‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49

பகுதி ஐந்து : தேரோட்டி – 14

விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அதன் வாயிலில் நின்ற ஏவலன் தலைவணங்கினான். இளைய யாதவர் இயல்பாக “உள்ளே வருக” என்றபின் நுழைந்து குறடுகளை காலாலேயே உதறிவிட்டு துள்ளி மஞ்சத்தில் விழுந்து மல்லாந்து படுத்து ஒரு தலையணையை எடுத்து மார்பின்மேல் வைத்துக்கொண்டார். அவரிடம் எப்போதுமிருக்கும் அந்தச் சிறுவனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் புன்னகை செய்தான்.

“பிரபாசதீர்த்தத்திற்கு வந்தவர் என் அணுக்கரான கதர். ஆனால் அவரை நான் ஒரே ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “வரலாற்றின் முன் திகைத்து நிற்கும் ஓர் எளியவர் என தன்னை உணர்வதாக சொன்னார்” என்றான் அர்ஜுனன். “வரலாற்றை அறிந்தவர்கள் அதன் முன் திகைத்து நிற்பதில்லை. அதன் பொருளின்மையைக் கண்டு அயர்ச்சிதான் கொள்கிறார்கள். பின்னர் சிறுநகைப்பாக அதை முதிரச்செய்து அதிலிருந்து தப்புகிறார்கள்” என்றார் இளைய யாதவர். “வரலாறு என்று ஒன்று உண்டா என்ன? இருப்பது நினைவு மட்டுமே. அடிக்கடி தீப்பிடிக்கும் காடுகளில் தீப்பிடிக்காத நீரிலைக் கற்றாழைகள் வளர்ந்து காட்டுக்கு அரணிட்டிருப்பதை கண்டிருக்கிறேன். மரங்களுக்கும் வரலாற்று நினைவு உள்ளது.”

“சொல்லில் அமைந்த வரலாற்றையே நாம் அறிகிறோம். அது மிக மிக மேலோட்டமானது. கனவுகளிலும் சுஷுப்தியிலும் படிந்துள்ள வரலாற்றின் மேல் ஜாக்ரத்தில் மானுடன் செதுக்கி வைக்கும் வரலாறு அது. பலசமயம் ஆழத்து வரலாற்றை அஞ்சியோ கூசியோ அதை மறைப்பதற்காக இதை எழுதுகிறான். இது பொய் என அவன் அறிந்தமையாலேயே இதை நிலைநாட்ட சொல்லடுக்குகளை குவிக்கிறான். சொல்லுக்கு அருகே வாளையும் காவல் வைக்கிறான்” என்று இளைய யாதவர் சொன்னார். “அத்தனை வரலாறுகளும் குன்றுமேலிருந்து நோக்கும்போது மானுடரின் மாளிகைகள் எளிய சிதல்புற்றுகளாகத் தெரிவதுபோல பொருளிழந்து தெரிகின்றன.”

அர்ஜுனன் “அன்று என்ன நிகழ்ந்தது?” என்றான். “தாங்கள் அரிஷ்டநேமியுடன் போரிட்டீர்களா?” இளைய யாதவர் “ஆம்” என்றார். “ஆனால் துவாரகையின் வரலாறுகளில் அப்போர் இல்லை. வேறேதோ வரலாற்றில் அது இருந்துகொண்டும் இருக்கும். அக்ரூரர் அவ்வரலாற்றை அழிக்க முயல்கிறார். அதை முற்றாக அழிக்க வேண்டுமென்றால் கம்சரைப் போல கருக்குழந்தைகளை தேடித்தேடி கொல்லவேண்டும். அதைவிட அதுவும் என் புகழென நீடிக்கட்டும் என விட்டுவிட்டேன்.”

இளைய யாதவர் கைகளை நீட்டி உடலை நெளித்து “நீண்டபயணம்… இங்கு வருவது எளிதல்ல. புரவிப்பாதை மட்டுமே சீராக உள்ளது” என்றார். பின்பு “நானும் அவரும் போரிட்டோம். துவாரகையின் செண்டுவெளியின் நடுவே எங்கள் இருவரின் மற்போருக்கென களம் அமைக்கப்பட்டிருந்தது” என்று சொன்னார். “நாங்கள் தோள்பொருதும் செய்தி முதலில் துவாரகையெங்கும் பரவியபோது எழுந்த உணர்வுகளை ஒற்றர்கள் எனக்கு தெரிவித்தனர். எளிய மக்கள் பதற்றமும் தீவிரமும் அடைந்து பாம்பு நுழைந்த மரத்தின் பறவைகள் போல ஓசையிட்டு பேசிக்கொண்டிருந்தனர். முதியவர்கள் கைகூப்பி தெய்வங்களுடனும் மூதாதையர்களுடனும் வேண்டிக்கொண்டிருந்தனர். பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். காலை முதலே நகரம் வேண்டியவர்களின் இறப்புக்கு துயர் கொள்வதுபோல் அமைந்திருந்தது. என் உப்பரிகை முகப்பிலிருந்து நகரை நோக்குகையில் நனைந்த மரவுரி ஒன்றால் துவாரகையை மூடி வைத்திருப்பது போல் ஒலிகள் அடங்கி ஒலிப்பதை கேட்டேன்.”

போருக்கு ஃபால்குன மாதம் கருநிலவுநாளின் பிற்பகலை குறித்திருந்தனர். ஏழுநாட்கள் அதற்காக காத்திருந்தேன். முதல் நாள் இருந்த உணர்வெழுச்சிகள் மெல்லமெல்ல மாறுவதை கண்டேன். நான் தோற்றுவிடுவேனோ என்னும் ஐயமும் அச்சமும் துவாரகையினருக்கு இருந்தது. அவர்கள் தங்களுக்குள் பிரிந்து பேசப்பேச அவை அகன்றன. மூத்தவர் வெல்லக்கூடுமோ என்னும் ஐயத்தில் அப்போரை தங்கள் உள்ளங்களில் மீளமீள நிகழ்த்திக்கொண்டனர். அப்போரில் அவர் தன் தூய தசைவல்லமையால் வெல்வதை கற்பனையில் கண்டனர். அதை வியந்து பின்னர் அதை விரும்பத்தொடங்கினர். அவர் வெல்லவேண்டுமென்ற விழைவாக அது மாறியது. பின்னர் நான் தோற்கவேண்டுமென்னும் விழைவென அது உருக்கொண்டது.

பார்த்தரே, எளிய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அம்மாற்றத்தால் தங்கள் வாழ்வு தலைகீழாகுமென்றாலும் சரி. முந்தைய கணம் வரை சார்ந்திருந்த ஒன்று சரிவதைக்கூட அதன் பொருட்டு விழைவார்கள். ஏதேனும் ஒன்று நிகழ்ந்து தாங்கள் கொண்டாடிய ஒன்று வீழ்ச்சியடையுமென்றால் அதில் அவர்களின் அகம் களிக்கும். எழுந்தவை அனைத்தையும் நிலம் இழுப்பதுபோல எளியோர் வென்றவரையும் நின்றவரையும் பற்றிச்சரிக்க ஒவ்வொரு கணமும் தவிக்கிறார்கள். இப்புவியை ஆளும் வல்லமைகளில் ஒன்று எளியோரின் வஞ்சம். அதை நன்கறிந்திருந்தபோதும்கூட அன்று நான் என் நகர்மக்களின் விழிகளைக் கண்டு அஞ்சினேன். ஒவ்வொருவரும் என் விழிகளைத் தவிர்த்து மிகையாக வணங்கி கடந்துசென்றனர். என் முதுகில் நோக்கு நட்டு தங்கள் உள்ளவிழைவை உணர்ந்து பின் பிறர் விழிகளை நோக்கி அவ்விழைவை அவர்கள் அறிகிறார்களா என்று கூர்ந்தனர். அங்கும் அதையே காணும்போது தங்கள் பேருருவை தாங்களே கண்டு திடுக்கிட்டனர்.

ஆனால் நாள் நெருங்க நெருங்க அவர்களின் தன்னடக்கமும் கரவும் மறைந்தன. தாங்களனைவரிலும் நுரைப்பது ஒரே விழைவு என அவர்கள் உணர்ந்தபோது ஒற்றைப் பெரும்பரப்பென ஆயினர். அந்த விராடவடிவம் மானுடர் எவருக்கும் அஞ்சாதது. கரப்பதற்கோ நாணுதற்கோ ஏதுமில்லாதது. பேருருக்கொண்ட அம்முகத்திலிருந்த கசப்பும் இளிப்பும் என்னை பதறச்செய்தன. சத்யபாமையை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். முதலில் அவள் நானே வெல்வேன் என எண்ணியிருந்தாள். பின் நகர்மக்களிடமிருந்து நான் வெல்லமுடியாதென்னும் உணர்வை அவள் அடைந்தாள். அவள் அடைந்த அனைத்தையும் இழக்கப்போகிறாள் என்னும் எண்ணம் அவளை துவளச்செய்ததை கண்டேன். அவ்வெண்ணம் வலுப்பெறுந்தோறும் என் மீதான கசப்பாக மாறியது. கசப்பு மூப்படைகையில் ஏளனமாகிறது. ஏளனம் பழுத்து புறக்கணிப்பாகிறது. என்னை அவள் விழிகள் நோக்குவதேயில்லை என்னும் நிலை வந்தது.

குறித்த நாளில் மற்போருக்குரிய தோலாடையை அணிந்து அணிகளைந்து அரங்குக்கு சென்றேன். அங்கு விழிகளால் ஆன வேலி போல மக்கள் சூழ்ந்திருந்தனர். செண்டுவெளியின் செம்மண் முற்றத்தில் மண்ணை கிளைத்து கூழாங்கல் அகற்றி பொடிப்புழுதி சமைத்து வைத்திருந்தனர். அக்ரூரரே போர் நடுவராக இருக்க ஆணையிட்டிருந்தேன். வெண்கச்சையும் வெண்தலைப்பாகையும் அணிந்து அவர் அங்கு நின்று ஏவலருக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தார். நான் மேடைக்குச் சென்றதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவையும் மிகத்தயங்கி ஆங்காங்கே தனிக்குரல்களாகவே ஒலித்தன. என்னைக் கண்டு நிலவெழுகையில் கடலலைகள் போல் ஒலிக்கும் துவாரகையின் உவகைக்குரல் எழவில்லை.

அதைக்கண்டு என் வீரர் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பும்படி மக்களை ஊக்கினர். உடனே வாழ்த்தொலி மும்மடங்கு பெருகி எழுந்தது. இயல்பாக எழும் வாழ்த்தொலி பல்லாயிரம் குரல்கள் கூடிய வெற்று முழக்கமாக இருக்கும். ஆணைக்கேற்ப எழுந்த வாழ்த்தொலி சீரான அலைகளாக இருந்தது. பெருங்கூட்டத்திற்கும் ராணுவத்திற்கும் இடையேயான வேறுபாடு போல தோன்றியது. நான் என் மக்களின் முகங்களை ஒவ்வொருவராக அணுகி நோக்க விரும்பினேன். ஒவ்வொருவருடனும் எனக்குள்ள உறவு ஒவ்வொரு வகையானது. பிறிதொன்றிலாதது. ஆயிரம் உளநாடகங்களால் அமைக்கப்பட்டது. அணுக்கமும் விலக்கமுமாக அலைபாய்வது.

மல்லர்களுக்குரிய தாழ்வான பீடத்தில் அமர்ந்தேன். இரு ஏவலர்கள் என் தசைகளை நீவி விரல்களை சொடுக்கெடுத்து உடலை போருக்கு சித்தமாக்கினர். என் விழிகளை சந்தித்த அக்ரூரர் தலையசைத்து திரும்பி ஏவலரிடம் ஆணையிட்டுக் கொண்டு விலகிச்சென்றார். சத்யபாமா வருவதற்கான மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் கேட்டன. ஆள்கூட்டம் அவளுக்கு வழக்கமான வாழ்த்தோசையை எழுப்புவதை கண்டேன். அரசி முகம்காட்டும் நாள் அல்ல அது என்பதனால் பட்டுத்திரைச்சீலையை மூங்கில்சட்டங்களில் பற்றிய சேடியர் அவளை மறைத்து சூழ்ந்து வந்தனர். அரசியருக்குரிய மேடையும் வெண்பட்டால் மறைக்கப்பட்டிருந்தது. அவள் உள்ளே அமர்ந்ததும் திரைமறைவுக்கு மேல் வெண்சாமரம் எழுந்து அடங்கியது. அது வரை வாழ்த்தொலிகள் எழுந்தன. அந்த வெண்பட்டுத்திரைச்சீலை அவளாக மாறி அரங்கை நோக்கத் தொடங்கியது.

மறுபக்கமிருந்து அரிஷ்டநேமி நடந்து வந்தார். அவர் அவை நுழைந்ததும் துவாரகையின் குடிகள் அனைவரும் பெருங்குரலெடுத்து அவரை வாழ்த்தினர். அவ்வொலி சூழ்ந்திருந்த மாளிகை முகடுகள் அனைத்திலிருந்தும் திரும்பி வந்தது. நகரின் பருப்பொருட்கள் அனைத்தும் குரல் கொண்டவை போல் தோன்றின. ஆனால் அவ்வோசை எதையும் கேளாதவர் போல முற்றிலும் வேறெங்கோ இருப்பவர் போல நடந்து வந்து எனக்கெதிரே கற்பீடத்தில் அமர்ந்தார். அவர் அணிந்திருந்த பழைய மரவுரியாடையை ஏவலர் கழற்றினர். களைவதற்கு அவர் அணியேதும் அணிந்திருக்கவில்லை. அவரது பெருந்தோள்களில் இறுகிய தசைகளை வீரர்கள் நீவி சீரமைத்தனர். உள்ளங்கால் முதல் முடி வரை அவரது உடலை ஒவ்வொரு தசையாக நோக்கினேன்.

பார்த்தா, ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒரு முறையே பழுதில்லாத பேருடலை தெய்வங்கள் சமைக்கின்றன என்பார்கள். தலை முறைகளுக்கு ஒரு தசையை முழுமை பெறச்செய்கின்றன தெய்வங்கள். பின் அத்தனை திசைகளையும் கூட்டி ஒரு மனிதனை படைக்கின்றன. அவன் தெய்வங்களுக்குரிய சிறந்த படையல். அவன் அழகு மானுடர் துய்ப்பதற்குரியதல்ல. அதை அவனும் அறிந்திருப்பான். ஆகவே அவன் உள்ளம் மண்ணில் எங்கும் தோய்வதில்லை. அவன் மண்ணில் மலர்ந்து விண் நோக்கி உதிரும் மலர் என்கின்றன நூல்கள். முரசு முழங்கி என் உடல் அதிர்ந்து விழிப்பதுவரை அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன்.

அக்ரூரர் குறுமேடையில் ஏறி நின்று கைகாட்ட ஓசைகள் அடங்கின. போர் முரசு முத்தாய்ப்பாக மும்முறை விம்மி அமைய கொம்புகள் பிளிறி ஓய்ந்தன. அக்ரூரர் உரத்த குரலில் அங்கு நிகழும் மற்போரின் முறையை அறிவித்தார். அது வெறும் உடல்வல்லமையால் மட்டுமே வெற்றிதோல்விகள் முடிவாகும் வன்யம் என்னும் போர்முறை. ஐந்து தடைகள் மட்டுமே அதன் எல்லைகள். இடைக்கு கீழ் தாக்கலாகாது. தலைக்கு மேல் கை தூக்கலாகாது. தசைகள் அன்றி பிற படைக்கலங்கள் பயன்படுத்தலாகாது. அவமதிக்கும் சொற்கள் எழலாகாது. விழிகளை நோக்கலாகாது.

அக்ரூரர் எங்களிடம் “வீரர்களே, போர்முறைகள் இப்புவியில் பல்லாயிரம். போர்களுக்கெல்லாம் அன்னை என்று மற்போரை சொல்கிறார்கள், ஏனெனில் கைகளற்ற புழுக்களும் செய்யும் போர் அது. தெய்வங்களுக்கு மிக உகந்தது. மானுடர் கண்டறிந்த எப்படைக்கருவியும் அதில் இல்லை. தெய்வங்கள் சமைத்த படைக்கருவிகளான கைகள் மட்டுமே உள்ளன. இரு மானுடர்களின் ஆற்றலை எடை போடுவதற்கு மற்போருக்கு நிகரான பிறிதொரு வழிமுறை இல்லை. இங்கு நிகழ்வது போரல்ல வழிபாடென்றே ஆகட்டும். நமது மூதாதையரும் குடித்தெய்வங்களும் இங்கெழுந்து இப்படையலை ஏற்றுக்கொள்ளட்டும். வெற்றி தோல்வி எவையாயினும் அவை நம் குடிசிறக்கவே பயன்படட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

நான் தலைவணங்கி எழுந்து அரங்கின் நடுவே சென்று நின்றேன். எனக்கென ஓரிரு குரல்களே அங்கு ஒலிக்கக் கேட்டேன். நான் செல்வதை பொருளிலாது நோக்கி அமர்ந்திருந்த அரிஷ்டநேமியை வீரர் ஊக்க ஆம் என தலையசைத்து எழுந்து அரங்கை நோக்கி தலைவணங்கி பெருங்கால்களை எடுத்துவைத்து வந்தார். என் முன்னால் அவர் வந்து நின்றபோது புயல்பட்ட புதர்க்கூட்டம் போல துவாரகையின் மக்கள் கொந்தளித்து கைவீசி கூச்சலிட்டனர். நாங்களிருவரும் பொடிகிளைத்துக் கிடந்த மல்லரங்கில் எதிரெதிர் நின்றோம். அக்ரூரர் கைகாட்ட முரசு இமிழ்ந்து அடங்கியது. போர் தொடங்குவதற்கான கொம்புக்குரல் எழுந்தது.

இருகைகளையும் விரித்து கால் பரப்பி என் முன்னால் அவர் நின்றார் . நண்டுக்கொடுக்கு போல கைகள் விரிந்திருக்கும் அந்நிலைக்கு கடகஸ்தானம் என்று பெயர். போர்க்கலை பயிலாதவர் என்றாலும் அவர் இயல்பாகவே அந்நிலையை கொண்டிருந்தார். ஏனென்றால் அது கையுள்ள விலங்குகளுக்கு இயல்பானது. தாக்குதலை எதிர்கொள்கையில் கரடியும் குரங்கும்கூட அந்நிலையில் நிற்பதை கண்டிருக்கிறேன். அதற்கு நிகரென இருகைகளையும் நீட்டி விருச்சிக ஸ்தானத்தில் நான் நின்றேன். என் ஒருகால் தேளின்கொடுக்கென பின்னால் நீண்டிருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்காது உடலால் நோக்கியபடி இணையடி எடுத்து வைத்து சுற்றி வந்தோம். சூழ்ந்திருந்த ஓசைகள் அடங்கி மூச்சொலிகளும் ஆடைகளில் காற்றோடும் ஒலிகளும் கேட்கும் அளவு அமைதி நிரம்பியது. ஒவ்வொரு தசையும் எதிர்உடலில் அதற்கிணையான பிறிதொரு தசை இருப்பதை உணரும் கணம். ஒவ்வொரு கையசைவும் எதிர்கையசைவை உருவாக்கும் தருணம். உடல் உடலை முழுதறியும் தருணம் மற்போரில் அன்றி வேறெங்கும் நிகழ்வதில்லை.

நுண் உடலை நுண்உடல் அறிந்தபின்னரே பருவுடலை பருவுடல் சந்திக்கிறது. அப்போது எழும் முதல் திடுக்கிடல்தான் மற்போரின் உச்சம். தெய்வங்கள் வகுத்த கணத்தில் இடியோசை போல் இருவருக்குள்ளும் எழுந்த தசைமோதும் ஒலியை கேட்டோம். புழுதி எழுந்து எங்களை மூடிக்கொண்டது. எங்கள் கைகள் பிணைந்திருந்தன. கால்கள் மண்ணை உதைத்து விசை கொண்டன. இரு நாகங்கள் தழுவி இறுக்கி ஒன்றையொன்று நிகர் செய்து அசைவிழந்தன. இரு புழுக்கள் ஒன்றை ஒன்று உண்ணமுயன்றன.

அவரது கால்கள் என் கால்களுக்கு அருகே வந்தன. விருச்சிகமுறைப்படி என் கைகளால் அவர் கைகளைப்பற்றி நிறுத்தியபின் வலக்காலை நீட்டி அவரது இடக்காலை மண்ணிலிருந்து விலக்க முயன்றேன். அவை நெகிழ்ந்தால் அக்கணமே அவரைப்புரட்டி நான் மேலேறிக்கொள்ள முடியும். ஆனால் ஆயிரம் ஆண்டுகால அடிமரம் போல அவை மண்ணில் வேரோட்டி இறுகியிருந்தன. ஒரு கணமேனும் என்னால் அவற்றை அசைக்க முடியவில்லை. அவரது விலா எலும்புகளுக்குக் கீழ் மடிந்திருந்த குருத்தெலும்பில் என் தலையை வளைத்து ஓங்கி முட்டினேன். பாறை மேல் தலை முட்டி எலும்பு அறைபடும் வலியை மட்டுமே உணர்ந்தேன்.

மற்போரின் போர்சூழ்ச்சிகள் எதையும் அவர் செய்யவில்லை. வெறும் தசைக்குவியலாகவே என்னை எதிர்கொண்டார். நான் கற்ற முறைமைகள் அனைத்தும் முற்றிலும் பயனற்றுப் போயின. என் கைகளும் கால்களும் ஆலமரத்து வேர்களால் கவ்வப்பட்ட கல்மண்டபம்போல் அசைவிழந்தன. நிமிர்ந்து அவர் முகத்தை நோக்கியபோது என் அகம் அதிர்ந்தது. அவர் என்னை கனிந்து நோக்கிக்கொண்டிருந்தார். முலைகனிந்த அன்னை மார்போடு அணைப்பதுபோல் என்னை இறுக்கியிருந்தார். என் உள்ளம் தவிக்கத்தவிக்க உடல் நெகிழ்ந்துகொண்டே சென்றது. அவரது அணைப்பில் நான் குழந்தையாக ஆனேன்.

என் இருகைகளையும் பற்றிச் சுழற்றி தலைக்கு மேல் தூக்கி மண்ணில் ஓங்கி அறைந்தார். பேருடலுடன் என் மேல் சரிந்து முழங்கால்களால் என் கால்களை மண்ணுடன் அழுத்தி இடக்கையால் என் வலத்தோளை பற்றிக் கொண்டார். என் வலக்கால் மேல் அமர்ந்து இடக்கையை பற்றி முகத்தை பார்த்தார். இனி அவர் செய்வதற்கொன்றே எஞ்சியிருந்தது. யானை மத்தகத்திற்கு நிகரான பெருந்தலையால் ஓங்கி என் நெஞ்சில் முட்டுவது. என் இதயம் உடைந்து குருதியும் சலமுமென வாயில் மூச்சுடன் கலந்து சிதறும். தேர்ச்சகடத்தில் சிக்கிய எலி என நான் சிதைந்து உயிர்துறப்பேன்.

சில கணங்கள் அங்கே அசைவற்றிருந்தபின் என்னை விட்டு அவர் எழுந்தார். இருகைகளாலும் தன் உடலில் படிந்த புழுதியைத் துடைத்தபின் திரும்பி அவை நோக்கி கை கூப்பினார். நான் எழுந்து கை கூப்பியபடி அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என்னை யாரிவன் என்பது போன்ற பார்வையுடன் சிலகணங்கள் விழிகூர்ந்தபின் குனிந்து துவாரகையின் ஒரு பிடி மண்ணை அள்ளி எனக்கு நீட்டினார். இருகைகளையும் நீட்டி அதை நான் பெற்றுக்கொண்டேன். என் தலைமேல் தன் வலக்கையை வைத்து வாழ்த்தியபின் ஒரு சொல் சொல்லாமல் திரும்பி நடந்து மேடையேறி மறுபக்கம் சென்று மறைந்தார்.

அதுவரை ஓசையற்றிருந்த துவாரகையின் மக்கள் பெருங்குரலில் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். யாருக்கான வாழ்த்து அது என என்னால் கணிக்கமுடியவில்லை. ஆனால் அது அவர்கள் விழைந்த முடிவு. அவர்கள் எதையும் இழக்காமல் விரும்பியதை அடைந்ததன் மகிழ்வா அது? இல்லை, அவர்களின் சிறுமைகளை கோடைகாலத்துமுதல்மழை புழுதியை அடித்துக்கொண்டு செல்வதுபோல அவரது பெருமை கழுவியகற்றியதன் நிறைவா? பட்டுத்திரையை நோக்கினேன். அது அசைவற்றிருந்தது.

“அந்தப் பிடி மண்ணை என் தலையிலும் நெஞ்சிலும் வைத்து வணங்கியபின் அவையை சூழநோக்கி தலை வணங்கி நான் அரங்கு விட்டகன்றேன்” என்றார் இளைய யாதவர். “மூத்தவர் துவாரகையிலிருந்து வெளியேறி பாலையின் விளிம்பிலிருந்த சுஸ்ருதம் என்னும் சோலையிலிருந்த சிறிய குடிலில் குடியேறினார். அங்கு மக்கள் அவரைத் தேடிச்சென்று அடிபணியத்தொடங்கினர். அங்கிருந்து மீண்டும் விலகி சுபார்ஸ்வம் என்னும் தொலைதூர முட்காட்டில் குடியேறினார். அங்கும் மக்கள் செல்லத்தொடங்கவே மீண்டும் விலகி பாலையில் இருந்த அறியாத பாறைவெடிப்பு ஒன்றுக்குள் தங்கினார். துவாரகையிலிருந்து அவருக்கு உணவு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தேன்” இளைய யாதவர் சொன்னார்.

மீண்டும் அவரைச்சென்று பார்த்தபோது அவர் மிகவும் அமைதியிழந்திருப்பதை கண்டேன். அவரது விரல்கள் அசைந்துகொண்டே இருந்தன. உதடுகளில் ஏதோ சொல் கசங்கிக்கொண்டிருந்தது. எதையும் நிலைத்து நோக்காமலிருந்தன விழிகள். “மூத்தவரே, தாங்கள் நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றேன். “ஆம், எங்கும் என்னால் அமரமுடியவில்லை. என் உள்ளத்தில் ஊழ்கம் நிலைக்கவில்லை” என்றார். “ஏன்?” என்றேன். “அறியேன்” என்று சொல்லி எழுந்துகொண்டு “நீ விலகிச்செல். நான் மானுடர் எவரையும் நோக்க விழையவில்லை” என்றார்.

“நான் தங்களை சந்திப்பதை விலக்காதீர் மூத்தவரே. தங்கள் அண்மையில் நான் அறிவதை வேறெங்கும் அடையவில்லை” என்றேன். “அந்த மற்போர் நான் அமைந்த ஊழ்கங்களில் தலையாயது. தங்கள் கையில் அமைந்த அக்கணங்களில் நான் அனைத்திலிருந்தும் விடுபட்டு எழுந்தேன்.” அவர் அப்பால் நோக்கியபடி நின்று “ஆனால் உன்னை தூக்கி அறைந்த அக்கணம் நான் அனைத்திலும் ஒருகணம் சிக்கிக்கொண்டேன்” என்றார். “அப்போது நான் துவாரகையை வென்றேன். சத்யபாமையை மணந்து சக்ரவர்த்தியாக பாரதவர்ஷத்தை ஆண்டேன்.”

நான் சொல்லின்றி அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். “நான் முழுமையாக தோற்றுவிட்டேன் இளையோனே. நான் அடைந்த அத்தனை கல்வியையும் ஊழ்கவல்லமையையும் இழந்து தொடங்கிய புள்ளிக்கே மீண்டு வந்துவிட்டேன்.” நான் என்ன சொல்வதென்று தெரியாமல் “ஆம், ஆனால் இது வழுக்குமரம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது…” என்றேன். “வழுக்குமரம்” என்று அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். தலையை அசைத்தபின் “இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் புதியதாக தொடங்கவேண்டியிருக்கிறது. முற்றிலும் புதிய ஒன்று. இவையெல்லாம் அல்ல என்று என் உள்ளம் அனைத்தையும் விலக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கு செல்வதென்று அறியாமல் தவிக்கிறது” என்றார்.

மூன்றுமாதகாலம் அவர் அங்கே தனிமையில் இருந்தார். அப்போதுதான் இங்கே ரைவதமலையில் ரைவதகருக்கான விழவுநாள் வந்தது. யாதவர்கள் கிளம்பியபோது நான் அவரிடம் சென்று ரைவதமலைக்கு வரும்படி அழைத்தேன். பயணங்களில் ஆர்வமில்லை என மறுத்துவிட்டார். “ரைவதகரின் கதையும் தங்கள் கதைக்கு நிகரானதுதான் மூத்தவரே” என்றேன். “மண்ணில் நிகரற்ற படைக்கலம் ஒன்றை அடைந்தவர். அதைத் துறக்கும் முடிவுக்கு வந்ததை நான் ஒவ்வொருநாளும் எண்ணுவதுண்டு” என்று நான் சொன்னபோது அவர் தளர்ந்த விழிகளுடன் என்னை நோக்கினார். “வாருங்கள்” என்றேன். பெருமூச்சுடன் “சரி கிளம்புவோம்” என்றார்.

சென்றஆண்டு இதே நாளில் இங்கு நானும் அவரும் வந்தோம். முற்றிலும் தனித்தவராக ஒரு சொல்கூட பேசாது அவர் உடன் வந்தார். அஞ்சிய காளை ஒன்றை மெல்ல தேற்றி கொண்டுவருவதுபோல இருந்தது அப்பயணம். இந்த மலைக்கு வந்தபோது அவர் முற்றிலும் ஆர்வமிழந்தார். “நான் மலையேற விழையவில்லை இளையோனே. இங்கே இருந்துகொள்கிறேன்” என்றார். “இல்லை, மலைமேல் உள்ள ரைவதகரின் ஆலயம் வரை வாருங்கள்… வந்த பின்னர் அங்கு செல்லாமலிருப்பது முறையல்ல” என்று அழைத்தேன். என்னுடன் மலையேறும்போது அவர் எதையும் நோக்கவில்லை. அருகர் ஆலயங்களும் அடிகள்பாறைகளும் அவரை எவ்வகையிலும் கவரவில்லை.

ரைவதகரின் ஆலயத்தின் முகப்பில் அயலவர் போல விழித்து நோக்கிக்கொண்டு நின்றார். உடனே திரும்பிச்செல்லத்தான் அவர் விழைகிறார் என்று தோன்றியது. அரசமுறைமைகளுக்கெல்லாம் வெற்றுச்சிலைபோல நின்று எதிர்வினையாற்றினார். இரவில் என்னுடன் இதே மாளிகையில் இதே படுக்கையில் படுத்திருந்தார். பெருமூச்சுவிட்டுக்கொண்டும் புரண்டுகொண்டும் இரவை கழித்தார். “என்ன எண்ணுகிறீர்கள் மூத்தவரே?” என நான் பலமுறை கேட்டேன். இல்லை என தலையை மட்டும் அசைத்தார்.

காலையில் அவர் படுத்திருந்த மஞ்சம் ஒழிந்து கிடந்தது. அதைக் கண்டதும் என் உள்ளம் அதிர்ந்தபோதே அதை எதிர்பார்த்திருந்ததையும் உணர்ந்தேன். ஏவலர்களை அனுப்பி தேடச்சொல்லிவிட்டு நானும் மலையில் தேடத்தொடங்கினேன். அவர் துவாரகைக்கு திரும்பியிருக்கமாட்டார் என உறுதியாகவே தெரிந்தது. ரைவதகரின் ஆலயத்தின் அருகிலோ பிற அருகர் ஆலயங்களிலோ அவர் இருக்கவில்லை. உச்சிவெயில் எழத்தொடங்கிய நேரத்தில் ஓர் ஏவலன் அவரை கண்டடைந்தான். மலையின் மறுசரிவில் ஒரு பாறைக்கடியில் தனிமையில் அமர்ந்திருந்தார். நான் அருகே சென்று “மூத்தவரே” என்றேன். என்னை நோக்கி “நான் இங்கேயே இருக்கிறேன் இளையோனே. நீ திரும்பிச்செல்” என்றார்.

“அன்று சென்றபின் இன்றுதான் திரும்பி வந்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “அன்றிருந்தவர்தான் இன்றிருக்கிறாரா என்று தெரியவில்லை.”

முந்தைய கட்டுரைவிருதரசியல்
அடுத்த கட்டுரைடம்மி