சினிமா: கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அவதார்- ஒரு வாக்குமூலம் வாசித்தேன். சமீபத்தில் ஒரு திரைப்படம் சார்ந்த, அது கூரும் அரசியல் அதிகார பின்புலம் பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்திய இதுபோன்ற ஒரு பதிவை வாசித்ததில்லை. நன்றி…

ஜெயமோகன்.காம் ஐ நான் ஒரு அறிவுப்பெட்டகமாகவே என்னளவில் எண்ணுவதுண்டு. இந்திய இலக்கியம், மதம், கலை, அரசியல் போன்ற தளங்களில் ஏதேனும் குறிப்பிட்ட ஒன்றினை பற்றி அறிய நேர்ந்தால் உங்கள் தளத்தில் ஏதேனும் அதுசார்ந்த பதிவு உள்ளதா எனப் பார்ப்பதே என் முதல் வேலை.

மறுபிரசுரம் செய்தமைக்கு மீண்டும் நன்றி…

அன்புடன்,
பாலாஜி

அன்புள்ள ஜெ

சினிமா பற்றிய கட்டுரைகளில் இல்லாதது எது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சினிமாவைப்பற்றி அதன் அரசியல் மற்றும் பண்பாட்டு பின்னணியிலே வைத்துப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் அந்தச்சினிமாவை அப்படியே ஒரு தகவலாக எடுத்துக்கொண்டு கதைச்சூழலை எழுதிவைப்பதைத்தான் என்று நினைக்கிறேன். அவதார் பற்றிய உங்கள் கட்டுரை ஒரு நல்ல திறப்பாக இருந்தது. இந்த டிரெஷர் ஹண்ட் சினிமாக்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் பார்க்க வைக்கிறீர்கள். மிகச்சிறந்த கட்டுரை. மெக்கன்னாஸ் கோல்ட் நாவலையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் செவ்விந்தியர்களைச் சுட்டுச் சுட்டு வீழ்த்தி பொன்னை எடுப்பதை [அது அவர்களின் பொன்] இப்போது வேறுகோணத்தில் பார்க்கிறேன்

சரவணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47
அடுத்த கட்டுரைபின் தூறல்