சுகுமாரன்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

பிரிவின் விஷம் வாசித்தேன். கதிகலங்கிப்போனேன். சுகுமாரனின் இந்தக்கவிதையை நான் படித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அது சுகுமாரனின் மிகச்சிறந்த கவிதை என்று எண்ணுகிறேன். ‘நீ எதிர்ப்பட்ட கணம் ஆனந்த வெளியாக ததும்பி நிற்கிறது நினைவில்’ என்ற இடம் மனதை மிகவும் பாதித்தது. ஒரு கடுமையான விரிவுத்துயருக்குள் ஆனந்த வெளி ஒன்றும் ததும்பி நிற்கிறது. ஆச்சரியம்தான். மனசு எப்படியெல்லாம் தன்னை உருவாக்கிக்கொண்டு முன்னே செல்கிறது. மனசும் நாக்கும் ஒன்று. எப்போதும் இனிப்புக்காக ஏங்கி அலைந்துகொண்டே இருக்கின்றன அவை. ஒரு துளி என்றால் ஒரு துளி. அதையும் விடுவதில்லை. சாகக்கிடக்கிற முதியவர்களின் வாயிலே ஒரு சொட்டு தேன் விட்டால் நாக்கு நெளிந்து வந்து சப்பி ரசிக்குமாம்.

ஏராளமான வரிகள் மிக சூட்சுமமாக மனசு பிரிவை எதிர்கொள்ளக்கூடிய விதத்தை எடுத்துச் சொல்லியிருக்கின்றன ஜெ. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கவிதை. சுகுமாரன் தமிழின் பெரிய சொத்து. இந்தக்கவிதை எனக்கு பல சுகுமாரன் கவிதைகளை ஞாபகப்படுத்தி தொட்டுத் தொட்டுச் செல்கிறது. ‘தைல மணமுள்ள காற்றில் நிறைந்திருக்கின்றன என் இளமை நினைவுகள்’ என்ற வரியும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமானது. சிறு வயதில் நானும் ஊட்டியில் வளர்ந்தேன்

ஜெயசேகர்

**
 

அன்பு ஜெ.எம்.

குருவணக்கம்.
       பிரிவு பற்றிய கவிதைக்கு ,உங்கள் வாழ்க்கை அனுபவத்தையே சான்று காட்டி விளக்கியது,  தூக்கம் தொலைக்கச்செய்தது.   என் அம்மா,கிட்டத்தட்ட எண்பதை நெருங்கும் தருவாயில்,கடுமையான நோய் வாய்ப்பட்டு இறந்ததை -15 ஆண்டுகள் கடந்த பின்னும்- ஜீரணிக்கஇய்லாமல் ,சில வேளைகளில் நான் கையற்று(ஒரே மகள் என்பதால்)தவிப்பதுண்டு.அவ்வாறிருக்க ,அகாலமாய்…,
அவல முடிவாய் அம்மாவை இழந்த  பிரிவின் சோகம் எப்படி உங்களைப்பாதித்திருக்கும் என்பது,நன்றாகவே புரிகிறது.ஆனாலும் கூட-சில ஆண்டுகள் அதனால் அலைக்கழிவு பட்டபோதும் -அதிலிருந்து மீட்டுக்கொண்டு,நீங்கள் இத்தனை பெரிய ஆளுமையாக வளர்ந்திருப்பதே உங்கள் தாய்க்கு-அவர்களின் நினைவுக்கு நீங்கள் செலுத்திய உண்மையான அஞ்சலி என்று எனக்குப்படுகிறது.   சோகத்தின் சுவடுகள் என்றும் ஆறாதவைதான்.ஆனாலும் ,அதிலிருந்து ஒரு கட்டத்தில் மேலெழுந்து நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்வைப்பொருள் பொதிந்ததாக-முடிந்தால் உன்னதங்களைக்கூட எட்டுவதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதே உங்கள் வாழ்வு,எனக்கு வழங்கும் செய்தி.

எம்.ஏ.சுசீலா.

**

வணக்கம் குரு.,
            பிரிவின் துயர், என்னைப்போல வெளிநாடுகளில் வாழும் தொழிலாளர்களின் தற்க்காலிக பிரிவின் துயரத்தை அனுபவித்தும்,கவனித்து கொண்டும் தான் இருக்கின்றேன். எங்களின் இந்த பிரிவு சமயத்தில் சில உறவுகளின் நிரந்தர பிரிவாக ஆகிவிடும் அவலமும் உள்ளது.முதற்பெண்ணுக்கு எழுதப்பட்ட கவிதை வரிகளானாலும், பிரிவின் வலி மீண்டும் என் அப்பாவை நினைவுபடுத்திவிட்டது..
(பிரிவுதான் நிரந்தரம்,உறவுகள் தற்க்காலிகம் என்ற வரிகளை எத்தனை மனங்களால் கிரகித்துக்கொள்ள முடியும்!!?)
ஏன் சில இலக்கிய கலைஞர்களின் சந்திப்பின் போது மதுவும் ஒரு அங்கம் வகிக்கிறது? உங்கள் ஊட்டி இலக்கிய சந்த்திப்புகளின் போதும் இதற்கு அனுமதிக்கிறீர்களா?
                                                               அன்புடன் மகிழவன்.
   

அன்புள்ள மகிழவன்

எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலைஞர்கள் ஏன் குடிக்கிறார்களெ ந்ற கேள்விக்கு எளிதில் பதில் சொல்ல முடியாது. பொதுவாக ஒரு உவமை சொல்கிறேன். பத்தாம் வகுப்புக் குழந்தை வருடத்தில் முக்கால்வாசி நாள் நாலாம் வகுப்பில் படிக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தால் அது சலித்தும் சோர்ந்தும் போகும் அல்லவா அதுதான். எழுத்தாளர்கள் எழுதும்போது கலைஞர்கள் கலையின் போது ஓர் உச்சநிலையில் இருக்கிறார்கள். அழகும் ஒத்திசைவும் முழுமையும் கொண்ட ஒரு உலகம் அது. கனவுபோல. அங்கிருந்து கீழே வந்து உலகியலில் ஈடுபடும்போது தங்களை பொருத்தமற்றவர்களாக அன்னியர்களாக உணர்கிறார்கள். சலிப்பு கொள்கிறார்கள். அந்தச் சலிப்பை வெல்லவே போதையை நாடுகிறார்கள்.அந்தப்போதை எல்லாருக்கும் உண்டு. எனக்கும்– வேறு வகையில்.

நான் நடத்தும் கூட்டங்கள் வெறும் குடி நிகழ்ச்சிகளாக ஆகக்கூடது என்பதற்காக சில கட்டுபபடுகளை விதிப்பேன். குடிக்கக் கூடாது என்பது அதில் ஒன்று. இல்லாவிட்டால் கவிஞன் குடிக்கிறான் என்று பிறரும் குடிப்பார்கள். குடிதான் நடக்கும். பெரும்பாலான தமிழ் இலக்கிய அரங்குகள் வெறும் குடிமேளாக்கள். ஆனால் என் நிகழ்ச்சியிலும் குடி இல்லாமல் இருந்ததே இல்லை. கட்டுக்குள் இருக்கும்,அவ்வளவுதான்
ஜெ

**

அன்புள்ள ஜெயமோகன்,

முதற்பெண்ணுக்குச் சில வரிகள்’ உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த கவிதை. அவள்தான் முதல்பெண் என்று கண்டுபிடிக்கவே ரொம்பநாள் தாண்டவேண்டியிருக்கிறது இல்லையா? அப்படிக் கண்டுபிடிக்கும் கணம் அவள் ஒரு பெண் மட்டும் அல்ல என்றும் பெண்ணுலகுக்கு ஒரு நுழைவாயில் என்றும் நமக்குத்தெரிந்து விடுகிறது. சுகுமாரனின் அந்தக்கவிதையை நான் எத்தனை முறை வாசித்தேன் என்றே சொல்ல முடியாது. நான் எழுதிய ஒரு பழைய கவிதையை தூசி தட்டி எடுத்தேன். கவிதை என்பதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்தான். சும்மா கொஞ்சம் வரிகள். நமக்கு ஒரு மன எழுச்சி வரும்போது அதை எழுத வேண்டுமென்று தோன்றுமே. என் வாழ்க்கையில் நான் கவிதைக்கு மட்டும்தான் தமிழை நாடவேண்டியிருக்கிறது. உங்கள் பார்வைக்கு

நீ என்னைச் சொன்ன கணம்

உதடுகளில் மலரும்போது
கண்களில் ஒளி மிகுவதை கண்டேன்
கண்களின் ஒளி
கன்னங்களை ஜொலிக்கச் செய்வதைக் கண்டேன்.
முகம் சுடர் கொள்ளும்போது
நீயே ஒரு விளக்கு போல
நின்றிருந்ததைக் கண்டேன்.
உன் உதடுகளில் எரிந்த
அந்தச்சொல்லின் வெளிச்சம் அது.
நீ என் பெயரைச் சொன்ன தருணம்.

அந்தக் கணத்தின் சாட்சியாக
இந்த நாள் வரை
நெஞ்சோடு அணைத்து
கண்ணீர் பனித்து
பத்திரமாக வைத்திருக்கிறேன் அன்பே
என்னுடைய பெயரை

அதன் பின் எத்தனையோ
செவ்விதழ் முத்தங்களைப் பெற்று
வெட்கி நெளிந்திருக்கிறது அது
வலித்து அழுதிருக்கிறது
பரவசத்தில் மயங்கியிருக்கிறது

எனினும் உன் இதழ்களை
மறப்பதற்கில்லை

அன்பே
முதல் மரணத்தை
எவரால் மறக்க முடியும்?

[சுகுமாரனுக்கு]

டேவிட் ஞானப்பிரகாஷ்

பிரிவின் விஷம்

முந்தைய கட்டுரைஆத்மா அறிவியல் ஆன்மீகம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொருளியல் விபத்து:மேலும் கடிதங்கள்