வைரமுத்து சிறுகதைகள்

vairamuthu1xx

அன்புள்ள ஜெயமோகன்,

வைரமுத்து சிறுகதைகளில் விஞ்சி நிற்பது கதை வளமா, மொழி வளமா என்றொரு பட்டிமன்றம் விஜய்டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்களின் புகழ்பேச்சுக்கள்.

பார்வையாளர்களின் பிரதானமான இடத்தில் அமர்ந்திருந்தவர் வைரமுத்து. தன் படைப்புகளின் மீதான சிலாகிப்புகளை கேட்டு புல்லரித்தது மகிழ்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் வைரமுத்து. தன்னுடைய சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர்ச்சியாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றார். இதனை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்.

***

அன்புள்ள அனோஜன்

அதில் பிழை என்ன உள்ளது? சிற்றிதழ் சார்ந்த இலக்கியநிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் அதுதானே நிகழ்கிறது? மிகச்சாதாரணமான கதைகள், வைரமுத்துவின் தரத்தைக்கூட எட்டமுடியாத ஃபேஸ்புக் எழுத்துக்கள்,இலக்கிய முலாம் பூசப்பட்டு இதைப்போலவே விளம்பரப்படுத்தப்படுகின்றன அல்லவா?

எல்லா வெளியீட்டுவிழாக்களும், பொதுநிகழ்ச்சிகளும் நூலை மக்களிடையே கொண்டுசென்று சேர்க்கும் நோக்கம் மட்டுமே கொண்டவை. வைரமுத்து தொலைக்காட்சி வழியாக அவரது சிறுகதைகளை கொண்டுசென்று சேர்க்கிறார். இதை எல்லா நூல்களுக்கும் அவர் செய்திருக்கிறார்.

அவர் தான் எழுதிய கதைகள் தரமானவை என நினைக்கிறார். அவற்றை முடிந்தவரை தீவிரமாக வாசகரிடம் முன்வைக்கிறார். இது எல்லா எழுத்தாளர்களும் செய்வதே. பள்ளிக்கூடப்பாடம்போல கதை எழுதுபவர்களும் இதைத்தான் செய்கிறார்கள். .

இதை சாதகமாகவோ பாதகமாகவோ எடுத்துக்கொண்டு வைரமுத்து சிறுகதைகளைப் பார்க்க வேண்டியதில்லை. டிவியிலேயே சொல்றான் என்று பரவசப்பட்டு அக்கதைகளை அணுகுவதற்கும் டிவியில் காட்டுவதை அருவருப்பதற்கும் வேறுபாடில்லை

அக்கதைகளை வாசகனாக நின்று அணுகுவதே சிறந்தது. தமிழின் சிறந்த சிறுகதை மரபை அறிந்து அவ்வரிசையில் அவற்றை வைத்து ஆராயலாம். மதிப்பிடலாம். அதுவே முறை

வைரமுத்து தன்னை புதுமைப்பித்தனின் மரபில் நிறுத்திக்கொள்வதில் நாம் மகிழ்ச்சியே அடையவேண்டும். தமிழில் எழுதுபவர் எவரும் அப்படி உருவகித்துக்கொள்வது நல்லதுதான். அங்கிருந்துதான் தொடக்கமே. புஷ்பா தங்கத்துரையின், ராஜேந்திரகுமாரின், சரோஜாதேவியின் வழிவந்தவர்களாக உள்ளூர உருவகித்துக்கொள்ளும் நம் ஃபேஸ்புக் எழுத்தாளார்களை விட அது மேல்தான்.

அக்கதைகளை நான் வாசித்தேன். ஒரு வாசகனாக , விமர்சகனாக அக்கதைகளை அணுகும்போது அவற்றுக்கு இலக்கியரீதியாக எந்த முக்கியத்துவமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. விரிவான ஓர் இலக்கியவிமர்சன அணுகுமுறைக்குக்கூட அவசியமற்ற அளவில் அவை வெளிப்படையாகவே சாதாரணமாக உள்ளன

அவை தமிழ்ச்சிறுகதைமரபின் இதுவரை அடையப்பட்ட அழகியல்நெறிகளை முன்னெடுக்கவில்லை. மீறிச்சென்று புதிய இடங்களைக் கண்டடையவும் இல்லை.அவை தமிழின் பிரபலப்பத்திரிகைகளில் வரும் வழக்கமாக கதைகளாகவே உள்ளன. ஒருசூழல்சித்தரிப்பை சுருக்கமாகச் சொல்லி, வழக்கமான குணங்கள் கொண்ட வரையறுக்கப்பட்ட கதைமாந்தர்களை நேரடியாக அறிமுகம்செய்து, அவற்றை ஒட்டி நிகழ்ச்சிகளை சமைத்து, அவற்றின் உச்சமாக ஒரு மையக்கருத்தை திருப்பமாக முடிச்சிட்டு வைக்கும் எழுத்துமுறை இது.

சென்ற நூறாண்டுக்கால உலகச்சிறுகதை மரபு சிறுகதைக்குரியவை என சில பண்புகளை வரையறை செய்துள்ளது. ஒன்று, குறிப்பமைதி. சிறுகதை சொல்வதை விட உணர்த்தவேண்டும். அது முடிந்தபின்னர் தொடங்கி வளரவேண்டும். அதன் புனைவுப்பரப்பின் இடைவெளிகளில் எல்லாம் வாசகன் நிரப்பும் வாழ்க்கை இருக்கவேண்டும்

இரண்டு கூற்றமைதி. சிறுகதையின் மொழி ஓசையிடக்கூடாது. இயல்பான கூறுமுறை கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் சிறுகதை தன்னளவில் நவீனத்துவ இலக்கிய அலையின் உருவாக்கம். மொழியடக்கம் என்பது அதன் இயல்பு. அது சுருக்கம் அல்ல. நேரடியான சுருக்கமென்பது கலைக்கு எதிரானது. தட்டையான குறைத்துக்கூறலும் அல்ல. அது செறிவான நேரடி மொழி

[அந்த இயல்பை மீறும் அடுத்தகட்டக் கதைகள் தத்துவ விளக்கத்திற்ககாவோ, படிமச்செறிவுக்காகவோ , உன்னத உளநிலைகளை மொழியில் தொடுவதற்காகவோ அவ்வியல்பைக் கொள்கின்றன. ]

மூன்று, வடிவ அமைதி. சிறுகதை ஒரு பயன்பாட்டுக்கருவி போல தன் வடிவை அடைந்திருக்கவேண்டும். தேவையற்ற எதுவும் அதற்குச் சுமையே.

இப்பண்புகள் இக்கதைகளில் பெரும்பாலும் இல்லை. ஓசையிடும் மொழிநடையும் கூறவந்ததை எடுத்து எடுத்து முன்னால்வைக்கும் தன்மையும் கொண்டுள்ளன. சிறுகதைகளின் அமைப்பு மிகச் சம்பிரதாயமாக, முடிச்சுகள் வழக்கமானவையாக உள்ளன. தமிழின் நல்ல சிறுகதைகளை வாசித்த வாசகனுக்கு இவற்றில் அடைய ஏதுமில்லை

ஜெ

***

முந்தைய கட்டுரைதமிழ் ஹிந்து செய்தி – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63