ஊட்டி காவிய முகாம் – பதிவு -3

சங்கப்பாடல் அரங்கில் கவிஞரும் விமர்சகருமான க.மோகனரங்கன் மூன்று சங்கப்பாடல்களை வாசித்தார். அவரது கவிதைகள் போலவே இறுக்கம், மிதமான மறைமுக உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவை கொண்ட கவிதைகளாக அமைந்தன அவை.

காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும் பலரே
மன்ற இவ்வுலகத்து பிறரே!

வெள்ளிவீதியார் எழுதிய இந்த குறுந்தொகைக் கவிதை பிரிவை தீவிரமாக வெளிப்படுத்திய ஆக்கம். இங்கே தலைவி தன் காதலனுடன் உடன்போகிறாள். அவள் பிரிவை எண்ணி துயருற்று தேடிச்செல்லும் செவிலித்தாய் பாடியதுபோல அமைந்த பாடல் இது. ‘கால்கள் த்ள்ளாடுகின்றன. கண்கள் பார்த்துப் பார்த்து ஒளியையும் கூர்மையையும் இழக்கின்றன. விரிந்த வானத்தில் உள்ள விண்மீன்களை விட அதிகம்போலும் இந்த உலகத்தில் உள்ள பிறர்’

குறியீடுகளோ படிமங்களோ இல்லாமல் கூறும் நுட்பத்தாலேயே கவிதையாக ஆன பாடல் இது. பரிதப்புதல் என்ற சொல்லாட்சி உதாரணம். பரி என்றால் சீரான நடை. ஆகவேதான் குதிரைக்கு அப்பெயர். பரிதப்புதல் என்றால் தள்ளாடுதல். கண்கள் வாள் இழத்தல் என்பது ஒளியும் கூர்மையும் அழிதல் என்று பொருள். வானத்து மீனைக்காட்டிலும் பலர் என்ற சொல்லாட்சியில் சீரற்ற முடிவில்லாத பெரும் எண்ணிக்கை குறிப்பிடப்படுகிறது

ஏன் அப்படிச் சொல்கிறாள்? இரு வாசிப்புகள் முன்வைக்கப்பட்டன. அவள் அதிகம்பேரை பார்த்ததில்லை. இப்போது ஓரு சந்தர்ப்பத்தில் வீட்டை விட்டு வெளியுலகுக்கு வரும்போதுதான் அத்தனை அதிகமானவர்கள், நாம் அறியாதவர்கள், உலகில் இருக்கிறார்கள் என்ற பிரமிப்பு அவளுக்கு உருவாகிறது. இன்னொரு வாசிப்பு, அந்த உணர்ச்சி நிலையில் அவள் கண்கள் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே தேடும்போது பிறர்தான் கண்முன் பெருகி பெருகி வருகிறார்கள் என்ற தவிப்பு உருவாகிறது.

மோகனரங்கன் வாசித்த இரண்டாவது கவிதை ’ஓரேழுவர்’ பாடிய புறநாநூற்றுப் பாடல்.

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

’தோலை திருப்பியது போல நீண்ட வெண்ணிற சதுப்பு நிலத்தில் வேடனால் துரத்தப்படும் மான்போல இருக்கிறேன். சுற்றத்தால் சூழப்பட்ட வாழ்க்கை ஓடித்தப்ப விடாமல் தடுக்கிறது’ இரு அழகிய உவமைகளால் ஆனது இக்கவிதை. சேற்றுநிலத்தை தோலை உரித்து திருப்பியதுபோல வெண்ணிறமானது என்று சொல்வதில் உள்ள யதார்த்தப் பிரக்ஞையானது சங்கப்பாடல்களுக்கே உரியதாகும். . புல்வாய் என்றால் புல்தின்னும் வாய்கொண்ட மான். சதுப்பில் ஓடித்தப்ப முடியடஹு. வேடனின் அம்புக்குப் பலியாகவேண்டியதுதான்

தடுப்பது எது? ஒக்கல் என்று வருகிறது. ஒக்கல் என்றால் சொந்தங்கள் என்று பொருள். ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ என்பது குறள். [ இறந்த மூதாதையர், கடவுள், விருந்தாளிகள், சுற்றத்தார், தான் ஐந்து பேரையும் பேணவேண்டியது இல்லறத்தான் கடமை] ஆனால் ஒக்கல் என்ற சொல்லுக்கு இடையில் ஏந்துவது என்றும் பொருள் உண்டு. ஒக்கல் ஏற்றுதல் என்றால் குழந்தையை இடுப்பில்வைத்துக்கொள்ளல். ஒக்கல்வாழ்க்கை என்பது இன்னும் நுண்மையான ஒரு அர்த்தமாக ஆகிறது

மூன்றாவதாக தனிமகனார் பாடிய நற்றிணைப்பாடல். பாலைத்திணை பிரிவாற்றாமையைச் சொல்லும் பாடல்தான் இதுவும்

‘குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே

கிழக்குக் கடலை அள்ளி மேற்கு நோக்கிச் சென்று இருண்டு மண்பரந்த உலகமெல்லாம் செழிக்கும்படியாக நிறைந்து கம்மாளர் உருக்கிக் காய்ச்சும் செம்புப்பானை போல செந்நிறமாக மின்னி எங்கும் பெய்து தன் கடமையைச் செய்யும் இனிய குரல் கொண்ட மேகம் பெய்தபின் மெல்ல தெற்கே சென்று மறைந்ததுபோல என் நெஞ்சம் அவருடன் சென்று மறைந்தது. இதோ என் உடல் இங்கே எஞ்சியிருக்கிறது. கடும்சினம்கொண்ட போர்வேந்தன் பகையுடன் போர்தொடுத்து அழித்தமையால் வாழ்ந்தவர்கள் கைவிட்டுச் சென்ற ஊரில் எஞ்சி வெறுமையில் அமர்ந்திருக்கும் தனி ஒருவன்போல!

இரு தீவிரமான உவமைகளால் அமைந்த பாடல். தன் காதல் மனதை மழைமேகத்துடன் ஒப்பிடுகிறாள். கடல்நீரை அள்ளி வந்து குளிர்ந்து இருட்டி உலகம் வளம்பெற பெய்து ஓய்ந்தபின் வெளிறி தெற்கே மறையும் மேகம். அதேபோல தன் பிறந்தவீட்டில் இருந்து பெருங்காதலுடன் வந்து புகுந்த இல்லத்தில் வளம் நிறைய அன்பைப் பெய்தபின் கணவன் பிரிந்து சென்றபோது தன் நெஞ்சமும் கூடவே சென்று மறைந்துவிட்டது. ஊடே இன்னொரு உவமை. மின்னலை கம்மியரின் உலையில் கொதிக்கும் செம்புகலம்போல செவ்வொளி நிறைந்தது என்கிறாள். உவமைக்குள் உவமை என்பது சங்கப்பாடல்களில் உள்ள ஒரு தனித்த அழகியலாகும்

சங்ககால அரசியலின் குறிப்புள்ள பாடல் இது. வேந்தன் என இங்கே சொல்லப்படுவது பெருங்குடி வேந்தனையே. அவனால் எரிபரந்தெடுத்து அழிக்கப்பட்ட ஊரில் அனைவருமே சென்றபின் தனித்திருக்கும் தனிமகனின் மனநிலையில் இருக்கிறேன் என்று சொல்கிறாள். அந்த நிலை மிக உக்கிரமாக அன்று உணரப்பட்ட ஒன்றாக இருக்கலாம். தன் பரிதாபத்துக்குரிய உடல் இருக்கிறது, மனம் சென்று விட்டது என்பதற்கு அவள் சொல்லும் இந்த உவமை பல திசைகளில் விரிவது. ஊராக இருக்கையில் வாழ்வின் உயிர்த்துடிப்பால் நிறைந்திருந்த ஊர் அது. இனி நினைவுகள் மட்டும்.

பாழ்காத்தல் என்ற சொல்லை நாஞ்சிநாடன் பெரிதும் பாராட்டினார். அச்சொல்லே இக்கவிதையை தேர்வுசெய்ய காரணம் என்றார் மோகனரங்கன். இப்பாடல்கள் மூன்றிலுமே உள்ள நிலைமைகள் காலாதீதமானவை. இன்றைய மனநிலைகளுடன் இயல்பாகச் சென்று சேர்ந்துகொள்ளக்கூடியவை. இதேபோல ஓர் கைவிடப்பட்ட கிராமத்தில் ஒருவர் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையை ஆனந்தவிகடன் ஒருமுறை எழுதியிருந்தது நினைவுகூரப்பட்டது.

விவாதத்தில் ஈழ எழுத்தாளர் சட்டநாதனின் ஒரு கதை நினைவுகூரப்பட்டது. குண்டுவீச்சுக்கு பயந்து ஊரே கைவிட்டுச் செல்லும்போது நடக்க முடியாத தாத்தாவை மட்டும் விட்டுவிட்டு குடிக்க வாளியில் கொஞ்சம் நீரும் வைத்துவிட்டு அழுதபடியே செல்கிறார்கள். பாழ்காத்தல் என்பது இங்கே கடந்தகாலத்தை அல்லவா சுட்டுகிறது என்று சொல்லப்பட்டது. இனிய நினைவுகளே பாழாக மாறக்கூடிய ஒரு நிலையைச் சுட்டிக்காட்டும் கவிதை இது.

விவாதத்தின் ஒரு பகுதியாக சங்கப்பாடல்கள் மீது புதுமைப்பித்தன் வைத்த குற்றச்சாட்டு குறிப்பிடப்பட்டது. ’சங்கப்பாடல்கள் வெறும் சதையுணர்ச்சிப்பாடல்கள். புகைப்படக் கவிதைகள்’ என்றார் புதுமைப்பித்தன். கம்பராமாயணத்தில் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கருத்தை அக்காலத்திலும் இன்றும் பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். சங்கப்பாடல்கள் ஆழமான அறச்சிக்கல்களையோ வாழ்க்கையின் விதவிதமான தருணங்களின் உணர்ச்சிநிலைகளையோ சுட்டவில்லை என்று சொல்லப்படுகிறதுஎன்று கேட்கப்பட்டது.

அந்த ஒப்பீடு சரியானது என்றாலும் அம்முடிவு ஏற்கத்தக்கதல்ல என்றார் நாஞ்சில்நாடன். சங்கப்பாடல்கள் வேறுவகையான அழகியல் உள்ளவை. அவற்றில் குறிப்பிடத்தக்க கதைச்சந்தர்ப்பம் இல்லை. கதைமாந்தரும் இல்லை. தருணங்களே உள்ளன. ஆகவே உணர்ச்சிகளை அருவமாகவே அவை முன்வைக்க முடிகிறது. மேலும் அவை காவியங்களாக ஆகாத தனிப்பாடல்கள். கம்பராமாயணத்தின் அழகு காவியச்சுவை. அது நாடகச்சுவையில் இருந்து உருவாவது.

சங்ககாலம் குறுநிலமன்னர்கள் பெருமன்னர்களால் வெல்லப்பட்டு பெரிய அரசுகள் உருவாக ஆரம்பிக்கும் காலம். உறுதியான பெரும் நிலப்பிரபுத்துவம் உருவாகவில்லை. பேரரசுகளும் பெருமதங்களும் உருவாகவில்லை. அவை உருவானபின்னரே பெருங்காவியங்கள் உருவாக முடியும். பேரார்சுகள் உபரியை ஒரு மையத்தில் தொகுக்கின்றன. வாழ்க்கையை ஒழுங்குசெய்கின்றன. அதன்மூலம் கலையும் சிந்தனையும் ஒருமுனைப்பட்டு வளர வழிவகைசெய்கின்றன. அதன் விளைவாகவே காவியகர்த்தன் என்ற ஆளுமை உருவாகிறது. சங்ககாலக் கவிஞன் கொல்லனாகவும் வணிகனாகவும் இருந்ததைக் காண்கிறோம். ஆனால் காவிய ஆசிரியன் முழுநேரக்கவிஞன். அவனை பெருமன்னர்களும் கோயில்களும் நிலக்கிழார்களும் புரந்து போற்றினார்கள்.

முந்தையநாள் விவாதத்தில் ஏன் சிறு பண்பாட்டுக்கூறுகள் தொகுக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுந்ததற்குப் பதில் இதுவே. அவ்வாறு தொகுக்கப்படுவதே நிலப்பிரபுத்துவத்தை உருவாக்கும். அதுவே பண்பாட்டை தொகுக்கும். தமிழ்ப்பண்பாடு என்பது அவ்வாறு பலபடிகளாக தொகுக்கப்பட்டதேயாகும். சங்கப்பாடல்களே கூட பேரரசுகள் உருவான பத்தாம் நூற்றாண்டு சோழர் காலகட்டத்தில் உரை எழுதப்பட்டு மீட்டெடுக்கப்பட்டவைதான்.

’கம்பன் மட்டுமே வாழ்நாள் முழுமைக்கும் கூடவரும் கவிஞன், அவனுக்குத்தான் மதிப்பிடுகளின் மோதல் உள்ளது’ என்று பேராசிரியர் ஜேசுதாசனின் கருத்து சுட்டப்பட்டது. காடு நாவலில் காட்டில் கட்டற்ற இளைஞனாக அலையும்போது கிரிதரனுக்கு சங்கப்பாடல்கள் போதையாக உள்ளன. ஆனால் அவன் வாழ்வில் முதிரும்போது சங்கபபடல்கள் உதிர்ந்து போகின்றன. கம்பராமாயணம் கூடவே வளர்ந்துகொண்டிருக்கிறது. ஜேசுதாசனின் கருத்தைத்தான் காடும் சொல்கிறதா என்று கேட்கப்பட்டது.

ஒருவகையில் ஆம் என்று பதில் சொல்லப்பட்டது. சங்கப்பாடல்கள் இன்றைய வாசகனுக்கு அழகிய கவியனுபவங்களை அளிக்கும். ஆனால் உக்கிரமான தத்துவமோதல்களை மதிபீட்டுச்சிக்கல்களை நாடகீய தருணங்களை அளிக்காது. ஆகவே கம்பனுக்கு அவன் வந்தாகவேண்டும். கம்பனே தமிழின் உச்சம். தேர்ந்தவாசகனை காவியம் மட்டுமே திருப்தி செய்யும் என்று சொல்லப்பட்டது. அதை ஒட்டி விரிவான விவாதம் நிகழ்ந்தது.

இரவு பத்தரை மணிவரை தீவிரமாக நீண்டது உரையாடல். அதன் பின்னர் உணவு. ஊட்டி குளிரில் அனைவரும் உடனே படுக்க விரும்பினர். ஆனால் பலருக்கு சரியான தூக்கம் வரவில்லை என்று தெரிந்தது. கூடத்தில் ஒரு சூடாக்கி வைத்தோம். அது மின்சார அழுத்தக்குறைவால் வேலைசெய்யவில்லை. கம்பிளிக்குள் புகுந்துகொண்டு ராமச்சந்திர ஷர்மா பாடிய பாடல்களை இரவு இரண்டு மணிவரை கேட்டுக்கொண்டிருந்தோம்

[மேலும்]

ஊட்டி கதைகள்

http://cyrilalex.com/

ஊட்டி படங்கள்
http://vizhiyan.wordpress.com/2010/09/01/vizhiyan-photography-ooty-potrait-special/

முந்தைய கட்டுரைஆழ்வார் பாடல்கள்…
அடுத்த கட்டுரைமேல்நிலையாக்கம் -கடிதம்