சிங்கப்பூர் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் சிங்கப்பூர் வருகை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை தங்களைக் காணவும், தங்களிடம் உரையாடவும் நல்ல வாய்ப்பு. சென்ற முறை, திருக்குறள் குறித்து நாம் பேசியது இன்றும் பசுமையாக நினைவில் எழுகிறது. பேர்லாகர் க்விஸ்ட் முதல் ஹெமிங்வே வரை பேசியது மறக்கமுடியாதது. ஹெமிங்வேயை ஏன் இலக்கியவாதியாக ஏற்க மறுக்கிறேன் என்ற உங்கள் விளக்கமும், இலக்கியத்தில் கனவைக் கட்டி எழுப்புதல் பற்றிய உங்கள் எண்ணமும் எனக்குள் மிகுந்த தெளிவை உண்டாக்கின.சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

பணிவுடன்,
கணேஷ் பாபு

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிங்கப்பூரில் தங்களை மீண்டும் சந்திக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ நூல் பற்றித் தங்களிடம் பேச நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

திரு.லீ குவான் யூ பற்றிய உங்கள் பதிவு பற்றியது இது. உண்மைதான். காற்றைத்தவிர அனைத்திற்கும் மற்ற நாடுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய ஒரு நிலையில் உருவானது சிங்கப்பூர். கலை, எழுத்து, கேளிக்கைகள் முதலியன உணவும் வேலையும் கிடைத்தபின்னர் தாமாகவே உருவாகும் என்பதில் திரு.லீ அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தகரக் கொட்டகைகளில் வாழ்ந்து வந்த மக்களை வானுயர் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்களாக்கினார் லீ.

தேசத்தின் ஒவ்வொரு நகர்வையும் ஆழ்ந்து ஆலோசனை செய்து பின்னர் செயல்படுத்தினார். இதனால் இரண்டே தலை முறையில் மூன்றாம் தர நாட்டின் நிலையில் இருந்து முதல் தரத்திற்கு உயர்த்தினார். இவையும், லீயின் தொலை நோக்குப் பார்வையும் தேச நிர்மாணத்திற்கும் உலக சம நிலைக்கும் எவ்வாறு உதவின என்பதை அவரது மூன்று நூல்களைப படித்து மூன்று பதிவுகளாக எழுதியிருந்தேன். அவை தங்கள் பார்வைக்கு.

Sage of Singapore – Three Part Series.

http://amaruvi.in/2013/08/03/the-sage-of-singapore/

http://amaruvi.in/2013/08/08/the-sage-of-singapore-part-2/

http://amaruvi.in/2013/08/10/the-sage-of-singapore-part-3/

இத்துடன் ‘பழைய கணக்கு’ என்னும் என் முதல் நூலையும் தங்களுக்கு அனுப்பியிருந்தேன். அது பற்றியும் உங்கள் ஆற்றுப்படுத்தலைக் கோருகிறேன்.

நன்றி
ஆமருவி தேவநாதன்
www.amaruvi.com