‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52

பகுதி ஐந்து : தேரோட்டி – 17

ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென அது பெருகி வர அதன் விளிம்புவட்டம் குறுகிக்குறுகி மலைமுடி நோக்கி சென்றது. அவர்கள் எழுப்பிய பேரோசை எதிரொலிக்க மலைப்பாறைகள் அனைத்தும் யானைகளென எருமைகளென பன்றிகளென பெருச்சாளிகளென உயிர்கொண்டு ஓசையிடத் தொடங்கின. எக்கணமும் அவை பாய்ந்து எழுந்து பூசல் கொள்ளுமென்று தோன்றியது.

அர்ஜுனன் கைகட்டி அருகர் ஆலயமுற்றத்தில் நின்றபடி அப்பெருந்திரளை நோக்கிக் கொண்டிருந்தான். திரண்டெழும் எதுவும் நீர்மைகொள்வதன் விந்தையை எண்ணிக்கொண்டான். மணலாயினும் விலங்குகளாயினும் மக்களாயினும். அவை விளிம்புகளில் விரியத்தவிக்கின்றன. அனைத்துத் திசைகளிலும் சூழ்ந்து நிறைக்கின்றன. நிரப்புகின்றன. அந்த முகங்களையே மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முகத்திலும் கணத்திலொரு துளியே கண் நிலைக்கமுடிந்தது. ஆகவே முகங்களின் உள்ளுறையும் வெளிப்பாடுமான ஒன்றையே அறியமுடிந்தது. அதுவே அத்திரளென இருந்தது. அனைத்து முகங்களும் கலந்து உருவான ஒற்றை அலைப்பரப்பு. பல்லாயிரம் கோப்பைகளில் நிறையும் ஒரு நதியின் நீர். விராடவடிவம் கொள்ளும் எதுவும் உலகமே வேண்டுமென்று வெறிகொள்கிறது. அனைத்து எல்லைகளையும் முழு ஆற்றலுடன் தாக்குகிறது.

திரளாவதற்கான அகநிலை ஒன்று யாதவர்களிடம் முன்னரே இருந்ததென்று தோன்றியது. ஒவ்வொரு தருணத்திலும் தனித்து தனித்து காட்டில் அலைந்தவர்களுக்குள் அந்தத் தனிமையை முற்றிலும் உதறி தழுவும் தோள்களுடன் தசைகள் முட்டிப் பிணைந்து தசைப்பெருக்காக மாறும் விழைவு இருந்திருக்கும். எப்போதோ பெருந்திரள் என தன்னை உணரும்போது யாதவன் திடுக்கிட்டு விழித்து அண்டையனை வெறுத்து விலகிக்கொள்வான். வேடிக்கையான எண்ணம் ஒன்று எழுந்தது. சாங்கியம் என்ன சொல்லும்? இந்த யாதவர் முக்குணமும் நிகர்நிலையில் இருக்க ஒற்றைப்பேருடலாக எங்கோ இருந்திருக்கின்றனர். நிலையழிந்த குணங்கள் ஒன்றையொன்று நிறைசெய்ய முட்டி மோதிப்பெருகி பல்லாயிரங்களென மாறிக்கொண்டிருக்கின்றன. மீண்டும் அவை நிகர்நிலையடைந்து அமைதிகொள்ளக்கூடும்.

யாதவர் அருகர் ஆலயங்களின் சுற்றுவளைப்புகளை தாவிக் கடந்து வந்தனர். அடிகள் பதிந்த பாறைகளை அவர்களின் உடல்திரள் முழுமையாக மூடி மறைத்தது. சிந்திக்கிடந்த செவ்வொளி வட்டங்களில் தெரிந்து சென்ற அவர்களின் முகங்கள் வெறிகொண்டு விழித்த தெய்வங்கள் போல் இருந்தன. அவர்கள் நடுவே புதுவெள்ளப் பெருக்கில் சுழற்றிக் கொண்டு வரப்படும் மரத்தடியைப் போல சுபத்திரையின் புரவி உலைந்தது. அதை பின்நின்று வாலை முறுக்கி ஊக்கினர் யாதவ இளைஞர். அது முன்னால் எம்பித் தாவ முயன்றபோது சிலர் கழுத்தைப் பிடித்து நிறுத்தினர். அவளை புரவியிலிருந்து பிடித்து இழுத்து கீழே தள்ள சில இளைஞர் முயன்றனர். கூவிச்சிரித்து ஆர்ப்பரித்து அவளை சூழ்ந்துகொண்டனர். சவுக்கை சுழற்றி அவர்களை மாறி மாறி அடித்து அவள் உரக்க சிரித்தாள். அவர்கள் அந்த அடியை தழுவல் போல முத்தங்கள் போல கொண்டனர்.

அக்கூட்டத்தின் களிவெறியில் அவளும் முழுமையாக தன்னை மூழ்கடித்திருப்பதை அர்ஜுனன் கண்டான். புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்திச் சுழற்றி பின்னால் அதன் வாலைப் பற்றியவர்களை கால்தூக்கி உதைத்தாள். குதி முள்ளால் அதன் விலாவை குத்தி சுண்டி உந்த அது முன்குளம்பு தூக்கி கூட்டத்தின் நடுவே பாய்ந்து மேலும் பாய முடியாமல் தவித்து சுழன்றது. அதன் காலடியில் விழுந்த யாதவர்கள் எழுந்து அதை உதைத்தனர். அவள் அணுகி வரும்தோறும் அர்ஜுனன் அவளை மட்டுமே நோக்கலானான். அவளது கழுத்தெலும்பு எழுந்த பெருந்தோள்கள், விரிந்த நெற்றி கொண்ட பரந்த முகம், சிரிக்கும் சிறிய கண்கள். கள் மயக்கிலிருப்பது போல் சிவந்திருந்தன அவை.

அவனை அவள் அணுகியதும் சூழ்ந்திருந்தவர்களில் ஒருவன் “அதோ அவன் யோகி! சிவயோகி என்று எண்ணுகிறேன். அவனிடம் கேட்போம்” என்றான். ஒருவன் “யோகியே! நீர் சொல்லும்! யாதவ இளவரசியை மணம் கொள்ளும் தகுதி எனக்குண்டா?” என்றான். பிறிதொருவன் “ஷத்ரியர் எங்கள் இளவரசியை மணம்கொண்டு செல்கையில் இடைக்கச்சை இறுக்கி காட்டில் அலையும் இழிவு எங்களுக்கு என்றால் அதை எப்படி பொறுக்கமுடியும்?” என்றான்.” இந்தச்சித்திரை முடிந்து வைகாசி மாதம் முழுநிலவுநாளில் மணத்தன்னேற்பு… அதற்குப்பின் இவள் எங்களுக்குரியவள் இல்லை” என்று ஒருவன் கூவியபடி முன்னால் வந்தான்

அர்ஜுனன் புன்னகைத்தபடி “முற்பிறவியில் அவள் ஒரு வண்ணத்துப்பூச்சியாகவும் நீங்கள் அவளை இழுத்துச்செல்லும் எறும்புகளாகவும் இருந்தீர்கள் யாதவர்களே” என்றான். “என்ன சொல்கிறான்?” என்று பின்னால் ஒருவன் கேட்டான். “சொல்லும்” என்றான் ஒருவன். “பாதியிலேயே யானை ஒன்று உங்களை மிதித்துக்கூழாக்கி கடந்துசென்றது. முடிவடையாத அச்செயலை இப்பிறவியில் மீண்டும் செய்கிறீர்கள்.” பின்னால் நின்றவன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “மணத்தன்னேற்பில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாமே?” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை “ஆம். அதையே நானும் சொல்கிறேன். சைப்யரே, நீர் கதாயுதமேந்தி வந்து களத்தில் நில்லும்” என்றாள். “வருகிறேன், உனக்காக களத்தில் என் தலை உடைந்து தெறித்தால்கூட உவகையுடன் விண்ணேறுவேன். ஷத்ரியன் முன் வெறுந்தடியென நிற்பதைவிட அது மேல்” என்றான் சைப்யன். “ஆகா! அவன் ஆண்மகன்” என்று ஒரு முதியவன் கைநீட்டி சொன்னான். சுபத்திரை அர்ஜுனனை நோக்கி “உமது பெயரென்ன?” என்றாள். அர்ஜுனன் “ஃபால்குனன். சிவ யோகி” என்றான். “உம்மை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள். “இருக்கலாம். பிறப்பால் நான் ஷத்ரியன். ஷத்ரியர்களின் முகங்கள் ஒன்று போலுள்ளன என்று சொல்வார்கள்” என்றான் அர்ஜுனன். “இல்லை, உமது விழிகளை வேறெங்கோ பார்த்திருக்கிறேன்” என்றபின் அருகே வந்தாள்.

அவள் புரவியை பற்றியபடி வந்த யாதவர்கள் அவனை நோக்கி கூச்சலிட்டனர். அவர்களை பின்னாலிருந்து நெருக்கிய கூட்டத்தால் மொத்தமாக அடித்துச்செல்லப்பட்டனர். “உம்மைப் பார்த்தால் சிவயோகி போல் தோன்றவில்லையே” என்றான் ஒருவன். “இளைஞரே, உமது தாடியை நான் பிடித்திழுத்துப் பார்க்கலாமா?” என்று ஒரு முதிய யாதவன் எட்டி அர்ஜுனன் தாடியை பிடித்துக் கொண்டான். அர்ஜுனன் அவன் கையை வளைத்து எளிதாக தூக்கி அப்பால் இட்டான். திரும்பி சுபத்திரையை நோக்கி “இவ்விழவில் யாதவப் பெண்கள் வருவதில்லை என்று அறிந்தேனே” என்றான். “ஆம். வழக்கமாக வருவதில்லை. இம்முறை நான் வந்துள்ளேன். அது என் மூத்தவரின் ஆணை” என்றாள் சுபத்திரை.

“அவளுக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது” என்று ஒரு யாதவன் கைநீட்டி கூறினான். மேலும் மேலும் பெருகி வந்து கொண்டிருந்த யாதவர்களின் திரள் அவர்களை தள்ளி முன்னால் கொண்டு சென்றது. அர்ஜுனன் ஏராளமான தோள்களால் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டான். கூச்சல்களிடையே அவன் குரல் கேட்கவில்லை. “அவளுக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது. அஸ்தினபுரியின் அரக்கன் வந்து அவளை கொள்ளவிருக்கிறான். மூடன்!” என்றான் ஒருவன். அர்ஜுனன் “ஊழ் அவ்விதம் இருந்தால் எவர் என்ன செய்ய முடியும்?” என்றான். சுபத்திரை “ஊழ் நடத்துபவர் என் தமையன். அவர் ஆணைப்படி நான் இங்கு வந்தேன்” என்றாள்.

“இங்கு அவளுக்கு மணமகன் கிடைக்கவிருக்கிறான் என்று நிமித்திகன் ஒருவன் சொன்னான்” என்று ஓர் இளைஞன் கூவினான். “இளைய பாண்டவனாகிய பார்த்தன் இங்கு வரப்போகிறான். அவளை சிறைபற்றிக்கொண்டு செல்லவிருக்கிறான்.” கடும் சினத்துடன் பின்னால் இருந்து ஒரு யாதவன் தலைதூக்கி “அதை சொன்னவன் யார்? இப்போதே அவன் நாவை வெட்டுகிறேன். சொன்னவன் யார்?” என்றான். “ஏன்? நான் சொன்னேன். வெட்டு பார்க்கலாம்” என்றபடி சொன்னவன் முன்னால் வந்தான். அவனை நோக்கி பாய்ந்தவனை பிறர் அள்ளிப் பற்றி விலக்கினர்.

திமிறியபடி “விருஷ்ணி குலத்தில் ஒரு யாதவன் இருக்கும்வரை இளைய பாண்டவன் எங்கள் இளவரசியை கொள்ள மாட்டான்” என்றான் அவன். “ஏனெனில் அஸ்தினபுரியின் அரசருக்கு அவளை கொடுக்க வேண்டும் என்பது விருஷ்ணி குலத்து பலராமரின் விருப்பம். அதை மீற இளைய யாதவருக்கும் உரிமையில்லை.” அவனுடைய எதிரி “அதை யாதவர்கள் முடிவெடுப்பார்கள். போஜர்களுக்கு விருஷ்ணிகள் பாடம் எடுக்கவேண்டியதில்லை” என்றான்.

வசைகள் வெடிக்க பூசல் ஒன்று தொடங்கவிருந்தது. “விலகுங்கள். இதை பேச இப்போது நேரமில்லை” என்று அவர்களைப் பிடித்து விலக்கினர். “விலகுங்கள் விலகுங்கள்” என்று அருகே பாறைமேல் எழுந்த குஜ்ஜர் குலத்துக் ஏவலன் ஒருவன் கூவினான். அவன் குரல் இரைச்சலில் மறையவே தன் கையில் இருந்த கொம்பை உரக்க ஒலித்து கைவீசி விலகிச் செல்ல ஆணையிட்டான். பெருகி வந்த யாதவர்கள் ஐந்து அருகர் ஆலயத்தை அடைந்தனர். முற்றத்தை நிறைத்திருந்த அருகநெறியினருக்கு சுற்றும் பெருகி அலைபாய்ந்தனர். “ஐந்து அருகர்களுக்கு வெற்றி! ஐந்தவித்தவர்களுக்கு வெற்றி! ஐந்துபருக்களை வென்றவர்களுக்கு வெற்றி” என்று அவர்கள் கூவினர். வெள்ளுடை அணிந்த ஐந்து படிவர்கள் உள்ளிருந்து வந்து நீரையும் மலர்களையும் அள்ளி யாதவர்கள் மேல் வீசி வாழ்த்தினர்.

“விலகிச் செல்லுங்கள். அப்பால் விலகிச் செல்லுங்கள்” என்று மூங்கில் மேடைகளில் ஏறி நின்று குஜ்ஜர்கள் கூவினர். “நிரை வகுத்து மலை நோக்கி செல்லுங்கள்” என்றனர். ஒருவரை ஒருவர் முட்டி கூச்சலிட்டபடியும் எம்பி குதித்து ஆர்ப்பரித்தபடியும் அரண்மனையை வளைத்து மறுபக்கம் சென்ற பாதையில் பரவி இறங்கினர் யாதவர். அங்கே சுடர்கள் ஒளிவிட்ட சிறிய விமானத்துடன் நின்றிருந்த ரைவதகரின் ஆலயத்தின் முன் கட்டப்பட்டிருந்த மணிமண்டபத்தின் முன் கண்டாமணி முழங்கத்தொடங்கியது. “நிரை வகுத்துச் செல்லுங்கள். நிரை வகுத்துச் செல்லுங்கள்” என்று ஆணை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தபோதும் எங்கும் நிரை என ஏதுமிருக்கவில்லை. ஆனால் மண்ணின் மேடுபள்ளங்களும் அவற்றை அறிந்த கால்களின் விருப்பமும் இணைந்து அதற்கென ஓர் ஒழுங்கு அமைந்தது.

நெடுந்தொலைவில் தன்னைவிட்டு விலகிச் சென்றிருந்த சுபத்திரையை நோக்கியபடி வெள்ளத்தில் எழும் நெற்றுபோல அர்ஜுனன் சென்றான். உடலை அப்பெருக்குக்கு விட்டுக்கொடுத்தபோது விழிகளை முழுமையாக அக்காட்சிகளில் ஈடுபடுத்த முடிந்தது. பல்லாயிரம் கால்கள் கொண்ட பெரும் புரவியொன்றின்மேல் ஏறியவன் போல். கூட்டத்தை நோக்கி மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தனர் அருகநெறிப் பூசகர். முட்டித் ததும்பி கூட்டத்தில் நின்று ஒரு கணம் ஆலயக் கருவறைக்குள் எழுந்த ரைவதகரின் சிலையை நோக்கினான் அர்ஜுனன்.

நெடுந்தொலைவில் என விழித்து பதிந்திருந்தன விழிகள். வலது கையில் மருத்தன் அளித்த வாளும் இடது கையில் மொக்கவிழாத சிறு தாமரையும் இருந்தன. அவரது காலடியில் கனிகளும் காய்களும் அன்னமும் அப்பமும் இன்னுணவும் எட்டு மங்கலங்களும் படைக்கப்பட்டிருந்தன. சூழ்ந்திருந்த நெய்விளக்குகளின் வெளியில் அக்காட்சி திரைச்சீலை ஓவியமென அலையடித்தது. விழிகள் ஒரு சுற்று அக்காட்சியை தொட்டு வருவதற்குள் நெடுந்தொலைவுக்குள் அவனை தூக்கிச் சென்றுவிட்டது கூட்டம்.

இந்திரபீடத்தின் அருகே கூட்டம் சென்றபோது அங்கு பாறைகளின் உச்சியில் நின்றிருந்த குஜ்ஜர்கள் கைகளில் ஏந்திய பந்தங்களை சுழற்றியும் கொம்புகளை முழக்கியும் அக்கூட்டத்தை வழிப்படுத்தியும் குன்றைச் சுற்றி அமரவைத்தனர். தொன்மையான ஆணை ஒன்று அவர்களின் அகப்புலனில் உறைவதுபோல யாதவர் மண்ணில் புதர்களுக்கும் உருளைப்பாறைகளுக்கும் ஊடாக அமர்ந்தனர். பின் நிரையில் வந்துகொண்டிருந்தவர்கள் அந்த அமைதியைக்கேட்டே அமைதிகொண்டனர். அந்தப்பெருங்கூட்டம் ஓசையின்மையின் இருளுக்குள் பெய்தொழிவது போல தோன்றியது.

கீழிருந்து வந்தவர்கள் வந்து முடிந்ததும்  மலைப்பகுதியெங்கும் யாதவர்கள் முற்றிலும் படிந்து ஓசை அழிந்தனர். இருளின் திரை மேலும் தடித்தது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த குரல்பெருக்கு ஓசையற்ற ஒன்றாக மாறி எப்போதும் செவிகளை சூழ்ந்திருப்பதுபோல அர்ஜுனன் உணர்ந்தான். கீழே அருகர் ஆலயத்திலிருந்து மணிகளின் ஓசைகள் எழுந்தன. அங்கிருந்து ஒற்றை விளக்கு ஒன்று இருளுக்குள் கண்காணா நீர்ப்பெருக்கொன்றால் கொண்டு வரப்படுவது போல மெல்ல அலை பாய்ந்தபடி வந்தது. அருகணைந்தபோதுதான் அதைத் தொடர்ந்து பெரிய அணி நிரையாக அருக நெறியினர் ஓசையின்றி நடந்து வருவதை அர்ஜுனன் கண்டான்.

கைகூப்பி நடந்துவந்த அவர்கள் யாதவர்கள் நடுவே பிளந்திருந்த பாதை வழியாகச் சென்று இந்திரபீடத்தை அணுகி அதன் அடிவாரத்தில் பெரிய வளையமாக சுற்றி அமர்ந்தனர். ஒருவரை ஒருவர் முட்டி மோதாமல் பல்லாயிரம் முறை பயிற்சி செய்யப்பட்ட ஓரு படை நகர்வு போல மிக இயல்பான ஒழுங்குடன் அவர்கள் சென்றனர். இருளுக்குள் கூட்டம் பெருகிச் சென்றுகொண்டிருந்த காலடிகளிலிருந்து அவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. பெண்களும் குழந்தைகளும் முதியவரும் அடங்கிய அப்பெருங்கூட்டம் ஓருடலும் பல்லாயிரம் கால்களும் கொண்ட அட்டை போல மாறியிருந்தது.

அவர்கள் அமர்ந்து முடிந்ததும் அங்கிருந்த பாறை ஒன்றின் மேலிருந்து ஏவலர் தலைவன் பெருங்கொம்பை முழக்கினான். அதை ஏற்று மலை முழுக்க இருந்த பல்வேறு பாறைகளில் இருந்து ஏவலர்கள் கொம்போசை எழுப்பினர். மலை முற்றிலும் அமைந்துவிட்டது என்று தோன்றியது. யாதவர் சூழ தரையில் அமர்ந்திருந்த அர்ஜுனன் தலைக்கு மேல் இருந்த இந்திரபீடத்தை நோக்கிக் கொண்டிருந்தான். இளைய யாதவரும் அரிஷ்டநேமியும் அக்கூட்டத்தில் எங்கோ இருக்கிறார்கள் என்று எண்ணினான். அவர்கள் இருவர் அகத்தையும் மிக அருகே என பார்க்க முடிந்தது.

இருவர் முகமும் ஒரே உணர்வு நிலையில் இருக்குமென்று நினைத்தான். ஒரு கோப்பையிலிருந்து அதேஅளவுள்ள இன்னொரு கோப்பைக்கென அவர்களின் உள்ளங்களை துளிததும்பாமல் குறையாமல் ஊற்றிவிட முடியும். இருமுனைகள். முற்றிலும் ஒன்றை ஒன்று அறிந்தவை. தன்னை அறிவதற்காக மறுமுனையை கூர்ந்து நோக்குபவை. முற்றிலும் ஒன்றை ஒன்று நிறைப்பவை. சாங்கியம் என்ன சொல்லும்? இரண்டும் இணைகையில் முக்குணங்களும் முழுதமைய முதல்அசைவின்மை நிகழ்கிறதா? அல்லது வைசேடிகம் என்ன சொல்லும்? இன்மையை முழுதும் நிரப்புவது இன்மைதானா? பொருண்மை எதுவும் பிறிதொன்றாக ஆக முடியாது. பொருண்மை என்பதே தனித்தன்மைதான். இன்மையின் விசேஷமென்பது இன்மையே. இன்மை என்பது எந்நிலையிலும் நிகரானது.

புன்னகையுடன் துவராடை அணிந்து தத்துவத்தில் இறங்கிவிட்டோமா என்று எண்ணிக்கொண்டான். அருகிருந்த யாதவனிடம் மெல்ல “இங்கு நிறைந்துநிற்கும் அமைதியை இப்பாறைகள் யுக யுகங்களாக பேணி வந்தன அல்லவா?” என்றான். திகைத்த நோக்குடன் அவன் “ஆம்” என்று சொல்லி விழிகளை திருப்பிக் கொண்டான். பின்பு அறியாமல் தன் உடலை சற்று அசைத்து விலகினான். அர்ஜுனன் சிரிப்பை அடக்கிக்கொண்டு மறுபக்கம் திரும்ப அவனை நோக்கிக் கொண்டிருந்த யாதவன் ஒருவன் பதறி விழி திருப்பினான். “நாம் பாறைகளைப் போல் ஆக முடியாது யாதவரே?” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம்” என்றான் அவன் நிலையழிந்த விழிகளுடன். “ஏனென்றால் பாறைகள் எண்ணங்களால் தங்கள் உடலை அசைக்கும் வலுவற்றவை.”

அவன் உடைந்த குரலில் “உண்மைதான்” என்றான். “மானுடர் தங்கள் உள்ளங்களை உருமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே உருமாறிக்கொண்டே இருக்கிறார்கள். நீர்த்துளிகளைப் போல. நீர்த்துளியை அவ்வடிவில் நிறுத்துவது அதன் உள்விழைவு அல்லவா?’’ அவன் “ஆம்” என்றான். அருகே இருந்தவர்களை பதற்றமாக நோக்கினான். “முள் முனையில் நின்றிருக்கும் நீர்த்துளியே அவர்கள் உள்ளம்” என்றான். “ஆம்” என்ற பின் யாதவன் தலைகுனிந்து கண்களை மூடிக்கொண்டான். அர்ஜுனன் இருளுக்குள் சிரித்துக் கொண்டான். யாதவனின் உடல் பூனையை கட்டிப்போட்ட பை போல அசைந்துகொண்டிருந்தது.

இந்திரபீடத்தைச் சூழ்ந்து அமர்ந்திருந்த அருகநெறியினரில் எவரோ குழலிசைத்து பாடத்தொடங்கினார்கள். அவர்களின் தொன்மையான குலப்பாடல் .ஒவ்வொருவருக்கும் அந்த இசையொழுங்கும் வரிகளும் தெரிந்திருந்தன.. எனவே மிக இயல்பாக ஆணும் பெண்ணும் அதில் இணைந்து கொண்டனர். ஒற்றைக்குரலென. காட்டை நிறைக்கும் சீவிடுகளின் பாடல் போல அவ்விசை இந்திரபீடத்தை சூழ்ந்து ஒலிக்கத் தொடங்கியது. ‘நாங்கள்’ என்று சொல்வது போல் இருந்தது. ‘நாங்கள்! நாங்கள்!’ என்று அலையடித்தது. ‘இங்குளோம்! இங்குளோம்!’ என்று தன்னை உணர்ந்து ‘இவையனைத்தும்! இவையனைத்தும்!’ என சூழலை நோக்கி பரவத்தொடங்கியது. ‘எங்கு? எங்கு?’ என அதன் வினா எழுந்தது. ‘எவ்வண்ணம்? எவ்வண்ணம்?’ என்று அது வியந்தது. பின்பு ‘வருக! வருக!’ என்று அழைத்தது.

அவ்வழைப்பு மன்றாட்டாகியது. அம்மன்றாட்டு நீண்டு இருளென்றாகிய வானில் நெளிந்து துடித்தது. மலை விளிம்பில் பற்றிக் கொண்டிருப்பவனின் கைதுழாவல் போல. நீரில் மூழ்குபவனின் இறுதி கையசைப்பு போல. ஒரு சொல்கூட விளங்காமலே அப்பாடலை அத்தனை தெளிவாக உள்வாங்க முடிந்தது. அத்தனை பெருங்கூட்டம் ஏற்றுப்பாடுவதென்றால் பாடல் மிக எளிமையானதாக இருக்கவேண்டும். மிகக்குறைவான சொற்களே சொல்லப்பட்டிருக்க வேண்டும். தனி மனிதர்கள் கற்பவை விரிவானவை. சிக்கலானவை. புரிந்துகொள்ள கடினமானவை. பெருந்திரளான மனிதர்களை நோக்கி அறிவு விரிவடையுந்தோறும் அது எளிமையாகிறது. ஆனால் பெருவிசையும் பொருட்செறிவும் கொண்டதாக மாறுகிறது.

அர்ஜுனன் அந்த மலைஉச்சியின் பெருவிளக்கன்றி வேறெதையும் பார்க்க முடியாதிருப்பதை எண்ணிக் கொண்டான். இருளில் ஒற்றைவிளக்கு மட்டுமே தெரியும்போது விழிக்கு வேறு வழியே இல்லை. சூழ்ந்திருந்த விண்மீன்களின் நடுவே செந்நிறமான தீற்றல். மானுடர் அமைத்த விண்மீன். தூண்டிலில் சிறு புழு. விண்ணில் ஏதோ ஒன்று பசித்த வாய்திறந்து அருகணையலாம். பாடல் ஓய்ந்தது. அதன் செவிமீட்டலும் பின் நினைவுமீட்டலும் எஞ்சியிருந்தன. பின்னர் மெல்ல அவையும் அடங்கின. காலம் என்ற உணர்வு மட்டுமே ஒவ்வொருவருள்ளும் எஞ்சியிருந்தது.

இங்கிருக்கிறோம் என்ற உணர்வாக இருந்தது காலம். இன்னும் எத்தனை நேரம் என்று பதற்றமாக தன்னை உருமாற்றிக் கொண்டது. நெடுநேரம் அங்கிருக்கிறோமோ என்னும் சலிப்பாக தன்னை விரித்துக் கொண்டது. தெரிந்த ஒவ்வொன்றாக அள்ளி அப்பெரும் சலிப்பை நிரப்ப முயன்றது. அத்தனை எண்ணங்களை அள்ளிப் போட்டாலும் அப்பெரும் இன்மையின் ஒரு பகுதிகூட நிரம்பாததைக் கண்டு சலித்து மீண்டும் எழ விரும்பியது. அவ்வெண்ணங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக ஒருகணத்துளி போல மாற அத்தகைய கணங்களால் ஆன முடிவிலி ஒன்று கண்முன் இருப்பதைக் கண்டு அஞ்சி நின்றது.

காலம் சூழ்ந்திருந்த இருட்டாக விண்மீன் வெளியாக அதன் நடுவே எழுந்து நின்றிருந்த சிவந்த சுடராக இருந்தது. சென்ற நினைவுகளாக நொறுக்கி படிமத்துளிகளாகி பொருளின்றி கலந்து அருவி என அகத்துள் எங்கோ பெய்து கொண்டிருந்தது. வானில் அந்த தனிச்சுடர் மெல்ல தவித்தாடிக் கொண்டிருப்பதை அர்ஜுனன் நோக்கி அமர்ந்திருந்தான். எங்கிருந்தோ காற்று ஒன்று கடந்துசெல்ல அது சரிந்து கீழ்நோக்கி இழுபட்டு வளைந்து மேலெழுந்து துடித்தது. மீண்டும் தழைந்து கீழ் நோக்கி சுழன்று எழுந்தது. கரிய பசுவின் நாக்கு போல. பிறிதொரு காற்று அதை பிடுங்கி பறக்கவிட்டது. வானில் அலையடித்து இழுபட்டு பின்பு அறுபட்டதுபோல அணைந்தது.

சூழ்ந்திருந்த அனைவரிலுமிருந்தும் ஒற்றைக் குரலென ஓர் வியப்பொலி எழுந்தது. பெரியதோர் உறுமல் போல எழுந்து ரீங்காரமாக மாறி மறைந்தபின் மௌனமாக ஓசையின்மையாக ஆகி இருளுக்குள் எஞ்சி விம்மி அணைந்தது. முற்றிருளுக்குள் பெருந்திரளெனப் பெருகிய ஒற்றை உடலாக ஒவ்வொருவரும் மாறுவது போல் இருந்தது. தசைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்னும் பின்னும் என நெசவாகி ஒரு படலமாயின. சுருக்கி இறுக்கி ஒரு துளியாயிற்று அது. அங்கே இருந்தது ஒரு மானுடம்.

இந்திரபீடத்தின் மேல் செந்நிறமான விண்மீன் ஒன்று வந்து அமைவதை அர்ஜுனன் கண்டான். அது விழிமயக்கா என்று எண்ணியபோது அக்கூட்டத்திலிருந்து தான் தனித்திருப்பதை அறிந்தான். குஜ்ஜர் என யாதவர் என ஆகாத ஒருவன். எங்கோ அரிஷ்டநேமியும் இளைய யாதவரும் அவ்வண்ணம் விலகி தனித்திருக்கக்கூடும்.

இந்திரபீடத்தின் நேர் மேலாக விண்ணில் அதை கூர்ந்து நோக்குவதுபோல நின்று நடுங்கியது. இந்திரபீடத்தை ஒரு மெல்லிய சரடால் கட்டி வான் நோக்கி தூக்க முயல்வதுபோல நகர்ந்தது. அப்போது மிகத்தொலைவிலென ஓர் இசையை அவன் கேட்டான். அவன் அறிந்திராத இசைக்கருவி. அது குழலா யாழா என்று அறிய முடியாதது. ஒற்றைச் சொல். ஆணையென கொஞ்சலென அருளென அது நின்றது. தான் அதைக் கேட்டதையே அது அவிந்தபின்னர்தான் அவன் அறிந்தான். வெறும் உளமயக்கா என அகம் வியந்தது. இல்லை இல்லை என நினைவு எழுந்து கூவியது.

சில கணங்களுக்குப் பின் அங்கிருந்த அனைவரும் ஒற்றைக் குரலில் வாழ்த்தியபடி விழித்தெழுந்தனர். ரைவத மலை குரல் எடுத்துக் கூவியது. “காற்றை ஏந்தியவன் புகழ் வாழ்க! குஜ்ஜர் குலத்தலைவர் புகழ் வாழ்க! ரைவதகர் புகழ் என்றென்றும் வாழ்க!” மலையின் குரலை முதல்முறையாக கேட்கிறோமென அர்ஜுனன் எண்ணிக் கொண்டான். வான்சரிவில் முகில்களிலிருந்து முழுநிலவு எழத்தொடங்கியது.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஇருவர்
அடுத்த கட்டுரைபிராமணர்களின் தமிழ்