சர்தார்ஜி ரயிலில் அழுதுகொண்டிருந்தாராம். அவருக்கு ஆறுதல் சொல்லி ஒருவர் கேட்டார் “என்ன நடந்தது?”
“நண்பன் பட்டாளத்தில் இருந்து லீவுக்கு வந்தான். பார்த்து நீண்டநாள் ஆகிறது. ஆகவே நண்பர்கள் சேர்ந்து அவனை உபசரித்தோம்”
“அப்புறம்?”
“வழியனுப்ப வந்த இடத்தில் பேசிப்பேசித்தீரவில்லை. ரயில் மணியடித்து பச்சைக்கொடி காட்டியும் பேசிக்கொண்டிருந்தோம். கட்டிப்பிடித்து ஒரே அழுகை”
“இருக்குமே?”
“ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. பிடி பிடி என்று சொல்லி எல்லாருமாக துரத்தி ஓடிவந்தோம்”
“அப்புறம்?’
“பயங்கர ஆவேசமாக ஓடிவந்தோம். நான் பாய்ந்து ஏறிவிட்டேன்”
“அதுதான் ஏறிவிட்டீர்களே?”
“சார் நான் வழியனுப்ப வந்தவன். நானெல்லாம் சாயங்காலம் வீட்டுக்குப் போகவேண்டியவன். ஊருக்குப் போகவேண்டியவன் ஏறவே இல்லை”
*
நண்பர் அருண்மொழி ஏழாவது மனிதனுக்காக பெற்ற தேசியவிருதை துறப்பதாக உணர்ச்சிவசப்பட்டு அறிவிக்க, மதசார்பின்மையர் அதை கண்ணீர் மல்கி கொண்டாடி முதல் மனிதன் என்னும் பட்டம் அளிக்க, ஞாநி ஏழாவது மனிதனுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் விருதே பெறவில்லை என்றும் வெளிப்படுத்த, உணர்ச்சிவசப்பட்டு வண்டியில் ஏறிக்கொண்டதாக அருண்மொழி சொல்ல—
சர்தார்ஜிகள் அமரர். வேறென்ன சொல்ல?