இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 3

IMG_1682

முப்பத்தொன்றாம் தேதி முழுக்க நிகழ்ச்சிகள். காலையில் விடுதியிலிருந்து எனக்கான தொடர்பாளர் கௌதம் வந்து அழைத்துச்சென்றார். லிட்டில் இந்தியா பகுதியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கலைமையத்தில் ஒரு பயிற்சி அரங்கு. காட்சியூடகத்திற்காக எழுதுவதைப்பற்றி.

நாற்பதுபேர் வந்திருந்தனர். நான் பாபநாசம் போன்ற வணிகப்படங்களுக்கும் ஒழிமுறி போன்ற போன்ற நடுப்போக்குப் படங்களுக்கும் எழுதுவதில் என் அனுபவங்களைப்பற்றிச் சொன்னேன். விவாதம் நிகழ்ந்தது

சாப்பிட்டுவிட்டு நான் அறைக்குச்சென்று சற்று ஓய்வெடுத்தேன். வெண்முரசு எழுதினேன். மாலையில் கௌதம் வந்து அடுத்த சந்திப்புக்கு கூட்டிச்சென்றார். நா.முத்துக்குமார், சிங்கப்பூர் எழுத்தாளர் இக்பால் ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர் ஆகியோர் பங்குகொண்டோம்

தமிழிலக்கியம் புறவய நோக்கு கொண்டிருக்கிறதா அகவய நோக்கு கொண்டிருக்கிறதா என்று உரையாடினோம். புறவய நோக்கு அகவய நோக்கு என்றால் என்ன என்பதே பெரும்பாலும் பேச்சின் மையமாக இருந்தது

அனேகமாக சிங்கப்பூரில் உள்ள இலக்கியவாசகர் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட நிகழ்ச்சி.என் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். வழக்கமாக இவ்வகை நிகழ்ச்சிகளுக்கு வரும் சிங்கப்பூர் எழுத்தாளர் சிலர். மொத்தம் இருபதுபேர்.

பெரும்பாலும் சம்பிரதாயமான கேள்விகள், பதில்கள். இத்தகைய நிகழ்ச்சிகளை கூர்மையாக நிகழ்த்துவது கடினம்தான் என்றாலும் இதற்கு வருபவர்கள் கொஞ்சமேனும் தயாரிப்பு செய்துகொண்டு வரவேண்டும். ஏதாவது சொல்லமுயலவேண்டும்.

அந்தச் சிங்கப்பூர் எழுத்தாளர் இலக்கியம் என உலகில் ஒன்று பல நூற்றாண்டுகளாக இருந்துகொண்டிருப்பதையே அறியாதவராக இருந்தார். அதை முக்கி முக்கி நேரடியாகச் சொல்லவும் செய்தார். பெரும்பாலும் எனக்கு ஒன்றுமே ஞாபகமில்லை, நான் எதையும் படிப்பதுமில்லை என்பதுதான் அவரது பேச்சாக இருந்தது.

சிங்கப்பூரின் இலக்கியவிழாக்கள் பெருஞ்செலவில் ஒருங்குசெய்யப்படுகின்றன. சீன மலாய் ஆங்கில மொழிகளுக்கான அரங்குகள் பெரும்பாலும் சிறப்பாக அமையவும் செய்கின்றன. தமிழ் அரங்குகளை இம்மாதிரி ஒருசிலர் அமர்ந்து ஒன்றுமே நிகழாமல் ஆக்கிவிடுகிறார்கள்.

அந்தத்தலைப்பை ஏன் தெரிவுசெய்தார்கள் அதற்கு என்ன பொருள் என்றும் புரியவில்லை. எத்தனை முயன்றும் உரையாடலை மேலே கொண்டுசெல்ல முடியவில்லை. சிங்கப்பூர் வாசகர்களுக்கு அங்கே என்ன நிகழும் என நன்றாகத் தெரிந்திருக்கிறது.

மாலை ஷாநவாஸுடன் ஓர் ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம். ஸ்விஸோட்டலில் இரவுத்தூக்கம். நான் தூங்க மேலும் தாமதமாகியது முழுச்சன்னலையும் திறந்துவிட்டுக்கொண்டு சிங்கப்பூரின் கட்டிடங்களின் ஒளிவெள்ளத்தை நோக்கிக்கொண்டு நின்றேன்.

மறுநாள் காலையில் நான் அறையைக் காலிசெய்துவிட்டு சித்ரா வீட்டுக்குச் சென்று சற்று தூங்கினேன். அருண்மொழியும் சரவணனும் ராஜமாணிக்கமும் அவர் மனைவியும் அங்குள்ள சூழியல் தோட்டத்தைப் பார்க்கச்சென்றார்கள்.

அரைமணி நேரம் தூங்கியபின் விழித்துக்கொண்டு நான் வெண்முரசு எழுதினேன். ஹொய்ச்சால பயணம் பின்னர் சில சினிமா வேலைக்கான பயணங்கள் நேராக சிங்கப்பூர் என்று இம்முறை வெண்முரசு ஒவ்வொருநாளும் தலைக்குமேல் நின்று அச்சுறுத்துவதாக ஆகிவிட்டது.

ஆனால் எந்நிலையிலும் நான் அதிலிருந்து வெளிவருவதில்லை என்பதனால் எங்கும் எப்போதும் எழுதமுடியும். உண்மையில் எல்லாக் கேளிக்கைகள் உரையாடல்கள் நடுவிலும் மனம் அதனுள் சென்று மீள்வதே பெரிய சிக்கல்.

சூழியல்தோட்டத்தை நான் சென்றமுறை பார்த்திருந்தேன். செயற்கையான சூழலில் அருகிவரும் புவிநடுக்கோட்டுப்பகுதிச் செடிகளை பயிரிட்டுப்பேணிவருகிறார்கள்.

ஐம்பது மீட்டர் உயரமுள்ள செயற்கையான ‘சூப்பர் டிரீஸ்’ என்னும் அதிமரங்கள் இங்குள்ள நவீன உருவாக்கம். செயற்கையான கம்பிச்சட்டகத்தில் படரவிடப்பட்ட கொடிகள் என்று சொல்லலாம். 18 பிரம்மாண்டமான அமைப்புகள் இவை

ஒருவகை வியப்பை உருவாக்குகின்றது இவற்றின் அமைப்பு. இந்த மரங்களை கட்டிடங்களுக்குள்ளேயும் விண்வெளியிலும் கூட உருவாக்கலாம். நகரத்துக்குத்தேவையான ஆக்ஸிஜனை இப்படி சமநிலையில் நிறுத்திக்கொள்ளமுடியும் என்கிறார்கள்

மாலையில் சிங்கப்பூர் நூலகவளாகத்தில் சித்ரா ஏற்பாட்டில் ஒரு வாசகர் சந்திப்பு எனக்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. உண்மையில் அதுதான் இலக்கியக்கூட்டம். இருநூறுபேர் வந்திருந்தனர். அரங்கு நிறைந்திருந்தது. பெரும்பாலும் அத்தனைபேரும் நல்ல வாசகர்கள்.

கணிசமானவர்கள் வெண்முரசின் வாசகர்கள். இளைஞர்கள் நிறையபேர். சித்ரா ஷாநவாஸுடன் இணைந்து இச்சந்திப்பை ஒருங்குசெய்கிறார். சென்ற வருடமும் இதே அரங்கில் பேசினேன்.

அன்றும் நிறைய வாசகர்கள் வந்திருந்தனர். வெண்முரசு தொடங்கியிருந்த காலகட்டம். அன்று வெண்முரசை வாசிக்கத்தொடங்கிய பலர் அதே வேகத்துடன் இன்றும் வாசிக்கிறார்கள் என்பது மனநிறைவை அளித்தது

நான் இலக்கியநான் வாசிப்பின் தடைகள் குறித்து ஒரு அறிமுகச்சொற்பொழிவு ஆற்றினேன். அதன் பின் ஆன்மிகம், தத்துவம், இலக்கியம், வரலாறு என நான் ஆர்வம்கொண்டுள்ள துறைகளைக்குறித்து கேள்விகள் வந்தன

வெண்முரசு பற்றியும் கேள்விகள் இருந்தன. மாலை ஐந்துமணிக்குத் தொடங்கி இரவு எட்டரை வரை விவாதம் நீண்டுசென்றது. பல தரப்பட்ட வாசகர்கள் இருந்தாலும் அனைத்துக்கேள்விகளும் முக்கியமானவையாகவே இருந்தன.

சிங்கப்பூரின் தொழிலதிபரான முஸ்தபாவைச் சந்தித்தேன். சென்னையில் அவர் தன் நண்பர் அப்துல் ரகுமான் பெயரால் அமைத்துள்ள கவிக்கோ மன்றம் என்னும் அரங்கு இலக்கியக்கூடுகைகளுக்கு மிகச்சிறந்தது. ராய் மாக்ஸம் சந்திப்பு அங்குதான் நிகழ்ந்தது. முஸ்தபா ஹதீஸ்களை முழுமையாக தமிழில் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறார்

இரவில் சிங்கப்பூரின் கல்வியாளர்களில் முக்கியமனாவரான அருண் மகிழ்நனின் இல்லத்திற்குச் சென்று விருந்துண்டோம். நள்ளிரவில் சித்ராவின் இல்லத்திற்குத் திரும்பிச்சென்றேன்.

படங்கள்

மேலும் படங்கள்

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் விமர்சனமலர் 1993
அடுத்த கட்டுரைதீபாவளி பழைய கட்டுரைகள்