பகுதி ஐந்து : தேரோட்டி – 19
இளைய யாதவரும் ஸ்ரீதமரும் அறைவிட்டு அகன்றபின் வாயிலை மூடி மெல்ல அசைந்த திரையை சிலகணங்கள் அர்ஜுனனும் சுபத்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “போர்க்கலை கற்பதில் இளவரசிக்கு ஆர்வம் உண்டா?” என்றான். எத்தனை எளிதாக முற்றிலும் பொருட்டில்லாத ஒன்றை பேசி உரையாடலை தொடங்கமுடிகிறது என வியந்தான். ஆனால் எளிய மனிதர்கள் கூட அதை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“எனக்கு விற்கலையில் மட்டும் ஆர்வமில்லை” என்றாள் சுபத்திரை. “அது அனைத்தையும் வெறும் இலக்குகளாக மாற்றிவிடுகிறது.” புன்னகையுடன் “இலக்குகளாக மாறுவதில் என்ன பிழை?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஒரு மானை பன்னிரு நரம்புச்சுழிகளாக மட்டுமே அது பார்க்கிறது. மனிதன் நூற்றெட்டு வர்மமுனைகள் மட்டுமே” என்றாள் சுபத்திரை. “ஆகவே நான் விரும்புவது மற்போரைத்தான். கதைப்போர் என்பது சற்று இரும்பு கலக்கப்பட்ட மற்போர்தான்.”
“படை நடத்துவதும் வெல்வதும் உங்கள் கனவுகளில் இல்லையா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அதில் எனக்கு ஆர்வமுள்ளது. படைகொண்டு சென்று நாடுகளை வெல்வதற்காகவோ புரங்களை வென்று அரியணை அமர்ந்து ஆள்வதற்காகவோ அல்ல, இங்குள மக்கள்பெருக்கை எங்ஙனம் ஒரு விராட வடிவாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை அறிவதற்காக. அவர்களை வழிநடத்திச் சென்று விடுதலையின் நிறைவை அவர்களுக்கு அளிக்கமுடியும் என்பதற்காக” என்று சுபத்திரை சொன்னாள். “இளமையில் இருந்தே கதைப்போர் கலையை மூத்தவரிடமும் படைநடத்தும் கலையை இளையவரிடமும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.”
அர்ஜுனன் புன்னகைத்தபடி “போர்சூழ்கைகளை நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதில் மிகப்பெரிய இடர் ஒன்றுண்டு. நாம் போர்களை நம் உள்ளத்தில் இடைவிடாது நிகழ்த்தத் தொடங்கிவிடுவோம். அவை நாம் நிகழ்த்தும் போர்கள் என்பதால் நாம் வென்றாக வேண்டியது முதல்தேவையாக ஆகிவிடுகிறது. அவ்வெற்றியிலிருந்தே அனைத்து போர்சூழ்கைகளும் திட்டமிடப்படுகின்றன. உண்மையான போர்சூழ்கை என்பது தோல்வியிலிருந்து தொடங்கி திட்டமிடப்படவேண்டும். எனென்றால் தோல்வி ஊழின் முகம். அத்தனை போர்களும் ஊழுடன் நிகழ்த்தப்படும் ஆடல்களே” என்றான்.
“வெற்றியை எண்ணி எதையும் தொடங்கவேண்டும் என்பார்கள்” என்றாள் சுபத்திரை. “ஆம், அப்படி சொல்வதுண்டு. ஆனால் தோல்வியை எண்ணியே எதையும் நடைமுறை வாழ்வில் தொடங்குகிறோம். வெற்றியை மட்டும் எண்ணி நாம் தொடங்குவது பகற்கனவுகளில் மட்டுமே” என்றான் அர்ஜுனன். “மறுமுனையில் இருப்பது நாம் அறியமுடியாததும் எந்நிலையிலும் முற்றாக கடக்கமுடியாத பேருருக் கொண்டதுமான ஊழ் என்று அறிந்தவன் இத்தகைய உள ஓட்டங்களை முதிராத கன்னியரின் காமக்கனவுகள் என்றே எண்ணுவான்.”
சுபத்திரையின் முகம் சிவப்பதைக் கண்டு அர்ஜுனன் வியந்து அவளை நோக்கினான். அவள் விழிகளை விலக்கி சாளரத்திற்கு அப்பால் தெரிந்த ஒளிமிக்க முற்றத்தை நோக்கியபடி “ஆம், நானும் அவ்வண்ணம் கனவுகளை கண்டதுண்டு. ஒருமுறை வேண்டுமென்றே நான் தோற்பதுபோல் கனவு கண்டேன். அப்போதுகூட தோல்வியிலிருந்து நான் மீண்டெழுவதே அக்கனவின் தொடக்கம் என்று உணர்ந்து சலிப்புற்றேன்” என்றாள்.
ஆனால் அவள் அதை வேறெதையோ மறைக்கும்பொருட்டு சொல்கிறாள் என்று அவள் வெண்கழுத்திலிருந்து தோளுக்குப் பரவிய செம்மை அவனுக்கு சொன்னது. அறைக்குள் வந்த கணம் முதல் அவள் உடலை நோக்கலாகாது என்று அவன் தன் விழிகளுக்கு ஆணையிட்டிருந்தான். அதற்காக அவளுடைய வலது காது முனையில் தொங்கிய குழை மேல் தன் விழிகளை நட்டிருந்தான். ஆயினும் அவள் விழிகள் அவனைப் பார்க்காதபோது இயல்பாக அவன் பார்வை அவளுடைய பெரிய தோள்களையும் வெண் தந்தக் கைகளையும் அதில் ஓடிய நீலநரம்புப் பின்னல்களையும் பார்த்து மீண்டன. அவளுடைய தோள்கள் தன் விழி மூடினாலும் கண்ணுக்குள் நிற்பதை உணர்ந்தான்.
அவள் எப்போதும் அவனை நேர்விழியால்தான் நோக்கினாள். ஆனால் அதற்கு ஓர் அளவு வைத்திருந்தாள். யாதவர்களைப் பற்றி அவன் பேசியபோது அறியாமல் நெடுநேரம் அவன் முகத்தை நோக்கிவிட்டாள். அதன்பின் அவள் பாவனைகள் மாறிவிட்டிருந்தன என்பதை அவன் அப்போது புரிந்துகொண்டான். அவன் இரண்டாகப் பிரிந்திருந்தான். ஒருவன் கண்முன் திகழ்ந்த அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். இன்னொருவன் கரந்து விளையாடும் அவளை அள்ளிப்பற்ற முயன்றுகொண்டிருந்தான்.
சுபத்திரை நாவின் நுனியால் இதழ்களை மெல்ல வருடியபடி ஏதோ சொல்ல எழுவதுபோல வாயசைத்தாள். தலையில் பால்குடத்துடன் தடிப்பாலம் கடந்துசெல்லும் ஆயர்மகளின் முகம் அது என தோன்றியது. அவர்கள் இருவருக்கும் நடுவே அறியமுடியாத ஏதோ ஒன்று வந்து தேங்கியது போல. பிசின் போன்ற ஒன்று. நீரென விலக்கவோ திரையென கிழிக்கவோ முடியாதது. தொடும் கைகளில் எல்லாம் கவ்விப் பரவும் ஒன்று. எட்டு வைத்து பின்னகர்ந்து அதை விட்டு விலகிவிட முயன்றான். ஆனால் எந்தத்திசையில் நகர்ந்தாலும் அது அணுகுவதாகவே தெரிந்தது.
எத்தனை எளிதாக ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே அந்த புரிந்து கொள்ளமுடியாத ஒன்று நிகழ்ந்து விடுகிறது என்று எண்ணியபோது உள்ளம் முடிவிலி ஒன்றைக் கண்டு திகைத்தது. அவள் மெல்ல அசைந்தபோது அணிகள் எழுப்பிய ஒலி ஒரு சொல்லென அவனை தொட்டது. எண்ணங்கள் திசையழிந்து அலைந்துகொண்டிருந்தபோது சட்டென்று முதிரா பெண்ணின் கனவுகள் என்று அவன் சொன்ன சொல்தான் அவளை சிவக்க வைத்தது என்று அவன் உணர்ந்தான். அகம் படபடக்கத் தொடங்கியது. எதைச் சொல்ல எண்ணி எதை சொல்லியிருக்கிறோம் என்று வியந்தான்.
அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடலாம், பிறிதொரு தருணத்தில் அச்சந்திப்பை நீட்டலாம் என்று எண்ணினான். அவ்வெண்ணத்தை அவன் உடல் அறிவதற்குள்ளேயே அவள் அறிந்ததுபோல் திரும்பி “இன்னும் சில நாட்களில் என் மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது” என்றாள். தன் உடலெங்கும் குருதிக்குழாய்கள் துடிப்பதை அறிந்தபடி “ஆம், அறிவேன். இன்னும் ஒருமாதம். வைகானச பூர்ணிமை” என்றான் அர்ஜுனன். அவள் மேலும் ஏதோ சொல்ல விரும்பி அதை சொல்லாக உணராமல் தவித்ததுபோல உதடசைத்தாள்.
தாழ்ந்த குரலில் “முழுநிலவு நாளில்” என்றாள். பொருளில்லாத சொல் பொருளை அந்தத் தருணத்திலிருந்து அள்ளிக்கொண்டது. “ஆம்” என்றான் அர்ஜுனன். “மதுராவின் இளவரசி என்று என்னை சொல்கிறார்கள். எனவே எனக்கு ஷத்ரிய முறைப்படி மணத்தன்னேற்பு ஒருங்கு செய்திருக்கிறார்கள்” என்றாள் சுபத்திரை. ஆர்வமில்லாமல் எதையோ சொல்பவள் போலிருந்தது முகம். ஆனால் குரல் கம்மியிருந்தது.
“அது நன்றல்லவா? உங்களுக்கு உகந்த ஆண்மகனை நீங்கள் கொள்ள முடியுமே?” என்றான் அர்ஜுனன். சினத்துடன் அவள் திரும்பியபோது தலையில் சூடிய முத்துச்சரம் காதில் சரிந்து கன்னத்தில் முட்டி அசைந்தது. “இல்லை. ஷத்ரியப் பெண்கள் போல தளைகளில் சிக்குண்டவர்கள் வேறில்லை. இந்த மணத்தன்னேற்பில் அரசர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அதில் எவர் வெல்ல வேண்டுமென்பதையும் மதி சூழ்கையாளர்கள் முன்னரே முடிவு செய்கிறார்கள்” என்றாள்.
அவளுடைய சீற்றம் எதன் பொருட்டென்று அவனுக்கு புரியவில்லை. ஏன் அப்போது அதைச் சொல்கிறாள் என்றும். “எனக்கென தேர்வு எதுவுமில்லை. தன் எளிய விழைவுடன் ஆண்மகனை தேடிச் செல்லும் மலைக்குறமகள் கொண்ட உரிமையின் ஒரு துளிகூட எனக்கில்லை” என்றாள் சுபத்திரை. அவள் மூச்சு எழுந்தடங்குவதை அவன் நோக்கி நின்றான். அப்போது அவன் என்ன சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறாள் என எண்ணினான். ஒன்றும் தோன்றவில்லை.
அவன் உள்ளத்தில் குருதி விடாய் ஒன்று எழுந்தது. உதடுகளில் அது புன்னகையாக கசியாமல் இருக்கும் பொருட்டு தன்னை இறுக்கிக்கொண்டு விழிகளை அவள் விழிகள் மேல் நாட்டி “யாதவர் பேசுவதைக் கேட்டேன் இளவரசி. இம்மணத்தன்னேற்பு அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் தங்களை மணக்கும் பொருட்டே என்றனர்” என்றான்.
முதுகில் சவுக்கடி விழுந்ததைப்போல அவள் முகத்தில் தோன்றி மறைந்த வலியைக் கண்டதும் அவன் உள்ளம் துள்ளியது. அதை மறைக்க பணிவு ஒன்றை முகத்தால் நடித்தான். “நான் பிழையாக ஏதும் சொல்லியிருந்தால் பொறுத்தருள்க இளவரசி” என்றான். சுபத்திரை “என் மூத்தவரின் ஆணை அது என்றால் அதுவே என் கடமை” என்றாள். முலைகளை சற்றே எழுந்தமையச் செய்த பெருமூச்சை அவளால் அடக்க முடியவில்லை.
அர்ஜுனன் மேலும் வழுக்கும் விளிம்பை நோக்கி மெல்ல எட்டுவைத்துச் சென்று “அவர் அஸ்தினபுரியின் பேரரசர். ஒரு நாள் இப்பாரதவர்ஷத்தை ஒரு குடைக்கீழ் நின்று அவர் ஆள்வார் என்று சொல்கிறார்கள்” என்றான். அவள் அருவருப்பு கொண்டதுபோல முகம் சுளித்தாள். “உங்கள் குலம் அதை விரும்பக்கூடும்” என்று அர்ஜுனன் மேலும் சொன்னான். இல்லை என தலையசைத்த சுபத்திரை அவன் கண்களை நோக்கி “நீங்கள் யோகியாயிற்றே, உங்கள் நோக்கில் சொல்லுங்கள்! என்னை மணம் கொள்ளும் தகுதி கொண்டவரா அவர்?” என்றாள்.
அர்ஜுனன் அந்த ஒரு கணத்தை பின்வாங்காமல் எதிர்கொள்ள தன் முழுப் போர்த்திறமையும் தேவைப்படுவதை உணர்ந்தான். “இல்லை” என்றான். ஆனால் அவன் குரல் சற்றே தழுதழுத்தது. “எவ்வகையிலும் அவர் தங்களுக்குரியவரல்ல. அவர் தங்களை மணம் புரியப்போவதில்லை என்று சொல்கிறார்கள்” என்றான். அவள் முகம் அறியாது மலர்ந்ததைக் கண்டு அவனும் அறியாது புன்னகைத்தான்.
“ஆம். என் உள்ளமும் அவ்வாறே சொல்கிறது. திரும்பத் திரும்ப அதையே என் அகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. அதை என் இளைய தமையனும் அறிவார் என்று தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. “எதன் பொருட்டு என்னை இங்கு ரைவத மலைக்கு அவர் வரச்சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் எவ்வகையிலோ இது என் மணத்தன்னேற்புடன் தொடர்புடையது என்று தோன்றியது.”
அர்ஜுனன் “ஆம். மணத்தன்னேற்பு குறிக்கப்பட்ட பெண்கள் அரண்மனைவிட்டு வெளியே செல்லும் வழக்கமில்லை” என்றான். “வழக்கமில்லைதான். ஆனால் இங்கு ரைவதகர் முன் நான் ஆற்ற வேண்டிய நோன்பு உள்ளது என்று இளையவர் சொன்னபோது எந்தையோ மூத்தவரோ மறுக்கவில்லை” என்றாள். அவள் உள்ளம் எடையிழந்து மீள்வதை முகம் காட்டியது.
அர்ஜுனன் “நீங்கள் எங்கு திரும்பிச் செல்கிறீர்கள் இளவரசி?” என்றான். “மதுராவுக்குத்தான். என் மணத்தன்னேற்பு நிகழ்வதற்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ளன. நான் அங்கிருந்தாக வேண்டும்” என்றாள் சுபத்திரை. “அங்கே ஆயிரம் சடங்குகள். குலபூசனைகள். நான் அங்கு வெறும் ஒரு பாவை.”
அப்போது அவள் விழிகளைப் பார்த்த அர்ஜுனன் அவை அச்சொற்களுக்கு தொடர்பற்ற பிறிதொன்றை சொல்வதுபோல் உணர்ந்தான். தன் உள்ளம் கொள்ளும் இந்த பதற்றங்களும் குழப்பங்களும் வெறும் விழைவின் வெவ்வேறு நடிப்புகள்தானா என்று வியந்து கொண்டான். சுபத்திரை “நான் திரும்பிச் சென்றாக வேண்டும். ஆனால் மதுராவுக்குச் செல்வதை எண்ணும்போதே என் உள்ளம் மறுக்கிறது. இங்கே இளைய தமையனுடன் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் உடனே திரும்பி வரும்படி மூத்தவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றாள்.
அதை ஏன் தன்னிடம் சொல்கிறாளென்று அர்ஜுனன் எண்ணினான். விடைபெறுவது போலவோ மீண்டு வருவேனென்று வாக்களிப்பது போலவோ அவள் அச்சொற்களை சொல்வதாகத் தெரிந்தது. அக்குரலில் இருந்த ஏக்கம் தன் உளமயக்கா என்ன? ஒரு கணம் தான் யார் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்ற ஐயத்தை அவன் அடைந்தான். அவ்வெண்ணம் வந்ததுமே அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் திரும்ப எடுத்து கூர்நோக்கியது அவன் உள்ளத்தின் பிறிதொரு பகுதி.
அதை அவள் எவ்வண்ணமோ உணர்ந்திருந்தாள். ஆகவே அதை பொருளில்லாச் சொற்களை அள்ளிப்போட்டு முழுமையாக மூடினாள். “இளவரசியாக இருப்பது பெரிய நடிப்பு. யாதவர்கள் இன்னும் அரசகுலமே ஆகவில்லை. அதற்குள் இத்தனை சடங்குகள், முறைமைகள், முகமன்கள். சிலநாட்களில் நான் சலிப்புற்று கிளம்பி மதுவனத்திற்கே சென்று மூத்ததந்தையரின் மைந்தர்களுடன் காட்டுக்குச் சென்று கன்றுமேய்க்கத் தொடங்கிவிடுவேன்.”
பெண்கள் சிறியவற்றை பேசிக்கொண்டிருப்பதை விரும்புபவர்கள் என அவன் அறிந்திருந்தான். ஆனால் அது அவர்கள் தங்கள் உள்ளம் பொங்கிக் கொண்டிருப்பதை மறைக்கும்பொருட்டுதான். அந்தச் சிறிய பேச்சு அவர்களை இளமையானவர்களாக, கவலையற்றவர்களாக, பொறுப்புகளும் சுமைகளுமற்றவர்களாக காட்டுகிறது. ஆனால் அணுக்கமானவர்களிடம் மட்டுமே அவற்றை பேசுகிறார்கள். அவள் தன்னை எப்படி எண்ணுகிறாள்?
அவளிடம் மேலும் நெருங்க வேண்டுமென்றும் அந்த மாறுதோற்றம் கலையாது அப்படியே விலகிவிட வேண்டுமென்றும் ஒரேசமயம் உள்ளம் எழுந்தது. அந்தத் தடுமாற்றத்தை உடல் தாளாததனால் சாளரத்தை நாடி அதன் விளிம்பில் கை வைத்து சரிந்தபடி “தங்களுக்கு உகந்த ஆண்மகன் எவரென்பதை எப்போதேனும் எண்ணியிருக்கிறீர்களா இளவரசி?” என்றான். அப்படி ஒரு நேரடிக் கேள்வியை அவளிடம் கேட்க அவன் எண்ணவில்லை. எழுந்து சென்ற அவ்வசைவால் அதுவரை உள்ளத்தில் குவித்திருந்த அனைத்தும் சிதற அது மொழியில் எழுந்துவிட்டது.
அவள் ஒரு சிறு உளமாறுதலைக்கூட காட்டாது “இல்லை” என்றாள். ஏமாற்றத்தால் அவன் உள்ளம் சுருங்கியது. தாடியை நீவியபடி “விந்தைதான்” என்றான். “ஏன்?” என்றாள். “அப்படி எண்ணாத பெண்கள் இல்லை என நான் கேட்டிருக்கிறேன்.” அவள் “நான் அவ்வண்ணம் எந்த ஆண்மகனையும் பார்க்கவில்லை” என்றாள். தொலைவில் புயல் எழும் ஓசை போல் தன்னுள் சினம் எழுவதை அக்கணம் அறிந்தான். வேண்டுமென்றே சொல்கிறாளா? “அதாவது நேரில் பார்க்கவில்லை, இல்லையா?” என்று தொலைதூரத்து வெயில் முற்றத்தை பார்த்தபடி கேட்டான்.
“ஆம். அத்தகைய தகுதி கொண்ட எவரையும் நான் கேட்டிருக்கவும் இல்லை” என்றாள். ஆம் வேண்டுமென்றேதான் சொல்கிறாள். நான் யாரென அறிந்திருக்கிறாள். “வெறும் புகழ்மொழிகளால் வீரர்களை கன்னியரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் சேடிப்பெண்கள். சூதர்களின் பாடல்களோ பொய்யில் புடமிட்டவை. அவற்றை நம்பி அந்த ஆண்மகன்மேல் காதல்கொள்வதில் ஒரு கீழ்மை உள்ளது. அவர்கள் என்னிடம் காதலை உருவாக்கமுடியும் என்றால் நான் யார்?”
இல்லை, இவள் இங்கு சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் அவள் அறிந்த அர்ஜுனனைப்பற்றி. பாரதவர்ஷத்தின் பெண்கள் அனைவரும் காதல்கொண்டிருக்கும் ஒருவன் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்கிறாள். ஆனால் அதை அவள் அவனிடம் சொல்லவில்லை, அயலானாகிய சிவயோகியிடம்தான் சொல்கிறாள். ஆனால் அயலானிடம் சொல்வதென்பதே ஓர் இழிவுதானே?
அர்ஜுனன் தலை திருப்பி அவளை நோக்கி “மண்ணில் எவரும் தங்களுக்கு தகுதியற்றவர்கள் என்று எண்ணுகிறீர்கள் போலும்?” என்றான். அப்போது தன் முகத்தில் எழுந்த ஏளனச் சிரிப்பை தானே உணர்ந்து எத்தனை கீழ்மை தன்னுள் உறைந்துள்ளது என்று வியந்து கொண்டான். அந்தக் கீழ்மை இல்லாத ஆண்மகன் எவனுமிருக்கப்போவதில்லை.
அவள் அவன் விழிகளை நோக்கி “அப்படி நான் எண்ணவில்லை. ஏனெனில் எனக்குரிய ஆண்மகன் புகழ் பெற்ற குடியில் உதித்திருக்க வேண்டுமென்று உண்டா என்ன? யாரென்றே அறியாத அயலவனாக ஏன் இருக்கக் கூடாது?” என்றாள். அர்ஜுனன் அவள் கண்களை நோக்கினான். அவள் அவனை அறியவில்லை என உறுதிப்பட்டது.
“இவையெல்லாம் கற்பனைக்கே உகந்தவை” என்றான். “அறியாப்பெண்ணின் கனவுகள், இல்லையா?” என்றாள். அவள் அச்சொல்லால் குத்தப்பட்டிருக்கிறாள் என தான் உய்த்தறிந்தது எத்தனை உண்மை என அவன் எண்ணினான். சற்றே சீற்றத்துடன் “ஆம்” என்றான். “அறியா வயதில் பெண்கள் அவ்வாறு பலவகையாக எண்ணிக்கொள்கிறார்கள். இளைஞர்கள் வாளேந்தி புதுநிலத்தை வென்று பேரரசு ஒன்றை அமைப்பதைப்பற்றி கனவு காண்பதற்கு இதுவும் நிகர்தான்.”
“ஏன்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “ஏன் இது உண்மையாக இருக்கமுடியாது?” அர்ஜுனன் “அறியாத மண்ணின் நாடோடியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்போகிறீர்களா? மேழி பற்றி வருபவனோ பொதி சுமந்து அலைபவனோ கன்றோட்டி காட்டில் வாழ்பவனோ கைபற்றினால் அவனுடன் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா தங்களால்?” என்றான்.
“ஆம், இயலும்” என்றாள். “இயலுமா என்றே திரும்பத் திரும்ப என்னுள் கேட்டுக் கொண்டிருந்தேன். இயலும் என்ற ஒரு சொல்லை அன்றி வேறெந்த விடையும் என் உள்ளம் சொல்லவில்லை. வேறெதையும்விட அது எனக்கு எளிது. ஏனெனில் நான் இளவரசியல்ல. எளிய பெண். பெண் மட்டுமே” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கினான். இமைகள் தாழ்ந்திருக்கையிலும் பெண்விழிகள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகின்றன! எதையெதையோ கடந்துசென்று அவள் இளமகளாக நின்றிருந்தாள். ஆண்மகன் மிகவிரும்பும் பெண்ணின் தோற்றம். முழுமையாக தன்னை படைக்க முற்பட்டவள்.
“அவனை கண்டடைந்துவிட்டீர்களா?” என்றான். அவள் சொல்லப்போவதை எண்ணி அவன் உள்ளம் படபடத்தது. அவள் திரும்பி வாயிலை நோக்கினாள். அப்பால் காலடியோசை கேட்டது. “அதற்குள்ளாகவா சித்தமாகிவிட்டார் இளைய தமையன்?” என்றாள். “இல்லை, அது ஸ்ரீதமரின் காலடியோசை” என்றான் அர்ஜுனன். அவள் அந்த ஒலியை மிக இயல்பாக பயன்படுத்திக்கொண்டாள் என தோன்றியது. அத்தனை உணர்வுநிலையிலும் சூழலின் ஒலிகளில் முழுதும் சித்தம் பரப்பியிருக்க பெண்களால் மட்டுமே முடியும்.
ஸ்ரீதமர் உள்ளே வந்து “வணங்குகிறேன் இளவரசி. இங்கு நடக்கும் இந்த விழவில் இளைய யாதவரை முழுமையாக முறைமை செய்து அனுப்பவேண்டும் என்று ரைவதகத்தின் அரசர் விரும்புகிறார். பன்னிரு குடிகளும் நேற்றுதான் அவர் இளைய யாதவர் என அறிந்திருக்கின்றன. அவர்களின் குடிமுறைமைகள் செய்யப்படவேண்டும். எனவே விழவு முடிய இரவு ஆகிவிடும். தாங்கள் கிளம்பிச்செல்ல வேண்டுமென்று தங்கள் தமையனார் ஆணையிடுகிறார்” என்றார். “அவர் தன் அகம்படிகளுடன் நாளை மாலை கிளம்புவார்.”
“நான் அதையே விழைந்தேன். இங்கிருக்க என்னால் முடியவில்லை” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “உண்மை, விழவு முடிந்த களம் போன்ற வெறுமைகொண்டது வேறு ஏதுமில்லை” என்றான். அவன் வேறேதோ சொல்லவேண்டுமென அவள் விழைந்ததைப்போல இருந்தது முகம். ஆனால் அதை மறைத்தபடி “எத்தனை விரைவில் இங்கிருந்து செல்ல முடியுமோ அத்தனை விரைவில் செல்ல விழைகிறேன் மாதுலரே” என்றாள். ஆனால் அச்சொற்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதபடி அவள் விழிகள் அவன் முகத்தை ஓரக்கண்ணால் நோக்கிச் சென்றன. அப்பார்வையை தன் முகத்தில் உணர்ந்த அர்ஜுனன் உடல் திருப்பி ஸ்ரீதமரை பார்த்தான்.
ஸ்ரீதமர் “தங்களுக்கு பிறிதொரு பணியையும் இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார் இளவரசி” என்றார். சுபத்திரை விழிகளில் சினம் ஒளிவிட்டு அணைவதை அர்ஜுனன் கண்டான். ஆனால் அவள் “ஆணை” என தலைவணங்கினாள். “அந்தகவிருஷ்ணிகளின் இளவரசரான அரிஷ்டநேமி அருக நெறி நோற்று சென்ற ஓராண்டாக இங்கே தங்கியிருக்கிறார் என்பதை அறிந்திருப்பீர்கள் இளவரசி. அவருக்கு மறைந்த உக்ரசேனரின் மகள் ராஜமதியை மணம் முடிக்க ஆவன செய்யுமாறு அவரது தந்தை சமுத்ரவிஜயர் கோரியிருக்கிறார். துவாரகையில் அதற்கான விழவுக்கு ஆவன செய்யும்படி இளைய யாதவர் நேற்றே செய்தி அனுப்பியிருந்தார்.”
“ஆம், என்னிடம் சொன்னார்” என்றாள் சுபத்திரை. “அரிஷ்டநேமி அவர்களை இங்கிருந்து துவாரகைக்கு அழைத்துச் செல்லும்படி தங்களுக்கு இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் ஸ்ரீதமர். “துவாரகைக்கா?” என்று கேட்டபோதே அறியாது அவள் முகம் மலர்ந்தது. “ஆம், துவாரகைக்குத்தான். இன்னும் நான்கு நாட்களில் அங்கு அந்த மணவிழாவை நிகழ்த்தலாமென்று இளையவர் சொன்னார்.” அர்ஜுனனை நோக்கி “அரிஷ்டநேமிக்கு வழித்துணையாக தாங்களும் செல்ல வேண்டுமென்று இளையவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார்.
அர்ஜுனன் தலைவணங்கி “ஆணை” என்றான். “நான் அவரை இளைய யாதவருடன் சென்று கண்டிருக்கிறேன். ஆனால் கொல்லாமை உறுதிகொண்ட அவரால் என்னைப் போன்ற போர்பயின்ற யோகியிடம் நட்புறவு கொள்ளமுடியுமா?” என்றான். “கொல்லாமையை கைவிட்டு இல்லறத்தையும் செங்கோலையும் கைக்கொள்வதற்காகவே அவர் வருகிறார். இங்கிருந்து துவாரகைக்குச் செல்வதற்குள் அருகநெறிப் படிவரை கொல்வேல் கொற்றவராக மாற்றும் பொறுப்பு தங்களுக்கு” என்றார் ஸ்ரீதமர்.
அர்ஜுனன் புன்னகைத்தான். “தங்கள் பயணங்களுக்கான ஒருக்கங்களை செய்ய ஆணையிடுகிறேன்” என்றபின் ஸ்ரீதமர் வெளியே சென்றார். புன்னகைத்து மூடிய இதழ்களைப்போல இணைந்து அசைந்து கொண்டிருந்த திரைச்சீலையை நோக்கியபடி அர்ஜுனன் ஒருமயிர்க்கால் கூட அசையாமல் அமர்ந்திருந்தான். பின்பு அவ்வண்ணமே அத்திரைச் சீலையை நோக்கியபடி உறைந்து நின்றிருந்த சுபத்திரையை உணர்ந்தான். நெடுநேரத்திற்குப் பின் என ஓரிரு கணங்களைக் கடந்து விழிதிருப்பி அவளை பார்த்தான். அவள் விழிகள் அவனை சந்தித்து உடனே விலகிக்கொண்டன.
அர்ஜுனன் புன்னகைத்து “எஞ்சியதை வழிநீள பேச முடியும்” என்றான். அவள் புன்னகைத்து “ஆம்” என்றாள். “போர்க்கலைகளை நான் கற்பிக்கிறேன். தாங்கள் பேரரசி ஆகப்போவதனால் அவை உதவும்” என்றான். ஏன் அந்தப்புண்படுத்தும் சொற்றொடரை சொன்னோம் என உடனே உள்ளம் வியந்தது. ஏதோ சிறிய எரிச்சல் உள்ளே இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்த எரிச்சலை அவள் புரிந்துகொண்டு மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றியது. புன்னகையுடன் “ஆம், அது உதவும்” என்றாள்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்