«

»


Print this Post

ஊர்புகுதல் 1


ஒன்று

முனிஞ்சிப்பட்டி- மூலைக்கரைப்பட்டி வகையறா அனும ரெட்டியும் நரசிம்மலு ரெட்டியும் ஆனிமாத வியாபாரத்துக்கு பட்டும் கடைச்சரக்கும் ஏற்றிய இரட்டைக்காளை வண்டியுடன் ஆரைவாய்மொழிச் சுரம் தாண்டி கோட்டைமுகத்துக்கு வந்துசேர்ந்தபோது பொழுது விடிந்து மண்தரையில் பாதச்சுவடு தெரிய ஆரம்பித்திருந்தது. வண்டியைச்சூழ்ந்து திருநெல்வேலி கோட்டைப்பாளையம் முகப்பில் கூலிக்குப் பிடித்து உப்பில் தொட்டு ஆணைவாங்கி சேர்த்துக்கொண்ட களக்காட்டுக் கொண்டையங்கோட்டை குலமறவர்கள் எட்டுபேர் காவலுக்கு வந்தனர். அவர்கள் வலக்கையில் வைத்திருந்த வேங்கைமரம் செதுக்கி இரும்புநுனிவைத்து சலங்கைமணிக்கொத்து கட்டிய தலை உயர வேல்கம்பை தண்டயமிட்ட கரிய கால்களை புழுதிமீது அழுந்தவைக்கும்போதெல்லாம் சலான் சலான் என்றுகுலுங்க ஊன்றி எடுத்து, கங்கணமிட்ட இடக்கையைவீசி, அடித்தொண்டையில் உறுமல் ஒலியெழுப்பி சீராக நடந்தனர். வண்டிக்காளைகள் தாசிச்சலங்கைபோல கழுத்தில் கட்டிய கொத்துமணியும் சரமும் சங்கிலியும் குலுங்கி அசைய கொம்புமீது பொருத்திய குஞ்சலச் சிலம்பு ஒலிக்க தலையசைத்து, அசைபோட்ட வாயிலிருந்து கோழைச் சரடு நீண்டு ஆட, செம்புழுதித் தரைமீது குளம்புமுத்திரை விழ வழிநடந்தன.

வண்டிப்பட்டையின் தடங்கள் பதிந்து பதிந்து நீண்ட செம்பாதையில் மேலும் பல வண்டிகள் சென்றுகொண்டிருந்தன. கனத்த காங்கயம் காளைகள் தலை தாழ்த்தி பெருமூச்சுவிட்டு முட்டித் தசைதெறிக்க இழுக்கையில் கடையாணி கிரீச்சிட்டு அழுந்தி நகரும் பெரிய பாண்டிப்பொதிவண்டிகள்தான் அதிகம். கோட்டாற்றுக் கம்போளத்திற்குச் செல்லும் நெல்லும் சோளமும் வத்தலும் மல்லியும் புகையிலையும் துணிகளும். வடசேரி, கனகமூலம் சந்தைக்குச் செல்லும் காய்கறிகளும் கிழங்குகளும். ஒருசில கூண்டுவண்டிகளில் பின்னால் விரித்த திரைகள் காற்றில் அலுங்கும்போது பாண்டிநாயக்கர்களின் நாமம் போட்டு தலைப்பாகை கட்டிய கறுத்த முகங்கள் செட்டிகளின் விபூதியிட்ட கொழுத்த முகங்கள் ஐயம் நிறைந்த கண்களுடன் தெரிந்து மறைந்தன.

வெள்ளிமுளைத்ததுமே பணகுடிச் சாவடியிலிருந்து கிளம்பி நெல்லையப்பர்-காந்திமதி பிரகாரத்து கல்தூண்கள் போல ஓங்கிய கருங்கால்வேங்கைகள் இருபுறமும் செறிந்த காட்டுவழியே பாட்டும் மணியொலியுமாக சென்ற வண்டிச்சாரையின் நடுவே இடம்பிடித்தனர். காத்தவராயனைப்போல நரம்பும் தசையும் புடைத்த ஆயிரம் பெருங்கரங்களால் மண்ணைஅள்ளிப்பற்றி இலைத்தழைப்பை கூரை விரிவாக்கி உயிருள்ள பெருமண்டபம்போல் நின்ற தாய் ஆலமரத்தின் அடியில் கருங்ககல்பீடம்மீது நட்ட நீட்டக்கல்வடிவில் நின்ற முப்பந்தல் இசக்கியை காணிக்கையிட்டுத் தொழுது முன்சென்றனர்.ஆலமரத்தின் இருளுக்குள் சருகுக்குவியலுக்குள் நின்ற அம்மையின் சார்த்துக்கண்களின் வெள்ளிப் பார்வையின் நுனி நீண்டதூரம் தொடர்ந்து வந்தது. அம்மை காவலிருக்க வழிப்பூதங்கள விலகும், வாதைகள் அஞ்சி ஓடும், ஒடியனும் குளியனும், கூளியும் குழகனும் மலைவிட்டிறங்கமாட்டார்கள். நெடும்பயணம் நேரும் நகரத்தாருக்கு முப்பந்தலம்மையே முதல்காப்பாவாள்.

பணகுடி வண்டிச்சலையின் இடப்பக்கம் பச்சைக்கம்பிளிப் பரப்பாக எழுந்தெழுந்து சென்று குன்றுப்பாறைகளை வளைத்து மேலே போய் ஓங்கிய பெரும்பாறைகளின் காலடியில் சென்று முடியும் காடுகள் நிறைந்த மகேந்திரகிரி மலையின் வீண் தொடும் சிகரம் மீது எல்லா காலத்திலும் மழைமேகமிருக்குமென்பது சொல்வழி வழங்கும் வழிநிதானம். ஆனால் மகேந்திரகிரிக்கு கிழக்கே மழைகுறைவு, காட்டிலும் நீரில்ல்லாது வாழும் கருமருதும் முள்மருதும் சுண்டப்பனையும் ஈந்தப்பனையும் பிளாசும் வெல்வேலமும்தான் அடர்ந்திருக்கும். மகேந்திரகிரியின் குட்டிகள் போல வரிவரியாக இறங்கி அமைந்த பாறைசூடிய செங்குத்தான மலைகள் வண்டி நெருங்க நெருங்க பெரிதாகி கண்களை நிறைத்தபடியே வருகையில் முஷ்டி மீது எழுந்த சுட்டுவிரல்போல ஆரைவாய்மொழி குன்றுநுனி வானைச் சுட்டியபடி தெரியும். மலை மடம்புகளில் குற்றிக்காடுகள் அருவிபோல் தொங்கி நிற்க வெயில்பட்டு வளைவுகள் மின்னும் கரும்பாறை விரிசல் வழியாக எருமைச்சருமம் மீது உண்ணிகள் போல் வரையாடுகள் செல்லக் காணலாம்.

பின்னர் கோபுரநுனிபோல கூம்பி எழுந்து வானம்தொடும்படி எழுந்த மலைப்பாறை தெரிகையில் ஆரைவாய்மொழிச்சுரம் வருகிறதென்று அறிந்து ”ஆதிகேசவா! அனந்தபத்மநாபா! நாகரம்மோ!” என்று வணிகர் குரலெழுப்புவார்கள். பொட்டல்காய்ந்து வீசும் இரும்புமணம்கொண்ட காற்றுவிலகி நீராவிகலந்த குளிர்காற்று எதிரே இருந்து வீசி கழுத்துவியர்வை ஆற்றி, காதுமடல்களையும் மூக்குநுனியையும் குளிரச்செய்யும். அது எட்டுமலைகளை கட்டியாளும் அனந்தபத்மநாபனின் மூச்சு என்பார்கள் பாண்டிவணிகர். அந்த மூச்சுககற்றில் நோயெல்லாம் விலகும், பீடைகள் அழியுமென்று நம்பிக்கை

திருநெல்வேலிப் பாளையம் அங்காடியில் கொள்முதல்செய்து வண்டிகட்டி பணகுடிக்கு வந்துசேரும்போது கைரேகைமறையும் கருக்கல் ஆகிவிடுமென்பது கணக்கு. சாவடிக்கு அஞ்சுசல்லிச் நரசிம்மன்ம் சுங்கம் கொடுத்து ராமலிங்கசாமி கோயில் மண்டபத்தைச் சுற்றிய பெரிய முற்றக்களத்தில் வண்டியை அவிழ்த்துப்போட்டு மறவர்களைக் காவல் நிறுத்திவிட்டு முண்டாசை அவிழ்த்து உதறி கோயில் குளத்தில் இறங்கி நீராடினார்கள். ஏற்கனவே அங்கே ஐம்பது அறுபது வண்டிகள் காளை அவிழ்த்து நுகம்சரித்து நின்றன. வணிகர்கள் குளத்தில் குளித்தும் மரத்தடிகளில் பாய்விரித்துப் படுத்தும் பேசிக்கொண்டும் தூங்கிக் கொண்டும் இருந்தார்கள். கோயிலைச்சுற்றி மூன்று பக்கமும் அக்ரஹாரம், முதலித்தெரு பிள்ளைமார்தெரு. எல்லாமே பணகுடிப்பனையோலை வேய்ந்த மண்திண்ணைகொண்ட வீடுகள். நடுவே ராயசம் நயினார் முத்து கணேச முதலியின் கொட்டாரம் மட்டும் நாஞ்சில்நாட்டு தென்னைஓலை வேய்ந்த உயரமான கூரையும் கல்லடுக்கிக் கட்டிய சுவரும் கருங்கல் தீட்டிப்பரப்பிய பெருந்திண்ணையும் தேக்குகடைந்து லட்சுமி வைத்த கோட்டைக்கதவும் கொண்ட மாளிகை. பணகுடிச் சந்தைக் கரமும் வழிச்சுங்கமும் முதலியின் உரிமை.

முத்து கணேச முதலி திருக்கணங்குடியில் தண்டு இறக்கிய நிருபதி நாயக்கரின் குதிரைப்பட்டாளத்துக்கு நேரடியாகவே கரமளக்கவேண்டும் என்பது தலக்குளத்து தம்புரான் ராமவர்மா மகாராஜாவின் நீட்டுத்தரவு. ராயர் பட்டாளம் நூற்றுவர் கோணப்ப நாயக்கன் தலைமையில் பணகுடி புறம்பொட்டலில் தண்டிறக்கியிருந்தார்கள். வடுகப்பட்டாளத்தை வழிப்போக்கர் எப்போதும் அஞ்சவேண்டும் எந்பது வியாபாரத்தின் முதல் பாடம். வழிமறித்து சரக்குகளை கொள்ளையிட்டாலோ ஈட்டியால் தலையிலடித்து புளிமரத்த்தில் கட்டிவைத்து மடிசீலைப்பணத்தை பிடுங்கிக் கொண்டாலோ கேட்பாரில்லை. ஊர் எல்லையில் கோயில்கொண்ட உக்கிரமான பிடாரி போன்றது வடுகப்பட்டாளம். அன்றாடம் பலிகொடுத்து குளிர்வித்து நிறுத்தினால் தொல்லையில்லை. இல்லாவிட்டால் ஈட்டி ஏந்தி குதிரைக் குளம்புகள் மலைப்பாறைக்கூட்டம் உருண்டு தலைமீது விழுவதுபோல ஓலிக்க எக்காளமிட்டபடி ஊருக்குள் புகுந்துவிடுவார்கள். முதலிக்குக் கொடுக்கும் ஒவ்வொரு நாணயமும் தலைக்குப் பாதுகாப்பு என்று வணிகர் அறிவார்கள்.

பெரிய பொதிவண்டிப்பட்டாளங்கள் ஊருக்குள் வரமாட்டார்கள். பொட்டலிலேயே வண்டிகளை கோட்டைபோல வட்டமாக நிறுத்தி வண்டிக்கடியில் வணிகர்கள் தூங்க, வண்டிகளைச் சுற்றி காளைகளைக் கட்டி காளைகளைச் சுற்றி காவல்மறவர் நெருப்பிட்டு சுற்றி அமர்ந்து கண்தூங்காது காவலிருப்பார்கள். இரவு கவிந்தபின்னர் அவர்களை நெருங்கும் யாரையும் என்னவென்று கேட்காமலேயே நீட்டுத்தூரத்திலேயே வேலெறிந்துகொல்வார்கள். ஆனால் வழிப்போக்கு வண்டிகளுக்கும் வழிக்கரம் உண்டு. சந்தையடிமுக்கிலும் மேற்கு மலை ஒடுக்கிலும் ராயர் படைவீரன் குந்தமேந்தி நின்று கணக்கு வைத்து சுங்கம் கொள்வான். ஒற்றைவண்டிகள்தான் ஊருக்குள் வரும். அதிகமும் வளைச்செட்டிகள், எண்ணைச்செட்டிகள், பட்டுச்செட்டிகள். ஓரிரு பாண்டி வியாபாரிகள். அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வரும் அழுக்குப் பூணூலும் காய்ந்த பின்குடுமியும் கொண்ட பஞ்சத்தில் நொந்த பாண்டி அய்யன்கள். கோயில்முற்றத்தில் கீழ்ச்சாதியினருக்கு பிரவேசனமில்லாததனால் கருப்பட்டி விற்கும் நட்டாத்தி நாடார்கள் ஊருக்குவெளியே சவுக்குத்தோப்பில் வண்டி அவிழ்த்து கூடித்தங்கி அடுப்பு கூட்டி கஞ்சி காய்ச்சும் வெளிச்சமும் பேச்சுக்குரலும் இரவு முதல்சாமம் முடிய கேட்டுக்கொண்டிருக்கும்.

ராமலிங்கசாமிகோயில் மடத்து மண்டபத்தில் குளத்தய்யன் தொந்தி சரிய பின்குடுமி அவிழ்ந்து தோளில் கிடக்க அமர்ந்து கல்தரையில் பனம்பாயை விரித்து அதன் மீது கட்டிச்சோற்றுமலையை குவித்து வைத்து வேப்பம்தழையை குச்சியில் கட்டி வீசி வீசி ஈ ஓட்டிக்கொண்டிருப்பான். அவனருகே நுனிக்குடுமி வைத்த சோழியப்பையன் ஒருவன் ” பட்டே ! பட்டே ! சாமிப்பிரசாதமாக்கும்… அய்யா வாருங்கோ…சூடு பட்டே….. நல்ல தேங்காச்சம்மந்தி உண்டும்…. வாருங்கோ வாருங்கோ… தீந்துபோயிரும் வாருங்கோ… ” என்று கீச்சுக்குரலில் கூவிக்கொண்டிருப்பான். நீராடிவந்து ஈரவேட்டியை காற்றில் பறக்கும்படி மரக்கிளைகளில் கட்டியபின் நறுக்கிவைத்த காய்ந்த கமுகுப்பாளையில் பச்சரிசிக் கட்டிச்சோற்றையும் பச்சைமிளகாய் இஞ்சி மாங்காய் உப்பு சேர்த்து தேங்காய் நசுக்கிச் செய்த துவையலையும் வாங்கி மண்டபத்தில் அமர்ந்து பிசைந்து சாப்பிட்டுவிட்டு குளத்தில் இறங்கி கைகழுவி தண்ணீர் குடித்தபின் வண்டியில் இருந்து பனம்பாயை எடுத்து மண்டபத்தில் விரித்து நீட்டிப்படுத்துக் கொள்ளவேண்டியதுதான். மறவர்கள் காவலுக்கு செல்லும் போது வெளியே அன்னம் கொள்வதும் தலைசாய்த்துத் தூங்குவதுமில்லை. அவர்கள் ஊரிலிருந்தே பனையோலை தூக்குப்பெட்டியில் தோளிலிட்டுக் கொண்டுவந்த ஈசல் சேர்த்துவறுத்த சோளமாவைத்தின்று தண்ணீர்குடித்தபின் வண்டியைச்சுற்றி வேல்கம்பை மண்ணில் குத்திவைத்து குந்தி கூடியமர்ந்து கொள்வார்கள். ஒருவன் வண்டிமலைச்சாமிப்பாடலையோ சங்கிலிக்கறுப்பு பாடலையோ மெல்ல பாடும்போது பிறர் வானத்து நரைவெளிச்சம் கண்களில் மின்ன குண்டலமிட்ட வடிகாதுகள் ஆட தலையாட்டியும் பெருமூச்சுவிட்டும் இரவெல்லாம் கேட்டிருப்பார்கள்.

பணகுடிக்காற்றில் எப்போதும் வெந்தமண்ணின் வாசனை இருக்கும். தொலைவானம் வரை விரிந்து பரந்து நாளெல்லாம் கொடும் வெயிலில் வெந்து வெந்து வெடித்து கிடக்கும் கறுத்த மண்ணின் வாசனை. பகல் முழுக்க அடுப்புவெக்கை போல காற்றில் தீ இருக்குமென்றாலும் இரவு அணைந்து இரண்டாம் நாழிகையிலேயே நல்ல உப்புகலந்த குளிர்காற்று வர ஆரம்பிக்கும். கிழக்கே உவரிக்கடலிலிருந்து பொட்டலும் மலையும் தாண்டிவரும் காற்று அது என்பது ஊர்ச் சொலவடை. முதலில் தலைமயிர் சிலுசிலுக்க காது குளிர வீசி மெல்லமெல்ல வலுத்து கருவேலமரங்கள் பெண்பேய்கள் போல கூந்தல் சுழல ஊளையிடும் படி வீச ஆரம்பிக்கும். புழுதி கிளம்பி படுத்திருப்பவர்கள் மீது கொட்டுவதனால் உடுதுணியை அப்படியே உரிந்து மேலேற்றி தலைவழியாக மூடிக் கொள்ளவேண்டும். விடியற்காலையில் நன்றாகக் குளிரும். முதல்கோழி கேட்டு எழுந்து வேட்டியை உதறும்போது மண்ணாகக் கொட்டும்.

சிவகாமியம்மை உடனுறை ராமலிங்கசாமிகோயிலில் உதயசாந்திக்கு மணி ஒலிப்பதற்குள் வண்டிகட்டிவந்த கோட்டைச்செட்டிகள் எழுந்து குளித்து ஈரக்குடுமியை தோளில் அவிழ்த்துப்போட்டு நெற்றிநிறைய நீறிட்டு ‘ நலச்சிவாய நமச்சிவாய ‘ என்று முணுமுணுத்து குளிருக்கு நடுங்கியபடி தொந்திமீது கைகூப்பி கோயிலுக்குச் செல்வார்கள். ரெட்டிகள் கோயிலுக்குள் நேராக நுழைவதில்லை. திருமண் நாமமிட்டு வருபவரை மாக்காளை வழிமறிக்கும் பூதகணங்கள் பிடித்து வைக்கும் என்று நம்பிக்கை. தீர்த்தத்தில் குளித்து சரியைகள் முடித்து நெற்றிநிறைத்து நடுத்தலைதொட திருமண் நாமம் இட்டு கோபுரவாயில் நுழைந்து மாக்காளை காணாமல் கொடிமர நிழல் படாமல் வலம்வந்து நவக்கிரகங்களையும் நாகப்பதிட்டையையும் கும்பிட்டு சுற்றிவந்து ஸ்ரீநம்பி சிங்கராயப் பெருமாள் சன்னிதிக்குச் சென்று வணங்கி துளசியும் நீரும்கொண்டு வெளியே வருவார்கள் ரெட்டிகள். புட்டமுதும் உண்ணியப்பமும் உண்டபின் சரிகைவைத்த தலைப்பாகை சுற்றிக்கட்டி இடையில் கச்சுப்பாவுமுண்டு உடுத்து கச்சை முறுக்கிக் கட்டி மேலே பட்டுவிளிம்புவைத்த சட்டை அணிந்து பாம்புத்தோல் போல மின்னும் உத்தரீயத்தை கழுத்தில் சுற்றி வா¡னமாமமலை நின்ற நெடுமாலை நெஞ்சிருத்தி வணங்கி வழிப்பிள்ளையாருக்கும் காப்புத்தேங்காய் அடித்து கிழக்குநோக்கி கும்பிட்டு கௌளி சகுனமும் புள்வலமும் பார்த்து கிளம்பி கம்போளநெடும்பாதைக்கு வரும்போதே கிழக்கில் ரேகைகீறியிப்பதைக் காணலாம். அதன் பின் காளைகள் காலெடுத்து நடந்தால் இரண்டுநாழிகையில் ஆரைவாய்மொழி.

ஆரைவாய்மொழிக் கோட்டை இருமலைகளையும் இணைத்து வெட்டுகல்லால் ஆன அடிக்கட்டு மீது குழைத்த களிமண் உருட்டிவத்துக் கட்டி அதன்மேலே பனை ஓலைகள் அடுக்கி கூரையிடபப்ட்டது. நடுவே மேலே பனைமரத்தூண்கள் மேல் பனையோலைகூரையிட்ட மச்சுமுறிகளில் குந்தமேந்திய மறவக் காவலர்கள் தங்கி கீழே வரும் வண்டிகளை நோக்கி மீசைகோதி கண்ணுருட்டினர். கோட்டை வாசல் கடாத்தண்டில் பெரிய மரத்தடிகள் இழுத்து வைக்கப்பட்டு இரவு மூடப்பட்டு காலையில் வெளிச்சம் வந்தபின்னர்தான் திறக்கும். சுங்கத்தில் வண்டிகள் மலைவெள்ளத்தில் வந்த மரங்கள் மணல்வளைவில் தங்குவதுபோல தங்கி குடத்தோடு குடமும் நுகத்தோடு கூண்டும் உரச நின்றன. அனும ரெட்டி வண்டியைவிட்டு இறங்கி தலைப்பாகை திருத்தி தோல்தைத்த செருப்பு மண்ணில் ஒலிக்க நடந்து கோட்டைமுகப்பில் ஈட்டிக் குந்தம் ஏந்தி நின்ற காவல்காரனை அணுகி தன் குலமும் ஊரும் தொழிலும் சொன்னார். அவன் தாண்டிச் செல்வதைக் கண்டு நின்ற பிற வணிகர்கள் அவனுடைய இளமைத்தோற்றத்தையும் பட்டுச் சால்வையையும் குண்டலங்களையும் சரிகைக் கச்சையையும் கூர்ந்து கவனித்து தங்களுக்குள் கண்பரிமாறிக் கொண்டார்கள்.

குந்தக்காரன் அனும ரெட்டியை வணங்கி சாவடிக்குள் அழைத்துச்சென்றான். கல்லடுக்கிக் கட்டி வெள்ளைபூசிய சாவடி மண்டபத்தில் கல்தரையில் மெத்தைத்தாழைப்பாய் விரித்து சாய்மானத்திண்டும் வெற்றிலைக் கோளாம்பியும் இருபக்கமும் இருக்க, கேட்டெழுத்துப்பிள்ளை ஓலையும் எழுத்தாணியுமாக முன்னால் குனிந்து அமர்ந்திருக்க சுங்க காரியக்கார் மாடன்தர்மம் சுடலைப்பிள்ளை சப்பணமிட்டு அமர்ந்திருந்தார். தலையில் மஞ்சள் நிறதலைப்பாகைகட்டி தோளில் புளியிலைச்சுட்டி வடசேரி சால்வையை போர்த்தி காதுகளில் பொற்குண்டலங்களும் கழுத்தில் இருமுறைவடமும் அணிந்து வெற்றிலையால் சிவந்து சற்று தொங்கிய தடித்த உதடுகளும் மீசை இல்லாத மேலுதடுகளுக்கு மேல் புடைத்த பெரிய மூக்கும் உந்திய கண்களில் பிடிகொடுக்காத பார்வையுமாக சுடலைப்பிள்ளை அவனை வரவேற்றார்.

”வரணும் வரணும்…. இரியுங்க ரெட்டியாரே… லே… தாளி, தடுக்கெடுத்துப்போடுல ரெட்டியாருக்கு… என்னல முழிக்கே… ஏ? ” உதடுகள் சிரித்தாலும் கண்களில் நட்பு இல்லை. அருகே நின்ற சேவகன் தடுக்கு எடுத்து போடவுமில்லை.

அனும ரெட்டி செருப்புகளைக் கழற்றி உள்ளே நுழைந்து பணிவாக வணங்கி, ” பின்னெ என்ன உண்டு விசேஷங்கள்….? பிள்ளைவாள் கொஞ்சம் ஷீணிச்சு போச்சே” என்றான்.

”ஷீணமில்லாம இருக்குமா ரெட்டியாரே? எல்லாம் கள்ளப்பயக்கள்லா? என்னமாம் ஏணைக்கு கோணையா நடந்தாக்க என்னையில்லா தம்புராக்கன்மாரு பிடிச்சு கழுவில இருத்துவா? நம்ம ஆசனத்துவாரத்த நாமள்லா காரியமாட்டு பாத்துக்கிடணும் ? என்ன? லே சுப்பா , தாளி என்னல பாக்கே? ஓடிச்செண்ணு ரெட்டியாருக்கு ஒரு கருக்கு வெட்டிக் கொண்டுவால…”

அனும ரெட்டி ”கருக்கு இருக்கட்டும்… இப்பம்தாலா நல்ல தண்ணி குடிச்சேன்…” என்றான்.

”ஹெஹெஹே…அது காரியமாக்கும். நாஞ்சிநாட்டுக்குள்ள நுழைஞ்சாச்சுண்ணு சொன்னா ஒருத்தன் வெள்ளம் குடிக்காம சாவமாட்டான். அது உறப்பாக்கும்….. நல்லா குடிச்சேரா? பாண்டி நாட்டில மானத்தில வெள்ளமில்ல. மண்ணில வெள்ளாமையுமில்ல…அதெப்டி, இருக்கவன் இருந்தா செரைக்கவன் செரைப்பான். ஓய், வடுகனுக்க கொட்டைக்கு தாங்கு குடுக்குததுதாலா இப்பம் உம்ம பாண்டிநாட்டுல நடக்குது? பாண்டியனுக்க அம்மை மீனாச்சிய இப்ப வடுகன்லா வே பெண்டாளுகான்? எப்டிவே மழ பெய்யும்? இல்ல, எப்டி பெய்யும்ங்கியேன்…சொல்லும்வே… ஏ?”

சுடலைப்பிள்ளை சுற்றுமுற்றும் பார்த்து குரலைத் தாழ்த்தி ”இங்கயும் கத அதுதான்னு வையும். அம்மைக்கு நாயரிலேண்ணு ஆற்றில் போறவன பிடிச்சு வீட்டில் ஏற்றினது மாதிரி இங்க உள்ள எட்டுக்கூட்டம் பிள்ளைமார ஒடுக்கணுமிண்ணு திருச்சிக்குப்போயி வடுகன்மாரை கூட்டிவந்து நிக்கவச்சிருக்காவ….நமக்கு ஒண்ணும் இல்ல…. தலைக்கு மேல உள்ள காரியம். இருந்தா ஓலக்கூர இல்லாட்டி வானக்கூர. என்ன சொல்லுகியோ?”

அனும ரெட்டி அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. பேச்சை மாற்றுவதை ஒரு குடும்பகலையாக பயின்றவன் அவன். உதடுகள் கோணலாக இழுபட கள்ளத்துடன் மெல்லச் சிரித்து ” ஒண்ணுமில்ல, நம்ம நெனைப்பு வேறல்லா ஓடுது….” என்றான்

”என்னவே நெனைப்பு? எளவட்டம் நீரு….” என்றார் சுடலைப்பிள்ளை.

”இல்ல, எளநீருண்ணு பிள்ளைவாள் சொன்னப்ப எனக்கு சுசீந்திரம் பங்கியம்மையோட நினைப்பு வந்தது….” என்று வெற்றிலைக் காவி படிந்த பெரிய பற்களைக் காட்டி சிரித்தான்.

”ஓஹோ! அது செரி….அப்டி வரட்டு…. ஓய் நாஞ்சி நாட்டுக்கு உள்ள இன்னும் கால வைக்கல்லியே ஓய்..அதுக்குள்ள கோமணத்த அவுத்துப்போட்டேரே… ஓஹோஹோ…” சுடலைப்பிள்ளை தொடையில் அடித்து சிரித்தார்.

”அதென்ன பிள்ளைவாள் அப்டிச் சொல்லிப்போட்டிய? அவ வேற நாஞ்சிநாடு வேறயா? அவ நம்ம ஆருவாமொழி கோட்டவாசல் போலல்லா?” என்றான் அனும ரெட்டி.

‘ஊஹ்ஹ்!” என்று’ சுடலைப்பிள்ளை சிரித்து அப்படியே விக்கி கண்கள் செருகி தண்ணிருக்கு கை காட்டினார். சேவகன் தண்ணீர் செம்பை எடுத்து நீட்ட அதை வாங்கி மடியில் சிந்தியபடி மடக்குமடக்காக குடித்தார். முகவாயைத் துடைத்தபடி ”ய்யம்மா…. நாகரம்மா பகவதீ…ஸாமீ ” என்று ஆசுவாசப்படுத்தியபடி ”வே கொண்ணு போடப்பாத்தேரே…ஏ” என்றார்.

அனும ரெட்டிமெல்ல குரலைத்தணித்து, ” பிள்ளைவாள் சங்கதி ஒரு வேபாரம். இரணிய சிங்கநல்லூரில திருசேநிக்கல் மதிலகத்துக்கு. முடியுமானா வேற ஒண்ணுரெண்டு நாயர் தறவாடுகளுக்கும் போகணும்…. பட்டும்வளையும் எல்லாம் உண்டு” என்றான்.

சுடலைப்பிள்ளையும் தலையை தாழ்த்தி குரலை மென்மையாக்கி ”என்னவாக்கும் விசேஷங்கள்?” என்றார்.

”ஆளுவந்து சொல்லி கெளம்பினதாக்கும். என்ன விசேஷம்ணு தெரியல்ல. எல்லாம் பட்டும்கச்சயுமா இருக்குததை பாத்தா தாலிகெட்டு அடியந்தரமா இருக்குமோண்ணு ஒரு சந்தேகம்…” என்றான் அனும ரெட்டி

சுடலைப்பிள்ளை கண்களை இடுக்கியபடி ”அப்பம், அதாக்கும் காரியம். எரணியல் திருசேநிக்கல் வீட்டில கெட்டுகல்யாணம். திருசேநிக்கல் வலிய தம்பிக்கு ஏழெட்டு அனந்தரவத்திய கெடக்காஹள்ணுட்டு ஒரு பேச்சு உண்டு. சேத்து நடத்தணும்ணு நினைக்காரு போல… நல்ல காரியம்தான். அப்பம் உமக்கு கோளுதானே? ”

அனும ரெட்டி ”என்ன கோளு? நாயம்மாரிட்ட பணம் கேட்டு வாங்க முடியுமா? வந்தா வரவு. வரலேண்ணா பெருமாள்கணக்கு…” என்றான்.

”வே வே மூலக்கரையான் மூலம் தோண்டிப்போடுவான்னு சொன்னகதை கணக்கால்ல இருக்கு. பாண்டியில பத்து நரசிம்மன்த்துக்கு வாங்கின முதலு ஆருவாமொழி சுரம் தாண்டினா முத்தும் ரெத்தினமுமா ஆயிருமே… சும்மாவா பாண்டிக்காரனுக வழியில கெடக்க தேவனையும் மறவனையும் பயராம வண்டிகெட்டிட்டு வாறானுக… ” குரல் மேலும் தாழ்ந்து ”…அப்பம் …சொல்லும்” என்றார்

”வளமையானத செய்துபோடலாம்ணுதான் அண்ணாச்சியவுஹ சொன்னாஹ…” என்றபடி அனும ரெட்டி கச்சையிலிருந்து மடிசீலையை அவிழ்த்து எடுத்தான்.

”அது போட்டு ரெட்டியாரே… வளமையை பாத்தா வாழமுடியுமா? நான் ஒண்ணுரெண்டுல்லா ஒம்பதுபேருக்கு படியறவு வைக்கணும்…..இப்பம் இங்க ராஜ்ஜியம் ஒண்ணுண்னாலும் ராஜாவு ரெண்டாக்கும். ஒழக்குக்குள்ள கெழக்கும் மேக்கும்ங்கிற கத. அணஞ்சில மாதிரி இம்பிடு மண்ணு , அதாக்கும் திருவாங்கூர். இதில ஒரு ராஜா, அவனுக்க ரெண்டு பங்காளி. அவனுகளுக்கு பிந்துணையும் முந்துணையுமாட்டு அம்பதறுபது பிரமாணி நாயம்மாரும் மூத்தபிள்ளமாரும். பின்ன, கோமணத்த உருவிக்கொண்டாடே தலைப்பா கட்டுகேன்னு நிக்குத வடுகப்பட்டாளம். என்ன செய்யுகதுண்ணு சொல்லுங்க… தம்புரான் போறவழியை பாத்தாச்சுண்ணாக்கும் பேச்சு. எளைய ராஜாவுக்குண்ணா பிடிச்சு மோளத்தெரியாத்த பிராயம். பங்காளிகளுக்கு தும்பிக்கை மாதிரி ஆளுக்கொரு லிங்கம். அதுக்கு பூசைவைச்சு கும்பிடுகதுக்கே அவனுகளுக்கு நேரமில்ல. வெளங்குமா? வழியே போறவனெல்லாம் செரி சும்மா எதுக்குபோணும்ணுட்டு சுங்கத்தில பங்கு கேக்கான்வே. இவனுகளுக்கு குடுத்துக் கட்ட எனக்கு நாஞ்சிநாட்டில பொன்னுவெளையுத கண்டம் இல்லல்லா…” என்றார் சுடலைப்பிள்ளை.

அனும ரெட்டி ”இப்பம் இது இருக்கட்டு… கொஞ்சம் திருக்கண்பார்க்கணும். மேலப்பின்னே உள்ளத வழியே பாக்கலாம்” என்றபடி ஒரு சிறு மஞ்சள் சுருக்குப்பை கிழியை அவர் முன் வைத்தான்.

சுடலைப்பிள்ளையின் சிறிய கண்கள் அப்படியே சுருங்கி உள்ளே செல்பவை போலிருந்தன. தலை மேலும் தாழ்ந்ததில் அவர் கிட்டத்தட்ட தொந்திமேல் மடங்கினார்.” அதெப்டி… நீரு போற தூரம் கூடுதல். கள்ளியங்காடும் பஞ்சவன்காடும் வில்லுக்குறி வெலக்கும் தாண்டி போகணும்லா?” என்றார்.

இருவர் கண்களும் சந்தித்த போது அனும ரெட்டி ‘தாயோளி’ என்று மனதில் நினைத்தபடி முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு கெஞ்சலாகப் பார்த்தான். ‘ஊம்புலே லே’ என்று எண்ணியபடி சுடலைப்பிள்ளை பிரியமாக மெல்லிய புன்னகை பூத்தார். அனும ரெட்டி முகபாவனையை மாற்றாமலேயே கச்சைக்குள் கைவிட்டு இன்னொரு சிறு பொதியை எடுத்து முன்னால் போட்டான். சுடலைப்பிள்ளை அதைப் பார்த்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை.அப்படியே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அனும ரெட்டி பொதியையும் பிளையையும் இருமுறை பார்த்துவிட்டு பரிதாபத்தை இன்னும் கூட்டி ஒரு பெருமூச்சுவிட்டபின் மேலும் ஒரு சிறுபொதியை எடுத்துப் போட்டதும் இயல்பாக அப்பொதிகளை எடுத்து தன் பின்னால் இருந்த மரப்பெட்டிக்குள் போட்டபின் ”பின்ன…சொல்லுங்க ரெட்டியாரே…. என்ன சாப்பிடுதிக?” என்றார் சுடலைப்பிள்ளை.

”ஒண்ணும் வேண்டாம்…உச்சிவெயிலுக்குள்ள போயிச் சேந்தா உள்ள வேவாரத்த பாப்பேன்.” என்றபடி அனும ரெட்டி எழுந்தான்.

”அப்டி சொன்னா ஆச்சா? ஒரு வாய் வெள்ளமாவது நம்ம கையால குடிக்காம…லே, தாளி சுப்பா கருக்கு கொண்டாலே..லே” என்றார் சுடலைப்பிள்ளை, அவர் கண்கள் கேட்டெழுத்துப்பிள்ளையைப் பார்த்து மெல்ல அசைந்தன

அனும ரெட்டி கும்பிட்டபடி ” அப்ப நான் வாறேம் பிள்ளவாள்…”என்றான்.

”வாங்க… எப்பமும் தயவு இருக்கணும்…. ”என்று சுடலைப்பிள்ளை கும்பிட்டார். ”அம்மை பகவதி அருளிருக்கட்டும்.நமச்சிவாயம்”

கேட்டெழுத்துப் பிள்ளை தலையைச் சரித்து நாக்கை துருத்தியபடி எழுத்தாணியால் ஓலையில் நீட்டு எழுத ஆரம்பித்ததும் அனும ரெட்டி வெளியே வந்து நின்றான். வெளியே பாரவண்டிகளுடன் வந்த வணிகர்களை குந்தமேந்திய நாயர்களும் சுங்கக்காரர்களும் மறித்து கூவிப்பேசினர். பெரிய குடுமிவைத்த செட்டியார் பவ்யமாக காரியக்காரின் அறைக்குள் நுழைந்தார்.

ஓலை எழுதி முத்திரை இட்டு மஞ்சணம் ஒப்பி துடைத்து சுருட்டி எடுத்துக் கொண்டுவந்து பணிந்து வளைந்து அனும ரெட்டியின் கையில் கொடுத்தபின் கேட்டெழுத்துப் பிள்ளை அவரைக் கூர்ந்துபார்த்தான்.

”என்னவே?”என்றபடி அனும ரெட்டி ஒரு செம்புநாணயத்தை அவர் கையில் கொடுத்தார். கேட்டெழுத்துப் பிள்ளை மெல்ல உடல் வளைத்தாலும் கூர்ந்த நோக்கை தவிர்க்கவில்லை. ”வாக்கரிசி நெறையல்லையாக்கும்? உம்ம அம்மைக்க கூத்தியான் குடுத்து வச்சிருக்கான்லா இங்க?” என்றபடி இன்னொரு செம்பு நாணயத்தை அவர் கையில் வைத்தான்.

அவர் சட்டென்று குழைந்து சிரித்தபடி ” நாகரம்மன் தொணை இருப்பா. எல்லாம் நல்லபடியா வரும்… மகராஜனா போயிட்டுவாருங்கோ” என்றார்.

”ஆமா நீ சொல்லு. நீ நாகரம்மனுக்க அம்மைக்க ஆமக்கனாக்குமே? ” என அனும ரெட்டி திரும்பியபோது இரு காவலர்கள் கையில் குந்தத்தை சரித்தபடி பெரிய மீசைக்குக் கீழே இளிப்புடன் நிற்பதைக் கண்டான். ”எளவு, கோமணத்த துவைச்சவனெல்லாம் படியில குளிச்சவளுக்கு செலவுக்கு குடுங்கடாண்ணு சொல்லுற கதையால்ல இருக்கு. இப்டி வேவாரம் செய்தா மட்டையா வெளங்கும்? ” என்றபடி ஆளுக்கொரு செம்புநாணயத்தைக் கொடுத்தான். ”இனி இங்க உள்ள தூணுக்கும் மரத்துக்குமெல்லாம் நரசிம்மன்ம் குடுக்கணுமாடே? குந்தந்தூக்கியும் கோமரமுமா கெளம்பிட்டானுக…”

அனும ரெட்டி மீண்டும் வண்டியை அடைந்தபோது நரசிம்மலு ரெட்டி கீழே இறங்கி சாலையோரத்து கல்திண்டில் அமர்ந்து வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தார். அருகே ஓரிரு சிறுவணிகர்களும் ஊர்க்காரர்களும் கூடி பாண்டிவிவகாரங்களை கேட்டுக்கொண்டிருக்க அக்கறையே இல்லாமல் மறவர்கள் வேலை ஊன்றியபடி கால எளிதாக்கி நின்றிருந்தனர். கரிய முகங்களில் வெள்ளைவிழிகள் மட்டும் தெரிந்தன. அவர்கள் என்ன நி¨னைக்கிறார்கள் என்று அனும ரெட்டி வியந்துகொண்டார். அவர்களை மற்ற மனிதர்களைப்போல நினைக்கவே முடிவதில்லை. விசித்திரமான விலங்குகள் போல. ஆனால் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்படுகிறார்கள். ”அஞ்சறிவுள்ளதுகள்ணாத்தான் சத்தியத்துக்குக் கட்டுப்படும், ஆனையும் குருதையும்கட்டுப்படுதே. ஆறறிவுள்ளவனுகதான் ஒண்ணுக்கும் கட்டுப்படமாட்டானுக” என்று எண்ணிக் கொண்டான்.

நரசிம்மலு ரெட்டி அருகே நின்ற முன்குடுமி நாயரிடம் ஆர்வமாகப்பேசிக் கொண்டிருந்தார். நல்ல வெண்ணிற உடலும் மீசையில்லாத பரந்தமுகத்தில் கூரிய மூக்கும் பெரியகைகால்களுமாக கோயில் சிலைகள் போல காணப்பட்ட அவன் கைகால்களை ஆட்டி உரத்த குரலில் ஆரவாரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான். ஒருகையில் வாரிக்கால் ஈட்டியும் இன்னொருகையில் மாட்டுத்தோல் சாட்டையும் வைத்திருந்தான். அனும ரெட்டி ” ஆனா நாயம்மாருக்கு எளவு ஏழாவது அறிவில்லா வெளையுது… ஒத்தெங்கில் ஒத்து பெற்றம்மையை விற்றூண்ணு நினைக்குத சாதி ” என்று எண்ணியபடி அருகே சென்று நின்றான்.

நாயர் ”அல்லெங்கில் கொச்சு ரெட்டியார் சொல்லட்டு… இங்க பார்க்கணும் ரெட்டியாரே… பண்டு நடந்த கதையெல்லாம் பண்டு. இப்பம் வில்லுக்குறிக் காடு தாண்டி போறதுண்ணாக்க சில்லற காரியமில்லா…. மரணம் கொண்டு களிக்கிற களியாக்கும்…. ஒருபக்கம் நல்ல களக்காட்டு தென்காசி மறவன்மாரு….இந்தால நாடான்மாரு. பின்ன அல்லற சில்லற சாம்பான்மாரும் மலையன்மாரும்… குறவன்மாருக்க காரியம் சொல்லாண்டாம்.” சட்டென்று குரலை தாழ்த்தி பெரிய கண்களை உருட்டி” நாக வெஷம் தீட்டிய அம்பும் வில்லுமாக்கும் அவனுக கையிலே. உக்ரன் கருநாக வெஷம். தொட்டாப்போரும் அப்பம் தீரும் கதையும் கதகளியும்…..”

நரசிம்மலு ரெட்டி ”உனக்க கணக்கச் சொல்லும் வே கண்டன் நாயரே , சும்மா ஹரிகதையும் நாடகமும் நடத்தாம” என்றார்.

நாயர் அலட்சியமாக ” போட்டும், நீங்களும் நம்மாளு. நாங்களும் இங்க கெடந்து பெழைக்கிற பரிஷகள். ஒரு… நூறு வெள்ளிப்பணம் வரட்டு”என்றான்

”நூறு பணத்துக்கு உனக்க அம்மைக்கு நான் புடவ குடுப்பேன்டே நாயரே… நீ உள்ள கூலியச்சொல்லு…” என்றார் நரசிம்மலு ரெட்டி.

”நல்லா கணக்கு போட்டு பாக்கணும் ரெட்டியாரே. நாங்கள் எட்டாளாக்கும். ஆளுக்கு பத்து பணம் கிட்டாம எட்டுநாழிகை காவல்நடைண்ணாக்க நடக்குத காரியமா? ஒண்ணு சிந்திச்சு நோக்கணும்….”

”எட்டாளுக்கு பத்து பணம் வீதம்ணா நூறு பணமா? இதென்னடே உங்க மலையாளத்தில அப்பன்மாருக்க கணக்க சொல்லுததுமாதிரி கோணக்கணக்கா? அம்பது வெள்ளிப் பணம் , என்னண்ணு சொல்லுகே?”

”அம்பதுண்ணா கட்டாது ரெட்டியாரே” என்றான் நாயர் ” எம்பதுக்கு கொறையாது”

”எம்பது எனக்குக் கட்டாதே….”

”அப்பம் வேற ஆளைப்போயி கெட்டணும்…. அல்லாம பின்ன, செண்டைக்கு நாலு பணம் கோலுக்கு எட்டு பணம்ணாக்குமே உங்க ரீதி ” என்றபடி ஈட்டியை சரித்து முதுகைச் சொறிந்தபடி அவன் திரும்பினான். மறவர்களைப் பார்த்தான்.”இந்த எரப்பாளிக வருவானுக பத்து பணத்துக்கு பத்து நாழிகை தூரம் குந்தத்தையும் தூக்கிட்டு…. அது இங்க நடக்காது, இது மலையாளத்து மண்ணாக்கும்…”

”ஏன்வே இங்க மண்ணுக்கு என்னவே? ”என்றார் ஒரு பாண்டிச்செட்டி.

”ஆ, அப்டி கேளு. வே, இதெல்லாம் ஆருக்க மண்ணு? திருவட்டாற்று ஆதிகேசவன் சாமிக்க மண்ணு. சாமிக்கு என்னமாம் தெரியுமா? கண்ண மூடிக்கிட்டு ஒற்ற கெடப்பு. அறிதுயில்.ஒண்ணுமே தெரியாது. ஆனா வண்டி வண்டியா நெல்லும்பணமும் வந்து முற்றத்தில விழும். அதாக்கும் மலையாள மண்ணுக்க ரீதி. குண்டி ஆடாம கொண்டுவா. அதாக்கும் இங்கயுள்ள தொழில்மொறை ” என்றபடி அவன் ஒரு அடி எடுத்து வைத்தான்” டே ரெட்டி, மயிரே, நான் போனாபோனதாக்கும். பின்ன விளிச்சா எனக்க பட்டி திரும்பிப்பாக்காது பாத்துக்க”

”செரி, எம்பதுண்ணா எம்பது. மாடனுக்கு குடுக்காம போனா காடனுக்கு குடுக்கணும்னுல்லா சொல்லு” என்றார் நரசிம்மலு ரெட்டி.

”ஆ, அது மொறை” என்றான் நாயர் ”அப்பம் இந்தப் மறவப்பரிஷகளை விடவாங்கி போகச்சொல்லுங்க. நம்ம ஆளுகளை நான் கொண்டு வாரேன்”என்றபடி போனான்

”நல்லாருக்கே கதை.திண்ணவேலிமுதல் ஆருவாமொழிவரை நாப்பது பணம் . இங்கேருந்து இங்க போக எம்பதா?” என்றார் பாண்டிச்செட்டி.

”இவனுகள கால்காசுக்கு நம்பபிடாதுண்ணாக்கும் அனுபவம். இவனுக்குக் குடுக்காம நாம வேற ஆளைப் பிடிச்சு போனா இவனே அந்தால வந்து குந்தத்த காட்டி கொள்ளையடிப்பான்…. சவம் பேனை எடுக்கல்லேண்ணாலும் காதக் கடிக்காம இருக்கணுமே”

அனும ரெட்டி மறவர்களுக்கு கூலித்தொகை கொடுத்து பிரித்தனுப்பினார். அவர்களின் குழுத்தலைவன் இடுப்பளவுக்கு குனிந்து இருகைநீட்டி நாணயங்களை வாங்கி மேல்துண்டில் முடிந்து இடுப்பில் கட்டிக் கொண்டான். மீண்டும் கும்பிட்டபின் பின்பக்கம் காட்டாமல் நடந்து விலகினான். அவர்கள் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக் கொண்டபடி கோட்டையின் மறுபக்கம் பாண்டிநாடு செல்லும் வணிகர்களுக்கு காவலாக போக நிற்கும் மறவர்களுடன் சேர்வதற்காகச் சென்றனர்.

உரக்கப் பேசியபடி நாயர்குழு வந்தது. எல்லாருமே இடையில் ஒரு அழுக்கு வேட்டியை இறுக்கமாக சுற்றிக்கட்டி கச்சையை இறுக்கியிருந்தார்கள். வேறு ஆடைகளோ நகைகளோ ஏதுமில்லை. வலப்பக்கம் சாய்ந்த கனமான முன்குடுமிகளில் சிலர் காலையில் கோயிலில் கும்பிட்டபோது கிடைத்த முல்லைப்பூமாலையை சுற்றியிருந்தனர். எல்லார் நெற்றியிலும் சந்தனக்குறியும் காதில் துளசிக்கதிரும் இருந்தன. இறுக்கமான பெரிய தோள்களிலும் மார்புகளிலும் முழுக்க படர்தேமல்.

ஒருவன் நேராக வந்து மிடுக்காக ”ஆராக்கும் நரசிம்மன் ரெட்டி?” என்றான்.

நரசிம்மலு ரெட்டி ” நாந்தான். என்னவே?”என்றார்.

”கூலி பேசியாச்சுல்லா? பின்ன பேச்சு நீளப்பிடாது” என்றான் அவன் ” நான் மாமுண்டிக்கல் வலிய தறவாட்டுகாரனாக்கும். பேச்சுக்கு பேச்செடுக்குத சங்கதியே நம்ம குடும்மத்தில இல்ல. எடுத்தா வாளு எடுக்கல்லண்ணா கோளு – அதாக்கும் ரீதி. அறியாமல்லோ?”

அனும ரெட்டி எரிச்சலுடன்,”வே உம்ம கூட்டத்துக்கு ஆருவே தலைவன்? எளவு எல்லாவனும் தலைவன் மாதிரில்லா பேசுதானுக?”என்றான்

”டே, கோரா…ஜோலி நோக்கடே” என்றபடி முதலில் வந்த நாயர் பின்னால் வந்தான் ” வாங்க ரெட்டியாரே…பயப்படாதீங்க.நாங்க இருக்கோம். எங்க குந்தத்த மீறி இனி ஒரு ஈச்ச பூச்ச உங்க மேல பறக்காது…ஆஹாங்…வாங்க”

அனும ரெட்டி குரலைத்தாழ்த்தி ”குண்டி குந்த மண்ணில்லேண்ணாலும் எல்லாவனும் ஆனப்புறத்தில இருந்து ஆசனம் தேய்ஞ்ச மாதிரித்தான் பேசுகானுக” என்றான் அண்ணனிடம். நரசிம்மலு ரெட்டி கண்ணாலேயே சும்மா இருடா என்றார்.

நரசிம்மலு ரெட்டி ”இருங்க. சத்தியம் வாங்கலைல்லா”என்றார். ”வாரிக்குந்தம் மேல சத்தியம் செய்யுங்க”

”ஓ இந்த ரெட்டியாருக்க ஒரு சம்சயம். வே, ரெட்டியாரே மனுஷனுக்கு நம்பிக்கையாக்கும் வலுது. கேட்டேரா வே? பின்ன உமக்கு வேணுமானா ஒண்ணென்ன ஒம்பது சத்தியம் செய்துபோடலாம். ஏ, சத்தியம் செய்யுங்கடே”

ஒவ்வொருவராக ஈட்டி மீது அடித்து ” சோறுகுடுக்க தெய்வமான இந்த ஆயுதம் மேல சத்தியமா, அனந்த சயனனான ஆதிகேசவ சாமிமேல சத்தியமா, குலம் காத்தருளும் பொன்னு பகவதியம்மைமேல சத்தியமா, திங்கிற சோறுமேல சத்தியமா ”என்று ஆணையிட்டார்கள்.

அனும ரெட்டியும் நரசிம்மலு ரெட்டியும் வண்டிக்குள் ஏறிக்கொண்டார்கள். நரசிம்மலு ரெட்டி தெலுங்கில் ” எத்தனை பணம் கொடுத்தாய் ?”என்று கேட்டான். அனும ரெட்டி ” நாற்பது வெள்ளிப்பணம்” என்றான். ”பேதியில போகிறவன். அவன் வீட்டில் அந்தப்பணத்தால் இழவெடுக்க”என்று நரசிம்மலு ரெட்டி சொன்னபடி காலை நீட்டிக் கொண்டான்.

வண்டிக்குள் எட்டுபெரிய நார்ப்பெட்டிகளும் இரண்டு மரப்பெட்டிகளும் இருந்தன. பெட்டிகள் நடுவே நரசிம்மலு ரெட்டி படுத்துக் கொண்டு ” பெருமாளே” என்று கூவி கொட்டாவி விட்டபின் உடனடியாக தூங்கிவிட்டார். அனும ரெட்டி மெல்ல எரிச்சல் அடங்கி வெளியே பார்த்தபடியே வந்தான்.

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/8044/