வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு

venkat-saminathan

ஜெ,

சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன? அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா?

ராஜாராம்

nufman [எம் ஏ நுஃமான்]

அன்புள்ள ராஜாராம்,

எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது.

வெங்கட் சாமிநாதன் எழுபது எண்பதுகளின் விமர்சகர். அன்று இலக்கியம் என்பது கருத்தியலின் வெளிப்பாடு மட்டுமே எனக் குறுக்கும் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இலக்கியத்தைப் படைக்கும் தனிமனித அகம் என்பதை நிராகரித்து அதை ஒரு சமூக உற்பத்தி என்று நோக்கும் பார்வைகள் மேலெழுந்தன. இலக்கியத்தின் அரசியல் -சமூகத்தள பயன்பாடு மட்டுமே முக்கியம் என்று வாதிடப்பட்டது

நா வானமாமலை
நா வானமாமலை

அப்போது கலையின் ஆழ்மனம்சார்ந்த இயக்கத்தை, தனிமனிதக் கனவு என்னும் இயல்பை, அதன் அழகியல் பண்பை வலியுறுத்தும் தரப்பு தேவைப்பட்டது. புதுமைப்பித்தனே அதை தொடங்கிவைத்தவர். க.நா.சு, சி.சு.செல்லப்பா அதை முன்னெடுத்தனர். அம்மரபின் ஒரு வன்மையான போர்க்குரல் வெங்கட் சாமிநாதன் — அதுதான் அவரது இடம். முன்னோடிகள் இலக்கியத்திற்குள் வைத்துப் பேசிய சிந்தனைகளை கலைகளையும் நாட்டாரியலையும் கணக்கில்கொண்டு மேலும் விரிவாக பேசியவர்.

தொடர்விவாதங்கள் வழியாக இலக்கியத்தின் கலைத்தன்மையை நிலைநாட்ட வெங்கட் சாமிநாதனால் முடிந்தது. ஆகவேதான் அவர் முக்கியமான விமர்சகர் ஆகிறார். அவரது பங்களிப்பு அது

கைலாசபதி
கைலாசபதி

சாமிநாதன் மட்டுமல்ல அவர் சார்ந்திருந்த கலைமையவாதத்தின் தரப்பே ஐரோப்பிய நவீனத்துவம் சார்ந்தது. பாலையும் வாழையும் உள்ளிட்ட ஆரம்பகால எழுத்துக்களில் அன்றைய ஐரோப்பிய நவீனத்துவத்தின் அடிப்படையான மூன்று நோக்குகளை அவர் முன்வைப்பதைக் காணலாம். 1வடிவ மையவாதம் 2 தனிமனிதமையவாதம் 3 இந்தியமரபின் மீதான அவநம்பிக்கை மற்றும் எதிர்ப்பு , அதே சமயம் ஐரோப்பிய மரபின் மீதான வழிபாட்டுணர்வு

பின்னர் கலைகள் வழியாக இந்தியாவின் மைய ஓட்ட மரபை அவர் ஏற்றுக்கொண்ட போதிலும் தமிழின் பேரிலக்கியமரபை தெரிந்துகொள்ள முயலாமலேயே நிராகரித்ததை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அவ்வகையில் அவரது முன்னோடிகளான சி.சு.செல்லப்பா, மௌனி, க.நா.சு ஆகியோரின் க.நா.சு கடைசிக்காலத்தில் தமிழ்ப்பேரிலக்கிய மரபை அறியமுயன்றார், ஏற்றுக்கொண்டார்

வெங்கட் சாமிநாதன் தமிழில் முன்னுதாரணப்படைப்புகளாக, படைப்பியக்கமாக முன்வைத்தவை பெரும்பாலும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் சாதனைகளையே. ஐரோப்பிய நவீனத்துவத்தின் அழகியல் அளவுகோலுக்குள் அடைபடும் இந்திய மரபையே அவர் அள்ள முயன்றார். இதே அணுகுமுறையை ஞானக்கூத்தனிடமும் நாம் காணலாம்

இந்திய மரபு சார்ந்த அழகியல் நோக்குக்கு அவர் மிகப்பிற்காலத்தில் நாட்டாரியல் வழியாகவே ஓரளவு வந்துசேர்ந்தார்.ஈழ இலக்கிய அழகியல்வாதியான மு.தளையசிங்கத்தின் சிந்தனைகள் பெரிதும் உதவின

1 [மு தளையசிங்கம்]

நவீனத்துவம் அதன் சாதனைகளை விட்டுவிட்டு இன்று பின்னகர்ந்துவிட்டது. வெங்கட் சாமிநாதன் நவீனத்துவத்தின் அழகியல்வாதத்தை முன்வைத்த க.நா.சு மரபின் இறுதிப்புள்ளியாக தன் பங்களிப்பை ஆற்றி காலத்தில் மறைந்துவிட்டார்.

ஆனால் நவீனத்துவத்தைக் கடந்துவிட்ட இக்காலகட்டத்திலும் வெங்கட் சாமிநாதனின் ஓர் அம்சம் முக்கியமானதாக உள்ளது. அது அவர் சொன்ன டிரான்ஸ் என்னும் நிலை. அதை அதர்க்கத்தில், ஆழ்மனவெளியில், மொழியிலி நிலையில் அவர் வரையறை செய்கிறார். அதற்கு உண்மையில் நவீனத்துவத்தில் இடமில்லை.

அசோகமித்திரனை சுந்தர ராமசாமியை கிட்டத்தட்ட முழுமையாக நிராகரித்த வெ.சாமிநாதன் லா.ச.ராமாமிருதத்தையும் மௌனியையும் உச்சத்தில் தூக்கிவைத்தது இதனால்தான். விஷ்ணுபுரம் மீது அவர் கொண்ட பெரும் ஈடுபாடும் இதனால்தான்.

sublime என்று பின்நவீனத்துவம் இதை குறிப்பிடுகிறது. நவீனத்துவத்தை நிராகரிக்கும் எழுத்துக்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இது

[சிவத்தம்பி]

இந்த ஓர் அம்சத்தால் வெங்கட் சாமிநாதன் பிறநவீனத்துவர்களிடமிருந்து மாறுபடுகிறார். அவரை ஆதரித்தவர் எதிர்த்தவர் இருதரப்புமே முன்வைத்த நவீனத்துவநோக்கின் எல்லையிலிருந்து கடந்து இன்றும் நீடிக்கும் ஒரு முக்கியமான தரப்பாக மாறுகிறார்.

அவரது எதிர்த்தரப்பான கைலாசபதியிடம் இருந்து இன்றைக்கு எஞ்சுவது முரணியக்க வரலாற்று நோக்கு என்றால் வெங்கட் சாமிநாதனிடம் இருந்து இன்றைக்கு எஞ்சுவது கட்டற்ற படைப்பு அகம் குறித்த அவரது அவதானிப்புதான்.

இதுதான் அவரது இன்றைய மதிப்பு என்று எண்ணுகிறேன். அவர் அன்று மார்க்ஸியர்களை நிராகரித்ததும் பேசியதுமெல்லாம் காலாவதியாகலாம். அவர் எழுப்பிய இந்த வினா மேலும் விவாதிக்கப்படும்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 43
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனின் காந்தி