இனிய ஜெயம்,
நேற்றைய கனவில் மசான காளி எழுந்து வந்தாள். பன்னிரு கைகளிலும் படைக்கலம் ஏந்திய பேய்ச்சி. இடதுகை சுண்டு விரல் நகத்தை கடித்தபடி சிருங்கார இளிப்பு. விழித்த நிமிடம் முதல் தொண்டை வறண்டு, கண்கள் எரிந்தபடி காய்ச்சல் போல ஒரு உணர்வு. ஏதேனும் ரத்த காவு வாங்கினால்தான் அடங்கும் போல.
ஹளபேடு கோவில் மொத்தமும் மானுட உள்ளுணர்வின் கலை வடிவம். இந்த செவ்வியலின் தீவிரம் உண்மையில் பித்துக் கொள்ள வைக்கிறது. கோவிலின் ஒரு படிமை விஸ்வரூபம் கொண்ட சிவனின் ருத்ர தாண்டவம். அவர் பாதம் அருகே மிக சிறிய உருவில் அதே மசான காளி.
கோவிலின் ஒரு மூலையில் சிறியதாக ஜேஷ்டா , எங்கெங்கு காணினும் நடமிடும் சரஸ்வதி. ஜேஷ்டா வுடன் உங்கள் சேட்டை கதையும், நடமிடும் சரஸ்வதியுடன் வெண்முரசு எழுதும் உணர்வு நிலையும் இணையும்போது சமகாலத்தில் உங்கள் படைப்புத் திறன் எனும் எழுச்சியின் எரிமலை வாய் குறித்து ஏதேதோ எண்ணம் எழுகிறது.
எழுந்ததும் முதல் வாசிப்பாக அமியின் குகை ஓவியங்கள் கதையை தேடி வாசித்தேன். வெளிநாடு. சுற்றிலும் கண் தொடும் தொலைவு வரை பொட்டல்வெளி. யாரோ அங்கே கொண்டு வந்து போட்டது போல நிலத்துக்கு சம்பந்தமே அற்றது போல ஒரு குன்று. அதன் அடிவாரத்தில் ஒரு குகை உள்ளே சில ஓவியங்கள். அடிவாரத்திலிருந்து இரண்டாயிரம் படிகள் மேலே ஏறினால் உச்சியில் ஒரு குகை அங்கே சில ஓவியங்கள்.
சுற்றுலா பயணிகளுடன் கதையின் நாயகன் [பெயரற்ற தமிழன்] அந்த குகை ஓவியங்களை காண அங்கு வருகிறான். அவன் இருக்கும் குழுவை வழிகாட்டி அழைத்து செல்கிறார். அடிவார குகை ஓவியங்களைக் கண்டதும், கதை சொல்லிக்கு பல்வேறு குழப்பங்கள். அந்தக் குகை முடிந்ததும் மலை ஏற்றம். அந்தக் குழுவில் அனைவரும் அடிவாரத்திலேயே தங்கி விட. [பயணத்தில் பலர் வழி தவறி தொலைந்து பிணங்களாக, எலும்புக் கூடுகளாக கண்டடையப் பட்டார்கள் என வழிகாட்டி சொல்கிறார்] நாயகன் உட்பட ஒரு ஐவர் மட்டும், சிகரம் தொட உடன் வருகிறார்கள்.
சிகர முனை குகையைஅடைவதற்குள் வழிகாட்டி கிட்டத்தட்டநாயகனின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாகி விடுகிறார். உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் அந்த ஓவியங்கள் மட்டுமே பதிலளிக்கும் என்கிறார். குகையை அடைந்ததும் அதற்குள் இருக்கும் ஓவியங்கள் மீது தனது விளக்கை கொண்டு ஒளி பாய்ச்சுகிறார். குரூரத்தின் உச்சமான ஓவியங்கள். நாயன்கன் ஓவியத்தில், சுற்றி உள்ள பயணிகளில், தன்னில் அந்த ஓவியங்களின் சாரத்தை காண்கிறான்.
குகையை விட்டு வெளியே வந்த கணம் முதல் ஒருவரும் பேசுவதற்கு ஏதும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
அமியின் அறியப்படாத கதைகளில் ஒன்றாக இது இருக்கும் என நினைக்கிறேன். துளி மிகை வார்த்தை இன்றி சூழல் வர்ணனையில் துலங்கி வரும் இக் கதை மொத்தமும், ஒரு ஆத்மீக சாதகன் கொள்ளும் பயணத்தின் குறியீடு தானே.
அந்த மலை நமது அல்லது ஒவ்வொரு தனி மனித அகம்.நமது மனத்தை தொடர்ந்து அவதானித்து காணும் முதல் சித்திரமே ,அமைதியே அந்த அடிவாரக் குகை. அடிவாரக் குகையில் அதை கண்டதே போதும் என பலர் தங்கி விடுகிறார்கள்.
வெகு சிலர் மட்டுமே தொடர்ந்து பயணிக்கும் பாதை இது. வழிகாட்டிதான் குரு வழிகாட்டி இல்லாவிட்டால் வழி தவற மட்டுமே வாய்ப்பு. குரு எதை காண வேண்டுமோ அங்கு ஒளி பாய்ச்சுகிறார். ஆம் அத்துடன் அவர் பணி முடிந்தது. பின் பயணிகள் காண்பதெல்லாம் அவரவர் மனக் குகை ஓவியங்களைத்தான்.
அந்த ஓவியங்கள் என்ன? அதைக் காண ஏன் இத்தனை சிரமமான பயணம்? அதை கண்டே ஆக வேண்டும் என ஒருவனை உந்துவது எது? கண்டதும் ஒருவன் எய்துவது என்ன?
இனிய ஜெயம், இன்று அந்த நாயகன் அடைந்த சொல்லின்மையே என்னுடையதும். இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இக் கணம் வரை நான் செய்த எதற்கும் எந்தப் பொருளும் இல்லை , என்று அப்பட்டமாக முகத்தில் அடித்து சொல்லி விட்டது ஹளபேடு.
இந்த நொடி நான் உணர்ந்துகொண்டிருக்கும் வெறுமையை, ஒரு பேரிடருக்குப் பின்னான அமைதியை அளித்த அந்த சிற்பிகள் மட்டும் என் கையில் சிக்கினால், கிழித்து குடல்மாலை சூடிய பின்பே ஓய்வேன்.
கடலூர் சீனு