இரண்டு

நாயர்கள் வண்டியைச்சுற்றி முன்னும் பின்னும் சென்றபடி கமுகுத்தடி பிளந்துசெய்த வாரிக்குந்தங்களை தாளத்துடன் தரையில் குத்தி பாடியபடி நடந்தனர். முன்னால் நடந்த சற்று முதிய நாயர் நல்ல தெளிவான குரலில் பாட பிறர் அதை கலைசலாக ஏற்றுப் பாடினார்கள்.

‘பறைச்சி பெற்ற பந்திருகுலமல்லோ- அம்ம
பறைச்சியப்பெற்றது நிந்திருவடி.
பறைச்சிமுல குடிச்ச மக்களில்- அம்ம
பாக்கனாரல்லோ நின்றமூப்பன்!

ஆரல்வாய்மொழி கோட்டைக்கு அப்பால் வண்டித்தடத்துக்கு இருபுறமும் பனையோலை வேய்ந்த உயரமில்லாத காவல்வீடுகள் ஒன்றுடனொன்று செறிந்திருக்க நடுவே மேடுமீது சர்வாதிக்கார் தங்கும் கோட்டை வீடு சுதைபூசிய சுவர்களும் தென்னை ஓலை வேய்ந்த உயரமான கூரையும் பெரிய சாளரங்களுமாக காலை ஒளியில் கண்களை உறுத்தியபடி நின்றது. சர்வாதிக்கார் வீடுமுன்னர் குந்தத்தை மடிமீதுவைத்து காவலர் இருவர் கல்திண்ணைமீது அமர்ந்து தாயம் விளையாட முற்றத்தில் நான்கு மாந்தளிர்நிறக் குதிரைகள் கருவேலமரத்தில் கட்டப்பட்டு வால்சுழற்றி தலையசைத்து பிடரி சிலுப்பி கழுத்துத் தசைகள் முறுகியசைய முகத்தில் கட்டப்பட்ட கமுகுப்பாளைப் பைக்குள் இருந்து ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி காணம் தின்றன. சேணங்கள் மாளிகைத்திண்ணைமீது மூட்டையடுக்குகள் அருகே அடுக்கிவைக்கப்பட்டிருக்க சற்று தள்ளி குடிநீர் குடமும் வெற்றிலைத்தட்டமும் குந்தங்களும் மரக்கேடயங்களும் கிடந்தன. திண்ணையருகே ஒரு பசுமாடு தறியில் கட்டப்பட்டு கீழே குவிக்கப்பட்ட புல்லில் இருந்து வாய்ப்பிடி அள்ளி தாடைச்சதை அசைய மென்று மென்று உள்ளிழுத்தது. சதுரவடிவமான முற்றத்தின் வட எல்லையில் நின்ற வேம்பிலிருந்து பொன்னிற இலைகள் முற்றமெங்கும் உதிர்ந்து கிடந்தன.

ஊர்நடுவே வெளிறிய நீலப்பாறைநிறத்தில் தேமல் படர்ந்த கிளைகளை விரித்து நின்றிருந்த கல்லாலமரத்தின் பச்சைத் தகடுகள் போல இலைகள் செறிந்த நிழலுக்குக் கீழே சுதைச்சுவரும் வெள்ளையடித்த கல்தூண்கள் மீது பனையோலைக்கூரையும் கொண்ட உயரமில்லாத சாஸ்தா கோயிலுக்கு முன்னால் ஊராரின் வண்டிகள் சில நுகம் அவிழ்த்து போடப்பட்டிருந்தன. கல்த்தொட்டிகளில் கிடந்த நீரை பெருமூச்சு விட்டு முகம் மூழ்கிக் குடித்துவிட்டு மீசைமுட்களில் துளிகள் உருண்டு சொட்டி நிற்க காதுகளை ஆட்டியபடி தலைதூக்கிய வெண்காளை ஒன்று சட்டென்று திரும்பி நாக்கால் விலாவை நக்கியது. இருகாளைகள் கால்மடக்கி கிடந்து கண்மூடி அசைபோல ஒன்று தலைகுனிந்து தரையைக் குத்தி பிடரி சிலுப்பி மூச்சு சீற வண்டிகளை திரும்பிப்பார்த்தது. காளைகளின் வால்கள் நெளிந்து சுழன்று அசைய கீழே சாணிமெழுகிய தரையில் உதிர்ந்துகிடந்த பழுத்த ஆலமர இலைகளை ஒரு கிழவி குனிந்து வாரியலால் கூட்டிய பின் இடுப்பில் கைவைத்து நிமிர்ந்தாள்.

கோயிலுக்கு தெற்கே செந்நிறவெட்டுகல்லால் சுவர் வளைத்துக் கட்டிய பெருங்கிணற்றில் படைநாயர்களுக்கு சமைக்கும் புழுக்கவெள்ளாட்டிகள் இடுப்பில் இறுகச்சுற்றி கால்முட்டுவரை வந்த ஒற்றைவேட்டியை சுழற்றியிடுத்து மறைக்காத காம்பு சுருங்கிய முலைகள் வயிறுமீது தொங்கியாட ஒருவரோடொருவர் பேசிசிரித்தபடி தண்ணீர் சேந்திக் கொண்டிருந்தனர். கமுகுப்பாளைகோட்டிய தொன்னையை கயிற்றில் கட்டி மரச்சகடத்தில் போட்டு இறக்கி முலைகள் விலாவரை குலுங்க இழுத்து இழுத்து கைவீசி எடுத்து வாய்குறுகிய மண்குடங்களில் முழக்கமெழ ஊற்றினர். நீர் சிந்தி செந்நிறக்குடம் மேலும் சிவக்க, நீர் ஒளிவிட்டுச் சிந்த குடங்களை சுழற்றித்தூக்கி இடுப்பிலும் தலையிலும் ஏற்றி வைத்தி வண்டிகளைப்பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டபடி இறுகியசையும் பின்புறப்புடைப்புகளும் திறந்த தோள் தசைகளும் தெரிய வீடுகள் நடுவே மறைந்த சந்துகளுக்குள் சென்றனர். பனையோலைக்கூரைகளின் ஊடாக சமையல்புகை எழுந்தது.

ஊருக்கு அப்பால் காவல்குளத்தில் நீர் தேங்கி முதல்படி தொட்டு தளும்பி மறுபக்கம் கல்மடைவழியாக மறுகால் பாயும் துமியும் ஒலியும் எழுந்தது. சூழ்ந்த புன்னைமரங்களின் இலைகள் நீர்ப்பரப்பில் மிதந்து அலைகளிலாடின. படிகளில் இடையில் தாறுசுற்றிக்கட்டிய இறுக்கமான உடல்கொண்ட படைநாயர்களும் தொப்பை சரிந்த பிள்ளைமாரும் உடலில் எண்ணை தேய்த்து பளபளக்க நீரிலிறங்கி மூழ்கி எழுந்து அலையெழுப்பியும் கரையேறி துவர்த்தை முறுக்கி உடல் தேய்த்தும் தலைதுவட்டியும் உரக்க பேசியும் கரையெங்கும் நிறைந்திருந்தனர். படிகளில் சரிந்து அமர்ந்து வேப்பங்குச்சியால் பல் துலக்கியும் கல்படிகளில் உவர்மண் சேர்த்து துணிகளை கும்மி கும்மி அலசியும் சிலர் வண்டிகளை கவனமில்லாமல் பார்த்து பேசிக்கொண்டனர்.

குளத்தடி செம்புழுதி மைதானத்தில் நின்ற பெரும் அரசமரத்தடியில் கிடந்த கல் உருளைகளை தூக்கி தலைமீது சுழற்றியும் இரும்பு கோர்த்த கல்உருண்டைகளை கைகளால் தூக்கி வளைத்தும் படைநாயர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். குளத்துக்கு அப்பால் குற்றிக்காடுகள் நடுவே இலுப்பைமர நிழலில் நின்ற கல்லாலான பழைய பத்ரகாளிகோயிலின் மண்படிந்தகூரைமீது நாணலும் புதர்களும் முளைத்து பரட்டைத்தலை ஆண்டி போல நிற்க அதற்குப்பின்னால் மலைச்சரிவு எழுந்து சென்று மாபெரும் கோபுரம் போல் உயர்ந்து நின்ற மலைமுகடை அடைந்தது. மலைமீது பெரும்பாறை வானத்தை வருடி மேகங்களைக் கலைப்பதுபோல நீல இருள் மூடி நின்றது. சரிவெங்கும் அடர்ந்த மரங்கள் கனத்து கனத்து மரக்கூட்டங்களே குவியலாக எழுந்து மலையாகின என்ற எண்ணச்செய்தன.

இருபக்கமும் அடர்ந்த காடுகளே தொடர்ந்துவந்தன. வண்டிச்சாலையோரமாக காடுகள் தீப்படாமலிருக்க நடப்பட்ட பேய்க்கற்றாழைப் படப்புகள் நீலப்பச்சை சருமம் மீது வெண்சுண்ணப்பூச்சு படர்ந்த பத்திகளை விரித்து ஆயிரம்தலை நாகங்கள் போல நுனிமுள் நீட்டி கொத்து கொத்தாக செறிந்திருக்க அவற்றில் பூத்த சிலந்திவலைகளில் காலைவெயில் படாத பனித்துளிகள் காற்றில் நடுங்கி ஒளிர்ந்து அதிர்ந்து நின்றன. உந்திச்சுழி போன்று மென்மையாகச் சுழித்த குழிச்சிலந்தி வளைகளுக்குள் பனியீரம் உப்புத்தூள் போல் மின்னியது. கற்றாழைப்படப்புக்கு அப்பாலிருந்து கருமருதும் கோங்கும் மலைவாகையும் இலஞ்சியும் கடுந்தாணியும் கடம்பும் போங்கும் கிளைகள் பின்னி இலைத்தழைப்புகள் செறிந்து நிழல்கூடி இருளாக மாறிய அடர்வுக்குள் ஒன்றுமற்றென இல்லாமல் நின்ற காடு. உள்ளே அந்த எழுகாலையிலும் ஓயாத புள்முழக்கம் காற்று இலைகளை ஊடுருவும் ஓசையுடன் கலந்து தூரத்து அருவி போல ஒருகணமும் நெருங்கிவரும் புயல்போல மறுகணமும் ஒலித்துக் கொண்டிருந்தது.

காடு வெளுத்து குறுமரங்களாகி குற்றிக்காடாகி விலகி தோவாளை ஊரின் மண்கோட்டை முகப்பு தெரிந்தது. செம்மண் வேலிமீது நட்ட முள்மருது மரங்களை கிளைசேர்த்து சல்லிசேர்த்துக்கட்டி உருவாக்கிய ஊர்க்கோட்டை வாசலில் கடாத்தண்டில் பெரிய கல்மூங்கில்களைப்போட்டு தடுத்திருக்க வலப்பக்கம் பிள்ளையாரும் இடப்பக்கம் காவல்பிடாரியும் சிறிய மண்கோயில்களாக அமர்ந்திருந்தனர். ஊருக்குள் செல்லும் செம்மண்பாதையின் மீது காலையில் சென்ற முதல்வண்டித்தடம் தெரிந்தது. தென்னையும் மாமரங்களும் வாழைகளும் அடர்ந்த ஊருக்குள்ளிருந்து சமையல் புகையும் பேச்சொலிகளும் எழுந்தன. ஆரல்வாய்மொழி கோட்டாறு வண்டிச்சாலை ஊருக்குள் செல்லாமல் கோட்டையை சுற்றி மறுபக்கம் சென்று காட்டுக்குள் மீண்டும் புதைந்து கற்றாழைச்செறிவுக்கு நடுவே சிவந்த பட்டுநேரியது விழுந்தது போலக் கிடந்தது.

ஊர்முகப்பிற்கு தெற்கே மரத்தூண்மீது பனையோலைக்கூரை வேய்ந்து, பெரிய கல்தொட்டியில் கலக்கிவைக்கப்பட்ட கொழுத்த மோரும் சுட்ட பனங்கிழங்கும் காந்தாரிமிளகிட்டு ஊறிய வடுமாங்காய் ஊறுகாயுமாக ஊரின் தர்மச் சாவடி. நாயர்கள் வண்டியை நிறுத்திவிட்டு கும்பலாக பேசியபடியே சென்று குவிக்கப்பட்டிருந்த பனையோலையில் இருந்து ஓலைக்கணுக்களை வாளால் சீவியெடுத்து பட்டைகோட்டி தொட்டியருகே சென்று அங்கே நீண்ட மர அகப்¨ப்படன் அமர்ந்திருந்த தர்மம்பிள்ளையிடமிருந்து நிறையும்படி மோரும் தேக்கிலையில் மாங்காயும் கிழங்கும் வாங்கிவந்து பூவரச மரத்தடிகளில் இருவர் மூவராக அமர்ந்து கடித்துமென்று குடிக்க தொடங்கினர். வண்டிக்காரன் நாயர்களுடன் சேராமல் தனித்து நின்று மோர் குடிக்க, தலையில் முண்டாசும் இடையில் கச்சமும் அணிந்த கிழட்டு தர்மம் பிள்ளை பொக்கைவாயில் ஒரு புகையிலைச்சுருளை செருகியபடி மெல்லிய குரலில் அவனிடம் வண்டியைப்பற்றி விசாரித்தபின் ஓரக்கண்ணால் உள்ளே இருந்த அனும ரெட்டியைப் பார்த்தார். அவர்கள் குடித்து முடித்ததும் பெரிய மரத்தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலைபாக்கை புகையிலையுடன் எடுத்து வெற்றிலைபோட்டுக் கொண்டனர். ஒருவேளை வெற்றிலை கையில் எடுத்துக் கொள்ளலாமென்று வளமுறை.

நரசிம்மலு ரெட்டி அசைந்து முனகி பின் விழித்துக்கொண்டு எட்டி வெளியே பார்த்தபின் அனும ரெட்டியிடம் ”தோவாள தர்மமடமா?” என்றார். அனும ரெட்டி ஆமாம் என்று தலையை அசைத்தான். ” களம் முடிவானுக, என்னமோ அச்சி வீட்டில சம்பந்தத்துக்கு வந்தது மாதிரில்லா உக்காந்திருக்கானுக. வேகம் வரச்சொல்லுலே. நாழி கெடக்குல்லா” என்றார் நரசிம்மலு ரெட்டி. அனும ரெட்டி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இரண்டு வண்டிகள் வந்து நின்றன. கோட்டாற்றுக் கம்போளத்துக்குப் போகும் பாரவண்டிகள் அவை. அவற்றுக்கு காவலுக்கு வந்த நாயர்படைகள் இவர்களைப்பார்த்ததும் ”ஓய்ய் ஓய்ய் ஓகோய்” என்று கூச்சலிட்டனர்.இவர்களும் திரும்பக் கூச்சலிட்டனர். ”எளவு நரிக்கூட்டம் மாதிரில்லா சத்தம் போடுகானுக”என்றார் நரசிம்மலு ரெட்டி.

கண்டன்நாயர் பிறரை அதட்டினான் ”ஆ ஆ!- வேகம் …வேகம் ஆகட்டே… போற வழி கெடக்கு நானாழிக தூரம்.” ஒவ்வொருவராக எழுந்தார்கள். வண்டியோட்டியும் வந்து ஏறிகொண்டதும் காளைகள் தானாகவே வாலைச்சுழற்றி மெல்ல முன்னகர்ந்தன. அவன்சாட்டைக்கோலை அவற்றின் வாலில் உரசியதும் அவை மணிகுலுங்க முன்னகர்ந்து புழுதி கிளப்பி செல்ல ஆரம்பித்தன.மீண்டும் கிளைகள் உரசிமுனகும் கோங்குமரங்கள் செறிந்த காடு. நரசிம்மலு ரெட்டி மீண்டும் கண்ணயர ஆரம்பித்து சற்று நேரத்திலேயே பெட்டிமீது சாய்ந்து குரட்டைவிட்டு தூங்கினார். வண்டி புழுதியில் புதைந்து கிருகிருவென சென்ற போது இருபக்கமும் மரங்களிலிருந்து பறவைகள் கலைந்து எழுந்து ஒலியெழுப்பின.

ஒரு கீரி சாலையின் குறுக்கே புழுதியில் கால்த்தடம் வரைந்து ஓடியபோது நாயர்கள் ”ஹோ ஹோ ஹோ ” என்று கூச்சலிட்டபடி அதன்பின்னால் ஓடி பாய்ந்து கற்றாழைப்படப்புக்குள் தாவி இடுக்குகளில் குந்தத்தால் குத்தி கூச்சலிட்டு தேடினார்கள். வண்டி அப்படியே தனிந்து சாலையில் நின்றுவிட்டது.

கண்டன்நாயர் ”ச்சே எரப்பாளிகளே…. புத்தியுண்டாடே நினக்கெல்லாம்? கீரிய சுட்டாடே திம்பே? மயிருமாதிரி வேலபாக்கானுக. டே… ஒரு ஜோலிக்கு வந்தா அந்த ஜோலிய மரியாதியா பாக்கணும்டே. அதாக்கும் தறவாட்டில் பெறந்தவனுக்குள்ள கொணம்… அல்லாம குறச்சாட்டமா சாடினா என்னடே மரியாத டே…டே சங்கு, மயிராண்டி வாடே …டே வாருங்கடே…சொன்னாக்கேளுங்க… டே.. ” என்று சத்தம்போட்டான். கீரி தப்பி விட்டது. ஒவ்வொருவராக இளித்தபடி குந்தத்துடன் சாலைக்குவந்தார்கள்.

”மோணையனா இருக்கியளேடே…கீரிய குந்தம்கொண்டு பிடிக்க ஒக்குமா? படம் திரும்பி பாயுந்ந நல்லபாம்பை பிடிக்குத ஜென்மம்லா அது? அதெப்டி, ராகு காலத்தில தந்தையான்மாரு தாறை அவுத்தா இந்தமாதிரி உருப்படிகள்தாலா பெறக்கும்…வாங்கடே வந்து ஜொலியப்பாருங்க…” என்றான் கண்டன்நாயர். வண்டிக்குள் எட்டிப்பார்த்து அனும ரெட்டியிடம் ”எல்லாம் தனி குந்தந்தாங்கி நாயன்மாராகும். புத்தி இல்லை. உள்ளது கையில ஒந்நாம் குந்தம், காலுக்கு நடுவில ரண்டாம் குந்தம். வேற ஒரு மயிரும் தெரியாது…” என்றான். அனும ரெட்டி ஒன்றுமே சொல்லாமல் பேசாமல் பார்க்க, கண்டன்நாயர் கூண்டில் தட்டி ”ம்ம்ம்..வண்டி போட்டு ”என்றான்.

மெதுவாக காட்டின் அடர்த்தி குறைந்து உதிரி மரங்களாக மாறின. குலைகுலையாகப் பூத்து இன்னும் காய்விடாத நாவல்மரங்கள் இருபக்கமும் இலைக்கொத்துகளை மிகவும் தாழ்த்தி நிழல் கொடுக்க ஆங்காங்கே கொடுக்காப்புளியும் நாவலும் இலஞ்சியும் கலந்த சோலைகள் சூழ்ந்த சிறிய எல்லைம்மன் கோயில்கள் சில வந்தன. அதன் பின் நாஞ்சில் நாட்டு வயல்வெளி. ஆவணியில் அறுவடையாகவேண்டிய கன்னிப்பூ நாற்றுகள் நன்றாக பசுமைகறுத்து அடிதழைத்து தண்டுகனத்து எழுந்து பொதிவிட்டு நின்றன. கதிர் முற்றலுக்கு ஏற்ப வயல் பசுமையில் மஞ்சள் கலந்து கண்டாங்கிபோல் விரிந்திருக்க இளவெயிலில் புள்ளுவனின் குடவீணைபோல் பொதிப்பால் குடிக்கும் அந்துகள் ரீங்கரிக்கும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

அலை புரண்ட வயல்கடல் விரிந்து விரிந்து சென்று தொலைவில் நீலநிறப்புகைப்பூச்சுடன் ஒளிவிட்ட வெண்மேகங்களை தொட்டபடி மௌனத்தில் ஆழ்ந்து அலையலையாக நின்றிருந்த மலையடுக்குகளைச் சென்றடைந்தன. மலைகளை காலை இளவெயில் மஞ்சள்கலந்த ஒளியுடன் முழுக்காட்டி உச்சிகளில் அமர்ந்திருந்த யானைபோன்ற பாறைக் கொடுமுடிகளின் கருமையை மெருகுடன் மின்னவைத்தது. கீழே மலைச்சரிவுகளில் சிகரங்களின் நிழல்கள் அழகிய பெண்ணின் கூந்தலும் நிழலும் தோளிலும் மார்பிலும் விழுந்து கிடப்பது போல சரிந்திருந்தன. மலைகளின் மடம்புகளில் பெண்ணின் தொப்புள்மயிர் இடைதாண்டி கனப்பதுபோல் பச்சைமரக்கூட்டங்கள் அடர்ந்து கீழிறங்கி காடாகிக் கனத்து பச்சைவயல்களை வந்தடைந்து வெளிறின. கண் எட்டிய தொலைவுவரை எங்கும் வீடுகளோ குடிகளோ தென்படவில்லை. வயல்கள் மந்திரக்கோலொன்றின் அசைவுக்குக் கட்டுபபட்டு நிலம் விரிந்து உருவாகி இன்னமும் வராத மனிதர்களுக்காக முழுமையான தனிமையில் காத்துக் கிடந்தன.

அதுவரை இருந்த எண்ணக்களெல்லாம் எங்கோ அம்றைய அனும ரெட்டி மார்பு நிறைந்து விம்ம பெருமூச்சுகளாக விட்டுக் கொண்டிருந்தான். கண்கள் அந்த வெளியை அள்ள இருபக்கமும் விரிய முயன்று விரிய இயலாமல் தவித்து ஈரம் கொண்டன என்று படவே கண்களை மூடிக்கொள்ளும்போது இமைகளுக்குள்ளும் அந்தப்பச்சை ஒளியே நிறைந்திருக்கக் கண்டான். மீண்டும் திறந்தபோது அது கனவல்ல என்பது போல பச்சைப்பெருக்காக விரிந்து கிடந்தது நாஞ்சில் நாடு. வயல் வெளி நடுவே ஒரு நீலக் கண்ணாடிவயல் என ஒரு பெரிய குளம் வானத்தை வளைத்து வளைத்து ஒளியாக மாற்றியபடி ததும்பிக் கிடந்தது. அந்நேரத்தில் குளத்தில் யாருமே இல்லை. என்றும் எவரும் தொட்டிராத கன்னிநீர்படலமென அதன் நீலச்சருமத்தகடு அலைநெளிந்து அலைநெளிந்து காற்றில் குலைந்தசையும் வெண்சாமரச் செண்டேந்திய நாணல்கூட்டம் செறிந்த சேற்றுக்கரைகளை நாவால் அன்னையை நக்கும் கன்று போல வருடியது. நீருக்குள் கரும்குளக்கோழிகள் நீர்ப் பாம்புபோல வளைந்த தலையை மட்டும் மேலே காட்டியபடி நீருக்குள் நீந்தியும் திடீரென்று மூழ்கி வேறு இடத்தில் எழுந்து தலைசிலுப்பியும் இரைதேடின.

கரையோரத்தில் நீரில் சரிந்து நிழல் சிந்தி நின்ற குளிர்ந்த புன்னைகளில் இருந்து காகங்கள் நீரில் நிழல் தொடர எழுந்து காற்று சுழன்ற வானில் வட்டமிட்டு மீண்டும் சென்றமர்ந்தன. கரையோரத்தில் செறிந்திருந்த பேய்க்கோரையும் சணம்பும் கலந்த பசுச்ம்பரப்பின் மீது எழுந்த நீர்மருதுகளின் கிளைகளில் நட்டுவைத்த வெண்சங்குபோல கொக்குகள் கழுத்து உள்ளிழுத்து ஒற்றைக்கால் மடக்கி கீழே நீர்ப்பிம்பம் துணையிருக்க அசைவிழந்து காத்திருந்தன. குளத்து மடையில் குளத்துநீர் குளிர்வெண்தழல் போலகொப்பளித்து கிளுகிளுத்து எழுந்து கல்பாவுமீது கண்ணாடிப்பட்டுநொறி என சரிந்து இருபக்கமும் நீலநிறப்பூக்கள் சூடிய குவளைப்பரப்பு விளிம்புகட்டிய ஓடையில் புரண்டும் நெளிந்தும் வளைவுகளில் சுழன்று திரும்பியும் வயல்கள் நடுவே சென்று கொண்டிருந்தது.

பழையாற்று ஓடை ஒன்று பெரிய பாறைச்சந்திலிருந்து அருவி போல துமியும் ஒளியும் சிதற ஓலமிட்டபடி கொட்டி சாலையோரம் குட்டையாக தேங்கி கிளைபிரிந்து ஒரு கிளை சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றது. வண்டி கடக்கப் போட்டிருந்த கற்பாவுகைமீது குடத்தில் சகடமுரச வண்டி அதிர்ந்து அதிர்ந்து இறங்கி மறுபக்கம்சென்றது. குட்டையருகே நீண்ட அலகுகள் கொண்ட சிறிய பறவைகள் கூட்டம் கூட்டமாக சிறகடித்து எழுந்தும் சுழன்றுவந்து சட்டென்று சேற்றுவிளிம்பில் அமர்ந்தும், வண்டியொலியில் அனைத்தும் ஒருசேர எழுந்து சுழன்றபின் மீண்டும் அமர்ந்தும் விளையாட ஒன்றிரண்டு பறவைகள் மஞ்சள் வளையமிட்ட பெரிய கண்களை உருட்டி தலை சரித்துப் பார்த்தன. வண்டிக்காரன் காளைகளை அவிழ்த்து நீர் காட்டியபோது நாயர்கள் நீரை அள்ளி வியர்த்த உடல்மீதும் முகத்திலும் விட்டுக்கொண்டார்கள்.அனும ரெட்டி இறங்கி நின்று வயல்வெளியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சாலையிலிருந்து பிரிந்த வண்டிப்பாதை வரம்பு மீது புல்மெத்தையில் இருசக்கரத்தடம் மட்டுமே சிவப்பாகத்தெரிய நீண்டுசென்று அப்பால் தென்னைமரமண்டைகள் பசுமையாக அடர்ந்த மேட்டில் இருந்த ஊருக்குள் நுழைந்தன. ஊரின் சுதைக்கட்டிடங்களின் வெண்சுவர்கள் தென்னைமரத்தடிகளின் ஊடாகத்தெரிய சமையல்புகை பசுமைமீது மேகப்புரி போல பிரிந்தெழக்கண்டான். ஊரிலிருந்து இரண்டு செவலைக் காளைகளுடன் வந்த ஒருவன் கிழக்கே திரும்பி சிறுவரப்பின் மீது அசைவற்றவன்போல பிரமைகாட்டி நடந்துசென்றான். மேலும் மேலும் வெண்மைகொண்டு பட்டுக்குவியல்கள் போல் ஒளிபெற்ற மேகங்கள் ஒன்றுடனொன்று மிக மென்மையாக முட்டிக்கொண்டு கிழக்கு நோக்கிச் சரிந்திறங்க நடுவே நீலவானத்து விதானம் துலங்கியது. தென்னைஓலைகளின் நுனிக்குஞ்சங்கள் வானை தொட்டுவருடும் தீண்டலை தன் உள்ளும் உணர்ந்தான். தூரத்து மலைகளின் காற்று சேற்றுமணமும் நாற்றுமணமும் கொண்டு குளிராக மிதந்துவந்து இலைகளை புரட்டி மரச்செண்டுகளை பசுமைவெளிறச் செய்து சிலுசிலுவென வந்து தழுவியபோது தொலைதூரத்துக் காளைகளின் கழுத்துமணியின் இசைச்சிதர் அவனை அடைந்து நெஞ்சையும் நினைப்¨ப்பம் தித்திக்கச் செய்ய, அனும ரெட்டி மனம் விம்மி கண்ணீர் விட்டான்.

”ரெட்டியார் கேறணும் .சமயமாயல்லோ” என்றான் ஒரு நாயர். இன்னொருவன் ”ரெட்டிக்கு கண்டு நிறையல்ல. நாஞ்சிநாட்டம்மையுடே நாபிப்பச்சை கண்டா பாண்டிப்பரிஷ விடுமோ?” என்றான்.

அனும ரெட்டி வண்டியில் ஏறிக்கொண்டான். அண்ணன் எழுந்து வாயில் வழிந்த எச்சிலை துடைத்தபடி கோட்டாற்று வெலக்குப்பாதை வந்தாச்சால?”என்றான். ”வருது”என்றான் அனும ரெட்டி.

”உச்சிப்போதுக்குள்ள பஞ்சவன்காடு எட்டினா இருட்டுக்குள்ள வில்லுக்குறி தாண்டிப்போடலாம். பின்ன இரணியநல்லூருக்கு நாலுநாழிகைதானே” என்றான் நரசிம்மலு ரெட்டி.

இங்கேயே எட்டுகோட்டை விதைப்பாடு வாங்கி குடியேறினால் என்ன என்று அனும ரெட்டி கற்பனை செய்ய ஆரம்பித்தான். அந்த கிராமத்தில் ஒரு வெள்ளாட்டியை சம்பந்தம் செய்து ஒருவீட்டையும் கட்டி குடியேறவேண்டும். அவளுக்கு பெரிய அகன்ற கண்கள், கருங்குருவி சிறகுபோல சரியும் கனத்த இமைமயிர், இரண்டாகபகுந்த மெல்லிய பெரிய உதடுகள். கனத்த பிருஷ்டம் வரை சுருளவிழும் கருங்கூந்தல். காலையில் புன்னைப்பூ மணக்கும் நல்ல குளிர்ந்த குளத்து நீரில் நீந்தித்துழாவி குளியல், நீராவிக் காற்றடிக்கும் வயல்வெளியில் கொஞ்சம் வேலை, தேங்காய் சிவக்க அரைத்து பச்சைப்புளி சேர்த்து சுண்டவைத்த மீன்குழம்பும் முண்டகச்சம்பா அரிசிச் சோறும் சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த கல்திண்ணைகளின் வயல்காற்று ஏற்று மதியத்தூக்கம், இரவில் கொஞ்சம் வில்லுபபட்டு அல்லது கூத்து. மரங்களையும் மண்ணையும் மூடிக்கொட்டும் மழையைக் கேட்டபடி தட்டுபடியில் கரும்படம் போர்த்திக்கொண்டு சுருண்டு தூக்கம். இதுதான் வாழ்க்கை. இனி வரண்டு உலர்ந்து வெடித்து தூசு பறக்க, முள்ளும் முள்வேரும் கரிந்து, தழல்தழலாக வெயில் நின்றெரிய, வெண்சுடர்விரிந்து தகிக்கும் மொட்டை வானம்நோக்கி வெறித்துக்கிடக்கும் களக்காடு, ராதாபுரம், கோட்டையடி பொட்டல்வெளிகளை ஒருமுறைகூட கண்ணால் பார்க்கக் கூடாது. இனி அந்த நிலங்களே என் கண்ணிலும் கனவிலும் வரக்கூடாது. இனி இந்த மண்ணைவிட்டு காலை எடுக்கவே கூடாது. போதும் வியாபாரம். சமத்காரப் பேச்சுகள், சாதுரியங்கள், வசைகள், அலுப்புகள்… நாக்கு எடுத்த நாள் முதலே பேசிப்பழகிய பொய்கள்… போதும்.

ஒவ்வொருமுறை நாஞ்சில்நாட்டுமண்ணை மிதிக்கும்போதும் ஏற்படும் மன எழுச்சிதான் இது என்றும் , ஒருபோதும் இதெல்லாம் நடக்கப்போவதில்லை என்றும் அனும ரெட்டி அறிவான். அவனுடைய குலமும் சொந்தமும் நிறைந்த முனிஞ்சிப்பட்டி மூலைக்கரைப்பட்டி கிராமங்களுக்கு திரும்பாமல் முடியாது. கருவேலமும் கல்வேங்கையும் நிற்கும் சிறிய கிராமத்து மேடு, எல்லையில் காவல்பிடாரிக்கோயில் சுதைக்கூரையிட்ட சின்னஞ்சிறு வீடுகள், காவல் போடப்பட்ட ஊர்க்கிணறு, சாவடி.கல்பாவிய திண்ணை கொண்ட அவனது பாரம்பரிய வீடுதான் ஊரிலேயே பெரியது. அவன் தாத்தா அங்குரெட்டி புகையிலைவியாபாரம் செய்து கட்டியது. மலையாளநாட்டுக்கு புகையிலையை அறிமுகம்செய்ததே அவர்தான் என்பார்கள். அவன் வீட்டை ஊரில் ‘போயிலவீடு’ என்று சொல்வதுண்டு. சாளரங்களே இல்லாத கனத்த சுவர்களால் சூழப்பட்ட இருண்ட உள் அறைகளுக்கு அப்பால் சதுர வடிவ அங்கணம். அதைச்சுற்றிய உள்திண்ணை. திண்ணைமுழுக்க மட்கும் காரநெடிகொண்ட வியாபாரச்சரக்குகள். உள்ளே போக லட்சுமி செதுக்கிய கனத்த மரநடைவாசல். அப்பால் அம்மாவின் உலகம்.

பெரிய நாமம் தரித்த பரந்த கரிய முகமும் தோள்களில் தட்டும் பாம்படமிட்ட வடிகாதுகளும் இடுப்பில் சுற்றி எடுத்து கனத்த மார்புகளை மறைக்கும் சேலையும் கனத்த தோள்களில் குத்தப்பட்ட மயில்பச்சையும் எட்டுக்கல் வைத்த மூக்குத்திகளும் இரட்டைப் புளியிலைமாலையும் உரத்த அதட்டும்குரலுமாக அவன் அம்மா நினைவில் எழுந்தாள். அனும ரெட்டி நாஞ்சில்நாட்டிலிருந்து விலகி அவன் புழுதியாடி விளையாடிய ஊருக்கே போய்விட்டான். அம்மாவின் நீலநரம்பு புடைத்த கரங்களின் வெள்ளி வங்குகளை நகர்த்தியபடி அவளருகே அமர்ந்து கொஞ்சிப்பேசிக் கொண்டிருந்தான். வெகுதூரம் அவன் எதையுமே பார்க்கவில்லை.

கோட்டாற்று கம்போளத்துக்குப் போகும் விலக்குப்பாதைவந்ததும் வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி ”கம்போளம் போகணுமா ரெட்டியாரே?”என்றான். ”நேரா போலே. வெயிலேறிவருதுல்லா? ”என்றார் நரசிம்மலு ரெட்டி.

ஒரு நாயர் ”கம்போளத்து முக்கிலே நல்ல சூடு உண்ணிப்பமும் பணியாரமும் கிட்டும் ” என்றான். கண்டன்நாயர் ” எரப்பாளி உன் சங்கக் கடிச்சு துப்பீருவேன். சோலியிண்ணா சோலிமயிரைப்பாரு…” என்றான்

வண்டிதிரும்பியதும் கோட்டாற்றுக் கம்போளம் செல்லும் பாரவண்டி வரிசைகள் கொடி நுடங்க சினையெருமைகள் போல கனத்து கனத்து உருண்டுசெல்வதை நிரையாகக் கானமுடிந்தது. காவல்மறவர்களின் வேல்கம்புச் சலங்கைகளின் குலுக்கமும் படைக்குரலும் மரங்களுக்குள் சென்று எதிரொலித்து முன்னும் பின்னுமாக இடம் மாறிக் கேட்டன. வண்டிக்கு முன் சிறிய மேட்டுக்கு மேல் வானம் ஒளியாக இருப்பது தெரிந்தது. அப்பால் பெரிய அருவி ஒன்றின் ஒலி. வண்டி குடம் கூச்சலிட முனகி மேலேறியதும் தரைதொடக்குனிந்து கிளைபரப்பிய புன்னை மரங்களின் இடைவெளிக்கு அப்பால் வானம் மண்ணில் விழுந்து ஒளிவிடுவது போல் வீரணன் வலியகுளம் தெரிந்தது.

கற்களில் பட்டை முட்டி குடம் ஒலிக்க வண்டி நிலைதடுமாறி மேலேறியது. ஓட்டம் சீர்ப்பட்டதும் அனும ரெட்டி கூண்டில் பிடித்திருந்த பிடியைவிட்டு எட்டிப்பார்த்தான். ஏரிகரை வளைவு திரும்பியபோது வலப்பக்கம் பட்டுநொறி என அலைகள் பரவிய நீர்வெளி கண்களை நிறைத்து பரந்து மறு எல்லையில் நீலப்பச்சைஅடர்ந்த மலைகளை சென்றடைந்ததைக் கண்டான். நீருக்குள் விழுந்துகிடந்த தலைகீழ் மலைகளுடன் இணைந்து அவற்றை கோணலான சதுரவடிவங்களாக எண்ணிக்கொள்ள முடிந்தது. கீழ் வானத்தில் சூரியன் நன்றாக எழுந்திருந்தமையால் ஏரி நீரில் இருந்து ஒளி எழுந்து கண்களைக் கலங்கச்செய்தது. கரையோரமாக விரிந்த தாமரை இலைவட்டங்கள் மீது நீர்மணிகள் காற்றில் அலுங்கி அலுங்கி ஒளிவிட, நடுவே நீலமும் சிவப்புமாக பெரிய மலர்கள் பொதியவிழ்ந்து, புல்லரித்த குளிர்த்தண்டுகள் மீது எழுந்து நின்று , எதிர்காற்றில் சிட்டுக்குருவிகளின் சிறகுகள் கலைவதுபோல இதழடுக்கு பிரிந்தன. நினைத்துக் கொண்டு வீசிய காற்றில் தாமரை இலைகள் மடிந்து ஒருபக்கம் சரிய , நீர்மணிகள் உருண்டு செல்ல, இலைப்பரப்பின் நிறம் வெளுத்து பின் மீண்டது.

குளத்துக்கு அப்பால் மறுகால் மதகிலிருந்து பீரிட்ட தண்ணீர் அருவியொலியுடன் இறங்கி ஓடையில் சுழித்து கொப்பளித்துச் சென்றது. நுரைதேங்கிய வளரிப்புல்களுக்குள் பெரிய பச்சைத்தவளை ஒன்று விழித்த கண்களும் உப்பிய தாடையுமாக மஞ்சள்மணிபதித்த பச்சை நிறக்கால்சந்து பிதுங்க அமர்ந்திருக்கக் கண்டான். ஏரிக்கரை தாண்டி ஓடைக்கரையோரமாகவே சென்ற சருகுகள் மண்டிக்கிடந்த வண்டிச்சாலையின் இடப்பக்கம் வெண்தேமல் வட்டங்கள் கொண்ட உருண்ட தூண்மர அயினிகளும் மஞ்சள் நிற நெடுக்குச்செதில்கள் பரவிய மஞ்சண மரங்களும் பட்டையில் புரிவிழ கிளைமுறுகிய காட்டுவாகைகளும் பூமுள் பரந்த குறுங்காய்க் கொத்துகள் தொங்கிய கிளைகளுள்ள பலாக்களும் சின்னமை கண்ட சருமம் போல் முள்ளடர்ந்த முருக்குமரங்களும் முதலைச்செதிலடர்ந்த கரிந்தகரைகளும் கிளைகள் கோர்த்து தழை பின்னி நெரிந்து நிழல்விரித்து நின்றன. வெளிர்பச்சைநிறமான கெட்டி இலைகளுடன் கிளைகளில் சிலந்திபோன்ற வேர்விரல் பொத்திப்பற்றி அடர்ந்த இத்திள் கொடிகளும் அடிமரம் சுற்றிப்படர்ந்தெழுந்த ஏழிலைவள்ளிகளும் தழுவி இறுக்கி பெரும்புதர்குவைகளாக எழுந்த மரங்களுக்குள் இருந்து வண்டியொலியில் அரண்ட சிவந்த மணிகண்களும் காக்கைச்சிறகுகளும் கொண்ட உக்கிலுகளும் தலையில் மஞ்ச்ள்புள்ளி கொண்ட மைனாக்களும் எழுந்து இடம் மாறிப் பறந்தன.

அணில்களின் சிலைப்பொலி சீரான உலோகக் கிலுக்கம் போல் ஒலிக்க மரங்கொத்திகளின் டப் டப் டப் தாளங்களும் காகங்களின் கூவல்களும் கலந்த ஓசை உள்ளிருந்து எழுந்துகொண்டிருந்தது. சிறியபூக்கள் அடர்ந்த வட்டகொத்துள்ள மூக்குற்றிப் பூச்செடிப்புதர்கள் தண்டுகளிலும் இலைகளிலும் பூனைமுட்களுடன் அடர்ந்து தரை தெரியாமல் காட்டை நிறைத்திருக்க அதனூடாக உருண்ட மணிக்காய்க் கொத்துக்கள் ஏந்திய காரைச்செடிகளும் சிவந்த உருளைப்பழங்கள் கொண்ட தவிட்டைச்செடிகளும் இலைகளை குவித்து நீட்டிய கருநொச்சியும் படர்ந்து ஒற்றைப்பசும்குவியலாக இருந்தது காடு.

[மேலும்]