இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 2

IMG_1263

 

சிங்கப்பூரில் கேளிக்கையிடங்களுக்குப் போவதைப்பற்றிச் சொன்னபோது ஒருநண்பர் கேட்டார், வெண்முரசு எழுதும் மனநிலைக்குக் குறுக்காக அதில் ஈடுபடுவது கடினமாக இல்லையா என்று. உண்மையில் வெண்முரசு எழுதும் மனநிலையை அவ்வகை கேளிக்கைகள் வளர்க்கின்றன.

நடைமுறை வாழ்க்கைசார்ந்த கணக்குவழக்குகள், உறவுச்சிக்கல்கள் மட்டுமே கடினமானவை. மேலும் அறிவியல் சார்ந்த நவீனக் கேளிக்கைகள் மீது எனக்கு ஒரு பெரிய ஈர்ப்புண்டு. அவை கற்பனையின் புதிய சாத்தியங்களைத் திறக்கின்றன.

 

29 ஆம்தேதி நாங்கள் செந்தோசா தீவுக்குச் சென்றோம். சிங்கப்பூரின் கேளிக்கைத்தீவு. செந்தோசாவின் சுழன்று வானேறும் உணவகத்தை, ராட்சதச் சக்கர ஊஞ்சலை எல்லாம் நான் முன்னரே பார்த்திருந்தேன். இம்முறை அங்கே புதியதாக தொடங்கப்பட்டிருக்கும் யூனிவர்சல் ஸ்டுடியோவின் காட்சியகத்தைப் பார்க்கலாமென முடிவெடுத்தோம்.

யூனிவர்சல் ஸ்டுடியோவை நான் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது சிறில் அலெக்ஸுடன் சென்று பார்த்திருந்தேன். அதையே சற்று சிறிய அளவில் இங்கு அமைத்திருந்தனர். சினிமா நவீன உலகின் புராணவெளி. அந்த உலகுக்குள் சென்று வாழ்ந்து மீளும் அனுபவத்தை அமைத்திருந்தனர்

 

முழுப்பகலும் யூனிவர்சல் ஸ்டுடியோவுக்கே செலவாகியது. நியூயார்க், லாஸ் ஆஞ்சலிஸ் தெருக்களின் செட்கள். வாட்டர்வேர்ல்ட் படத்தின் ஒரு நீண்ட அடிதடிக்காட்சியை நடித்துக்காட்டினர் ஓர் அரங்கில். சண்டைப்பயிற்சியும் அரங்கநிர்வாகமும் அமெரிக்காவில் பார்க்கக்கிடைக்கும் அதே கச்சிதத்துடன் இருந்தன.

எகிப்தின் பெரிய சிலைகள் செட்போடப்பட்டிருந்த அரங்கில் வண்டியில் முப்பரிமாணக் கண்ணாடியுடன் சென்று மம்மிபடத்தின் மரணமின்மைகொண்ட பேயுருக்களை நேருக்குநேராகச் சந்தித்தோம்.

 

இன்னொரு அரங்கில் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படவரிசையில் வரும் உருமாறும் எந்திர அரக்கர்களை முப்பரிமாணக் காட்சியாகச் சென்று கண்டோம். நான்குபரிமாணம் என்று சொல்லவேண்டும். உலுக்கல், நீர்ச்சாரல் எல்லாம் உண்டு.இன்னொரு காட்சி ஷ்ரெக். அதுவும் முப்பரிமாண உருவெளிக்காட்சிதான்.

ஆறுமணிக்கு ஸ்டுடியோ மூடியது. அதன்பின் ஏதோ பேய்நாடகம். அதற்காக ஒளிவிடும் கொம்புகளுடன் சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தனர். அங்கே நிலவிய உற்சாகக்கூச்சல்கள் பெரும்போதையை அளித்தன. விதவிதமான சிரிப்புகள். பரவசத்தால் இடுங்கிய கண்கள்.

 

சிங்கப்பூரின் தமிழ்ப்பகுதிக்கு சுரங்க ரயிலில் வந்தோம். அங்கே சித்ராவும் ஷா நவாஸும் கவிஞர் நெப்போலியனும் எங்களுக்காகக் காத்திருந்தனர். அங்கு ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம்.

நண்பர் நெப்போலியன் உணவை ரசித்து உண்பவர். புதுக்கோட்டைக்காரர். பொதுவாக செட்டிநாட்டுக்காரர்களே அசைவப்பிரியர்கள். அவரது சிபாரிசு அந்த உணவகம். அங்கே சமையற்காரர்களும் பரிமாறுபவர்களுமெல்லாம் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கிக்காரர்கள். நெப்போலியனை நன்கறிந்தவர்கள்.

மிகப்பெரிய மீன்தலையை சமைத்துச்செய்த குழம்பு. நான் வழக்கம்போல பழங்கள். அருண்மொழி விரும்பி உண்டாள். அவளுடைய ஊரின் சமையல் அது.
முப்பதாம்தேதி சைனா டவுன் பகுதியைச் சுற்றிப்பார்த்தோம். அங்கு ஒரு புதிய புத்தர் ஆலயம் உள்ளது. தாய்லாந்தில் 1088ல் உடைந்து விழுந்த பௌத்த தூபியிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் பல் அங்கு வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. 2005ல் தொடங்கி 2007ல் இது கட்டிமுடித்து திறக்கப்பட்டது

 

சீன டாங் காலகட்டத்து அழகியல் கொண்ட புத்தர்கோயில். குருதிச்செந்நிறமும் பொன்னிறமும் கொண்டு அணிசெய்யப்பட்ட விரிந்த ஆலயக்கூடங்கள். மிகையலங்காரம். ஆனால் மிகையலங்காரமே கூட நுட்பமாகவும் ஒத்திசைவுடனும் அமையும்போது மனம்கவரக்கூடியதாக ஆகிவிடுகிறது

அவ்வாறு அமைவதற்குச்சிறந்த வழி மரபார்ந்த முறையில் அதை அமைப்பதே. ஏனென்றால் நெடுங்காலமாக தொடர்ந்து செம்மை செய்யப்பட்ட அலங்காரம் காலப்போக்கில் கண்ணுக்கு அழகான ஒத்திசைவை வந்தடைந்திருக்கும். தாய்லாந்திலிருந்து வந்த மரபான சிற்பிகளால் அமைக்கப்பட்டது இவ்வாலயம்

 

முகப்பில் விரிந்த கூடத்தில் அறத்திகிரி உருட்டி அமர்ந்திருக்கும் புத்தர். உள்ளே சென்றால் இருபக்கமும் போதிசத்வர்கள் நின்றிருக்கும் புத்த மைத்ரேயரின் சன்னிதி. சுற்றிலும் சுவர் முழுக்க பலவகையான புத்தர்சிலைகள். இந்தியபுத்தரின் கைமுத்திரைகள் நான் அறிந்தவை. சீனபுத்தரின் கைமுத்திரைகள் விசித்திரமாக இருந்தன

மேலே பெரியதோர் பௌத்த அருங்காட்சியகம் உள்ளது. நன்குபராமரிக்கப்பட்ட அழகிய சேமிப்பு. தாய்லாந்து, பர்மா, சீனா , திபெத் பாணி பௌத்த சிற்பங்களும் கலைப்பொருட்களும் கொண்டது. ஒரு முழுநாளைச் செலவிட்டுப் பார்க்கும் அளவுக்குப் பொருட்கள் அங்குள்ளன

 

நான்காம் நிலையில் புத்தரின் பல் வைக்கப்பட்ட ஆலயக்கருவறை. நவீன முறையில் கண்ணாடியறையாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம்நிலையில் ஒரு சிறிய தோட்டம். நடுவே பௌத்தர்களின் பிரார்த்தனைச்சக்கரம் கொண்ட சிறிய மண்டபம்.

சிங்கப்பூரின் முக்கியமான கலைமையமாக இந்தச் சீன ஆலயம் உருவாகிவருவதை உணரமுடிந்தது. சிங்கப்பூரில் இதைப்போல ஒரு இந்து ஆலயமும் பண்பாட்டு மையமும் அமைந்தால் அது முக்கியமான ஒரு இடமாக அமையும்.

சிங்கப்பூரில் இந்து ஆலயங்கள் பல உள்ளன. மலேசியாவிலும் பத்துமலை போல இந்து மையங்கள் உள்ளன. ஆனால் எந்த வகையான கலையுணர்வும் வரலாற்றுணர்வும் இல்லாதவர்களால் கட்டப்பட்ட ஆபாசமான கட்டிடங்கள் அவை. இந்தியாவின் கலை என அவற்றை பிறர் எண்ணக்கூடும் என்பதே மனதைகூசவைக்கிறது

கலை என்றால் என்னவென்றே அறியாத, எந்தவகை மரபான அழகியலுக்கும் கட்டுப்படாத கொத்தனார்கள் கைப்போக்கில் உருவாக்கிய சிலைகள் மேல் கண்ணை உறுத்தும் வண்ணங்களை அள்ளிப்பூசி அழுக்குத்துணிகளைச் சுற்றியிருப்பார்கள்.

அருகே எந்தவிதக் குடிமைப்பண்பும் இல்லாத மக்கள் குப்பைகளை வீசி, எண்ணையைச் சிந்தி, விபூதிகுங்குமங்களைத் தீற்றி முடிந்தவரை அசுத்தமான இடங்களாக அவற்றை மாற்றியிருப்பார்கள். கூச்சல் , பணம்பிடுங்கல்.

ஸ்விஸோட்டலுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்குச் சென்று அறைபோட்டேன். 56 ஆவது மாடியில் அறை.ஆடம்பர வசதிகள் கொண்ட நட்சத்திரவிடுதி. கண்ணாடிவாயிலுக்கு வெளியே சிங்கப்பூரின் நகர்மையத்தின் வண்ணமிகு தோற்றம். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்

சித்ரா என் பெட்டிகளைக் கொண்டுவந்தார்கள். அனைவருமாகச் சென்று கடற்கரை ஓரமாக இருந்த ஒரு திறந்தவெளி உணவகத்தில் உணவருந்தினோம். சீன உணவு. மீகோரிங் நன்றாக இருக்கும் என நெப்போலியன் பரிந்துரைக்க அருண்மொழி சாப்பிட்டாள். சென்னையிலும் இதேபோன்று உணவுமையங்கள் உருவானால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

 

 

படங்கள் மேலும்

முந்தைய கட்டுரைவிக்கி- தமிழ் தாலிபானியம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57