அன்பு என்ற நோய்-கடிதம்

அன்புள்ள ஜெ

காடு நாவலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் என் வாசிப்புக்குள் இதை மாதிரி எந்த ஒரு புத்தகத்தையும் திரும்பத்திரும்ப வாசித்ததே இல்லை. இந்த நாவலுக்குள் உள்ள குமரித்தமிழிலே இருக்கக்கூடிய மர்மம்தான் என்னை இப்படி வாசிக்கச் செய்கிறது. முதலிலே நிறைய விஷயங்களை விட்டுவிட்டு கதையை வாசித்துக்கொண்டே சென்றிருந்தேன். இப்போது வாசிக்கும்போது ஏராளமான வரிகள் என் மனசுக்குள் ஒட்டிக்கொண்டன.

பணிவாக நிற்பதுக்குத்தான் எத்தனை தசைகளை ஒடுக்கி இறுக்கவேண்டியிருக்கிறது

நல்ல ஒரு புதுக்கவிதை வரிமாதிரி இருந்தது. இந்தமாதிரி எவ்வளவோ வரிகளை நான் தனியாக குறித்தே வைத்திருக்கிறேன். அவ்வப்போதுசில வரிகள் ஞாபகம் வந்து நிறைய சிந்தனைகளை உருவாக்குகின்றன.

இந்த நாவலின் நுட்பங்களை நான் இன்னும் பாதிகூட வாசிக்கவில்லை என்ற நினைப்பு இப்போது ஒரு அத்தியாயத்தை வாசிக்கும்போது ஏற்பட்டது.

ரெசாலத்தின் தேவாங்கு அருகே வந்தது. வெகுநேரம் மெதுவாக அது வந்தபடியே இருந்திருக்க வேண்டும். குட்டப்பன் ’இதுக்கு இப்பம் தீனியும் வேண்டாம் காடும் வேண்டாம் ரெசாலத்துக்க தோளிலே கெடந்தா போரும்’ என்றான்

’அப்படி மனசை பிடிச்சு கெட்டுத சக்தி எது’ என்று கேட்டேன்

சினேகம்மை சிரித்தபடி ‘சினேகமாக்கும் ஏமான். காட்டிலே சினேகம் இல்லை பாத்துக்கிடுங்க. அம்மையானாலும் அடுத்த பேறுக்குள்ள வெரட்டிப்போடும். மனியன் நினைச்சா இந்த காட்டிலே உள்ள அம்பிடு மிருகத்தையும் வசப்படுத்தி கெட்டிப்போடலாம்’

இந்த இடம் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உண்மை என்று சொல்லிக்கொண்டு வாசித்தேன். ஆனால் கொஞ்ச பக்கங்களிலேயே அதன் அடுத்த திருப்பம் வந்தது. ரெஜினா தன் கணவ நோயில் விழுந்து சாகக் கிடக்கும்போது காசுக்காக அலைகிறாள். லாரிக்காரர்கள் வருவார்கள் என்று நின்று பார்க்கிறாள். காசே கிடைக்கவில்லை. குட்டப்பன் உதவிக்கு வருகிறான். அவன் அவளிடம் கஞ்சாவை கொடுத்து அதை ஒரு முஸ்லீமிடம் கொண்டு கொடு காசுதருவான் என்கிறான்.

ரெசாலம் ‘ஏமிட்டி கரையுதே அவன் விளுந்து வரியம் ஏளாவுது. நடந்த நாளிலே உன்னை பட்டிக்கும் மதிச்சானில்ல. அப்பம், அடிக்குதான் சவிட்டுதான் நீக்கம்புலே போவமாட்டானா பேதியிலே போவமாட்டானா எண்ணு இங்க வந்து கண்ணீரு விட்டே. இப்பம் அவனை எதுக்கு பிடிச்சு கிடத்தியிருக்கே. போனாப்போறான் எண்ணு விடாம…’ என்றார்

‘உம்ம பொஞ்சாதிக்கிட்ட செண்ணு கேளும் வேய்’ என்று மூக்கு விடைக்க சீறும் குரலில் ரெஜினா சொன்னாள்

ரெசாலம் அப்படியே அயர்ந்துவிட்டார். சற்றுநேரம் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார். பிறகு எழுந்தபோது அவர் வேட்டியில் தேவாங்கு தொங்கியது.

‘’இது ஒரு எளவெடுத்த சனி’ என்றபடி அவர் அதை உதறினார். சர் என்று வேட்டி அதன் நகம் பட்டு கிழிந்தது. ரெசாலம் ’வேட்டியை கீறுதியா நாறச்சனி’ என்று அதை உதைத்தார். குட்டிக்கரணமிட்டு விழுந்தது. ஆனால் ஒலியே எழுப்பவில்லை. அவர் சற்றுமுற்றும் பார்த்தார். வெறிபிடித்தது போலச் சுழன்றார். ஒரு சுள்ளி கிடைத்த்து. அதை எடுத்து ’சாவு சாவு’ என் அ அதை அடித்தார். ஓசையே இல்லாமல் சரிந்து சரிந்து விழுந்தது. மெல்லிய கைகளை மெதுவாக அடைத்து தத்தளித்தது குச்சி ஒடிந்ததும் அவர் மூச்சிரைக்க நின்றார்., ரெஜினாளை திரும்பிப்பார்த்துவிட்டு நேராக தன் குடிசை நோக்கிச் சென்றார். தேவாங்கு எழுந்து ஏழெட்டுமுறை கண்களைச் சிலுப்பியது. பிறகு ரெசாலத்தை பிந்தொடர்ந்து மெதுவாக நகர்ந்து போக ஆரம்பித்தது

இந்த அத்தியாம் அன்பைப்பற்றிய கவிதை போன்ற ஒரு சிறுகதை ஜெ. அன்புக்கு எத்தனை முகங்கள். அன்புக்குள்ளே விழுந்த உயிர் மீளவே முடியவில்லை இல்லையா? ரெசாலம் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்பதை பிறகு புரிந்துகொள்கிறோம். அவரது மனைவியின் துரோகம் காரணம். அப்போது அன்பு கான்சர் மாதிரி ஒரு கொல்லும் நோய் என்றும் தெரிகிறது

ஜெ, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

செ.சரவணன்

முந்தைய கட்டுரைமருதுபாண்டியர் பற்றி
அடுத்த கட்டுரைசில இணைப்புகள்