அப்துல் ரகுமான் – பவள விழா

வானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன்

கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்.

தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக அமைந்த கவிஞர்களை வைத்து இச்சரடுகளை மதிப்பிட்டால் முதன்மையானது டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், எமிலி டிக்கன்ஸன் போன்றவர்களை முன்னோடிகளாகக் கண்ட மரபு. இவர்களுக்கு படிமவியல் முக்கியமான அழகியல்நோக்காக இருந்தது. க.நா.சுவும் செல்லப்பாவும் இதை முன்னெடுத்தனர்.

சி.மணி, பிரமிள்,தி.சொ.வேணுகோபாலன், நகுலன், சுந்தர ராமசாமி [பசுவய்யா] ஞானக்கூத்தன் தேவதச்சன் தேவதேவன் என நீளும் ஒரு கவிமரபு இது. செறிவான மொழி, வாசக இடைவெளிகள் மிகுந்த வடிவம், படிமங்கள் மூலம் எழுதப்பட்டவை இவை. எழுத்து, கசடதபற போன்ற சிற்றிதழ்களில் இது வலுவான இயக்கமாக ஆகியது.

இரண்டாவது கவிமரபை வால்ட் விட்மன், பாப்லோ நெரூதா , ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுந்தது என்று சொல்லலாம். உணர்ச்சிகரம், சொற்பெருக்கு, நேரடியான உரையாடல் அல்லது உரைநிகழ்த்தல் வடிவம், சொல்லணிகள் ஆகியவை கொண்ட கவிதைகள் இவை. வானம்பாடி என்னும் சிற்றிதழ் இக்கவிமரபை முன்னெடுத்தது. ஆகவே இவர்களை பொதுவாக வானம்பாடிகள் என்று சொல்கிறார்கள்

கங்கைகொண்டான், நா.காமராசன், மு.மேத்தா, சிற்பி,மீரா, ஈரோடு தமிழன்பன், புவியரசு போன்றவர்களை இம்மரபின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் என்று சொல்லலாம். கோவை ஞானி இவர்களின் கோட்பாட்டாளராக இருந்தார். இவர்களுடையது அரசியல் நோக்கம் கொண்ட கவிதை. சமூகக் கோபங்களையும் கவலைகளையும் நேரடியாக வெளிப்படுத்தியது. ஆகவே மக்களிடம் நேரடியாகப்பேச முயன்றது. எனவே இவற்றுக்கு ஒரு மேடைத்தன்மை உருவாகி வந்தது. ஆனால் தமிழில் இவர்களே அன்றைய புகழ்பெற்ற கவிஞர்கள்.

மூன்றாவது கவிமரபு ஒன்றை சொல்லலாம் என்றால் அப்துல் ரகுமானைக் குறிப்பிடலாம். ரூமி, கலீல் கிப்ரான் ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டது இது. வானம்பாடிக் கவிஞர்களில் இருந்த அரசியல், சமூகமாற்றம் சார்ந்த உள்ளடக்கத்துக்குப் பதில் மதம்சாராத ஓர் ஆன்மீகத்திற்கான தேடல் கொண்ட கவிதைகள் இவை. அப்துல் ரகுமானும் வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவராகவே பொதுவாகக் கருதப்படுகிறார்

அப்துல் ரகுமான் கவிதைகள் கஸல் போன்ற இசைப்பாடல்களின் வடிவத்தை உரைநடையில் அடைய முயல்பவை. ஆகவே நேரடியான நெகிழ்வையும் உணர்வெழுச்சிகளையும் கண்டடைதலின் பரவசத்தையும் அவை வெளிப்படுத்துகின்றன. தமிழில் எழுதப்பட்ட நவீன சூஃபி கவிதைகள் என அவரது கவிதைகளை பொதுவாக வரையறை செய்யலாம்.

தமிழ்ப்புதுக்கவிதை செயல்பட்ட இரு தளங்கள் ஒன்று எழுத்து பாணி கவிதைகளின் அந்தரங்க அலைச்சல்களும் அறிதல்களும். இன்னொன்று வானம்பாடிகளின் அரசியல் சமூகக் கவலைகளும் கோபங்களும். அப்துல் ரகுமான் முன்வைத்த சூஃபி மெய்ஞானம் சார்ந்த எழுச்சிகளுக்கு இங்கு வாசிப்புத்தளம் இருக்கவில்லை. ஆகவே அவரே ஜூனியர் விகடன் இதழில் பலவருடங்களுக்கு முன்பு தன் கவிதைகளின் அழகியல் – ஆன்மீகப் பின்புலத்தை விளக்கும்பொருட்டு தொடர்கட்டுரைகளை எழுதினார். அதில் அவர் சார்ந்துள்ள மரபின் முன்னோடிக் கவிஞர்களை அறிமுகம் செய்தார்

அப்துல்ரகுமான் கவிதைகளை இந்தத் தளத்தில் வைத்து விவாதிப்பதை நான் எங்கும் பார்த்ததில்லை. அவரது பவளவிழாவை ஒட்டி இது நிகழுமென்றால் நன்று. அவரை வழக்கமான அரசியல் வரிகளையோ அடுக்குமொழிகளையோ பொறுக்கி வைத்து வழக்கமான புகழ்மாலைகளில் குளிப்பாட்டாமலிருப்பார்களாக.

அப்துல் ரகுமான் கவிதைகளின் அழகியல் குறைபாடுகளாக நான் எண்ணுவன இரண்டு. ஒன்று, சூஃபி மெய்ஞானம் சார்ந்து முன்னரே கவிதைகளில் வெளிப்பட்டுள்ள அக எழுச்சிகளின் நகல்வடிவங்களே அவரில் வெளிப்படுகின்றன. அவை சூஃபி எழுதிய கவிதைகள் அல்ல, சூஃபி மெய்ஞானத்தைக் கற்றறிந்தவர் எழுதிய கவிதைகள்

சூஃபி மெய்ஞானம் நுண்மையானது, அருவமானது. அதைச் சொல்ல வெறுமே மொழியழகினால் மட்டுமே நிலைகொள்ளும் கவித்துவம் தேவை. பொருளின்மையைக்கூடச் சென்று தொடும் அழகாக அது இருக்கவேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களில் பல இடங்களில் எளிமையான சொல்லடுக்கில் அது நிகழ்கிறது

அப்துல் ரகுமானின் கவிமொழி அந்த உச்சத்தை நோக்கிச் செல்வதில்லை. அவர் வசனகவிதையை தேர்ந்தெடுத்தது சரியானதா என்னும் ஐயமே உருவாகிறது. அவர் இசைப்பாடல்களை, செய்யுட்களை எழுதியிருந்தால் அந்த ஓசைநயமும் இசையொழுங்கும் இணைந்து அது நிகழ்ந்திருக்கலாம். சூஃபி கவிதைகளை ஆங்கில மொழியாக்கம் வழியாக வாசிக்கையில் அவற்றின் அர்த்தம் மட்டும் வந்துசேர்கிறது. அந்த அர்த்தத்தின் தமிழ் வடிவங்களாக உள்ளன அவரது கவிதைகள்

தமிழில் ஒரு தனித்துவமான கவிதைவட்டத்தை உருவாக்க முடிந்தவர் அப்துல் ரகுமான். சூஃபி மெய்ஞானம் என்பது ஒரு நுட்பமான சமநிலை. இங்கிருக்கையிலேயே வானுடன் தொடர்புகொண்டுள்ள அமைதி. அதைத் தொட்டுக்காட்டும் பல வரிகளை அப்துல் ரகுமானில் காணலாம்.அதைப்பற்றிய ஒரு கவனம் இன்று தொடங்கட்டும்

பெரியவருக்கு என் வணக்கங்கள்

*கதவு

அப்துல் ரகுமான்

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்

கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்

*
1

உதிரும் சிறகுகள்

அப்துல் ரகுமான்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம

காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து –

ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.


கவிக்கோ இணையதளம்

முந்தைய கட்டுரைஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42