ஜெ,
ஆயிரம் பேர் குறைகூறினாலும், கருத்து அடிப்படைவாதி என்று முத்திரை
குத்தினாலும், தவிர்க்கவே முடியாத படைப்பாளியாக, சிந்தனையாளராக நான்
வாசிக்கத்தொடங்கியது முதல் இன்று வரை இருந்துவந்துள்ளீர்கள். எஸ்
ராமசந்திரன் அவர்களின் வரலாற்றுப்பார்வை சிந்திக்க வைப்பதாய்
இருந்தாலும், கீழுள்ள பதிவின் வசவுகளை நீக்கி அதன் விளக்கத்தைப்பற்றி
உங்கள் கருத்து என்ன? எஸ் ராமசந்திரன் அவர்களை பரிந்துரைத்தவர் என்னும்
முறையில் பதில் அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை சாதி
அடிப்படைவாதம் என்று நினைப்பவர்கட்கு, நான் வெள்ளாளர் இல்லை, கள்ளர்
சேதிராயர் என்பதையும் கூறவிழைகிறேன். எழுதியவரும் கள்ளர் தான்.
http://vanathirayar.blogspot.in/2014/11/blog-post.html
ராஜாமனோரஞ்சன்
அன்புள்ள ராஜா
வரலாற்றெழுத்தின் முதல்தளம் என்பது பொதுவரலாற்றை அல்லது மொத்த வரலாற்றை எழுதுவது. இதை macro history என்கிறார்கள். அதற்கடுத்த தளம் நுண்வரலாற்றை, பகுதிகளின் வரலாற்றை எழுதுவது . இது micro history எனப்படுகிறது
தமிழ் வரலாற்றெழுத்தில் பொதுவரலாறுதான் இதுவரை எழுதப்பட்டுள்ளது. நுண்வரலாறு இப்போதுதான் ஆங்காங்கே எழுதப்படுகின்றன. அதில் சாதிகள், குலங்களின் வரலாறு மிக முக்கியமானது. அந்த நுண்வரலாறுகளின் மூலம் நாம் பொதுவரலாற்றை மேலும் விரிவாக்கமுடியும்
ஆனால் இன்றைய சூழலில் சாதிவரலாறு என்பது சாதிய அரசியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது. சாதியக்குழுக்களால் அது எழுதப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது. திட்டவட்டமான தரவுகளுடன் சரியான வரலாற்றியல் தர்க்கங்களுடன் அதை எழுதுவது அனேகமாக சாத்தியமில்லை என்னும் நிலை உள்ளது.
ஆயினும் தவிர்க்கமுடியாத ஒரு சமகால அறிவுச்செயல்பாடு அது. எஸ்.ராமச்சந்திரன் தமிழினி இதழில் எழுதிய வேளாளர் யார் என்னும் கட்டுரை ஓர் உதாரணம்
இந்தக்கட்டுரை எனக்கு பெரியதாக ஒன்றும் பிடிகிடைக்கவில்லை. நான் வாசித்துள்ள பகுதியே அல்ல. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை
இவ்வகைக் கருத்துக்களை முன்ஊகங்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். இன்றுகிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் இந்த ஊகங்களை வெவ்வேறு கோணத்தில் வரலாற்றாசிரியர்கள் விவாதித்து மெல்ல ஒரு பொதுமுனை திரண்டு வந்தபின்னரே நம்மைப்போன்ற பொதுவாசகர்கள் உறுதியான எதையேனும் பெற முடியும்.
இன்றைய சூழலில் இப்படியெல்லாம் நோக்க இடமிருக்கிறது என்பதை மட்டுமே இக்கட்டுரையிலிருந்து நான் பெற்றுக்கொள்கிறேன்
ஜெ