‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48

பகுதி ஐந்து : தேரோட்டி – 13

இளைய யாதவருடன் அரண்மனையிலிருந்து பிரிந்துசென்ற இடைநாழியில் நடக்கையில் அர்ஜுனன் அவர் சுபத்திரையைப் பற்றி பேசுவார் என எதிர்பார்த்தான். ஆனால் அவர் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாக தோன்றியது. அத்தருணத்தில் அது மிகச்சிறிய, பொருளற்ற செயலென தோன்றியது. உடனே ஓர் எண்ணம் வந்தது. அரசியலுக்காகத்தான் அந்த மணம் என்றால் ஏன் நகுலனோ சகதேவனோ சுபத்திரையை கைகொள்ளக் கூடாது? அவளுடைய வயதும் அவர்களுக்குத்தான் பொருத்தமானது. அதையே சொல்லலாம் என அவன் எண்ணியபோது இளைய யாதவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குவதுபோல் பேசினார்.

“இளமையில் நானும் தமையனார் அரிஷ்டநேமியும் சேர்ந்துதான் வடபுலத்து குருகுலங்களுக்கு கல்வி பயிலச்சென்றோம். முரண்படுவனவற்றை மட்டுமே காணும் விழிகள் எனக்கு. இயைபனவற்றை மட்டுமே காணும் விழிகள் அவருக்கு. அத்தனை குருகுலங்களிலும் ஆசிரியருக்கு அணுக்கமானவராக அவர் இருந்தார். ஆசிரியரால் முதலில் புறந்தள்ளப்படுபவனாக நான் இருந்தேன். கற்பனவற்றை கடந்து சென்று அவர் அடுத்த குருவை கண்டடைந்தார். நானோ கற்பனவற்றை தவிர்த்து பிறிதொன்றை கண்டடைந்தேன். நூற்றியெட்டு குருநாதர்களால் வாழ்த்தப்பட்டவராக அவர் இருந்தார். மானுடர் எவரையும் ஆசிரியராக ஏற்காதவனாக இருந்தேன் நான். எட்டு கைகளாலும் திசைகளை அள்ளி தன்னுள் நிறைத்துக் கொண்டார் அவர். என்னுள் எஞ்சியனவற்றை அள்ளி வெளியே இட்டேன் நான். ஆற்றுவனவற்றுக்கு முடிவிலாதிருந்தன எனக்கு. அவரோ செயலின்மையை ஊழ்கமென கொண்டிருந்தார்.”

“நான் அவரை விட்டு விலகினேன். நெடுநாட்களுக்குப் பின்பு துவாரகை எழுந்து கொண்டிருந்தபோது ஒருநாள் நான் அறிந்தேன் என் நகர் வாயிலில் வெள்ளுடை அணிந்த இளைஞரொருவர் வந்து நிற்கிறார் என. என்னை கண்ணன் என்று பெயர் சொல்லி அவர் அழைத்தது வாயிற்காவலர்களை வியப்புறச் செய்தது. எந்நகரத்தவர் என்று கேட்டமைக்கு நவதுவாரகை என்று அவர் மறுமொழி சொன்னார். அச்செய்தி கேட்டதுமே உள்ளுணர்வால் நான் அறிந்தேன், அவர் யாரென்று. படிகளில் இறங்கி முற்றத்திற்கு ஓடி “என் புரவியை வரச்சொல்லுங்கள்” என்று கூவினேன். ஓடிச்சென்று புரவியில் ஏறி “அரச வெண்புரவி என் பின்னால் வரட்டும்” என்று ஆணையிட்டபடி விரைந்து சென்றேன். அரண்மனை வாயிலில் முழுதணிக்கோலத்தில் எப்போதும் சித்தமாக இருக்கும் அரச வெண்புரவி கடிவாளங்களை முதுகில் சுமந்தபடி வெற்றுச்சேணத்துடன் என்னைத் தொடர்ந்து ஓடி வந்தது.

நகரின் சுழல்பாதைகளில் விரைந்திறங்கி அரசநெடும்பாதையில் புழுதி தெறிக்க ஓடி நகர் வாயிலை அடைந்தேன். என் புரவியை கண்டு நகர் மாந்தர் திகைப்பதை ஓரவிழிகளால் கண்டேன். காலை ஒளி ஊறிநின்ற புழுதித்திரைக்கு அப்பால் தொலைவிலேயே கண்டுகொண்டேன், என் ஆடிப்பாவை என அவர் அங்கே நின்றார். பார்த்தா, அவருக்கும் எனக்கும் தோற்றத்தில் எந்தப் பொதுமையும் இல்லை. என்னை விட இருமடங்கு பெரிய உடல் கொண்டவர். இளமையிலேயே அவரை அண்ணாந்து பார்த்து விண்சூழ்ந்த முகத்தைக் கண்டு உரையாடுவதே என் வழக்கமாக இருந்தது. இரு கைகளையும் விரித்து அவர் தோள்களை நான் தழுவிக்கொள்வதுண்டு. விளையாட்டுப் போர்களில் என்னை ஒற்றைக்கையால் தூக்கிச் சுழற்றி தன் தோளில் வைத்து எம்பிக்குதித்து மண்ணில் இறங்குவார்.

படைக்கலம் பயிலாவிட்டாலும் ஆற்றல்மிக்க ஆடல்களில் எப்போதுமிருந்தார். கரைபுரளும் யமுனையில் ஒரு கரையில் இறங்கி மறுகரை நோக்கி நீந்தி கரையேறாமல் திரும்பி வருவார். நாளில் நூற்றெட்டு முறை யமுனையைக் கடந்து நீந்துவதுண்டு. பன்னிரு மல்லர் உண்ணும் உணவை தனி ஒருவராக உண்டு கையூன்றாமல் எழுவார். தோள் வல்லமையில் முதற்தாதையாகிய அருகரின் மைந்தர் பாகுபலிக்கு நிகரானவர் இவர் என்று யாதவகுடிகளில் புகழ் பெற்றிருந்தார். செந்தாமரை வண்ணம் கொண்டவர். என்னுள் எழுந்த எதையும் தானறியாதவர். ஆயினும் என் முதிரா இளமையில் முதன் முதல் இவரைக் கண்டபோதே நான் இவரே என்று உணர்ந்தேன்.

மாமனை வென்று மதுராவை கொண்டபின் தமையனுடனும் தந்தையுடனும் சௌரிபுரம் சென்றிருந்தபோது முதன்முதலாக இவரைக் கண்டதை நினைவுறுகிறேன். தேர் சௌரிபுரத்தின் கோட்டை முகப்பை அணுகியபோது அங்கு கொடிகளும் பாவட்டாக்களும் மலர்த்தோரணங்களும் சூழ மங்கலங்கள் ஏந்திய சேடியர் முன்னிற்க இன்னிசைக் குழுவும் வாழ்த்துரைக்கும் மூத்தோரும் இருபக்கம் நின்றிருக்க சௌரிபுரியின் அரசர் சமுத்ரவிஜயர் எங்களைக்காத்து நின்றிருந்தார். தேர் இறங்கியதும் வைதிகர் கங்கை நீர் தெளித்து வேதச்சொல் உரைத்து எங்களை வரவேற்றனர்.

சூதர் இசையும் வாழ்த்தொலிகளும் சூழ சென்று எந்தை அரசரின் கைகளைப்பற்றிக் கொண்டு முகமன் உரைத்தார். இருவரும் தோள் தழுவிக் கொண்டனர். தந்தைக்குப் பின்னால் தலைதூக்கி நின்றிருந்த இவரைக் கண்டு மலைத்த என் தமையன் என் கைகளைப்பற்றி “மானுடத்தில் இப்படி ஒரு பேருடல் உண்டென்று எவர் எண்ண முடியும்? பிதாமகர் பீஷ்மரும் பால்ஹிகரும் கூட இவரை விட சிறியவர்களே” என்றார். “யாரிவர்?” என்றேன். “சௌரிபுரத்து அரசர் சமுத்ரவிஜயரின் எட்டாவது மைந்தர் இவர். அரிஷ்டநேமி என்று இவரை அழைக்கின்றனர்” என்றார்.

நான் இவரது இறுகிய இடையையும் இரு கிளை விரிந்த ஆலமரத்தடி என தெரிந்த தோள்களையும் நோக்கினேன். தலை தூக்கி மேலே வானில் நின்று புன்னகைக்கும் நீண்ட விழிகளைக் கண்டு புன்னகைத்தேன். தமையனிடம் “மூத்தவரே, இவர் என்னைப் போன்றே உள்ளார்” என்றேன். “மூடா, உளறாதே” என்று சொல்லி என் தலையை தட்டினார். “இல்லை, நான் இவரென இருக்கிறேன்” என்றேன். “கனவில் இருந்திருப்பாய். யாதவகுடியின் தோள் சூம்பிய குழந்தைகள் அனைத்துமே இவரைத்தான் கனவுகாண்கின்றன என்கிறார்கள்” என்றார் தமையன். “இவர் கதைபயின்றால் பின்னர் பாரதவர்ஷத்தில் எவரும் கதை ஏந்தவேண்டியதில்லை. வாலுடன் அஞ்சனைமைந்தர் எழுந்து வரவேண்டியதுதான்.”

அரசர் திரும்பி எங்களை நோக்கி “கம்சர் என் தோழர். அவரை வென்று மதுராவை மீட்ட யாதவ இளவரசர்கள் எனும்போது பேருருக்கொண்ட இளைஞர்களை எண்ணியிருந்தேன். விளையாட்டு மாறாத சிறுவர்களாக இருக்கிறீர்கள்” என்றபடி கைநீட்டினார். இருவரும் சென்று அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினோம். இருகைகளாலும் எங்கள் தோள்களை அணைத்து உடலோடு சேர்த்து திரும்பி தன் மைந்தரிடம் “உனது இளையோர் இவர். என்றும் உன் அருளுக்குரியவர்” என்றார். மூத்தவர் அவரை நோக்கி “கதாயுதம் பயில்கிறீரா மூத்தவரே?” என்றார். அரசர் சலிப்புடன் “இவன் எப்படைக்கலத்தையும் தொடுவதில்லை. உண்பதும் யமுனையில் நீந்துவதும் அன்றி வேறெதையும் செய்வதும் இல்லை” என்றார்.

அக்கணத்தை கடப்பதற்காக என் தந்தை “நெறி நூல்களில் வல்லவர் என்றனர் அமைச்சர்” என்றார். அரசர் “ஆம், ஏழு மொழிகளில் நூல் பயின்றான். நாடாளவிருக்கும் இந்நாட்டு அரசனுக்கு வாளெடுத்து துணைநிற்கவேண்டியவன் இவன். வீரனுக்கு நூல்கள் எதற்கு? அமைச்சுப் பணியாற்றும் அந்தணர்க்குரியவற்றை எல்லாம் கற்று இவன் அடையப்போவதுதான் என்ன?” என்றார். பெருமூச்சுடன் “ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல் கேட்கா தொலைவில் இவன் தலை எழுந்துவிட்டது” என்றபின் என்னை நோக்கி புன்னகைத்து “வருக!” என்று தோள்தொட்டு அழைத்துச் சென்றார்.

இரு அரசர்களும் முன்னால் சென்றபின் அரிஷ்டநேமி என் கைகளை பற்றிக்கொண்டு “இளையவனே, தொலைவிலேயே உன்னைக்கண்டேன். உன் புகழ் என்னை சூதர்சொல்லென குலப்பாடகர் இசையென வந்தடையத் தொடங்கி பல்லாண்டுகளாகின்றன. என் நெஞ்சிலிருந்த நீ பேருருவம் கொண்டவன். கரிய சிற்றுடலாக உன்னைக் கண்டபோது நான் ஏமாற்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் விந்தையான ஓர் உணர்வு எனக்கேற்பட்டது. நான் நீயே என எண்ணிக்கொண்டேன்” என்றார். அவரது இருகைகளையும் பற்றிக்கொண்டு “நானும் அவ்வண்ணமே எண்ணினேன் மூத்தவரே” என்றேன். சிரித்தபடி இருகைகளாலும் என் புயங்களைப்பற்றி பட்டுச்சால்வையென தூக்கிச் சுழற்றி தன் தோளில் ஏற்றிக் கொண்டார். வெண்யானை மேல் ஏறிச் செல்லும் இந்திரன்போல் அவர் தோள்களில் அமர்ந்து அந்நகரின் தெருக்களில் சென்றேன். எங்கள் உறவு அன்று தொடங்கியது.

அன்று துவாரகையில் என் வாயிலில் வந்து இவர் நின்றபோது கடுந்தவமியற்றி கற்ற கல்வியால் உடல் மெலிந்து தோள் சிறுத்திருந்தார். ஆயினும் வெண்கல்லில் கலிங்கச் சிற்பி செதுக்கி எடுத்த சிற்பம் போல் தோன்றினார். அருகே சென்று தாள்பணிந்து “என் நகருக்கு வருக மூத்தவரே! இது உங்கள் நிலம். உங்கள் சொல் இங்கு திகழ்வதாக!” என்றேன். என் தோள்களை அள்ளி தன் பெரிய நெஞ்சோடு அணைத்து “உன் நகர் குறித்த செய்திகளை சில ஆண்டுகளாக கேட்டேன் இளையவனே. ஆனால் மண்ணில் இப்படி ஒரு விந்தையை நீ நிகழ்த்தி இருப்பாய் என்று எண்ணவில்லை. ஆனால் நீ நிகழ்த்தி இருப்பதைக்கண்டு எவ்வகையிலும் நான் வியக்கவும் இல்லை” என்றார். “ஏனெனில் என் கனவுகளில் இந்நகரை நானே அமைத்திருந்தேன். இதோ இப்பெருந்தோரணவாயில், நீண்டு செல்லும் இச்செம்மண் பாதை, இருபக்கத்திலும் கீழே கதிர் பட்டு மின்னும் மாளிகை முகடுகள். ஒவ்வொன்றும் நான் முன்பு கண்டது போல் இருக்கின்றன. இவற்றை நானே சமைத்தேன் என்று சித்தம் மயங்குகிறது” என்றார்.

“அவ்வண்ணமே ஆகுக மூத்தவரே. தாங்கள் இதை அமைத்தவரென்றே இருக்கட்டும்” என்றேன். அவரை அணிப்புரவியில் ஏறச்செய்து என் அவைக்கு கொண்டு சென்றேன். என் அரசுச்சுற்றமும் படைத்தலைமையும் அவரை அடிபணிந்து வரவேற்றனர். அவை எழுந்து அவருக்கு முறைமை செய்தது. என் மாளிகை நிறைந்திருந்தார். பார்த்தா, எப்போதும் இவரை நிகரற்ற வல்லமை கொண்ட வெண்காளை என்றே எண்ணுவதுண்டு. சிம்மமல்ல, வேங்கை அல்ல, மதவேழமும் அல்ல. தடைகள் எதையும் கடந்து செல்லும் பெருவல்லமை உடலில் உறைகையில் ஒவ்வொரு அசைவிலும் அமைதி நிறைந்த ஏறு. வாணாளில் ஒருமுறையேனும் சிற்றுயிரையேனும் அது கொல்லாது. அதன் ஆற்றலென்பது மாபெரும் கண்டாமணிக்குள் உறையும் இசை போன்றது.

சின்னாட்களிலேயே துவாரகைக்கு அரசரென இவர் ஆவதைக் கண்டேன். செல்லும் இடமெல்லாம் பிறிதொன்றிலாத பணிவையே அவர் பெற்றார். அவரை மண் நிகழ்ந்த விண்ணவன் என்றே மக்கள் எண்ணினர். அவர் சொல்லெல்லாம் ஆணை என்றாயிற்று. அயல் வணிகர் வந்து என் அவை பணிந்த பின்னர் ஒரு முறை அவர் முகமும் பார்த்துச் செல்ல வேண்டும் என்று விழைந்தனர். அந்தகவிருஷ்ணிகள் அவரையே தங்கள் அரசர் என்று எண்ணத்தலைப்பட்டனர். பின்னர் அந்தகர்களுக்கும் அவரே தலைவரென்றானார்.

அவரைப்பற்றி ஒவ்வொருநாளும் ஒரு புகழ்ச்செய்தி வந்து அரண்மனையில் ஒலிக்க மெல்ல சத்யபாமா அவர்மேல் காழ்ப்பு கொண்டாள். “அந்தகர்களுக்கும் அவருக்கும் என்ன உறவு? அந்தகர்களுக்கு தனிக்குலவரிசையும் பெருமுறைமைகளும் உள்ளன” என்றாள். “மக்கள் கண்ணெதிரே காண விழைகிறார்கள்” என்றேன். “அப்படி எதை காண்கிறார்கள் மக்கள்? இரண்டடி உயரம் மிகுதி. அதை ஒரு மாண்பென்று கொள்கிறார்களா?” என்றாள். “அவரது மென்மையும் அமைதியும் அவர்களுக்குத் தெரிகின்றன” என்றேன். “மிகையான உயரம் கொண்டவர்கள் அனைவருமே மந்தமானவர்கள்… இதை எங்கும் காணலாம்” என்றாள். “நீ அவரை உனக்குப் போட்டியென எண்ணுகிறாயா?” என்றேன். “அவர் எனக்குப் போட்டியா? அந்தககுலத்திற்கு நான் அரசி. அதை இக்கணம் வரை எவரும் எதுவும் மாற்றவில்லை” என்று சீறினாள். அவளுடைய சிவந்த முகம் மூச்சிரைப்பதை வியர்ப்பு கொள்வதை நோக்கி புன்னகைசெய்தேன்.

அரக்கன் என்றுதான் சத்யபாமா அவரை சொல்வாள். அவர் வேண்டுமென்றே தன் புகழை உருவாக்குகிறார் என்றாள். “அவருக்கு தெளிவான நோக்கங்கள் உள்ளன. துவாரகையை தான் அடையவேண்டுமென எண்ணுகிறார். ஐயமே இல்லை” என்றாள். “உலகை முழுக்க நோக்கும் கண்கள் கொண்டிருக்கிறீர்கள். நின்றிருக்கும் காலடிகள் தெரியாத அளவுக்கு உங்கள் தலை மேலே சென்றுவிட்டது.” நான் அவளிடம் விவாதிக்கவில்லை. அனைத்தையும் விரும்பிய வண்ணம் காட்டும் மாயக்கண்ணாடியை நாம் மனம் என்கிறோம். “அவரது திட்டங்களை நான் ஒப்பப்போவதில்லை. வெறுமனே தசைகளைக் காட்டி எவரும் இப்பெருநகரை வெல்ல எண்ணவேண்டியதில்லை. இது அந்தககுலத்தின் அரசியான என் கனவு கல்லில் எழுந்த நகரம்” என்றாள்.

துவாரகையின் அரசவைக்கு மூத்தவர் அரிஷ்டநேமி வருவதில்லை. அவருக்கு அரச அவைகள் உகக்கவில்லை. அரச முறைமைகளும் முகமன் சொற்களும் சொல்சூழ்தலும் செய்திநுணுக்கங்களும் சலிப்பூட்டின. “ஐந்து சொற்களில் சொல்லப்பட வேண்டியவற்றை ஐந்தாயிரம் சொற்களில் மடித்து மடித்து உரைத்தல்தான் அரசு சூழ்தல்” என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். “அவ்வைந்து சொற்களின் அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டு உரைப்பதுதான் அது” என்று நான் மறுமொழி சொன்னேன். “ஐந்துகோடிச் சொற்களை எடுத்தாலும் ஒரு சொல்லின் பின் விளைவை சொல்லிவிட முடியுமா இளையோனே?” என்றார். புன்னகைத்தேன்.

“அவைக்கு வருக மூத்தவரே!” என்று ஒவ்வொரு முறையும் அழைக்கும்போதும் “இந்த அவை எனக்குரியதல்ல இளையோனே” என்று சொல்லி விலகிச் சென்றுவிடுவார். துவாரகையின் கடற்கரையோரமாக அமைந்த கல் மண்டபங்கள் ஏதேனும் ஒன்றில் கால் மடித்து கைமலர்த்தி ஊழ்கத்தில் அமர்ந்து அலைகளை நோக்கி இருப்பதையே அவர் விழைந்தார். அன்று அவரை அவைக்கு நான் அழைத்து வரச்சொன்னபோது வந்தே ஆகவேண்டும் என்று நான் உரைப்பதாக மேலும் ஒரு சொல்லை சேர்த்து அனுப்பினேன். அச்சொல்லின் அழுத்தத்தை உணர்ந்து அவைக்கு வந்தார்.

அவை நிகழும் நேரத்தை மறந்திருப்பார் என்றும் இறுதிக்கணத்தில் எப்போதோ நினைவு கூர்ந்து கிளம்பி வந்தார் என்றும் தோன்றியது. எளிய அரையாடையுடன் தோளில் நழுவிய வெண்ணிற மேலாடை அணிந்து விரைந்த காலடிகளுடன் அவைக்குள் நுழைந்தார். பேருடல் கொண்டவராதலால் இடைநாழியில் அவருடைய காலடி ஓசைகளைக் கேட்டே அது அவர்தான் என உணர்ந்தேன். அவைக்கு அவர் வருவதை எவரும் முன்னரே எண்ணியிருக்கவில்லை. எனவே காவலன் உள்ளே வந்து அவரது அவை நுழைவை அறிவித்தபோது அனைவரும் வியப்புடன் வாயிலை நோக்கினர்.

திறந்த வாயிலினூடாக பெரிய வெண்தோள்களும் தாள் தோயும் நீண்ட கைகளுமாக உள்ளே வந்தார். கூடியிருந்த ஐங்குலங்களையும் எட்டு பேரவைகளையும் சார்ந்தவர்களைப் பார்த்து திகைத்து திரும்பி விடுபவர் போல ஓர் உடலசைவைக்காட்டி ததும்பியபடி அங்கு நின்றார். நான் எழுந்து “வருக மூத்தவரே! இந்த அவை தங்களுக்காக காத்துள்ளது” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார், முகமனை திருப்பி உரைக்கவில்லை. காவலன் அவரது குடிமுறைமையை அறிவித்து பீடம் கொள்ளும்படி கோரினான். அவை அவருக்கு தலை வணங்கியது. அவர் வந்து என் முன்னால் ஓசையெழ பீடத்தில் அமர்ந்தார். பெரிய கைகளை மடித்து மடிமேல் வைத்துக்கொண்டார். முதியவேழத்தின் மிகப்பெரிய தந்தங்கள் போன்றவை அவரது கைகள் என எண்ணிக்கொண்டேன். அவை ஆண்மையும் அழகும் கொண்டவை. ஆனால் அத்தனை பெரும்படைக்கலத்தால் ஆற்றவேண்டிய பணிகளென ஏதுமில்லை. ஆகவே எப்போதும் அவை செய்வதறியாமல் ததும்பிக்கொண்டிருக்கின்றன.

என் அரியணைக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்த சத்யபாமையின் உடலில் எழுந்த மெல்லிய அணிகளின் ஓசையை நான் கேட்டேன். அது ஒரு சொல் என நான் அறிந்தேன். அவள் ஒரு கணமும் விழிதூக்கி அவரை நோக்கவில்லை. அவள் உடலின் அணிகலன்கள் அனைத்தும் விழிகளாக மாறி அவரை நோக்கிக் கொண்டிருந்தன. அன்றைய அரச முடிவுகளை ஆராயும் ஆணையை அமைச்சருக்கு விடுத்தேன். அக்ரூரர் என்னை நோக்கியபின் குழப்பத்துடன் மூத்தவரையும் நோக்கி பின்பு முடிவு செய்து இயல்பாக உடலைத் தளர்த்தி தன் இருக்கையில் அமர்ந்தார். அமைச்சர் அரச முறைமைப்படி ஒவ்வொரு செய்தியாக சொல்லி அவற்றின் வருகைகளையும் செல்கைகளையும் விளக்கினார். குடியவையில் சிலர் ஐயங்கள் கேட்டனர். சிலர் திருத்தங்கள் கூறினர். அதன்பின் அனைவரும் கைகளைத்தூக்கி அம்முடிவுகளை ஒப்பினர். முழு ஒப்புதல் பெறப்பட்ட முடிவுகளை ஓலை நாயகங்கள் எழுதிக்கொண்டனர்.

ஒவ்வொரு முடிவாக அவை கடந்து செல்லச் செல்ல அவையிலிருந்தவர்களே மூத்தவர் அங்கு வந்திருப்பதை மறக்கத்தொடங்கினர். அம்முடிவுகளையும் விளைவுகளையும் எல்லைகளையும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தலைப்பட்டனர். அக்ரூரரும் சத்யபாமையும் மட்டுமே சற்று நிலையழிந்த உள்ளத்துடன், அந்நிலையழிவு கையசைவிலும் கால்விரல் சுழற்றலிலும் தெரியும்படியாக அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரைத் தவிர பிறரை என் விழிகளால் நோக்கினேன். அவர்கள் இருவரையும் உள்ளத்தால் உற்று நோக்கிக்கொண்டும் இருந்தேன்.

முடிவுகள் அனைத்தும் அமைந்ததும் அமைச்சர் என்னை நோக்கி “இவற்றை அரசாணைகளாக பிறப்பிக்க தங்கள் கைச்சாத்து கோருகிறேன்” என்றார். நான் எழுந்து முறைமைப்படி என் முத்திரை மோதிரத்தை அவரிடம் கொடுத்து “இப்பதினெட்டு ஆணைகளுக்கும் இதனால் நான் கைச்சாத்திடுகிறேன்” என்றேன். அவை “ஆம் அவ்வாறே ஆகுக!” என்றது. அங்கு நிகழ்வது எதையும் உணராதவர் போல கைகளை மடிமேல் வைத்து நெடிது ஓங்கிய உடலை நிமிர அமர்த்தி அரைவிழி மூடி அமர்ந்திருந்தார் மூத்தவர். ஓங்கிய உடல் அவரை அயலவனாக்கியது. அவரை பிறர் வியக்கவும் மதிக்கவும் செய்தது. அதுவே அவரை விலக்கியும் வைத்தது. அவர் அங்கு ஒரு தூண் என மாற அவருக்குக் கீழே அனைத்தும் தங்கள் இயல்பில் நடந்துகொண்டிருந்தன.

அவை முடிந்ததும் நான் அவரிடம் “மூத்தவரே, உங்களைப்பற்றி ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்த அவையில் அதைப்பற்றி விசாரிக்க வேண்டுமென்று என்னிடம் கோரப்பட்டது. ஆகவேதான் இந்த அவைக்கு தாங்கள் அழைக்கப்பட்டீர்” என்றேன். அவரது விழிகளில் ஒரு கணம் வந்து சென்ற வினாவை கண்டேன். பதற்றமோ ஐயமோ இல்லை, எளியதொரு வினா மட்டுமே. என் சொற்கள் அவையை உறைய வைத்தன. குலமூத்தார் ஒருவர் ஏதோ சொல்வதற்கு என கைதூக்கி எழுந்தபின் தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்துகொண்டார்.

அக்ரூரர் எழுந்து கைகூப்பி “நம் குலத்தின் கொடி அடையாளம் என்று சொல்லப்படுபவர் தங்கள் மூத்தவராகிய அரிஷ்டநேமி. அவர்மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன என்பதை அறிய இவ்வவை காத்துள்ளது” என்றார். நான் “என் குற்றச்சாட்டு அல்ல. அத்தகைய எச்சொற்களையும் என் உள்ளம் ஒரு போதும் எண்ணாது. துவாரகையின் மக்களில் ஒரு சாரார் இதை சொல்கிறார்கள். அந்திக்கு சேக்கேறும் பறவைகளில் சில பறவைகள் இறுதிக்கணம் வரை கிளைகளில் அமைவதில்லை. அத்தகைய இறுதிப் பறவைகளின் குரல் இது என்று கொள்க!“ என்றேன். “ஆனால் அரசன் என அனைத்துக்குரல்களையும் நான் கேட்டு உசாவியாகவேண்டும்.”

“அவையோரே, துவாரகை அந்தககுலத்தாராலும் விருஷ்ணி குலத்தவராலும் கட்டப்பட்டது என்று அறிவீர். இருகுலத்து மூத்தவரோ அல்லது அவர்களில் வல்லவரோ இந்நகருக்கு அரசனாக முறையுடையவர். இன்று அந்தககுலத்திற்கும் விருஷ்ணி குலத்திற்கும் ஆற்றல்மிக்கத் தோன்றலாக இருப்பவர் சௌரிபுரத்து இளவரசர் அரிஷ்டநேமி அவர்களே. தோள் வல்லமைக்கு நிகராக தவ வல்லமையிலும் முதிர்ந்தவர். ஆகவே அவரே இவ்வரியணை அமர தகுதி வாய்ந்தவர். முறைமை மீறி இங்கு நான் அமர்ந்திருப்பதனால் வானம் பொய்க்கவும் காற்று சினக்கவும் கடல் எல்லை மீறவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்” என்றேன்.

“இப்படி ஒரு சொல்லை இதுவரை கேட்டதில்லை” என்றார் அக்ரூரர். “நான் கேட்டேன்” என்றேன். “அவ்வாறு சில வீணர் அலர் உரைத்தால் அதில் இவரது பிழை என்ன?” என்றார் குலமூத்தார். “ஆம், அறிவீனர்களின் சொற்களுக்கு எவ்வகையில் நம் மூத்த இளவரசர் பொறுப்பாவார்?” என்றார் அக்ரூரர். நான் புன்னகைத்து “அறிவின்மையாயினும் அது விதையின்றி முளைப்பதில்லை அல்லவா? அந்த விதை எதுவென்பதை இந்த அவை முடிவெடுக்க வேண்டியுள்ளது” என்றேன். “என்ன சொல்கிறீர்கள் அரசே? அவ்வெண்ணத்தை மக்களிடம் நம் மூத்த இளவரசர் உருவாக்குகிறார் என்கிறீர்களா?” என்றார் அக்ரூரர் பதற்றத்துடன்.

“இல்லை, அவர் எண்ணி அதை உருவாக்கவில்லை. எண்ணாது அவ்விழைவை அவர் தன் சொற்களாலோ செயல்களாலோ வெளிப்படுத்தவும் இல்லை. அதை நான் அறிவேன். ஆனால் அவ்வெண்ணத்தை அவரது உடல் உருவாக்குகிறது. அவையோரே, உள்ளம் தன் ஆழத்தில் ஒளியுடனும் உடல் இருளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இப்புவியில் அனைத்து விழைவுகளும் உடலால் மட்டுமே உணரப்படுகின்றன, வெளிப்படுத்தப்படுகின்றன. அதை மறைப்பதற்கும் திசை மாற்றுவதற்குமே சொற்கள் துணை சேர்க்கின்றன” என்றேன்.

என் குற்றச்சாட்டு தெளிவடைந்ததும் சொல்லடங்கி அவையினர் அமர்ந்திருந்தனர். நான் சொன்ன எச்சொல்லையும் கேட்காதவர் போல் ஒளிரும் புன்னகையும் ஊழ்கநிழல் படிந்த விழிகளுமாக அரிஷ்டநேமி அமர்ந்திருந்தார். “தங்கள் பேருடல், திரண்ட தோள்கள் அவைதாம் இச்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றன மூத்தவரே. இந்நகரம் தங்களுக்குள்ளது என்று எளியோர் நம்புதல் அதனால்தான்” என்றேன். “நான் என்ன செய்யவேண்டும்?” என்று அவர் மென்மையான குரலில் கேட்டார். “நெறிகளில் முதன்மையானது காட்டுநெறியே என்கின்றன தொன்மையான ஸ்மிருதிகள். எது யானைகளுக்கும் சிம்மங்களுக்கும் உரியதோ அதுவே இங்கு திகழ்க! நான் தங்களை மற்போருக்கு அழைக்கிறேன். இம்மக்கள் நடுவே நாம் தோள்பொருதுவோம். வென்றீர்களென்றால் இந்நகரை நீங்கள் கொள்ளுங்கள்” என்றேன்.

“நான் போர்புரிவதேயில்லை இளையோனே. போர்க்கலை என எதையும் கற்றதுமில்லை” என்றார் அரிஷ்டநேமி. “அப்படியென்றால் அதை இந்நகர் அறியட்டும். இங்கு எம் குலத்தோர் மத்தியில் உங்களை நான் வென்றேன் என்றால் இவ்வரியணைக்குரியவன் என்பதை ஐயம்திரிபற நிறுவியவனாவேன். பிறிதொரு சொல் எழாது இத்தொடக்கத்திலேயே அனைத்தையும் முடித்துவைக்க முடியும்” என்றேன். “போரிடுதல் என் உள்ளம் கொண்ட உண்மைக்கு ஒவ்வாதது இளையோனே” என்றார் அரிஷ்டநேமி. “தாங்கள் போரிட்டே ஆகவேண்டும். ஏனெனில் தங்கள் உடல் அவ்வறைகூவலை விடுத்துவிட்டது. அதை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன்” என்றேன்.

அக்ரூரர் “ஆம், அப்படி ஒரு சொல் எழுந்தபிறகு அதை நிலை நாட்டுவதே அரசுக்கு நல்லது” என்றபின் திரும்பி கை தொழுது “மூத்த இளவரசே, துவாரகையில் ஐயச்சொல் எழாது முழுமை நிகழ்வதற்காக தாங்கள் இவ்வறைகூவலை ஏற்றாக வேண்டும்” என்றார். சிலகணங்கள் எண்ணியபின் “எனக்கு அதில் எவ்வேறுபாடும் இல்லை. அவ்வண்ணமே ஆகுக!” என்றார் அரிஷ்டநேமி. அவையில் ஒரு கலைந்த அமைதியின்மை பரவுவதை உணர்ந்தேன். நான் வெல்வது அரிது என்னும் எண்ணம் ஒருபுறம். ஆனால் மூத்தவர் போர்க்கலை அறியாதவர் அல்லவா என்னும் ஆறுதல் மறுபுறம். சத்யபாமையின் விழிகள் எப்படி அலைபாய்ந்து கொண்டிருக்கும் என எண்ணி புன்னகைத்தபடி அவற்றை நோக்காமல் அவை கலையும்படி கையசைத்து ஆணையிட்டேன்.

முந்தைய கட்டுரைபின் தூறல்
அடுத்த கட்டுரைகார்ல் சகன், ‘தொடர்பு’