சங்கரர் பற்றி மீண்டும்

sankarar
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த நான்கு வருடங்களாக உங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். தங்களது பதிவுகளில் என்னை மிகவும் ஈர்ப்பது இந்தியத் தத்துவ மற்றும் ஞான மரபு பற்றியவைதாம். தமிழ்நாடு இன்றிருக்கும் சூழலில் அறிவார்ந்த நிதானமான வாதம் என்பதே தமிழகத்தில் வழக்கொழிந்துபோய்விட்ட நிலையில் நீங்கள் செய்து வருகிற அறிவுப்பணி உண்மையில் தமிழகம் செய்த மஹா பாக்கியமாகும்.

ஆதி சங்கரர் பற்றிய தங்களது சில பதிவுகளை அண்மையில் படித்தேன். பல சங்கரர்கள் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். சனாதனி என்ற முறையில் சில மாற்று வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன். சங்கரர் ஏன் ஒருவராக இருந்திருக்க முடியாது என்று எனது சொந்த நம்பிக்கையால் அல்ல, (தனிப்பட்ட முறையில் சங்கரர் ஒரே சங்கரர்தான் என்றே நம்புகிறேன். பல சங்கரர்கள் இருப்பதாக நீங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்தாலும் கவலையில்லை, அவர்களும் அந்த ஆதி சங்கரரின் அம்சமே என்றே உறுதியாக நம்புகிறேன். ஆகவே நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு) எனக்குத் தெரிந்த சில தர்க்கங்களின் அடிப்படையிலேயே விவாதிக்கிறேன்.

எனது முதல் கேள்வி:

ஞான மார்க்கத்தை உபதேசித்தவரும் சடங்குகளை வகுத்தவரும் ஏன் ஒரே ஆளாக இருக்க முடியாது?

சநாதன மதத்தின் சிறப்பு அதன் பன்முகத்தன்மை மட்டுமல்ல, அதற்குள்ளே இருக்கிற எதிரெதிர் துருவங்களாகக் காணப்படும் கருத்தாக்கங்கள். மேற்கத்தியர்களால் இதை ஜீரணிக்கவே முடியாது.

அவர்களுக்கு இதை சமாளிக்கத் தெரிந்த ஒரே வழி : இது வேவ்வேறு காலகட்டத்தில் செய்யப்பட்டது, இடைச்செருகல், வேவ்வேறு ஆளால் எழுதப்பட்டது, இவரும் அவரும் வேறு என்று சிக்கலான கேஸைப் போலீஸ் இழுத்து மூடுவதுபோல் முடித்து விடுவதுதான்.

இந்திய ஞான மரபின் வாசல் என்று சொல்லத்தக்க கீதை- அவ்வளவு தத்துவங்களையும் உள்ளடக்கிய கீதையே கர்மம் செய் என்று அர்ஜுனனை முன்வைத்து உபதேசித்து அதன்மூலம் சடங்குகள் இன்றியமையாதவை என்று நமக்கு வலியுறுத்தத்தானே?

தாங்கள் சொல்வதில் ஒன்று உண்மை. ஆதி சங்கரர் புத்த, சமண சமயங்களை விட அதிகம் எதிர்த்தது பூர்வ மீமாம்ஸகர்களையே. ஆனால் அதற்காக அவர் வேதம் வேண்டாம், சடங்குகள் வேண்டாம் என்று கூறியதாக இதற்குப் பொருள் கொள்வது தவறென்று நினைக்கிறேன். பூர்வ மீமாம்ஸகர்களை அவர் குறிப்பாக எதிர்த்தது ஒரு அம்சத்தில் மட்டுமே. அதாவது:

கர்மங்கள் கர்மங்களுக்காகவே; கர்மங்கள் தாமே பலனைத் தருகின்றன, ஈஸ்வரன் என்று ஒருவன் தேவையே இல்லை என்பது சங்கரர் காலத்தில் வாழ்ந்த அடிப்படைவாத (!?) பூர்வ மீமாம்சகர்களது Extreme puritan வாதம்.

கர்மங்கள் ஈஸ்வரப்ரீதிக்காகவே. கர்மங்கள் தாமே பலன் தருவதில்லை, பலன் தர ஈஸ்வரன் உண்டு, சடங்குகளின் இறுதி நோக்கம் அந்த ஈஸ்வரனை அடைவதாகவே இருக்க வேண்டும் என்பது சங்கரரது வாதம்.

ஆனால் அதே நேரம் அந்த ஈஸ்வரனுக்கு நான் சொல்கிற ஒரே ரூபம்தான் என்று பிடிவாதம் பிடித்து மற்றொரு Extreme நிலையில் நின்ற அடிப்படைவாதிகளையும் பலி போன்ற பூஜை முறைகளை மேற்கொண்டவர்களையும் கண்டித்தார். ஈஸ்வரனை ஆறு ரூபங்களில் வழிபட ஆறு மதங்களையும் சௌம்யமான பூஜை முறைகளையும் வகுத்தும் கொடுத்தார். அதாவது ஈஸ்வரன் தேவையே அல்ல என்ற தரப்புக்கும் ஒரே ஈஸ்வரன், அது நான் சொல்கிற வடிவம்தான் என்ற தரப்புக்கும் சமநிலை உண்டாக்கவே அவர் வாழ்நாள் முழுதும் உழைத்ததும் சுற்றியலைந்ததும் வாதப்பிரதிவாதங்கள் செய்ததும். இந்த சமநிலைக்காக, சமரசத்துக்காக இரு வெவ்வேறு நிலைகளில் அவர் நின்று பேசியதை உண்மையில் முரண்பாடு என்று சொல்வது கூடத் தவறுதான்.

சங்கரர் கர்மங்களின் நோக்கம் மற்றும் இயல்பு பற்றித்தான் பூர்வ மீமாம்சகர்களுடன் முரண்பட்டாரே தவிர கர்மம் வேண்டுமா வேண்டாமா என்றல்ல. கர்மாக்களே போதும், மோக்ஷம், சந்நியாசம் எதுவும் வேண்டாம் என்று அவர்கள் ஞான காண்டத்தை நிராகரித்ததை எதிர்த்தாரே தவிர அவர் தாம் கர்ம காண்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவில்லை. அவர் வலியுறுத்தியது வேதம் பற்றி Wholistic approach வேண்டும் என்பது. வேதத்தின் எந்தப் பகுதியும் தேவையற்றதல்ல, எல்லாவற்றையும் ஒரு நடைமுறைக்கு உகந்த சட்டகத்துக்குள் பொருத்தி வகுக்க வேண்டுமென்பதே அவரது Mission. மோக்ஷமும் சந்நியாசமும் வேண்டாம் என்றால் உபநிஷதங்கள் எல்லாம் பொருளற்றதாகிவிடும் அதாவது வேதங்களின் ஒரு பகுதியே ஊனமாகிவிடும் என்பதே அவரது நிலைப்பாடு. அப்படிப்பட்டவர் சடங்குகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்து கர்மகாண்டம் முழுவதையும் பொருளற்றதாக்க அனுமதித்திருப்பாரா?

சங்கரர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை (தங்களது மற்றொரு கட்டுரை- வாசிப்பின் நாட்டிய சாஸ்திரத்தில் நீங்கள் கூறியுள்ள) தெரிதாவுக்கு நேர்ந்ததுடன் ஒப்புநோக்கலாம். எழுத்தாளனின் மரணம் பற்றிப் பேசிய தெரிதாவுக்கு இந்தியர்களால் நடந்ததுதான் சடங்குகளின் நோக்கம் பற்றிப் பேசிய சங்கரருக்கு வெளிநாட்டவர்களால் நடந்தது.

அடுத்த விஷயம், ஸ்தோத்திர நூல்கள்.

தத்துவங்களை நிலைநாட்டியவர் ஸ்தோத்திர நூல்கள் செய்திருக்க முடியாது என்ற வாதம். ஞான மார்க்கம் என்பது சிலரால் மட்டுமே முடிந்த விஷயம். மற்ற கோடானுகோடி சாதாரண ஜனங்களை எப்படி மதத்துக்குள் accommodate செய்வது? அவர்கள் மதத்திலிருந்து அந்நியப்பட்டுப் போய்விடக்கூடாதே, அவர்களுக்கென்று ஏதேனும் மத நடவடிக்கைகளைத் தர வேண்டுமே என்பதற்காகவே ஒரே ப்ரம்மம், ஞானம் என்ற நிலையிலிருந்து கீழிறங்கிவந்து பிரம்மத்தின் அம்சமான ஒரு இறை உருவத்திடம் வெளியிலிருந்து பக்தி செய்ய உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே ஸ்தோத்திர நூல்களை அவர் செய்தார். மடங்கள், கோவில் வழிபாடுகளை வகுத்தார்.

உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் அவரும் கடைசீல பக்திக்கு வந்துட்டார் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அது தவறு. அவர் எங்கும் போகவுமில்லை, வரவுமில்லை. வேவ்வேறு நிலையிலிருக்கிற உபாசகர்களுக்கு அவரவருக்கான மார்க்கங்களைக் காட்டினார், அவ்வளவே. ஞானத்தை விழைபவர்களுக்கு செல்வம் மாயை (அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்) என்றவர் உலக வாழ்வை வாழ்ந்தாக வேண்டிய நிலையிலுள்ள ஒருவருக்குக் கனகதாராஸ்தோத்திரம் செய்து தங்கமழை பொழிய வைத்தாரென்றால் அதை என்னாலும் அவரை வழிபடும் பல கோடிப் பேராலும் எந்தக் குழப்பமும் இன்றி ஏற்றுக்கொள்ள முடியும். 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படித்தான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த முரண்பாட்டிலுள்ள உள்ளார்ந்த அழகை ஒரு வைதீக மதத்தவரால் –(ஏன், சமண, பௌத்தர்களாலும் கூட) மிக எளிதாக ஏற்றுக்கொண்டு புரிந்துகொள்ள முடியும்- அவர் நடைமுறையில் மதம் (அ) தத்துவம் பற்றிய அறிவே இல்லாதவராக இருந்தால்கூட எடுத்துச் சொன்னால் உடனே புரிந்துகொள்ள முடியும். என்னதான் நான்கு வேதங்களையும் உபநிஷதங்களையும் தத்துவங்களையும் கரைத்துக் குடித்தாலும் வெளிநாட்டவரால் இந்த மதத்துக்குள் இருக்கும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெவ்வேறு காலம், வெவ்வேறு ஆள் பல்லவிதான்.

உதாரணமாக ஒன்று சொல்கிறேன். என் தந்தை ஒரு கணிதப் பேராசிரியர். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் அண்ணன் B.Sc கணிதம் படித்துக்கொண்டிருந்தார். படிக்கும்போது இருவரும் அப்பாவுக்கு இரு புறமும் அமர்ந்திருப்போம். என் அண்ணன் கணக்குப் போட சிறிது தாமதமானால் என்னடா, எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பே? எல்லாத்தையும் மனசாலே பண்ணினா லேட் ஆகும், சட்டுன்னு கால்குலேட்டரால போடுடா! என்பார் பொறுமையில்லாமல். அதே நேரம், நான் கால்குலேட்டரைத் தொட்டாலே டென்ஷனாகிவிடுவார். (எனக்கு வர்க்க மூலம் கண்டு பிடிப்பதில் எப்போதும் தகராறு. அப்பா கொஞ்சம் அசந்தால் நைஸாக அண்ணனிடமிருந்து கால்குலேட்டரை உருவி அதிலயே போட்டுவிடுவேன்.) என் பக்கம் திரும்பி பப்ளிக் எக்ஸாம்ல உனக்கு யார் கால்குலேட்டர் தருவா? என்று கத்துவார். ஒரே கணிதம், ஒரே வீட்டில் உடன்பிறந்தவர்கள் படிக்கும்போது (B.Scக்கு arithmetic ability முக்கியமல்ல. Concept தான் முக்கியம். பரீட்சையில் கால்குலேட்டர் உபயோகிக்கலாம். ஆனால் பத்தாம் வகுப்பு பரீட்சையில் கால்குலேட்டருக்கு அனுமதி கிடையாது என்ற காரணத்தால்) இரு விதமான நிலைகளை ஒருவர் எடுக்க வேண்டியிருந்தால் என்ன பொருள்? என் அண்ணா B.Sc படித்த காலம் வேறு, நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வேறு என்பதா? அந்த கணிதப்பேராசிரியர் என்பவர் ஒரே ஆள் அல்ல, இரண்டு நபர்கள் என்பதா?

அதுபோல் இரு வேறு வர்க்கங்களுடைய ஆன்மீக நிலைகள் மற்றும் தேவைகளைக் கணக்கில் கொண்டு ஞானத்தை போதித்தவர் பக்தி ஸ்தோத்திரங்களும் செய்யக் கூடாதா?

மூன்றாவது விஷயம் மேற்கத்தியர்கள் சங்கரர் ஒரே நபரல்ல என்பதற்கு ஆதாரங்கள் தேடக் காரணம் அவர்கள் வேதத்தை உபநிஷதங்களுக்கு விரோதமாகப் பார்த்தது.

ஆனால் எந்த ஒரு சநாதனிக்கும் வேதமும் உபநிஷதமும் ஒன்றுக்கொன்று விரோதமாக அல்ல, முரண்பாடாகக் கூடத் தோன்றுவதில்லை. அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லை என்பதற்குச் சான்று ஆயிரக்கணக்கான வருடங்களாக பாடசாலைகளில் ஒரே நபர்களால் ஒன்றாகத்தானே கற்றுத்தரப்படுகின்றன? அது மட்டுமல்ல உபநிஷதுக்கள் மொத்தம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஆனாலும் எதுவும் தனியாக அந்தரத்தில் நின்றவை அல்ல. ஒவ்வொரு உபநிஷதமும் ஒரு வேத சாகையுடன் சேர்ந்ததாகவே அதற்குச் சொந்தமானதாகவே அதன் ஒரு அங்கமாகவே இருக்கின்றது. மேற்கத்தியர்களின் முக்கியமான Fallacy தனியாக வேத காலம் ஒன்று இருந்தது, அது முடிந்து உபநிஷத் காலம் வந்தது என்றது. இது நமது பாடப்புத்தகங்கள் உட்பட எல்லாவற்றிலும் அப்படியே பதிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் சநாதன மரபில் வந்தவர்கள் வாதப்படி எந்த உபநிஷதும், வேத காலம் முடிந்துவிட்டது, வாங்கப்பா இப்போ உபநிஷதம் எழுதலாம் என்று எழுதப்பட்டதல்ல. ஒரு வேத சாகையை முழுதும் கற்றுத் தேர்வதென்பது அதற்கான உபநிஷதத்தைக் கற்பதையும் உள்ளடக்கியதே. எல்லாம் ஒரே நேரத்தில் (ரிஷிகள் தெய்வீக சக்தியால் கண்டுணர்ந்தது என்பது ஆய்வு நோக்கில் பார்க்கும்போது ஒப்புக்கொள்ளமுடியாவிட்டாலும் ஒரே காலத்தில் ஒரே நபரால் அல்லது ஒரு குழுவால்) எழுதப்பட்டிருக்கலாம் என்று எடுத்துக்கொள்வதில் என்ன கஷ்டம்?

வேத காலத்துக்குப்பிறகே உபநிஷத காலம் என்பதற்கு மொழியியல் தவிர வேறு சான்று இருக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை. அந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு நமது பாரம்பரியத்தின் வாதத்தை முழுதாக நிராகரிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன? மொழி நடை மாறுபட்டு இருந்தால் மட்டும் ஒரு எழுத்து வெவ்வேறு காலத்தில் அல்லது வெவ்வேறு நபரால் எழுதப்பட்டதாகிவிடுமா? தீவிர இலக்கியவாதியான ஒரு எழுத்தாளர் குழந்தைகளுக்கான இலக்கியமும் படைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதன் நடை முற்றிலும் வேறு மாதிரிதானே இருக்கும்? அதற்காக இரண்டும் எழுதப்பட்ட காலமே வேறு, அந்த நபரே இரண்டு ஆள் என்பதா?

ஆகவே உபநிஷதத்தை ஆதரித்தால் வேதத்தை எதிர்த்தாக வேண்டும் உபநிஷதங்களுக்கு பாஷ்யம் எழுதியவர் வேத சடங்குகளுக்கு நிச்சயம் விரோதமானவராகத்தான் இருப்பார் என்பது மேற்கத்தியர்களின் (கிறிஸ்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மையால் விளைந்த) கற்பனைக் குறைபாடு மற்றும் இந்திய ஞானம் பற்றிய புரிந்துகொள்ளலில் உள்ள பிரச்சினையால் (சிலருக்கு வேண்டுமென்றே நமது மதத்தின் இரு கூறுகளை ஒன்றுக்கொன்று விரோதமானவையாகக் காட்டி அவற்றை சிதைக்க வேண்டுமென்ற உள் நோக்கத்தாலும்) வலிந்து திணிக்கப்பட்ட கருத்து என்பது என் அபிப்பிராயம்.

உண்மையில் சங்கரர் ஒரே ஆளா இல்லையா வேத காலமும் உபநிஷத காலமும் வெவ்வேறா என்பது பெரிய பிரச்சினை அல்ல, அதற்குப்பின் இருக்கிற வேத உபநிஷத்துக்களைப் பற்றிய மேற்கத்தியத் தாக்கத்தால் ஏற்பட்ட அரைகுறைப்பார்வையே பிரச்சினை.

உங்களது விஷய ஞானத்துக்கு முன் எனக்குத் தெரிந்தது சொற்பமே. மேற்கண்டவற்றில் பல தகவல்கள் நீங்கள் அறிந்ததாகவே இருக்கும். உங்களுக்குத் தெரியாததை நான் புதிதாகச் சொல்லிவிடவில்லை. தெரிந்த தகவல்களின் அடிப்படையில் எனது தர்க்கங்களை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.

சநாதன மதத்தில் நம்பிக்கை உள்ளதால் அந்தக் கருத்துகளில் ஊறி அவற்றை உள்வாங்கிக்கொண்டதால், என்னால் எளிமையாக ஒப்புக்கொள்ள முடித்ததால், அவர்களது தரப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே தர்க்கம் செய்கிறேன்.

மேற்கண்ட கருத்துகளில் அநேகம் காஞ்சிப்பெரியவர் தெய்வத்தின் குரலில் கூறியுள்ளவையே. தெய்வத்தின் குரல் நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படிக்காவிட்டால் நீங்கள் அவசியம் படித்தே ஆக வேண்டும். குறிப்பாக சங்கர சரிதம் பற்றிய ஐந்தாம் பாகம். அத்வைதத்துக்கு உள்ளிருந்தே அதைப்பற்றி எழுதியவர்தானே என்று அவரது கருத்துகளை சுலபமாக நிராகரித்துவிட முடியாது. இன்றைய Socalled நவீன நடுநிலை முற்போக்கு ஜனநாயகவாதிகள் பலரைவிட மிகப்பொறுமையாகப் பல தரப்புகளையும் அலசி ஆராய்ந்தவர் பெரியவர்.

இந்து மதம் என்பதே அதை அரைகுறையாகப் புரிந்துகொண்ட வெளிநபர்களால் வைக்கப்பட்ட பெயர் என்பதாலும் இந்துத்துவ அரசியலின் கருவியாக ஆகிவிட்டதாலும் எனது சார்புநிலையைக் காட்ட சநாதனி என்ற சொல்லை உபயோகித்தேன். இந்து, சநாதனி இரண்டுமே தமிழ்நாட்டில் கெட்ட வார்த்தை ஆகி விட்ட நிலையில் அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து அவர்களது தரப்புக்கு செவிகொடுக்கவும் தேவைப்பட்டால் எடுத்துச் சொல்லவும்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரில் நீங்கள் இருப்பதாலேயே இந்தக் கடிதத்தை எழுதத் துணிந்தேன். கடிதம் நீண்டு உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டதைப் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

பூர்ணம்

அன்புள்ள பூர்ணம் அவர்களுக்கு

இவ்வினாக்களுக்கு நான் விரிவாகவே எழுதிவிட்டேன்

சங்கரப்புரட்சி

சங்கரமதம் அத்வைதம் மாயாவாதம்

தூய அத்வைதம்

சங்கரம்


பக்தியும் சங்கரரும்

இவ்விவாதங்களில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதைப்பொறுத்து விவாதம் அமைகிறது. நம்பிக்கை சார்ந்து நிற்கிறீர்கள் என்று சொல்லிவிட்டபின் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அது விவாதித்து நிறுவவேண்டியது அல்ல.

பொதுவாக சங்கரரே ஸ்தோத்திரங்களை எழுதினார் என வாதிடும் தரப்புகளில் இரு முக்கியமான குரல்கள் உள்ளன. ஒன்று எதையும் எப்படியும் பக்திக்குள் கொண்டுவந்தாகவேண்டும் என்னும் பிடிவாதம் கொண்டகுரல். பக்தி அன்றி எல்லாமே தேவையற்றவை, தத்துவம் பக்தியை ஆதரிப்பதாக அமையாவிட்டால் அது நாத்திகம் என்னும் நம்பிக்கை கொண்டது அது

இன்னொன்று இந்துமதம் என்னும் அமைப்புக்குள் சங்கரரை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால் அவரை வழிபாடுகளுடன் பிணைத்தாகவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது. தூய அத்வைதம் ஒரு தத்துவத்தரப்பாக நிலைகொள்கையில் மதத்தைவிட்டு வெளியே சென்றுவிடும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அது ஓரளவு உண்மையும் கூட

மூன்றாவது ஒரு தரப்பு உண்டு, அது பொருட்படுத்த வேண்டியது அல்ல. இன்றுள்ள மடங்களை சங்கரருடன் இணைத்துக்கொண்டு சாதிரீதியாக அவரை அடையாளப்படுத்தி சொந்தம் கொண்டாடுவது அது. வெறும் பிழைப்புப்பிராமணியம்.

வரலாற்றுரீதியாக, மொழிரீதியாக ஆராய்பவர்கள் விவேகசூடாமணியும் சௌந்தரிய லகரியும் கொண்டுள்ள மொழிவேறுபாட்டை முக்கியமாகச் சுட்டிக்காட்டி அந்த சங்கரருக்கு காலத்தால் மிகப்பிந்தியவர் ஸ்தோத்திரங்களை எழுதியவர் என வாதிடுகிறார்கள்.

நான் அந்த வரலாற்று ஆய்வாளார்களின் குரலை கருத்தில்கொண்டு சங்கர வேதாந்தத்தைப்புரிந்துகொள்ள முயல்கிறேன். கிடைப்பவற்றில் இருந்து ஒரு சங்கரரை தொகுத்துக்கொள்ள முயல்வதில்லை

சங்கரர் போன்ற ஒரு வேதாந்தி தோத்திரநூல்களை எழுதியிருக்கமுடியுமா என்றால் முடியும், அதுவும் வேதாந்தத்துக்கு உட்பட்டதே. நடராஜகுரு அதைத்தான் சொல்கிறார். அழகுணர்வு அறிவுக்கூர்மைக்கு எதிரானதல்ல. பித்துநிலை தர்க்கத்துடன் பிசிறின்றி முயங்கமுடியும்

ஆனால் தோத்திரங்களை எழுதியவராக எடுத்துக்கொண்டே ஆகவேண்டும் என்னும் பிடிவாதம் அத்வைதத்தின் தூய அறிவுசார்ந்த நிலைப்பாட்டை மறுக்கிறது. மீண்டும் அதை எளிய பக்தி நோக்கி திசைதிருப்புகிறது. அதை என்னால் ஏற்கமுடியாது

ஜெ

முந்தைய கட்டுரைஇங்கிருந்து தொடங்குவோம்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54