்துக்குரியவர்கள் ஆகிவிடுவார்கள். பின்பு இவர்களின் தோள்களிலிருந்து அவர்களை இறக்குவது கடினம்” என்றான்.

“அஸ்தினபுரியில் எத்தனை வருடம் இருந்தீர்கள்?” என்று சுபத்திரை கேட்டாள். “ஐந்து வருடம். துரோணரிடம் கல்வி கற்று முடிந்தபின் அஸ்தினபுரியின் படைக்கலப் பயிற்றுநராக பணியாற்றினேன்” என்றான். “அங்கு இளைய பாண்டவரை நீங்கள் சந்தித்ததுண்டா?” என்று சுபத்திரை கேட்டாள். “பல முறை” என்றான் அர்ஜுனன். “உங்களுக்கும் அவருக்கும் எப்போதேனும் தனிப்போர் நிகழ்ந்ததுண்டா?” என்றாள். “இல்லை” என்றான் அர்ஜுனன். “நான் அரச குடியினன் அல்லன். அரச குடியினர் அல்லாதவருடன் அவர்கள் களிப்போர் செய்வதில்லை” என்றான்.

சுபத்திரை “என்றேனும் ஒரு நாள் அவரை களத்தில் சந்தியுங்கள்” என்றாள். “அவர் நிகரற்ற வீரர். கர்ணனும் இளைய யாதவரும் மட்டுமே அவரை வெல்ல முடியும் என்கிறார்கள்” என்றான். “நீங்கள் வெல்ல முடியும்” என்று சட்டென்று தலை திருப்பி விழிகள் கூர்மையுற அவள் சொன்னாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “வெல்ல முடியும்… வெல்வீர்கள்” என்றாள் சுபத்திரை. “வென்றாக வேண்டுமா?” என்று அர்ஜுனன் கேட்டான். சற்றே வீம்புடன் தலை அசைத்து “ஆம்” என்றாள் அவள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். அவள் விழிகளை சரித்து “எனக்காக” என்றாள். “வென்ற பின்?” என்றான் அர்ஜுனன். “அவ்வெற்றி எனக்காக என்று அவரிடம் சொல்ல வேண்டும்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் சில கணங்களுக்குப் பின்பு சிரித்து “அது நிகழட்டும்” என்றான்.

“நீங்கள் நம்பவில்லையா?” என்றாள் சுபத்திரை. “நம்புகிறேன். சிவயோகி ஒருவனால் அர்ஜுனன் தோற்கடிக்கப்படுவான் என்று நிமித்திகரின் சொல் உள்ளது” என்றான். சுபத்திரை “நான் அதற்காக எத்தனை விழைகிறேன் என்று தெரியுமா?” என்றாள். அர்ஜுனன் திரும்பி அரிஷ்டநேமியை பார்த்தான். அசைவற்று ஊழ்கத்தில் என அமர்ந்திருந்தார். “உண்மையிலேயே இந்நகரின் வாயிலுக்குள் நுழைவது இவரை நிலையழியச் செய்யவில்லையா?” என்று சுபத்திரையிடம் கேட்டான். “இல்லை என்றே எண்ணுகிறேன். உள்ளத்தை எவராலும் உடலிலிருந்து அத்தனை விலக்கி விட முடியாது.”

தோரணவாயிலின் முகப்புக்கு அக்ரூரர் வந்திருந்தார். அவருடன் துவாரகையின் மூன்று படைத்தலைவர்கள் துணை வந்தனர். அரிஷ்டநேமியை அழைத்துச் செல்வதற்காக வெண்புரவிகள் ஏழு பூட்டப்பட்ட அணித்தேர் செந்நிறப் பட்டுத்திரைகள் உலைய, பொன்முகடுகள் மீது துவாரகையின் கருடக்கொடியும் சௌரபுரத்தின் நேமிக்கொடியும் படபடக்க நின்று கொண்டிருந்தது. தோரணவாயிலில் இருந்து மூன்று வெண்புரவிகள் துவாரகையின் கருடக் கொடியுடனும் சௌரபுரத்தின் கதிர்க் கொடியுடனும் மதுராவின் சங்குக் கொடியுடனும் பறந்து வருபவை போல புழுதிச் சிறகுகள் இருபுறமும் அசைய வந்தன.

முன்னால் சென்ற காவலன் வாளை உருவி தன் தலை மேல் ஆட்ட யாதவர்களின் நிரையில் ஆங்காங்கு நின்றிருந்த செய்திபகிர்பவர்கள் கொம்புகளை முழக்கி அனைவரையும் நிற்கச்செய்தனர். ஒருவரோடொருவர் முட்டிக் கொண்டு யாதவர்களின் நீண்ட நிரை அசைவழிந்தது. காவலர் தலைவன் முன்னால் சென்று அரிஷ்டநேமியிடம் “மூத்தவரே, தாங்கள் அணி முகப்புக்கு செல்லுங்கள்” என்றான். அவர் விழிகளை திறந்து அவனை நோக்கி “ஆம்” என்றார். அவரது புரவி தலையை சிலிர்த்து இரு முறை தும்மி தூசியை உந்தியபடி முன்னால் சென்றது.

கருடக்கொடியுடன் வந்தவன் முதலில் அணுகி முகப்பில் நின்ற அரிஷ்டநேமியின் முன்பு புரவியை விரைவழியச்செய்து அக்கொடியை முறைமைப்படி மும்முறை தாழ்த்தி தலைவணங்கி “சௌரபுரத்தின் இளவரசரை, விருஷ்ணி குலத்தின் மூத்தவரை, துவாரகை பணிந்து வரவேற்கிறது. நல்வரவாகுக!” என்றான். அவன் வலப்பக்கமாக விலகிச் செல்ல விருஷ்ணி குலத்தின் சங்குக் கொடியுடன் வந்த வீரன் வாழ்த்துரை அளித்தான். அதன் பின் சௌரபுரத்தின் காவலன் கதிர்க் கொடியை மும்முறை தாழ்த்தி வாழ்த்தி வணங்கினான். முறைப்படி தலை தாழ்த்தி அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட அரிஷ்டநேமி “நல்லூழ் சிறக்க!” என்றார்.

கொடிவீரர்கள் திரும்பி நிரையாக தோரணவாயிலை நோக்கி செல்ல அவர்களுக்குப் பின்னால் அரிஷ்டநேமி அருகே படைத்தலைவனும் இருபக்கமும் யாதவர்களும் சென்றனர். சுபத்திரை “செல்வோம்” என்றாள். அர்ஜுனன் “யாதவ இளவரசிக்கு முறைமை வாழ்த்து எதுவும் இல்லையா?” என்றான். அவள் “இந்நாள் அவருக்குரியது” என்றாள்.

அவர்கள் தோரணவாயிலை அணுகியதும் அங்கு நின்றிருந்த அக்ரூரர் வந்து அரிஷ்டநேமியை வாழ்த்தினார். “சௌரபுரியின் இளவரசே, துவாரகைக்கு வருக! இங்கு நல்லூழ் சிறக்க தங்கள் வரவு நிமித்தமாகுக!” என்றார். புரவியிலிருந்து இறங்கி சூழ்ந்திருந்த அனைவருக்கும் மேல் உயர்ந்த பெருந்தோளுடனும் சுருள்முடி முளைக்கத் தொடங்கியிருந்த உருண்ட தலையுடனும் நின்றிருந்த அரிஷ்டநேமி திகைத்தவர் போல, அடையாளம் அறியாதவர் போல அத்தோரண வாயிலை நிமிர்ந்து பார்த்தார். படைத்தலைவர் “தங்களுக்காக அணிரதம் வந்துள்ளது இளவரசே” என்றார். தலை அசைத்தபின் நீண்ட கால்களை எடுத்து வைத்து நடந்து தன் தேரை அணுகி அதன் பொன் முலாம் பூசப்பட்ட படிகளை நோக்கி ஒரு கணம் தயங்கி நின்றார்.

“தங்களுக்கான தேர் இளவரசே” என்றார் அக்ரூரர். அதைக்கேளாதவர் போல அவர் தயங்கி நின்றார். பின்பு காலை தூக்கி அப்பொற்பரப்பின் மேல் வைத்து தலைதாழ்த்தினார். அது கடுங்குளிருடன் இருப்பதை அவர் உணர்வது போல தோன்றியது. உடலை அசைத்து ஒரு காலை தூக்கி வைத்து தேர்த்தட்டின் மீது அமர்ந்து கொண்டார். அக்ரூரர் கைகாட்ட தேர்ப்பாகன் கடிவாளத்தொகையை மெல்ல சுண்டினான். ஏழு புரவிகளும் உடலை நெளித்து மணிகளும் சலங்கைகளும் குலுங்க தலை அசைத்து முன்னால் சென்றன. வெண்பஞ்சுத் துகள்களால் இழுத்துச் செல்லப்படும் பொன்னிற இறகு போல் இருந்தது அந்தத் தேர். அர்ஜுனன் அதன் அடியில் இருந்த பன்னிரண்டு உலோக விற்களை பார்த்தான். அவற்றின் மேல் அமைந்திருந்தமையால் அந்தத் தேர் மண்ணில் படாமல் ஒழுகிச்செல்வது போல் தோன்றியது.

தேருக்கு முன்பாக அணிவகுத்து நின்றிருந்த ஏழு திறந்த வண்டிகளில் அமர்ந்திருந்த இசைச்சூதர்கள் மங்கல நாதத்தை எழுப்பியபடி முன்னால் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து மூன்று திறந்த தேர்களில் அணிச்சேடியர் மலர்களைத் தூவி வாழ்த்துரை கூவியபடி சென்றனர். அரிஷ்டநேமியின் தேருக்குப் பின்னால் அக்ரூரரும் படைத்தலைவர்களும் தங்கள் தேர்களில் தொடர்ந்தனர். புரவிகளில் அவர்களைத் தொடர்ந்த அர்ஜுனனும் சுபத்திரையும் இருபுறமும் மாளிகை முகப்புகளில் நகர் மக்கள் செறிந்து உவகை எழுந்த முகங்களுடன் வாழ்த்துக்கூவி மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அள்ளி அரிஷ்டநேமியின் தேர்மேல் வீசுவதை கண்டனர்.

அர்ஜுனன் தன் புரவியை சுபத்திரைக்கு இணையாக செலுத்தி “இந்த உவகை உண்மையானது” என்றான். “ஆம், அவர்கள் அனைவருக்கும் உகந்த ஒருவர்” என்றாள். “அவர் இவர்களையும் இந்நகரையும் உதறி துறவு பூண்டது குறித்து ஏமாற்றம் இவர்களுக்கு இருந்துள்ளது. ஆகவேதான் இவ்வரவை கொண்டாடுகிறார்கள்” என்றான். “இயல்புதானே?” என்றாள் சுபத்திரை. “சமணப்படிவராகி ஆன்மா மீட்படைந்து அருகர் நிலைக்கு அவர் உயர்ந்திருந்தால் இவர்கள் அவரை துறந்திருப்பார்களா?” என்றான் அர்ஜுனன். “ஒவ்வொரு கணமும் ஒரு படிவர் மெய்மையை உணர்ந்து விண்ணேகிக் கொண்டிருக்கிறார் என்று அருக நெறியினர் சொல்வார்கள். அவர்களின் பெயர்களெல்லாம் எவர் நினைவிலும் நிற்பதில்லை. தெய்வங்கள் மட்டுமே அவர்களை அறியும்” என்றாள் சுபத்திரை.

மலர்மழையும் வாழ்த்துச்சொல் மழையும் மூடியிருந்த துவாரகையின் அரசப்பெரு வீதியில் நுழைந்து அதன் குன்றின் மேலேறிய சுழல்பாதையில் சென்று கொண்டிருந்தபோது அர்ஜுனன் தன்னருகே சுபத்திரையும் வந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்து கொண்டிருந்தான். அந்த மங்கலமழையும் தானும் அவளும் மட்டுமே அங்கிருப்பது போல் உள்ளம் மயங்கியது. அவள் தன் புரவியை முடிந்தவரை அவனருகே அவனுக்கு இணையாக செலுத்தினாள். அவன் கால்கள் அவள் கால்களில் அடிக்கடி முட்டி மீண்டன.

ஒரு முறை ஊடே புகுந்த சரடொன்றில் அவள் புரவி காலெடுத்து வைத்து நிலையழிந்தபோது அவன் அவள் தோளை மெல்ல தொட்டான். அந்தத் தொடுகையின் மேல் அவள் தன் கைகளை வைத்துக்கொண்டாள். தொட்டதுமே தன்னை உணர்ந்தவன் போல கையை இழுத்து விழிகளை விலக்கிக் கொண்டான் அர்ஜுனன். ஆனால் அவள் நோக்கு தன் மேல் இருப்பதை உடலால் உணர்ந்தான். நெடுநேரம் என சில கணங்களை கடந்தபின் திரும்பி அவளை பார்த்தான். அவள் விழிகள் அவனை சந்தித்தன. குருதி படிந்த வேல் போன்ற விழிகள்.

அவன் தன் பார்வையை திருப்பி மேலேறிச்சென்ற துவாரகையின் சாலையின் இருமருங்கிலும் எழுந்த மாபெரும் விண்மாளிகைகளை பார்த்தான். ஒவ்வொரு மாளிகையும் பூத்த சரக்கொன்றை போல் பொற்தோரணம் சூடியிருந்தது. நகரம் முழுக்க நிறைந்திருந்த களிவெறியை அங்கெழுந்த ஓசையே காட்டியது. நெஞ்சு நிறைந்து விம்ம ஒவ்வொரு கணமென கடந்துபோவது கடினமாக இருந்தது. எனவே அவ்வுள எழுச்சியை முடிந்தவரை பின்னால் இழுத்து உலகியல் நோக்கில் கொண்டு வந்தான். திரும்பி அவளிடம் “மணவிழாக்கள் நகர் மக்களை களி கொள்ளச் செய்கின்றன” என்றான்.

அவள் “ஆம்” என்றாள். பிறகு அவள் “நான் இந்நகரத்தில் வரும்போதெல்லாம் ஏதேனும் ஒன்றை நிமித்தமாகக் கொண்டு இந்நகர் களிவெறி கொண்டிருப்பதையே கண்டிருக்கிறேன்” என்றாள். “ஆயினும் மங்கல விழவுகள் ஒரு படி மேலானவை” என்றான் அர்ஜுனன். “அவை ஒவ்வொருவருக்கும் இனிய நினைவுகளை எழுப்புகின்றன போலும்” என்றாள் அவள். “இந்நகரம் காமத்தின் மையம் என்கிறார்கள். இது ஒரு போதும் அனங்கனின் கொடி தாழாத கழைகளைக் கொண்டது என்று சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன்” என்றாள்.

மீண்டும் நாணிழுத்த வில்லென தன் உள்ளம் இறுகுவதை உணர்ந்தபின் அர்ஜுனன் பேச்சை நிறுத்திக் கொண்டான். சுபத்திரை “இம்முறை அனங்கன் தன் வில்லால் ஊழ்கம் இயற்றிய உருத்திரனுக்கு நிகரான ஒருவரை வீழ்த்திவிட்டான். களியாட்டுக்கென்ன குறை!” என்றாள். அர்ஜுனன் “இல்லை. அவரை வீழ்த்துவது அவனுக்கு அத்தனை கடினமானதாக இல்லை” என்றான். “எண்ணினேன்” என்று சிரித்தாள். “தன்னிடம் இருக்கும் மிக மெல்லிய மலர் ஒன்றை இரு விரலால் சுண்டி ஏவி இவரை வீழ்த்திவிட்டான். அதை நான் உடனிருந்து கண்டேன்” என்றான்.

“ஏமாற்றம் கொண்டீர்களா?” என்றாள் சுபத்திரை. “இல்லை” என்றான். “ஏன்?” என்றபின் அருகே வந்து “யோகியின் தவம் கலைவது மிக எளிதென்று அறிந்திருக்கிறீர்களா?” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்கி “மறு எல்லைக்கு தங்களை உந்திச் சென்றவர்களே திரும்பி வருகிறார்கள். ஏனெனில் இது ஒரு சுழல்பாதை. நிகர் நிலையை பேணுபவர்கள் எளிதில் சரிவதில்லை” என்றான். அவள் சிரித்தபடி “மண ஊர்வலத்தில் ஒரு சிவயோகி செல்வதை அத்தனை பேரும் விழிகூரத்தான் செய்கிறார்கள்” என்றாள். பின்பு உரக்க நகைத்து “இங்குள்ள பெண்கள் அனைவரின் விழிகளிலும் தாங்களே இருக்கிறீர்கள் யோகியே” என்றாள்.

அர்ஜுனன் திரும்பி பெண்களின் கண்களைப் பார்த்துவிட்டு “யார் சொன்னது?” என்றான். “பெண்ணென எனக்குத் தெரியாதா?” என்றாள். “தாடி நீட்டிய எந்த ஆண்மகனையும் பெண்கள் பார்ப்பதுண்டு என்று முதியயாதவர் காலகர் சொன்னார்.” “ஆம், உண்மை அது. கரிய நீண்ட தாடி பெண்களுக்கு விருப்பமானது. அவர்களால் அதிலிருந்து விழிகளை விலக்கவே முடிவதில்லை.” அர்ஜுனன் “எல்லா பெண்களுக்குமா?” என்றான். “ஆம். எல்லா பெண்களுக்கும்தான்” என்றாள். “தங்களுக்குமா?” என்றான். அவள் நன்கு சிவந்து கதுப்பென ஆன முகத்துடன் விழிகளை மறுபக்கம் திருப்பியபடி புன்னகைத்தாள்.

அர்ஜுனன் தன் தாடியை கைகளால் சுழற்றி நீவிவிட்டபடி பெண்களை பார்த்தான். அவள் “பார்க்காதீர்கள்” என்றாள். “ஏன்?” என்றான். “தாங்கள் சிவயோகி. இப்படி பெண்களை பார்த்தால் தங்களை பொய்த்துறவி என்று அவர்கள் எண்ணக்கூடும் அல்லவா?” என்றாள். “நான் எப்போதும் பெண்களைப் பார்க்கும் துறவியாகவே இருந்துளேன்” என்றான் அர்ஜுனன். அவள் சிரித்து “அவ்வகையிலும் ஒரு துறவி உண்டா?” என்றாள். “பார்ப்பதில் என்ன?” என்றான் அர்ஜுனன். “ஒன்றுமில்லை” என்றாள். சிரித்து உதடுகளை உள் மடித்து இறுக்கி மேலும் சிரிப்பை அடக்கியபின் “எனக்கு அப்போதே ஐயமிருந்தது” என்றாள். “என்ன ஐயம்?” என்றான் அர்ஜுனன். “தங்கள் விழிகள் துறவிகளுக்குரியவை அல்ல” என்றாள்.

அர்ஜுனன் “எங்களது துறவு என்பது வேறு. நாங்கள் இடது முறைமையை சார்ந்தவர்கள். கள்ளும் களி மயக்கும் சிவ மூலிகையும் எங்களுக்கு விலக்கல்ல” என்றான். “அதையும் இப்பெண்கள் அறிவார்கள் என்று தோன்றுகிறது. ஒவ்வொருத்தியும் உங்களைப் பார்த்து இன்னொருத்தியின் செவிகளுக்குள் எதையோ சொல்கிறாள். அத்தனை பெண்கள் முகமும் காய்ச்சல் கண்டது போல் சிவந்து பழுத்துள்ளன.” அர்ஜுனன் “அவை உங்கள் விழி மயக்கு” என்றான். “ஏன் நான் அவ்வாறு விழி மயக்கு கொள்ள வேண்டும்? அவர்களிடம் எனக்கென்ன பொறாமையா?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் ஒன்றும் பேசாமல் சென்றான்.

அவள் மேலும் அருகே வந்து “தாங்கள் கேட்டதற்கு நான் இன்னும் மறுமொழி சொல்லவில்லை” என்றாள். “எதற்கு?” என்றான் அர்ஜுனன். “சற்று முன் கேட்டதற்கு” என்றாள். “சற்றுமுன் என்ன கேட்டேன்?” என்றான். அவள் சிரிப்பை அடக்கி உதடுகளை இறுக்கியபோது கழுத்தின் தசைகள் இழுபட்டன. “என்ன கேட்டேன்?” என்றான் அர்ஜுனன். “தாடியை பெண்கள் விரும்புவார்களா என்று?” “ஆம்” என்றான். “பெண்கள் விரும்புவார்கள் என்று நான் சொன்னேன்.” “ஆம்” என்றான் அர்ஜுனன். “பெண் விரும்புவாளா என்று கேட்டீர்கள்” என்றாள். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “விரும்புவாள்” என்ற பின் தன் புரவியை தட்டி அவள் முன்னால் சென்றாள். அதன் சாமர வால் குழைந்து குழைந்து அகன்று செல்வதை அர்ஜுனன் நோக்கி அமர்ந்திருந்தான்.

துவாரகையின் குன்றின் உச்சியில் அமைந்த பெரிய மைய மாளிகையின் அகன்ற முற்றத்தில் அரிஷ்டநேமிக்காக அவரது தந்தை சமுத்ரவிஜயரும் தாய் சிவை தேவியும் காத்து நின்றிருந்தனர். இருபுறமும் அவர் உடன் பிறந்தவர்களான சினியும், சப்தபாகுவும், சந்திரசேனரும் ரிஷபசேனரும், சூரியசேனரும், சித்ரசேனரும், மகாபாகுவும் காத்து நின்றிருந்தனர். அரண்மனைக்கோட்டையின் முகப்பில் இருந்த முரசு ஒலித்ததும் இருபுறமும் நின்றிருந்த இசைச்சூதர்கள் தங்கள் வாத்தியங்களை முழக்கினர். அணிச்சேடியர் வாழ்த்தொலியும் குரவை ஒலியும் எழுப்பினர்.

மங்கலத் தாலங்கள் ஏந்திய அணிப்பரத்தையர் ஏழு நிரைகளாக முன்னால் சென்று அரிஷ்டநேமியின் அணி ஊர்வலத்தை எதிர் கொண்டனர். அவர்களுக்குப் பின்னால் நூற்றி எட்டு வைதிகர்களும் கங்கை நீர் நிறைத்த பொற்கலங்களுடன் வேதம் ஓதி தொடர்ந்தனர். மூன்று கொடிகளுடன் வந்த வீரர்கள் இருபுறமும் விலகி வழிவிட தொடர்ந்து வந்த நிமித்திகன் தன் கொம்பை உரக்க ஊதி “சௌரபுரியின் இளவரசர் துவாரகை மீள்கிறார்” என்று அறிவித்தான். “வாழ்க! வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. மங்கலச் சேடியர் எண் மங்கலங்கள் நிறைந்த பொற்தாலங்களை அவர் முன் உழிந்து இருபுறங்களிலாக விலகிச் சென்றனர். தேர் விரைவழிந்து மெல்ல முற்றத்திற்குள் நுழைந்தது. அரிஷ்டநேமி மெல்ல படிகளில் கால் வைத்து முற்றத்துக்கு இறங்கியபோது அவரது பேருடலின் எடையால் தேர் ஒரு பக்கம் மெல்ல சரிய புரவி ஒரு பக்கம் கால் தூக்கி வைத்து முன்னும் பின்னும் ஆடியது. அதை அங்கிருந்த அத்தனை விழிகளும் கண்டு ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டன.

அவர்களின் தலைக்குமேல் எழுந்த தோள்களுடன் மெல்ல நடந்து முன்னால் வந்தார். விழவின்போது மரத்தில்செய்து சுமந்துசெல்லப்படும் பேருருவத் தெய்வச்சிலை என அவர் அவர்களுக்குமேல் சென்றார். மறுகணம் எறும்புகள் இழுத்துச்செல்லும் வண்டுபோல என்ற எண்ணம் அர்ஜுனனுக்குள் எழுந்தது. வைதிகர் அவர் மேல் கங்கை நீரை தெளித்து வேதம் ஓதி வாழ்த்தினர். வேள்விக்குண்டத்தில் எடுத்த கரியைத் தொட்டு முதுவைதிகர் ஒருவர் அவருக்கு நெற்றிக் குறியிட்டார். இடை வரை குனிந்து அதை பெற்றுக் கொண்டபின் கை குவித்து வணங்கியபடி மெல்ல நடந்து தன் தந்தையை அடைந்தார்.

தொலைவிலேயே நடந்து வந்த தன் மைந்தனைக்கண்டு அறியாது இரு கைகளையும் கூப்பி மார்போடு சேர்த்து அதன் மேல் விழுந்த விழிநீர்த்துளிகளை உணர்ந்தபடி உதடுகளை இறுக்கி நின்றார் சமுத்ரவிஜயர். மைந்தன் அருகே வர வர கால் தளர்ந்தவர் போல் அசைய  முதல்மைந்தர் சினி தந்தையை பற்றிக் கொண்டார். அருகே வந்து முழந்தாளிட்டு குனிந்து தன் தந்தையின் கால்களைத்தொட்டு தன் சென்னியில் சூடினார் அரிஷ்டநேமி. குனிந்து மைந்தனின் தோள்களை தொட விழைந்தும் உடல் அசையாது அப்படியே நின்றார் சமுத்ரவிஜயர். “வாழ்த்துங்கள் தந்தையே” என்றார் மகாபாகு. “ஆம், ஆம்” என்றபடி தலையில் கை வைத்து “அழியாப் புகழ் கொண்டவனாய் இரு” என்றார் சமுத்ரவிஜயர்.

அரிஷ்டநேமி எழுந்து தந்தையை கை கூப்பி வணங்கினார். அருகே நின்றிருந்த சிவைதேவி தன் முகத்தை இரு கைகளிலும் அழுத்தி குனிந்து தோள் குலுங்க அழுது கொண்டிருந்தாள். அயலவளை பார்ப்பது போல் சில கணங்கள் அவளை பார்த்தபின் அரிஷ்டநேமி தன் பெரிய கைகளை நீட்டி அவள் தோளை தொட்டார். அறுந்து விழுந்தவள் போல் அவர் முன் சரிய அள்ளி தன் உடலுடன் சேர்த்துக் கொண்டார். அவள் தலை அவர் வயிறளவுக்கே இருந்தது. அவரது இறுகிய விலா எலும்புகளின் மேல் தன் முகத்தை இறுக அணைத்து உடல் குலுங்கி அதிர அரசி அழுதாள். அவர் தோள்களில் தலை சாய்த்து தந்தையும் அழத் தொடங்கினார்.

இருவரையும் தன் பெருங்கரங்களால் வளைத்து உடலோடு சேர்த்தபின் தலை குனிந்து நின்றார் அரிஷ்டநேமி. அவரது உதடுகள் ஒட்டியிருந்தன. கண்கள் மூடியிருக்க முகம் அங்கு இல்லாதது போல் இருந்தது. கனவு கண்டுறங்கும் குழந்தையின் மென்மை அதில் இருந்தது. சினி அவர் தோளைத்தொட்டு “இளையோனே, நாம் முன்னே செல்வோம்” என்றார். பிற தமையன்களும் அவர் கைகளை பற்றிக் கொண்டனர். மகாபாகு “இளையோனே, இந்நாளில் நான் அடையும் உவகைக்கு நிகரென ஏதுமில்லை இவ்வுலகில்” என்றார்.

உடன் பிறந்தோர் சூழ அவர் அரண்மனைக்குள் செல்வதை அர்ஜுனன் நோக்கியபடி புரவி மேல் அமர்ந்திருந்தான். அதன் பின்னரே தொடர்ந்து வந்தவர்கள் உள்ளே வருவதற்கு கொடி அசைவு காட்டப்பட்டது. அக்ரூரரும் படைத்தலைவர்களும் உள்ளே சென்றபின் அர்ஜுனனின் புரவி உள்ளே வந்தது. அக்ரூரரையும் கடந்து உள்ளே சென்ற சுபத்திரை இடப்பக்கமாக திரும்பி பெண்களுக்கான அரண்மனை நோக்கி புரவியிலேயே சென்றாள். அவள் திரும்பி நோக்குவாள் என்று அர்ஜுனன் எண்ணினான். ஒரு கணம் கூட அவள் திரும்பி நோக்கவில்லை என்பதைக் கண்டதும் புன்னகைத்தான்.

அக்ரூரர் இறங்கி அவனிடம் வந்து “வருக யோகியே. தங்களுக்கான இருப்பிடம் சித்தமாக உள்ளது. சிவயோகி என்று தங்களை தூதன் அறிவித்தான். இங்கு நகரின் தென்மேற்கு மூலையில் சிவாலயங்கள் உள்ளன. உக்ரமூர்த்தியாகவும், அகோர மூர்த்தியாகவும், சித்தமூர்த்தியாகவும், யோகமூர்த்தியாகவும், கல்யாண மூர்த்தியாகவும் கைலாயன் குடிகொள்கிறான். நாளும் பூசனைகள் நடைபெறுகின்றன. தாங்கள் அங்கு சென்று வழிபடலாம்” என்றார். “நன்று” என்றான் அர்ஜுனன். ஏவலன் ஒருவன் வந்து அவன் தோளில் போட்டிருந்த பொதியை வாங்கினான். அர்ஜுனன் மீண்டும் தலை வணங்கி அவனுடன் நடந்தான்.

நகரின் பல இடங்களில் அணி ஊர்வலம் முடிந்து அவை தொடங்கப்போகிறது என்பதை அறிவிக்கும் முரசொலிகள் முழங்கத் தொடங்கியிருந்தன. அவனை அழைத்துச் சென்ற ஏவலனிடம் “இங்கு மண விழா என்று சொன்னார்கள்” என்றான். “ஆம், சௌரபுரியின் இளவரசருக்கான மணத்தை இங்குதான் நடத்த வேண்டுமென்று அவர் தந்தை விழைந்தார். எனவே நாளை மறுநாள் அவ்விழவை ஒருக்க இளைய யாதவர் ஆணையிட்டுள்ளார்” என்றான். அர்ஜுனன் “அது நன்று. அவர் அந்தககுலத்திற்கு இளவரசர் அல்லவா?” என்றான்.

“இங்குள்ள விருஷ்ணிகளும் அந்தகர்களும் ஒன்று கூடும் விழவாகவே அது அமையும். இதற்குள்ளாகவே அவ்விழவிற்கென அனைத்தும் சித்தமாகியுள்ளன. சூழ்ந்துள்ள அத்தனை யாதவ ஊர்களிலிருந்தும் மணவிழவு கூடும் விருந்தினர் வந்துள்ளனர். இத்தனை பெரிய மாளிகைகள் இருப்பினும் போதாமல் ஐநூறு புதிய கொட்டகைகள் அவர்கள் தங்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்நகரில் மணவிழவொன்று நிகழ்ந்து நெடுநாட்களாகின்றன. எனவே சோனகர்களும் யவனர்களும் பீதர்களும் காப்பிரிகளும் கூட அவ்விழவில் பங்கெடுக்கவிருக்கிறார்கள். கடை வணிகர் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது” என்றான்.

அவன் புன்னகைத்து “இது மண விழாவல்ல. உண்மையில் பாரதவர்ஷம் காணப்போகும் மாபெரும் உண்டாட்டு விழா” என்றான். “ஊன் உணவு உண்டு போலும்” என்றான் அர்ஜுனன். “ஊனும் மதுவும் இல்லாது உண்டாட்டு ஒன்று நிகழவிருக்கும் என்பதையே அயல் வணிகர் அறிய மாட்டார்கள் யோகியே” என்றான் ஏவலன். “முன்னரே யாதவர் குலங்கள் அனைத்திற்கும் அறிவிப்பு சென்றுவிட்டது. ஊனுக்கு உடல் முதிர்ந்த அத்தனை ஆடுகளும் கடந்த நான்கு நாட்களாகவே நகருக்குள் வந்து கொண்டிருந்தன. இப்போது மக்களின் பெருங்குரல் கேட்டுக் கொண்டிருப்பதால் நீங்கள் அறிவதில்லை. இது சற்று அடங்கியபின் இரவில் கேட்டுப்பாருங்கள். நகரமே மாபெரும் ஆட்டு மந்தை போல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்” என்றான்.

அர்ஜுனன் “அடுமடையர்கள் எங்கிருந்து?” என்றான். ஏவலன் “ஏழுவகை மடைப்பணி உள்ளது. சோனகர்களும் யவனர்களும் ஊன் உணவில் காரம் இருப்பதை விரும்புவதில்லை. உப்புச்சுவையுடன் உண்பார்கள். காப்பிரிகளுக்கு அனலென எரியவேண்டும். நாமோ ஊனுணவை ஊனென்றே அறியாமல் உருமாற்றி உண்ணும் வழக்கம் உடையவர்கள். தென்புலத்தாருக்கு அதில் கருமிளகு தேவை. வடபுலத்தார் ஊன் மீது பழச்சாறு ஊற்றி அருந்துவர். அத்தனை முறையிலும் சமைப்பதற்கு மடைத்திறனாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மடைப்பள்ளிகள் வடக்குச் சரிவில் உள்ளன. எட்டு பெருமாளிகைகள் இங்கு மடைப்பள்ளிகளாக இயங்குகின்றன என்று அறிந்திருப்பீர்கள். இப்போது மேலும் ஆறு மடைப்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன” என்றான்.

தன் அறையை அடைந்ததும் அர்ஜுனன் உள்ளே நோக்கி “சிவயோகி தங்குவதற்கு இத்தனை ஆடம்பர அறை எதற்கு?” என்றான். “இங்குள்ளவற்றில் எளிய அறை இதுவே” என்றான் ஏவலன். புன்னகைத்து அர்ஜுனன் தலை அசைத்தான். அவன் சென்றபின் மஞ்சத்தில் சென்று அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஒரே கணத்தில் ரைவத மலையிலிருந்து துவாரகை வரைக்குமான பயணம் அவனுள் ஓடி மறைந்தது. வாயிலில் வந்து நின்ற நீராட்டறை ஏவலன் “தங்கள் நீராட்டுக்கும் அதன் பின்புள பூசனை முறைமைகளுக்கும் ஆவன செய்யும்படி எனக்கு ஆணையிடப்பட்டுள்ளது” என்றான். அர்ஜுனன் “நான் நீராடி வருகிறேன். தென்மெற்கு எல்லையில் பைரவர் ஆலயம் அமைந்துள்ள சிவன் கோயில் ஒன்றுக்கு சென்று வணங்காது நான் உணவு உண்பதில்லை” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றான் ஏவலன்.

நீராடி புலித்தோல் ஆடை அணிந்து நீண்ட ஈரக்குழலை தோள்களில் விரித்து நீர்த்துளிகள் உருண்டு சொட்டிய தாடியை கைகளால் அறைந்து துளி தெறிக்க வைத்தபடி அர்ஜுனன் அறைக்கு மீண்டான். ஏவலன் “சிவாலயத்திற்கு தங்களை அழைத்துப் போக வந்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “ஆம், செல்வோம்” என்றான். விருந்தினர் மாளிகையிலிருந்து மறுபுறம் இறங்கி அகன்ற கற்கள் பதிக்கப்பட்ட சாலையினூடாக சென்று தென்மேற்கு திசையை தேர்ந்தான். மைய தெருக்களை நோக்கி நகர் மக்கள் அனைவரும் சென்றதனால் சிறிய பாதைகள் அனைத்தும் ஓய்ந்து கிடந்தன.

“இங்கு பைரவர் பதிட்டைக்கு ஊன் பலி உண்டா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம், ஒவ்வொரு கருநிலவு நாளிலும் ஊன் பலி அளிக்கப்படுகிறது” என்றான் ஏவலன். “சிவயோகியரும் சிவ பூசனை செய்பவரும் அவ்வாலயங்களை சூழ்ந்துள்ள இல்லங்களில் வாழ்கிறார்கள். இந்நகரின் பொதுப் போக்குக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு எதுவும் இங்கில்லை. சிவனுக்கு உரிய நாட்களில் மட்டுமே நகர் மக்கள் அங்கு வழிபடச் செல்கிறார்கள். காபாலிகர்களும் காளாமுகர்களும் போன்ற இடது வழியினர் நகருள் நுழையாமலேயே அங்கு வருவதற்கு பாதையும் உண்டு.”

அதுவரை அறியாச்செவி கேட்டுக் கொண்டிருந்த ஒலியை நெடுநேரம் அர்ஜுனன் சித்தம் பொருட்படுத்தவில்லை. பின்புதான் வியப்புடன் அதை அறிந்து நின்றான். “ஆடுகளின் ஒலி அல்லவா அது?” என்றான். “ஆம். உண்டாட்டிற்கென கொண்டுவரப்பட்டவை. இங்குதான் பட்டி அமைத்து பேணப்படுகின்றன. இது விழவு நாட்களில் இரண்டாவது செண்டு வெளியாக பயன்படும் இடம். ஆடுகளை பட்டி அமைக்க வேறு இடம் இல்லாததால் இங்கு அமைக்கலாம் என்றார் அமைச்சர்.”

ஆடுகளின் பேச்சொலிகள் இணைந்த முழக்கம் சாலை ஓரமாக அமைந்த கட்டடங்களின் இடைவழியாக கேட்டுக்கொண்டிருந்தது. அர்ஜுனன் திரும்பி அங்கே செல்லத்தொடங்க ஏவலன் “ஆலயம் இவ்வழி” என்றான். “நான் முதலில் இவற்றை பார்க்க விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். அவன் பின்னால் வந்தான். அர்ஜுனன் இரு கட்டடங்களின் இடை வழியாகச் சென்ற பாதை வழியாக நடந்து போனான். அங்கு மூங்கிலால் அமைக்கப்பட்ட பட்டிகளுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ஒன்றுடன் ஒன்று உடல் முட்டி அலை அடிக்கும் வெண்ணிறப் பரப்பென தெரிந்தன. அவற்றின் கண்கள் நீர்த்துளிகள் போல மின்னிக் கொண்டிருந்தன. தலை நீட்டி வாய்திறந்து அவை அனைத்தும் ஒற்றைச் சொல்லையே சொல்லிக் கொண்டிருந்தன.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைதீபாவளி பழைய கட்டுரைகள்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் சிலிக்கானும்