இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4

IMG_6674

இந்தோனேசியா செல்வதாக முடிவெடுத்தபோது முதலில் எண்ணத்தில் எழுந்தது பாலி. ஆனால் அது வழக்கமாக எண்ணத்தில் தோன்றும் இடம் என்பதனாலேயே ஜோககர்த்தா செல்லலாம் என்று சரவணன் முடிவெடுத்தார். யோக்யகர்த்தா என்ற சம்ஸ்கிருதப் பெயரைத்தான் அங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரிலிருந்து ஜோககர்த்தாவுக்கு நேரடியாக விமானம் உள்ளது. காலை பதினொரு மணிக்குக் கிளம்பி இரண்டரை மணிக்குச் சென்றிறங்கும். எட்டரை மணிக்கே சரவணன் எங்களைக்கூப்பிட்டு அவசரப்படுத்தினார். நாங்கள் ஒன்பது மணிக்கு விமானநிலையம் சென்றுவிட்டோம்.

ஆனால் சரவணனும் ராஜமாணிக்கமும் வர பத்து ஆகிவிட்டது. இந்தியா என்றால் வெளிநாட்டுப்பயணம் அவ்வளவுதான். சிங்கப்பூரில் விசா பரிசோதனை மின்னல்வேகம். ஆனால் அந்தப்பதற்றம் பயணத்தின் தொடக்கத்திற்குரிய மனக்கிளர்ச்சியை இல்லாமலாக்கிவிட்டது

பெரிய விமானம். அதில் முக்கால்வாசிப்பேர் வீட்டுப்பணியாளர்கள். சிங்கப்பூரில் சமையல் வீட்டுப்பணி ஆகியவைசெய்யும் பணியாளர்களில் கணிசமானவர்கள் இந்தோனேசியர்கள். சிங்கப்பூரில் வாங்கிய பொருட்களுடன் இருக்கைகளில் கிளர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். இது சீசன் அல்ல என்பதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகமில்லை.


ஆயிரம் தீவுகள் கொண்டது இந்தோனேசியா. ஜாவா ,சுமத்ரா,போர்னியோ போன்ற தீவுகள் நாம் அறிந்தவை. உலகில் அதிகமக்கள்தொகை கொண்டநாடுகளில் நான்காவது. உலகின் அதிக மக்கள் வாழும் முஸ்லீம் பெரும்பான்மைநாடு இது.

தமிழிலக்கியங்கள் மணிமேகலை காலம் முதலே இந்தத் தீவுகளைக் குறிப்பிடுகின்றன. மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவம், நாகத்தீவு போன்றவை இவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தமிழில் சாவகம் என்று பின்னர் ஜாவா சொல்லப்பட்டது. சோழர்கள் இத்தீவுகளை வென்று ஆண்டிருக்கிறார்கள்

இந்தோனேசியா பொதுவாக இருவகை மக்களினங்களை கொண்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தாய்வானிலிருந்து வந்த மஞ்சளின மக்கள். அங்கே முன்னரே வாழ்ந்திருந்த ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள். இரண்டாமினம் மிகக்குறைவாகவே இன்றுள்ளது. கலப்பின மக்களையும் காணமுடிகிறது

இங்கு கிபி முதல்நூற்றாண்டு முதலே பல சிறிய அரசுகள் இருந்திருக்கலாம். தொல்லியல் சான்றுகளின்படி அவை அனைத்துமே இந்து அரசுகள். முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றாலும் கிடைத்துள்ள பிள்ளையார், துர்க்கை போன்ற இந்து தெய்வங்களின் கற்சிலைகளும் கல்வெட்டுகளும் இதை உறுதியாக நிலைநாட்டுகின்றன

இவ்வரசுகளில் முதன்மையானவை கிபி ஏழாம் நூற்றாண்டில் இங்கு அமைந்த இந்து அரசுகளான மடாராம் பேரரசும் ஸ்ரீவிஜயப்பேரரசு ஆகும். ஜாவா சுமத்ரா தீவுகளை தொகுத்து ஆண்ட இப்பேரரசுகளின் காலத்தில் இந்தியாவின் கலாச்சாரமும் கலைகளும் மதமும் இங்கே செழித்தன. இன்றும் இந்தோனேசியாவின் பண்பாட்டுச்செல்வங்கள் இவையே

இன்னமும்கூட முறையான ஆய்வுக்கு இப்பேரரசுகள் உள்ளாக்கப்படவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் இது முழுமையாக அழிந்தது. அதன்பின் வரலாற்றுத்தடையங்களே இல்லாமலாயிற்று. இப்பேரரசால் உருவாக்கப்பட்ட கோயில்கள் மட்டுமே சான்றுகளாக எஞ்சியுள்ளன. சமீபகாலம்வரைக்கூட இப்படி ஒரு பேரரசு இல்லை என்றே மேலைநாட்டு ஆய்வாளர் சொல்லிக்கொண்டிருந்தனர். பிரெஞ்சு அகழ்வாய்வுகள்தான் கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீவிஜயப்பேரரசின் இருப்பை நிலைநாட்டின


ஸ்ரீவிஜயப்பேரரசின் இறுதிக்காலத்தில் சிங்கசாரி , மஜாபகித் அரசுகள் உருவாயின.இவ்வரசுகளின் அழிவுக்கு ராஜராஜசோழனின் படையெடுப்புகள் ஒரு காரணம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் இப்பகுதி இஸ்லாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் இங்குள்ள பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் சுல்தான்களின் ஆட்சி உருவானது.

சுல்தான்களை வென்று இந்தோனேசியாவை போர்ச்சுகீசியர்கள் கைப்பற்றினர். அவர்களை டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் வென்றனர். இருநூறாண்டுக்காலம் காலனியாதிக்கவாதிகளால் இந்தோனேசியா ஆளப்பட்டது. இங்கே ஒரு நவீன அரசை அவர்கள் கொண்டுவந்தனர். துறைமுகங்களை வளர்த்தனர். ஆனால் இயற்கைச்செல்வங்கள் கொள்ளைபோயின


1908ல் இந்தோனேசிய தேசிய அமைப்பான புதி உடோமோ உருவாகியது. உலகப்போரில் இந்தோனேசியாவை ஜப்பான் கைப்பற்றியது. போருக்குப்பின் பலவகையான அதிகராப்பூசல்களுக்குப்பின் 1950 ஆகஸ்ட் 17 ஆம் தேதி இந்தோனேசியா விடுதலை பெற்றது. சுகாமோ அதன் முதல் அதிபரானார். சுகாமோ தேசியத்தலைவராக கருதப்படுகிறார்

இந்தோனேசியா மிக வளமான நாடு. எண்ணைக்கனியும் உள்ளது. கிழக்காசியாவின் மிக வலிமை வாய்ந்த நாடுகளில் ஒன்றாக அது ஆகியிருக்கக்கூடும். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பலவகையான அரசியல் கொந்தளிப்புகள் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.சென்ற பத்தாண்டுகளாகத்தான் இந்தோனேசியா அமைதியாக உள்ளது

அதற்குக் காரணம் அங்குள்ள பல்லின மக்கள். இஸ்லாமிய மதத்திற்குள்ளேயே உள்ள பிரிவினைகள். அப்பிரிவினைகளைத் தூண்டிவிட்ட அரசியல்வாதிகளின் அதிகாரப்போர்.இந்தோனேசியாவில் ஐம்பதாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரப்பூசல்கள் நிகழ்ந்துள்ளன.

அத்துடன் நடுவே எழுந்த இடதுசாரிக்கிளர்ச்சியும் அது உள்நாட்டுப்போராக மாறி மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்டதும் நாட்டை அமைதியின்மையில் நிறுத்தின. வெர்னர் ஹெர்சாக்கின் மேர்பார்வையில் வெளிவந்த The Act of Killing என்னும் ஆவணப்படம் இடதுசாரிகள் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டதை, அக்கொலையாளிகளின் உளவியலை அதிரவைக்கும்படி காட்டுகிறது. [இதை இயக்கியவர்களில் ஒருவரான இந்தோனேசியர் எவர் என்பது இன்றும் ரகசியம்]

இந்தோனேசியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டு லாபம் அடைந்தனர் ஆட்சியாளர்கள். விளைவாக நாடு பொருளியல்வீழ்ச்சி அடைந்த நிலையிலேயே உள்ளது. ஏற்றுமதி என்பது அனேகமாக இல்லாத நிலை. இந்தோனேசியாவை நைக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மிகக்குறைந்த உடலுழைப்புக்காகச் சுரண்டுவதை ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் நூல் [சற்று மிகையாகக்] காட்டுகிறது

இந்தோனேசியா சென்ற தொண்ணூறுகளின் ஆசியப்பொருளியல் நெருக்கடியால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மெல்ல இப்போதுதான் மீண்டு எழுந்துகொண்டிருக்கிறது. அதன் மீட்சிக்கு சுற்றுலாவும் எண்ணையும் போலவே வளைகுடாநாடுகளுக்கும் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் கூலிவேலைக்குச் செல்லும் உழைப்பாளிகளும் காரணம்.

இந்தோனேசியாவின் மிகப்பெரிய வேடிக்கை அதன் நாணயம். ருப்பியா என்கிறார்கள். ஒரு டீ பத்தாயிரம் ருப்பியா. ஒரு உணவு இரண்டு லட்சம் ருப்பியாவை எட்டும். ஒருநாளில் பல லட்சம் ருப்பியாக்களை அள்ளிவிடவேண்டியிருக்கும்.

தொண்ணூறுகளின் பணவீக்கம் அந்த நாட்டின் நாணயத்தை தரைமட்டமாக்கியிருக்கிறது. அங்கே முதலீடு செய்திருந்த அன்னியநிறுவனங்கள் தங்கள் செல்வங்களை எடுத்துச்சென்றுவிட்டமையால் அந்த நாட்டுப் பணம் கிட்டத்தட்ட காகிதமாகவே ஆகிவிட்டது. இன்று மெல்ல மீண்டாலும் கேலிக்குரியவகையிலேயே உள்ளது. இந்தோனேசிய ரூபாயை திரும்ப உலகிலுள்ள எந்த நாணயமாகவும் ஆக்கமுடியாது. எங்களிடம் இரண்டுலட்சம் ருப்பியா எஞ்சியிருக்கிறது.

உலகிலேயே அதிக இயற்கை எரிவாயு இருப்பது இந்தோனேசியாவில்தான். தன் அரசியல்நெருக்கடிகளை அது தீர்த்துக்கொண்டால் மீண்டும் வலுவான நாடாக ஆக முடியும். ஆனால் அதற்கு உலகப்பெருநிறுவனங்கள் அனுமதிக்கவேண்டும். அம்மக்களும் அந்நிறுவனங்கள் தூண்டிவிடும் பிரிவினைகளுக்குச் செவிகொடுக்காமலிருக்கவேண்டும். வலுவான அரசு நீடிக்கவேண்டும். அதிகார வெறியர்களால் தூண்டிவிடப்படும் பிரிவினைகளும் அவை உருவாக்கும் உள்நாட்டுப்போர்களும் எத்தகைய பேராபத்துக்கள் என்பதற்கு இந்தியாவுக்கு இந்தோனேசியா பெரிய முன்னுதாரணம்

இந்தோனேசியா இன்று அஞ்சும் இரு அறைகூவல்கள் ஒன்று இஸ்லாமியத்தீவிரவாதம். அது மெல்ல பரவத் தொடங்கியிருக்கிறது. வஹாபியம் வலுப்பெறுமானால் இனப்பூசல் மேலெழுந்து இந்தோனேசியா முழுமையாக அழியும் என அஞ்சுகிறார்கள்.

இன்னொன்று நாட்டின் வனவளம் பெரும்பாலும் அன்னியக்கம்பெனிகளிடம் இருப்பது. அவர்கள் காடுகளைத் தீவைத்து அழித்து அங்கே எண்ணைக்காடுகளை உருவாக்குகிறார்கள். பயன் தீர்ந்த எண்ணை மரங்களையும் எரிக்கிறார்கள். பலநூறு கிலோமீட்டர் அகலத்திற்கு எரியும் நெருப்பின் புகை எழுந்து நாடே மூடியிருக்கிறது. இந்தோனேசிய வானம் மழைமூடியிருப்பதுபோல எப்போதும் கருமையாக உள்ளது

மிகக்கடுமையான உடல்நலப்பாதிப்புகளை சூழியல் அழிவுகளை உருவாக்குகிறது இந்தப்புகை. சிங்கப்பூரின் மேலும் இப்புகை படிந்து நகரத்தையே பாலிதீன் போல மூடியிருக்கிறது. சிங்கப்பூரில் மக்கள் மூச்சு வடிகட்டிகளுடன் வெளியே இறங்கவேண்டிய நிலை. ஆனால் இருநாட்டின் அரசுகளும் மாறிமாறி திட்டிக்கொள்கின்றன. அவற்றால் பன்னாட்டுக் கம்பெனிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

யோக்யகர்த்தாவில் மூடுபுகை குறைவு என்றனர். போர்னினோ பகுதிதான் நிரந்தரமானபுகைமூட்டத்தில் உள்ளது. மதியம் சென்றிறங்கியபோது வெயில் எரிந்துகொண்டிருந்தது. கேரளத்தை நினைவூட்டும் நிலப்பரப்பு. எங்கும் பசுமை. நீர்நிலைகள். நீராவி எழும் வெக்கை.

விமானநிலையம் சிறியது. வெளியே வந்தபோது எங்களுக்காக நாங்கள் பதிவுசெய்திருந்த வழிகாட்டி வந்து காத்துநின்றிருந்தார். காரில் ஏறிக்கொண்டு நகரினூடாகச் சென்றோம். குள்ளமான ஓட்டுக்கட்டிடங்கள் கொண்ட நகரம் எழுபதுகளின் திருவனந்தபுரத்தை நினைவூட்டியது. ஓர் அன்னிய நாட்டில் வந்ததுபோலத் தெரியவில்லை, அன்னிய காலகட்டத்திற்குச் சென்றுவிட்டதாகப் பட்டது

முந்தைய கட்டுரைஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59