ஊட்டி காவிய முகாம் – இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஊட்டி கூட்டம் பற்றிய பதிவை வாசித்தேன். இந்தக்கூட்டத்தை நீங்கள் ஏன் நடத்தவேண்டும் என்ற கேள்வி எனக்குள் உள்ளது. உங்களுக்காக ஒரு ரசிகர் அமைப்பை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஜாம்

***

அன்புள்ள ஜாம்,

ஊட்டி கூட்டம் சம்பந்தமாக பல ஐயங்கள் கேள்விகள் பலரிடமிருந்து வந்தபடியே இருந்தன. எவற்றுக்கும் நான் பதில் சொல்லமுனையவில்லை. கூட்டமே அதற்கான பதில். முக்கியமாக எழுந்த ஐயம், நான் ‘ரசிகர்மன்றம்’ வைக்கிறேனா என்பது. அந்த வினாவில் உள்ள பேதைத்தனம் பொதுவாக இலக்கியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அதைப்பற்றிய செவிவழிச்செய்திகள் வம்புகளை மட்டுமே வாசிப்பவர்களுக்கு உரியது.

இலக்கியத்தின் தளத்தில் ஒருவரின் ஆக்கங்களே அவருக்கான இடத்தை உருவாக்குகின்றன. அவற்றுக்கான வாசிப்பை ஒருபோதும் அமைப்பாக ஒருங்கிணைக்க முடியாது. தமிழகத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் அவ்வாறு அமைப்பாக திரண்டவர்கள். அவர்களின் படைப்புகள் அமைப்பு வல்லமையுடன் கூட்டங்களும் கருத்தரங்குகளும் போடப்பட்டு துதிமுழக்கங்களுடன் முன் வைக்கப்படுகின்றன. அந்த வழியாக அவர்களின் எந்த ஆக்கமும் இலக்கியரீதியான முக்கியத்துவத்தை பெற்றதில்லை

இலக்கியவாசகன் எவனும் நான் வாசகன் என்ற தன்னிலையுணர்வு கொண்டவன். ஒருபோதும் அவனை அமைப்புக்குள் நிறுத்த முடியாது. ரசிகர்களை உருவாக்க எவரும் தமிழிலக்கியத்தின் ஈராயிரம் வருட பாரம்பரியத்தைப்பற்றி கூட்டம் ஏற்பாடு செய்ய மாட்டார்கள் என்ற பொதுஅறிவாவது உள்ளவர்களிடமே பேச விரும்பினேன். நாஞ்சில்நாடன் முதல் இசை, இளங்கோகிருஷ்ணன் வரை தமிழின் தரமான இலக்கியப்படைப்பாளிகளை ஒரேசொல்லில் அவமதிப்பவர்களிடம் என்ன பேச முடியும்? இப்பதில் நீங்கள் என் வாசகராக அறிமுகம் செய்துகொள்கிறீர்கள் என்பதற்காக.

இந்த கூட்டம் 1996 முதல் கிட்டத்தட்ட 14 வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. இதுவரை 22 கூட்டங்கள் நிகழ்ந்துள்ளன. கவிதைக்காக 13 கூட்டங்கள். தமிழ், மலையாளம் கவிதைகளை மொழியாக்கம்செய்து விவாதித்திருக்கிறோம். விவாதங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. கவிதைகள் இரு நூல்களாக வெளிவந்தும் உள்ளன. ஊட்டி அரங்குகளில் இதுவரை நாஞ்சில்நாடன் தேவதேவன் சுகுமாரன் ராஜசுந்தரராஜன் முதல் இளம் படைப்பாளிகள் வரை தமிழின் மிகமுக்கியமான படைப்பாளிகள் பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். நாஞ்சில்நாடன் படைப்புகளைப்பற்றிய கருத்தரங்காக ஒன்று , மு.தளையசிங்கம் படைப்புகளுக்காக ஒன்று என பொதுவான அரங்குகள் மூன்று நிகழ்ந்துள்ளன. அனைத்துமே என் செலவில். ஆனால் இதுவரையிலும் என் படைப்புகள் பற்றி எந்த அரங்கும் நிகழவில்லை. என் படைப்புகளைப்பற்றி எந்த விவாதமும் நிகழ்த்தப்பட்டதில்லை. இதைத்தவிர நாகர்கோயிலில் நான் மூத்த எழுத்தாளர்களுக்காக 5 கூட்டங்கள் நிகழ்த்தியிருக்கிறேன். என் நூல்களுக்காக எதுவும் ஏற்பாடுசெய்தது இல்லை.

தமிழில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களும் கருத்தரங்குகளும் இவ்வாறு தனிநபர்களால் ஒருங்கிணைக்கப்படுவனவே. சுந்தரராமசாமி காகங்கள் என்ற இலக்கியச் சந்திப்பை பல வருடங்கள் நடத்தினார். கோவைஞானி நிகழ் சார்பில் பல சந்திப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் . ராஜமார்த்தாண்டனும் சுரேஷ்குமார இந்திரஜித்தும் சந்திப்பு என்ற தொடர்நிகழ்வை மதுரையில் செய்திருக்கிறார்கள். கணையாழி சார்பில் கஸ்தூரிரங்கன் இலக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தியிருக்கிறார்.

பலர் பெயரறியாது போயிருக்கிறார்கள். இலக்கியவீதி இனியவன் என்பவர் சென்னையில் நடத்திய நிகழ்ச்சிகள் முக்கியமானவை. என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் சென்னையில் இருபது வருடங்கள் இலக்கிய அரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவருடன் இணைந்து நான் நாஞ்சில்நாடனுக்காக ஒரு கூட்டம் ஏற்பாடுசெய்திருக்கிறேன். நாகர்கோயிலில் நெய்தல் கிருஷ்ணன் பலவருடங்களாக சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறார். காஞ்சீபுரத்தில் மறைந்த வே.நாராயணன் முப்பதாண்டுகள் இலக்கிய நிகழ்ச்சிகளை அமைத்து வந்தார். நான் நடத்தும் கூட்டங்கள் அவ்வரிசையில் வருவன மட்டுமே.

இலக்கிய இயக்கமே இவ்வாறுதான் முன்னகர்கிறது. உங்களைப்போன்றவர்கள் ஓரமாக நின்று பொச்சரித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இணையம் நம் அற்பத்தனத்தின் கண்ணாடியாக ஆகி வருகிறது. அற்பத்தனமாக பொதுவெளியில் வெளிப்படுவது குறித்த சிறு கூச்சம் கூட வரவர இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது.

ஜெ

**

ஜெயமோகன் அவர்களே

உங்கள் கூட்டத்தில் ஜடாயு என்ற பார்ப்பனர் வைஷ்ணவத்தைப்பற்றி பேசியிருக்கிறார். ராமச்சந்திர சர்மா என்ற பார்ப்பனர் பாடியிருக்கிறார். [பார்க்க தமிழ்ஹிந்து] இதற்காகவே நீங்கள் ஊட்டியிலே ஆளைக்கூட்டியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பார்ப்பனர்களை வைத்து கூட்டம் நடத்துவதற்கு ஏன் இலக்கியக்கூட்டம் என்று பெயர் போடுகிறீர்கள்?

ராஜரத்தினம்

அன்புள்ள ராஜரத்தினம்

உங்கள் நீளமான கடிதத்தின் ஒரு வரியே வெளியிடும் தகுதி கொண்டது. இந்த ஒரு வரியே ஏன் இலக்கியக்கூட்டங்கள் சரியான பங்கேற்பாளர் தேர்வு இல்லாமல் நிகழ்த்தப்படக்கூடாது என்பதற்கான சான்றாகும். நன்றி

ஜெ

புகைப்படங்கள் சேதுபதி : http://picasaweb.google.co.in/sethupathi.arunachalam/Ooty2?authkey=Gv1sRgCM__36OLzYyr7gE#

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – சந்திப்பு அலைகள்…
அடுத்த கட்டுரைசைவப்பாடல்கள், கடிதங்கள்