விருதரசியல்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

சினிமா பிரபலங்கள் ஒரு பக்கம் ,அறிவியல் விஞ்ஞானிகள்,கலைஞர்கள் மறு பக்கம் என்று ஆளுக்கு ஆள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க முற்பட்டுள்ளார்களே அந்த அளவுக்கா ‘மோதியின்’ ஆட்சி இவ்வளவு சீக்கிரத்தில் மோசமாக போய்விட்டது?.கடந்த காலத்திலும் இது போன்ற பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தபோது சற்றும் “வாளா இருந்தவர்கள்” இப்போது இப்படி துடிப்பது எல்லாம் சற்று அதிகம் என்று தங்களுக்கு தோன்றவில்லையா?.இது பற்றி தங்கள் கருத்து என்னவென்று சொல்ல முடியுமா?

பத்மபூஷண் விருதை திருப்பியளிக்க விஞ்ஞானி பி.எம்.பார்கவா முடிவு: நாட்டின் எதிர்காலம் கவலையளிப்பதாக கருத்து

எஃப்.டி.ஐ.ஐ. போராட்டம்: 10 சினிமா படைப்பாளிகள் தேசிய விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவிப்பு

அன்புடன்,

அ.சேஷகிரி

1

அன்புள்ள சேஷகிரி,

ஆரம்பம் முதல் என்னுடைய மனச்சித்திரம் ஒன்றே. அவற்றை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்

1. சென்ற ஐம்பதாண்டுக்காலமாக இந்திய அரசு [பா.ஜ.க ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த காலத்தையும் சேர்த்து] ஒரு குறிப்பிட்டவகையான பண்பாட்டு அரசியல் சூழலை பேணி வளர்த்து வந்துள்ளது. அது நேருவின் பண்பாட்டு ஆலோசகர்களான பி.என்.ஹக்ஸர் போன்றவர்களின் காலம் முதல் வாழையடி வாழையாக வரும் மரபு. அதன் பொதுவான இயல்பு என்பது இந்திய மரபு, இந்து மெய்யியல் போன்றவற்றை எதிர்மறையாகப் பார்க்கும் இடதுசாரிப் பார்வை. பாரதிய ஜனதா வந்தபின் இவர்களின் இடம் காலியாகிறது. அந்த எதிர்ப்பே இவ்வகையில் திரண்டுள்ளது.

2 இது தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அது தாங்கள் விரும்பிய மாற்றத்துக்கான வாக்கு என அவர்கள் எடுத்துக்கொள்வதே இயல்பானது. தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபின் காங்கிரஸ் பின்னணி கொண்ட அனைத்துச் சிந்தனையாளர்களும் தவிர்க்கப்பட்டு திராவிட இயக்கப்பின்னணி கொண்டவர்கள் பாடப்புத்தகங்களில் பாடமானதை, பாடப்புத்தகங்கள் எழுதியதை நாம் காண்கிறோம். இன்று தமிழகத்தில் முச்சந்தியில் உள்ள சிலைகள் எல்லாம் அவர்களுடையதே. இதை ஏற்றுக்கொள்பவர்கள் அதை மறுப்பதில் பொருளில்லை.

3 ஆகவே இந்த எதிர்ப்பு அரசியல்பின்னணி கொண்ட எழுத்தாளர்களின் எதிர்வினை மட்டுமே. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே பாரதிய ஜனதாக்கட்சி மீதான எதிர்ப்பரசியலில் ஈடுபட்டவர்கள். ஆகவே இது ஒரு கட்சியரசியல். இதில் இலக்கியவாதிக்கு இடம் ஏதுமில்லை. அரசியல் இருந்தால் ஈடுபடலாம். தவறில்லை. ஈடுபடாமலிருப்பவர்கள் அரசியலில் ஆர்வமற்றவர்கள், அவ்வளவுதான்

4 விருது மறுத்த எழுத்தாளர்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த படைப்பாளிகள். காத்திரமான படைப்பாளிகள் என நான் நம்புபவர்களில் விருது பெற்றவர்கள் நூறுபேராவது இந்தியாவில் இன்றுள்ளனர். அவர்கள் எவரும் விருதைத் திருப்பியளிக்கவில்லை. அவர்கள் இவ்விவாதத்திற்கு அப்பால் நிற்கவே விரும்புகிறார்கள்.

5.விருதினை திருப்பியனுப்பும் எழுத்தாளர்களுக்கு பெரிய அளவில் நாடளாவிய விளம்பரத்தை அளிக்கும் ஊடகங்கள் அந்தப்போக்கை ஊக்குவித்து இதை ஓர் அரசியல் அலையாக ஆக்க முயல்கிறார்கள்.

6 விருதுகளை திருப்பியனுப்புவர்களை புகழ்ந்து ஏத்தி ‘மனசாட்சியுள்ளவர்கள்’ என அடையாளப்படுத்தி விருதை மறுக்காத எழுத்தாளர்களை ‘கோழைகள்’ ‘சந்தர்ப்பவாதிகள் ‘விருதுகளை வாங்கியவர்கள்’ என்றெல்லாம் அவமதித்து அவர்கள் மேல் நிர்ப்பந்தத்தை அளிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

7 விருதுகளை திருப்பியனுப்பாதவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் அல்ல. இந்தவகையான கெடுபிடி அரசியலுக்குள் எழுத்தாளர்களை இழுப்பது மிகமிக ஆபத்தானது. நாலாந்தர கட்சி அரசியல்வாதிகளின் சரடுகளுக்கு எழுத்தாளர்கள் ஆடும் நிலை இதனால் ஏற்படும். அரசியல்வாதிகள் எப்போதுமே நாடு எரிந்துகொண்டிருப்பதுபோன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்குகிறார்கள். அதைப்பற்றி மட்டுமே அனைவரும் பேசவேண்டும் என்னும் கெடுபிடியை உருவாக்குகிறார்கள். அதற்கு உடன்படுவது எழுத்தாளனின் தற்கொலைக்கு நிகர். எழுத்தாளன் எதை எழுதவேண்டும் எதை பெரியதாக நினைக்கவேண்டும் என அவன் மனம் முடிவுசெய்யவேண்டும். சமகால கட்சியரசியல் சூழல் அல்ல.

8 எழுத்தாளர்களுக்கிடையே கட்சியரசியல் சார்ந்து ஒரு நிரந்தரமான பிளவு ஏற்படவே இந்த வகையான போராட்டம் உதவும். இன்று விருதுகளை திருப்பியனுப்புபவர்கள் அடுத்த ஐந்தாண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதன்மை பெறுவார்கள். மற்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இலக்கியத்தில் இன்றுள்ள ஓரளவு நடுநிலைமையும் அரசியலற்ற தன்மையும் கூட அழியவே இது வழி வகுக்கும்.

9 சிலவகையான பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசின் உதவியில்லாமல் நிகழவே முடியாது. அரசு எதிர்ப்புச் செயல்பாடுகளுக்குக் கூட உதவியாக வேண்டிய கட்டாயத்தில் ஜனநாயக அரசுகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது கலையிலக்கியத் தளத்திலுள்ள அனைவரும் உலகமெங்கும் செய்வது தான். உண்மையில் பெரிய முயற்சிகளுக்கு அரசுநிதி மறைமுகமாகவேனும் தேவை. இந்த ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு அரசு சார்ந்த அமைப்புகள் அனைத்தையும் கலையிலக்கியம் சாராத அரசியல்வாதிகள் கையடக்கிக்கொள்ள உதவக்கூடும். அரசு சார்ந்து செயல்படுபவர்கள் அனைவரும் அரசு ஆதரவாளர்கள் அல்ல என்னும் எளிய உண்மையை நாம் மறந்துவிடுகிறோம்.

10. ஆனால் சமீபமாக விருதுகளைப் புறக்கணிக்கும் கணேஷ் டெவி போன்றவர்கள் என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.கணேஷ் டெவி நான் மிக மதிக்கும் சிந்தனையாளர். உண்மையில் இந்த அரசு சிந்தனையாளர்களிடம் இலக்கியவாதிகளிடம் அவநம்பிக்கையை வலுவாக உருவாக்கியிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்படுகிறது.குறிப்பாக மாட்டிறைச்சி அரசியல் போன்ற அற்பமான அடிப்படைவாதங்கள் தூண்டிவிடப்படுவதும் சில்லறைத்தனமான அரசியல்வாதிகள் அன்றாடம் ஊடகங்களில் அமர்ந்து வெறுப்பைக் கக்கும் விதமாகப் பேசுவதுமே இதற்கான காரணங்கள். அரசு அந்தக் கவலையைப் போக்க நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும்.

11 அரசு சார்பிலும் பாரதிய ஜனதா சார்பிலும் இப்பிரச்சினையை மிக மூர்க்கமாகவே எதிர்கொள்கிறார்கள். கட்சியரசியலை முன்னெடுக்க கண்மூடித்தனமான பற்றும் மூர்க்கமும் கொண்டவர்கள் தேவையாக இருக்கலாம். அரசை நடத்த சமநிலையும் சொல்லடக்கமும் கொண்டவர்களையே முன்னிறுத்தவேண்டும். சமரசங்கள் மூலமே அரசு முன்னகர முடியும். பாரதிய ஜனதா இப்பிரச்சினையை மிகப்பிழையாகவே கையாள்கிறது. அதன் தரப்பில் பேசுபவர்கள் எதிர்தரப்பை இழிவுசெய்ய மட்டுமே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

12 இப்பிரச்சினை பாரதிய ஜனதாவுக்கோ அரசுக்கோ பெரும் நெருக்கடி ஏதும் அளிக்கப்போவதில்லை. வாக்கரசியலில் கூட மாற்றத்தை உருவாக்கப்போவதில்லை. ஆனால் அரசு மீதான நம்பிக்கை படித்தவர்கள் நடுவே படிப்படியாகச் சரிந்துவருகிறது. பாரதிய ஜனதா இனியேனும் இந்த சில்லறை தெருமுனை அரசியலை நிறுத்தி, அதைப்பேசும் உதிரிகளின் வாயை அடைத்து, அவர்கள் வாக்களித்த வளர்ச்சி அரசியலில் ஈடுபடவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைகார்ல் சகன், ‘தொடர்பு’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49