அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக படித்துக்கொண்டு இருக்கின்றேன். பொதுவாக புனைவின் கற்பனைகள் கட்டமைக்கும் மொழியும் அதன் படிமங்களிலும் தினமும் துடிப்புடன் பரவசமாக வாழவைக்கும். துல்லியமான காட்சிகள்,பின்னிப்பிணைந்து விரியும் அக ஓட்டங்கள்,ஒட்டியும் உரசியும் விரியும் படிமங்களும் அதன் உள்ளர்த்தங்களும் மிகச்சிறந்த கற்பனை உலகுக்குள் கூடிச்செல்லும். புனைவுக்கும் நனவுக்கும் இடையிலான வெற்றிடம் மிகக்குறுகியதாக இருக்கும் படைப்புகளையே இலக்கியமாக கொள்ளமுடிகின்றது. இதே கதைசொல்லல் சம்பவ விவரிப்புகள் முறையினை குறிப்பிட்ட சில இலங்கை எழுத்தாளர்களைத்தவிர மற்றவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அழகியல் நுட்பங்கள் அற்ற மிகத்தட்டையான படைப்புக்களாகவே அவை இருக்கின்றன.
சமீபத்தில் இலங்கை வாசகர்களால் அதிகம்பேசப்பட்ட படைப்புகளான குணாகவியழகன் என்பவர் எழுதியிருக்கும் நஞ்சுண்டகாடு, விடமேரிய கனவு என்ற இரண்டு நாவல்களைப்படித்தேன். என்னவென்று சொல்லவது கரப்பான்பூச்சிகள் ஊர்வதுபோல இருந்தது. மிகமிக தட்டையான நடை. சம்பவக்கோர்ப்புக்களை காட்சியாக காட்டவோ நுண்மையாகச் சித்திரிக்கவோ தெரியவில்லை. சொல்லும்முறையில் எந்த நுட்பங்களும் இல்லை. மொண்ணையான உரையாடலுடன் பேசிக்கொண்டே போகிறது நடை. இவை இலங்கை விமர்சகர்களால் போலியாகக் கொண்டாடப்படுகின்றது.
போரின் முன்னும் பின்னும் போராளிகள்,பொதுமக்கள் அனுபவித்த வலிகளை எவராவது தட்டையாக எழுதிவிட்டாலும் அவரைக்கொண்டாடுகின்றார்கள், படைப்பாளி நாவலில் முன்வைக்கும் அரசியல் கருத்தையே கொண்டாடுகின்றார்கள் அல்லது எதிர்வினையாற்றுகின்றார்கள். அதனைச் சொல்லவரும் இலக்கிய அழகியலையும் அதன் உயிர்ப்புத்தன்மையையும் அவர்கள் மதிப்பிடுவதாகத் தெரியவில்லை. ஏன் இந்த மட்டமான அணுகுமுறைகளையும் போலியான கொண்டாடுதலையும் இலங்கை,புகலிட வாசகர்கள் முன்வைக்கின்றார்கள்?
அன்புடன்
x
பிற்குறிப்பு – இக்கடிதத்தினை பொதுவெளியில் பிரசுரிக்கநேர்ந்தால் என் பெயரை கடிதத்தில் மாற்றிவிடுங்கள்.
உங்கள் கடிதத்தை வாசித்தேன். ஏற்கனவே வேறு படைப்புகளைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதில் மட்டும் ஏன் இந்தத் தயக்கம்? இந்தத் தயக்கத்தை அளிப்பது இதிலுள்ள ஓர் அதிகாரம் கெடுபிடி அல்லவா? அதை உடைத்து மீறத்தானே ஓர் இலக்கியவாதிக்கு தினவு எழவேண்டும்? இந்த ரகசியம் எதற்காக?
மேலே குறிப்பிட்ட இரு நாவல்களையும் நான் வாசித்தேன். இலங்கை சார்ந்த எழுத்துக்களில் சயந்தன் அகிலன் இருவரையும் கருத்தில்கொள்ளலாம் என நினைக்கிறேன். குணா கவியழகனின் எழுத்துக்களை புறந்தள்ள விரும்பவில்லை, அவை முயற்சிகள் என்ற அளவில் முக்கியமானவை
இரு கோணங்களில் நீங்கள் சொல்வதைப் பார்க்கலாம். நேரடியான பேரழிவுச்சித்தரிப்புக்கு மினிமலிசம் என்னும் எளிமையாகச் சொல்லும் குறைத்துரைத்தல்முறை சரியாக வரும். உணர்வுகளை மிகையில்லாமல் நம்பகமாகச் சொல்ல அவ்வழகியல் கைகொடுக்கும்
இரண்டாவதாக, இவை புறவய யதார்த்ததை மட்டுமே சொல்ல முயல்கின்றன. உள்ளம் எதிர்வினையாற்றுகிறது அவ்வளவுதான். அகப்பயணமே இல்லை. இலக்கியத்தின் படிமம், மொழி சார்ந்த அனைத்து நுட்பங்களும் மானுட உள்ளத்தைக் காட்டுவதற்காக மட்டுமே.
இருந்தாலும் கூட இந்த அழகியலில் சயந்தனின் ஆறாவடு நாவல் அடைந்துள்ள வெற்றியை குணா கவியழகன் அடையவில்லை என்றே படுகிறது. அவரது எழுத்துநடை முதிராததாக, நுண்மைகளற்றதாகவே உள்ளது. அவரைக் கொண்டாடுபவர்களுக்கு அதெல்லாம் தேவையுமில்லை. சாதகமான அரசியலை, நேரடியான வெளிப்பாட்டை மட்டுமே தேடுபவர்கள் அவர்கள்.
இன்றைய சூழலில் உடனடியான பதிவுகள் உணர்வுபூர்வமாக வரவேற்கப்படுவதில் பிழையாக ஏதுமில்லை. குறைந்தபட்சம் அப்படி உணர்வுரீதியான பதிவுகளாவது வரட்டுமே. ஆனால் இவை ஆவணமதிப்பு மட்டுமே கொண்டவை என்றே மதிப்பிடமுடியும். இந்த எளிய வாசகர்களின் கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்று தங்கள் தேடலை வளர்த்துக்கொள்ள இந்த இளம்எழுத்தாளர்களால் இயலவேண்டும்
இலக்கியத்தில் மேலும் ஆழமான நகர்வுகளுக்காக இக்களம் காத்திருக்கிறது
ஜெ