அசோகமித்திரன் விமர்சனமலர் 1993

Untitled

1992ல் நான் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசித்தேன். அருண்மொழிக்கு அங்கேதான் முதன்முதலாக வேலைகிடைத்தது. அஜிதன் பிறந்தான். அங்கே ஏற்கனவே தொலைபேசித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த சுப்ரபாரதிமணியன் எனக்கு வீட்டுவசதிவாரியத்தில் ஒரு வீடு பார்த்துக்கொடுத்தார். பேருந்தில் தினமும் தருமபுரி தொலைபேசி நிலையம் வந்து சென்றுகொண்டிருந்தேன்.

சுப்ரபாரதிமணியனை எனக்கு அவர் ஹைதராபாதில் வேலைசெய்யும்போதே தெரியும். அவரது வீட்டுக்குச்சென்றிருக்கிறேன். தொடர்ச்சியாக கடிதங்கள் வழியாக இலக்கிய உரையாடலில் இருந்தோம். அவர் கனவு என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். நான் அதில் பங்குபெற்றேன்.

அப்போதுதான் தமிழில் மிகைபுனைவு எழுத்துமுறைகள் பெரும் ஆர்வத்துடன் அறிமுகமாயின. நேர்கோடற்ற எழுத்துமுறை ஆவேசத்துடன் முன்வைக்கப்பட்டது. மொழி திருகலாக இருந்தால்தான் அது எழுத்து என்னும் எண்ணம் சிறிய சூழலில் வலுப்பெற்றது.

நானும் அந்த அலையில் ஆர்வம்கொண்டிருந்தேன். நேர்கோடற்ற கதைசொல்லும் முறை, மிகைபுனைவு, படிமங்கள்செறிந்த மொழி ஆகியவை எனக்கு அன்றும் இன்றும் உவப்பானவை. ஆனால் அதையே ஒரே எழுத்துமுறையாகக் கொள்வதை என்னால் ஏற்கமுடியவில்லை.

அன்று அசோகமித்திரனை ‘எளிமையான யதார்த்தவாத எழுத்தாளர்’ என நிராகரிக்கும் ஒரு மனநிலை நிலவியது . அதற்கேற்ப அசோகமித்திரன் அன்று சாவி போன்ற வணிக இதழ்களில் சாதாரணமான பல கதைகளை எழுதிக்கொண்டும் இருந்தார். சிற்றிதழ்சாந்த இலக்கியம் அவரைக் கடந்து நெடுந்தூரம் சென்றுவிட்டது என்ற பேச்சு அன்றைய இலக்கியச்சூழலில் அதிக ஓசையிட்டவர்களால் அடிக்கடி முன்வைக்கப்பட்டது

ஆனால் அசோகமித்திரன் தமிழிலக்கியத்தில் ஒரு சிகரம் என்னும் எண்ணம் எனக்கிருந்தது.  மௌனமாகச் சொல்லப்பட்ட அவரது கதைகள் வாசகனின் கூர்ந்த கவனிப்பைக் கோருபவை என்று வாதிட்டேன்

1
அதை சுப்ரபாரதிமணியனிடம் சொன்னேன். அவரும் அசோகமித்திரன் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அசோகமித்திரனுக்கு அப்போது அறுபது வயதாகியது. அதையொட்டி அவருக்காக ஒரு மலர் வெளியிடலாமென நினைத்தோம். நான் பலரிடம் கட்டுரைகள் கோரி பெற்று ஒருவழியாக ஒரு விமர்சன மலரைத் தயாரித்தேன்.

அது பரவலாகக் கவனிக்கப்பட்டது. உண்மையில் இலக்கியத்தில் ஒரு திசைமாற்றத்தை உருவாக்கியது. அசோகமித்திரன் மீதான கவனம் மீண்டும் வலுவாக உருவாகியது. இன்று அந்த பழைய மலரை நோக்கும்போது ஒரு மனநெகிழ்வு உருவாகிறது

சுப்ரபாரதிமணியன் மேலும் சில கட்டுரைகளுடன் அந்தத் தொகுப்பை ஒரு நூலாகக் கொண்டுவந்திருக்கிறார் என அறிகிறேன். [தொடர்புக்கு R P Subramaniyan 8/2635 Pandiyan Nagar Tirupur Tamilnadu 9486101003

சுப்ரபாரதிமணியன் இணையதளம்

முந்தைய கட்டுரைதஞ்சை பிரகாஷ் -கடிதம்
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 3