ஊட்டி காவிய முகாம் – பதிவு -2

ஊட்டிக்குளிர் நெடுநேரம் ஊக்கமுடன் விவாதிக்கவும் சிந்திக்கவும் ஏற்றது. சட்டென்று நம்மை களைப்புறச் செய்வதில்லை. ஆகவே பொதுவாக ஊட்டி கருத்தரங்கு நிகழ்ச்சிகளை இரவு பத்து மணி வரைக்கும் நீட்டிப்பது வழக்கம். ஒருநாளில் சராசரியாக மூன்று அரங்குகளிலாக பத்து மணிநேரம் விவாதம் என்பதே வழக்கம். நம் தீவிரமான கருத்தரங்குகளில்கூட இத்தனை நீண்ட அரங்குகள் இருப்பதில்லை.

பலருக்கு அவர்களின் கல்விக்காலம் தாண்டியபின்னர் இத்தகைய அரங்குகள் பழக்கமும் இருப்பதில்லை. பொதுவாக சாதாரணமாக ஒருவரால் அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே எதையும் கவனிக்க முடியும். ஒருநாளில் ஐந்துமணிநேரத்துக்கு மேல் எதையும் கவனத்துடன் செய்யவும் முடியாது. இருந்தாலும் இப்படி அரங்கை அமைப்பதற்கான காரணம், பொதுவாக இலக்கியம் தத்துவம் என முன்வருபவர்கள் சராசரிக்கு மேற்பட்ட அறிவுத்திறன் கொண்டவர்கள் என்பதும், அவர்களுக்கு ஒரு சவாலாக அரங்குகள் அமையவேண்டும் என்பதும்தான்.

ஊட்டி அரங்குகளில் இதுவரை மிகச்சிலரே தொடர்ச்சியாக கவனிக்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் ஒன்று கவிதை என்பது உணர்ச்சிநிலை சார்ந்தது. அதன் மீதான பல்வேறுவகையான விவாதங்கள் தொடர்ச்சியாக அந்த உணர்சிநிலையை விரித்துக்கொண்டே செல்கின்றன. இரண்டாவதாக இது சொற்பொழிவைக் கேட்டல் என்ற நிலையில் நிகழ்வதில்லை. உரைகளை மிகச்சுருக்கமாக அமைத்துக்கொண்டு விவாதங்களை அதிகநேரம் நிகழ்த்துவது வழக்கம்.

இரவு ஏழரை மணிக்கு மூன்றாவது அமர்வுக்காக கூடியபோது குளிர் ஏறியிருந்தது. அனைவரும் கம்பளி ஆடைகளுக்குள் புகுந்துவிட்டிருந்தார்கள். இந்த அரங்கு முழுக்கவே சங்க இலக்கியம். முதலில் இது கவிதை ஆராய்ச்சி அல்ல கவிதை ரசனை என்பதை தெளிவுபடுத்தினேன். ஆகவே கவிதையின் சுட்டுபொருட்கள் சார்ந்து வெகுதூரம் நீளும் விவாதங்களுக்கு இடமில்லை. ஒருகவிதை மீதான எல்லாவகையான சாத்தியங்களும் வாசிக்கபப்ட்டதுமே அடுத்த கவிதைக்க்குச் செல்வதே அதற்கான வழிமுறை.

அரங்குக்கு வந்திருந்த கவிஞர்களிடமே அவர்களுக்குப் பிடித்த இரு சங்கப்பாடல்களை கொண்டுவந்து வாசித்து அவற்றில் அவர்கள் காணும் நயம் குறித்து பேசும்படி கோரியிருந்தோம். கவிஞர் இசை இரு கவிதைகள் வாசித்தார். முதல் கவிதை ஔவையார் எழுதியது

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. [குறுந்தொகை]

[வரைவிடை யாற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது] என்ற மூலபாடத்தையே அவர் வாசித்தார்.

நாஞ்சில்நாடன் மரபுக் கவிதையை அசை பிரித்து வாசித்தல் முக்கியமான ஒரு தொடக்கப்பயிற்சி என்றார். பெரும்பாலான கவிதைகளை முறையாகச் அசை பிரித்தாலே அவை புரிய ஆரம்பித்துவிடும். பழங்காலத்தில் இலக்கணப்படி சீர் பிரித்து எழுதும் வழக்கம் இருந்தது. அது கவிதையை ஒலியுடன் நினைவில் வைத்திருக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட முறை. இன்று நாம் சிற்சில புதுக்கவிதைகளைக்கூட நினைவால் சொல்ல முடியவில்லை. ஆனால் அன்று மொத்த நூல்களையும் நினைவில்நிறுத்தியிருந்தார்கள். ஒலியொருமை அதற்கு உதவியது. எதுகை மோனை எல்லாமே அந்த நோக்குடன் கூடியவையே என்றார்

மேலே சொன்ன கவிதையை தமிழின் புணர்ச்சிவிதிகளின் படி

முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

என்று பிரிக்கலாம். இவ்வாறாக முழுமையாக அசை பிரித்து அளிக்கப்பட்ட பாடல்கள் கொண்ட பதிப்புகளை ஆரம்பத்தில் வாசிப்பதே சிறந்தது என்றார்

இது தோழியிடம் தலைவி கூறியது. ’வெளியே சுழற்காற்று மரங்களை அலைக்கும் இவ்விரவில் என் தனிமைநோயை அறியாமல் தூங்கும் ஊரை நோக்கி முட்டுவேனா, தாக்குவேனா, இன்னதுசெய்வதென அறியாமல் ஓர் உந்துதலில் ஆ! ஓ என்று வெறிக்கூச்சல்தான் எழுப்புவேனா!’ இக்கவிதை சங்கப்பாடல்களில் பல வகைகளில் உக்கிரமாக வெளிப்படும் தனிமைத்துயரை ஒருநாடகக் காட்சிபோல காட்டக்கூடியது.

இளங்கோ கிருஷ்ணன் இக்கவிதையில் உள்ள நேரடித்தன்மை தன்னை கவர்ந்தது என்றார். ஆ ஓ என்று கூவுவதா என்ற அந்த கூற்றில் ஒரு தீவிரம் எந்த தடையும் இல்லாமல் வெளிப்படுகிறது. புதுக்கவிதைக்கு உள்ள சுதந்திரம் இக்கவிதையில் இருப்பதாகப் படுகிறது என்றார். இக்கவிதையுடன் இணையும் பல மரபுக்கவிதைகளையும் குறள்பாடல்களையும் நாஞ்சில்நாடனும் ஜடாயுவும் நினைவிலிருந்து சொல்ல ரசனை விரிந்து விரிந்து சென்றது.

இக்கவிதையில் மரங்களைச் சுழற்றி அலமரச்செய்யும் அந்த காற்றை வாசகன் கவனிக்கவேண்டும். அதுதான் கவிதைக்கு அழுத்தத்தை அளிக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் மனக்கொந்தளிப்பை அது காட்டுகிறது. இரவின் ஓலமாக ஒலிக்கும் அந்த காற்றின் வலியை உணராமல் ஊர் உறங்கும் காட்சியே நம் மனதுக்குள் கவிதையை விரியச்செய்கிறது.

இசை முன்வைத்த இரண்டாவது பாடலும் குறுந்தொகையில் உள்ளதுதான்.

‘குக்கூ’ என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்.
தோள் தோய்க் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால்

[அள்ளூர் நன்முல்லை]

’கோழி கூக்கூ என்றது. அதைக்கேட்டு துட்க் என்றது என் மனம். தோளைத் தழுவி கிடக்கும் என் காதலனைப் பிரிக்கும் வாள் போல காலை வந்துவிட்டதே என்று’ .  காலை மெல்லவே விடியும். ஆனால் அதை வாளின் வீச்சு போல சரேலென விடிவதாகக் கூறும் அந்த மனப்பிரமையே இக்கவிதையின் மையம். ஒளியுடன் விரியும் காலையை ஒளிரும் வாளுடன் உவமித்ததும் முக்கியமான கவித்துவம்தான். பல சமயம் காலையின் ஒளி வளைகோடாக வாள் போலவே விழுந்து கிடக்கும் காட்சியை நம் கண்முன் காட்டுகிறது இக்கவிதை.

பிரிவும் உறவும் சங்கக்கவிதையில் இத்தனை கூர்மையாக முன்வைக்கக் காரணமாக அச்சமூகச் சூழலையும் நாம் கவன்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. சங்ககாலம் என்பது சிறுகுடிமன்னர்களை ஒடுக்கி சேர சோழ பாண்டிய பெருங்குடி மன்னர்கள் பேராதிக்கத்தை உருவாக்குவதற்காக மிகக்கடுமையாகப் போராடிய காலகட்டம். ஓயாத போர்களால் மக்கள் கூட்டம்கூட்டமாக மடிவதை நாம் புறநாநூறில் காண்கிறோம். மரணம் கண்முன் இருந்த வாழ்க்கையில் உறவும் பிரிவும் குருதி படிந்தவையாக ஆகிவிடுகின்றன. அந்த தீவிரமே அகத்துறை கவிதைகளில் காணப்படுகிறது.

சங்கப்பாடல்களை கவனிக்கும்போது உறவையும் பிரிவையும் சொல்ல ஒருவகையான முறைமை கடைப்பிடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மன உணர்ச்சிகளை இயற்கைமேல் ஏற்றிச் சொல்லுதல் அதில் முக்கியமானது. சாவைப்பாடும்போதுகூட இயற்கை வருணனை தேவையா என்ற வினா சாதாரணமாக இன்று வாசிக்கும்போது எழக்கூடும். அக்கால கவிதை எழுத்து-வாசிப்பு சூழலைக் கருத்தில் கொண்டு நாம் யோசிக்கவேண்டும்.

தமிழ் மரபுக்கவிதை ஆரம்பத்திலேயே உயர்செவ்வியல்தன்மையுடந்தான் வெளிப்படுகிறது. அதில் நாட்டுப்புறத்தன்மையே இல்லை. அதாவது ஒரு நீண்ட பேரிலக்கியவரிசைக்கு பின்னர் உருவான கவிதைகளாக இவை தோற்றம் அளிக்கின்றன. அதன்செவ்வியல்தன்மை காரணமாகவே பேசுபொருள் பேசும்முறை ஆகியவற்றை மாறாமல் வைத்துக்கொள்கிறது, நுட்பங்களை அடைவதை மட்டுமே அது கவிஞனின் வேலையாக முன்வைக்கிறது.

உதாரணமாக பிரிவின்போது தலைவியின் கைவளை கழலுதல் என்ற ஒரே நிகழ்வை அகப்பாடல்களில் மீண்டும் மீண்டும் காணலாம். அதற்கு இரு காரணங்கள். ஒன்று . இப்பாடல்கள் நடனநிகழ்ச்சிக்காக உருவானவை. ஆகவே இவற்றை இவ்வாறே அமைக்க வேண்டியிருக்கிறது. பாணன் பாட விறலி ஆடி இவற்றுக்கு தன் மனோதர்மப்படி விளக்கம் அளிப்பாள். கவிஞன் இந்த வளைகழல்தல் என்ற ஒரே கூற்றையே விதவிதமாக புதுமையாகச் சொல்லவேண்டிய அறைகூவலை எதிர்கொள்கிறான். அதுவே செவ்வியலின் இயல்பு என்று சொல்லப்பட்டது.

இளங்கோ கிருஷ்ணன் முன்வைத்த பாடல் கலித்தொகையில் இருந்து எடுக்கப்பட்டது.

சுடர்த்தொடீ கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலில் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா..’இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன்’ எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொற் சிரகத்தால் வாக்கி, ’சுடரிழாய்
உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
’அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
’உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்.

ஒளிரும் வளைகள் அணிந்தவளே கேள். முன்னாளில் தெருவிலே நாம் விளையாடும் மணல்வீட்டை காலால் சிதைத்து நாம் முடிந்த கூந்தலை பிடித்து இழுத்து நாம் விளையாடும் பந்தை பறித்துக் கொண்டு ஓடி குறும்பு செய்த அந்த சிறுவன் சமீபத்தில் ஒருநாள் வீட்டில் அன்னையும் நானும் இருந்தபோது வந்து ‘வீட்டில் இருப்பவர்களே குடிக்க நீர் கொடுங்கள்’ என்றான். அம்மா பொற்ச்சருவத்தில் நீரை அள்ளி ‘ஒளிரும் நகைகொண்டவளே கொண்டு சென்று கொடுத்துவிட்டு வா’ என்றாள். நானும் அவன் என அறியாமல் சென்றேன். என் வளைக்கரத்தைப் பிடித்து இழுத்தான். நான் ‘அம்மா இவன் என்ன செய்கிறான் பார்’ என்றேன். அம்மா அலறி ஓடிவந்தாள். ‘உண்ணும்போது நீர் விக்கினான்’ என்றேன். அம்மாவும் பதற்றம் விலகி அவன் முதுகை நீவினாள். அந்த கள்வன்மகன் என்னை கடைக்கண்ணால் கொல்வது போல நோக்கி புன்னகை செய்தான்.

இந்தக் கவிதையின் நாடகத்தன்மைதன்னை கவர்ந்தது என்றார் இளங்கோ கிருஷ்ணன். செறிவான சித்தரிப்பு கொண்ட கூர்மையான கவிதைகளே பொதுவாக சங்கக்கவிதைகள் என அறியப்படுகின்றன. படிமங்களும் அணிகளும் நிறைந்தவை. ஆழமான உட்குறிப்புகள் கொண்டவை. ஆனால் இக்கவிதையில் அவை ஏதும் இல்லை. இந்தக் காட்சிக்கு எந்தவகையான குறியீட்டு அர்த்தமும் இல்லை. நேரடியான இனிய ஒரு சித்தரிப்பு மட்டும்தான் இது. இந்த தனித்தன்மையே இக்கவிதையின் சிறப்பாக தெரிகிறது என்றார்

பொதுவாக சங்கப்பாடல்களுக்கு காலகட்டம் சார்ந்த அழகியல் வேறுபாடு தெரிகிறது என்று அதற்கு விளக்கம் சொல்லப்பட்டது. நற்றிணை குறுந்தொகை முதலியவை காலத்தால் முற்பட்டவை. அவற்றில் கச்சிதமான சிறிய பாடல்களே உள்ளன. கலித்தொகையும் அகநாநூறும் காலத்தால் பிந்தியவை. அவற்றில் சித்தரிப்புகளும் விவரணைகளும் உள்ளன. நாடகத்தன்மை அதிகரிக்கிறது. மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை முதலியவை கடைசி காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவற்றில் தொடர் விவரணையும் சித்தரிப்பும் காணப்படுகிறது. அதாவது காவியங்களுக்கான செய்யுளமைப்பை நோக்கி அவை வந்து சேர்ந்திருக்கின்றன.

இந்தப்பாடலின் இதே சந்தர்ப்பம் இப்படியே களவாணி திரைப்படத்தில் வருவது சுட்டிக்காட்டப்பட்டது. கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளானாலும் ஒரு வாழ்க்கைச்சந்தர்ப்பம் மாறாமல் இருப்பது ஆச்சரியமானது என்று சொல்லப்பட்டது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் இதுவே. கோடைநிலமான தமிழகத்தில் ஒருவன் எந்த வீட்டிலும் நுழைந்து குடிநீர் கேட்கலாம் என்ற சமூக விதிதான் அது. அத்துடன் இன்றும் பெண்ணுக்கு இற்செறிப்பும் பெற்றோர் கண்காணிப்பும் இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

[மேலும்]

முந்தைய கட்டுரைசில இணைப்புகள்
அடுத்த கட்டுரைபட்டாம்பூச்சி-ஒரு கடிதம்