அன்புள்ள ஜெயமோகன் சார்
வணக்கம். தமிழ் இந்துவுக்கு நன்றி கட்டுரை வாசித்தேன்.
உங்கள் அவதானிப்பு மிகச் சரி. தினமணியில் ஒரு பத்தாண்டுக் காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன்.
தலைமை குழுவின் தன்முனைப்பு, எழுத்தாளர் பற்றி தெரியாத துணை ஆசிரியர் குழுவின் அறியாமை காரணமாக சிறந்த எழுத்தாளர் பற்றிய செய்திகள் அதில் நிராகரிக்கப்படுகின்றன.
உதாரணமாக எழுத்தாளர் சுஜாதா காலமான நாள் அன்று நான் இரவுப் பணியில் இருந்தேன். அச் செய்தியை முதல் பக்கத்திற்கு கொண்டு வர “எல்லாம்” தெரிந்த இரவு பொறுப்பாளரிடம் போராட வேண்டியதானது. “சார் சுஜாதா நிறைய நாவல், சிறுகதைகள், கட்டுரை எழுதியுள்ளார்…ஆனந்த விகடனில் தொடரெல்லாம் எழுதியிருக்கிறார். தமிழில் முக்கியமான ஆளுமை, சினிமாவுக்கு கதை, வசனம் எழுதியவர் என்றெல்லாம் கூறி அவரை சமாதானம் செய்தபோதும் நான் சொல்லி செய்வதா என்ற கர்வம் தடுத்தது. நாளைக்கு எல்லோரும் செய்தி வெளியிடுவார்கள். நாம் போடாவிட்டால் அவமானம் என்று சொன்ன பிறகே முதல் பக்கத்திற்கு வந்தது… அதுவும் ஒரு சிறிய படம் வைத்து பாயிண்டர் செய்தியாக….(விரிவான செய்தி உள்ளே)
இலக்கியத்தை பொறுத்த வரை அதன் தலைமைக்கு ஓர் அளவுகோல் உள்ளது. அந்த அளவுகோலில் நானறிந்தவரை நவீன எழுத்தாளர்கள் வருவதில்லை. அதை ஆட்சேபிக்கும் அல்லது எதிர்க்கும் உதவி, துணை ஆசிரியரால் அங்கே இருக்க முடியாது. அல்லது வெளியேறிவிடுவர். ஒரு முதிரா வாசகனுக்குரிய எளிய வாசிப்புப் புலமோ அல்லது இலக்கியம் பற்றிய உணர்வோ கூட இல்லாதவருக்கும், அப்படி என்றால் என்னவென்று தெரியாதவருக்குமே அங்கு இடம்.
இலக்கிய நுண்ணுணர்வு உள்ளவருக்கு அங்கு மட்டும் அல்ல எந்த நாளிதழிலும் இடம் இல்லை. ஆசிரியர் குழாமில் வெற்று சில்லறை அலுவலக அரசியல் செய்து சொம்பு தூக்கும் குருவி மண்டைகளுடன் போராடிக் கொண்டு மனத்தாங்கலுடனும் சொல்லவொணா துயரத்துடனும் ஓரளவேனும் இலக்கிய வாசிப்புடன் நுண்ணுணர்வுடைய ஒருவன் அதில் பணியாற்றுகிறான் என்றால் அது முற்ற முழுதாக தவிர்க்கவியலாத அவன் வயிற்றுப்பாட்டின் காரணமாகவே இருக்கும்.
கொள்கை வேறுபாடுகள் நிலவிய போது கூட ராஜமார்த்தாண்டன் போன்ற ஆளுமை அதில் நிலைக்க முடிந்தது. ஆனால் இப்போது அது நிலைய வித்வான்கள் மட்டுமல்ல அரசவை கட்டுரையாளர்களால், பக்க வாத்தியங்களால் செலுத்தப்படுகிறது.
மேலும் இது போன்ற செய்தியையோ கட்டுரையையோ முடிவு செய்வதும் குழாம் அல்ல. அது அங்கு தனியுடைமை.
முதிரா வெகுஜன ரசனையுடைய எதேச்சதிகார மையப்படுத்தப்பட்ட தலைமையிடம் நவீன எழுத்தாளருக்காக வாதிடுவதற்கு ஒன்றுமில்லை.
அப்படியே வாதிட நேர்ந்தாலும் புகழ்பெற்ற ஒருவருக்கு எதற்கு விளம்பரம்? என்ற பதிலை நான் கேட்டிருக்கிறேன். அதில் தனது எல்லைக்குட்பட்ட தனித்துவம் இல்லாதவர்களையே விதந்தோதும் எழுதப்படாத கொள்கை அடங்கியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
2012 டிசம்பர் 22 என்று நினைக்கிறேன். கோவையில் அன்றிரவு உங்களுடனான உரையாடலின்போது ஒரு குறிப்பிட்ட கட்டுரையாளரின் பெயரைக் கூறி எப்படி இதெல்லாம் போடறாங்க என்று நீங்கள் கேட்டதற்கு அதையெல்லாம் முடிவு செய்யும் அதிகாரம் எங்களிடம் இல்லை சார்…என நாங்கள் கூறியது நினைவு வருகிறது.
எனவே ஒரு சிறிய சதவீதத்தினர் தவிர பொதுவாக துணையாசிரியர்கள் அதிகபட்சமாக ஆனந்த விகடன், ஜூனியர் விகடனுக்கு மேல் வாசிப்பு உடையவர்கள் அல்ல. நுண்ணிய, நவீன வாசிப்பு கொண்டவர்களும் அல்ல. இதில் அதிகாரத்தாலோ அல்லது செய்தி சேகரித்த அனுபவத்தாலோ பொறுப்பிற்கு வந்த தலைமைகளும் விதிவிலக்கல்ல.
நான் ஓரளவுக்கு நூல்கள் மட்டுமே வாசிக்கத் தெரிந்தவன் என்பதாலும் எந்தவொரு பக்க வாத்தியமும் வாசிக்கத் தெரியாதவன் என்பதாலும் அதிலிருந்து விலகிவிட்டேன்.
நன்றி
க.ரகுநாதன்
ஊத்துக்குளி, திருப்பூர்.