‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40

பகுதி ஐந்து : தேரோட்டி – 5

கதன் சொன்னான் “அன்று பகல் முழுக்க என் மாளிகையின் உப்பரிகையில் நின்று அஸ்தினபுரியின் தொன்மையான தெருக்களையும் கருமை படிந்த கோட்டையையும் காவல் மாடங்களையும் பெருமுரசங்களையும் நோக்கிக் கொண்டிருந்தேன். பொழுதுமாறும் முரசொலியே என்னை பகலென உணரச்செய்தது. அன்றிரவு அங்கே துயின்றேன். நான் ஏன் வந்தேன், என்ன செய்யவிருக்கிறேன் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஒன்றுக்கும் பொருளில்லை என்பது மூக்கில் முட்டும் சுவர் போல தெரியும் சில தருணங்கள் வாழ்வில் உண்டல்லவா?”

புலரியில் கனகர் வந்து எனக்கு விடைகொடுத்தார். நான் கிளம்பும்போது அவர் முகத்தில் ஏதோ இருந்தது. தேரில் ஏறிக்கொண்டதும் என்னிடம் “அமைச்சர் விதுரர் ஒரு சொற்றொடரை சொல்லச்சொன்னார்” என்றார். என் உள்ளம் படபடத்தது. “ஆணைகளை ஏற்பவர்கள் காத்திருக்கவேண்டும். அவர்களின் செவிகள் திறந்திருக்கட்டும் என்றார்” என்றார் கனகர். நான் அச்சொற்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் என் உள்ளம் அமைதிகொண்டது.

கங்கைக்கரைப் படகுத்துறையை அடைந்து அங்கிருந்து யமுனை வழியாக நான் மதுவனத்தை அடைவதாக இருந்தது. எனக்கான ஐந்துபாய்ப் படகு காத்திருந்தது. அதில் ஏறி கங்கையில் பாய் விரித்தபோது அதுவரைக்கும் என்னிடமிருந்த பரபரப்பு அகன்று நீரோட்டத்தின் மென்மையான ஒழுக்கு என்னுள்ளும் நிறைந்தது. என் பரபரப்பை எண்ணி நானே புன்னகைத்துக் கொண்டேன். மரத்தில் அடிவிழுகையில் தூசித்துளிகள் எம்பிக் குதிப்பது போன்றதே அது. நானல்ல, நான் அமர்ந்திருக்கும் நிலம் கொள்ளும் அதிர்வுதான் அது.

இவை அனைத்தும் என்னைச் சூழ்ந்து செல்லும் இப்பெருவெள்ளம் போன்றவை என எண்ணினேன். இதன் திசைச்செலவுக்கு அப்பால் எதையும் ஆற்ற ஒண்ணாதவன் நான். இதிலொரு துளி. இதிலொரு அலை. ஆயினும் நான் என்று எண்ணவேண்டியிருந்தது. ஆகவே எதையோ ஆற்றவேண்டியிருந்தது. ஆற்றியதனாலேயே விளைவை விழையவேண்டியிருந்தது. விழைவு வெளியுலகின் இரும்புத்தன்மையை சந்திப்பதனால் பகற்கனவுகளை நெய்யவேண்டியிருந்தது. ஒவ்வொரு கணமும் கற்பனையில் என்னை மீட்டு மீட்டு மையத்தில் வைத்துக்கொள்கிறேன். ஆனால் அதன் வீண் உழைப்பை என் அகம் அறியும். ஆகவே இறுதியில் அது சோர்வையே அளிக்கிறது. வெற்றிகள் தற்காலிகமானவை. அச்சோர்வுதான் இறுதியானது.

படகுப்பயணம் உள்ளத்தை எளிதாக்குவது. இவ்வண்ணம் இங்கு எளிதாக ஒழுகிச்செல்வது போல் உகந்த ஏதுமில்லை என எண்ணிக்கொண்டேன். விரிந்துகொண்டிருப்பது ஒரு மாபெரும் வலை. அதில் நானும் ஒரு கண்ணி என எனக்கு மட்டுமே தெரியும். இருந்துகொண்டிருப்பதொன்றே நான் ஆற்றக்கூடியது. யானையின் உடலில் தொங்கும் உண்ணியும் யானையே. இப்படலத்தில் கொக்கிபோல பற்றிக்கொண்டு தொங்குவது மட்டுமே நான் செய்யவேண்டியது. ஒழுகு. ஒழுகிச்செல். ஒழுகிக்கொண்டே இரு.

அச்சொற்கள் என்னை ஆறுதல் படுத்தின. எவர் எவரை மணந்துகொண்டால் எனக்கு ஆவதென்ன? அஸ்தினபுரியின் வெற்றியோ இந்திரப்பிரஸ்தத்தின் புகழோ எனக்கு என்ன அளிக்கப்போகிறது? உண்மையில் அவ்வெண்ணம் கூட ஒரு உள நாடகமாக இருக்கலாம். நான் விழைவது நிகழும் வரை என்னை ஆறுதல் செய்து கொள்ள நான் அடைந்ததாக இருக்கலாம். ஆனால் அவ்வெண்ணம் என்னை துயில வைத்தது .படகின் அகல்வெளி முற்றத்தில் தூளிப்படுக்கையில் படுத்து நன்கு துயின்று விட்டேன்.

குகன் வந்து என்னை எழுப்பியபோது விழித்தேன். என்னை நோக்கி ஒரு சிறு படகு வருவதையும் அதில் இருந்த குகன் அணுகுவதற்கு ஒப்புதல் கோருவதையும் அவன் சொன்னான். “அணுகட்டும்” என்றேன். அப்போதே தெரிந்துவிட்டது. விதுரர் சொன்னது அதுவே. படகில் இருந்து இறங்கி வடத்தில் தொற்றி மேலே வந்தவர் துவாரகையிலிருந்து வந்த தூதுடன் இருந்தார். மதுராவில் அவரை நான் கண்டிருக்கிறேன். விருச்சிகர் என்று அவர் பெயர். அங்குள்ள துணை அமைச்சர்களில் ஒருவர். அவரை அரசர் வசுதேவருக்கு நெருக்கமானவர் என்றுதான் அதுவரை அறிந்திருந்தேன். இளைய யாதவருக்கு நெருக்கமானவர்கள் பாலில் நெய் என பாரதவர்ஷம் முழுக்க கலந்துளார்கள் என்று அப்போது எண்ணிக்கொண்டேன்.

”அவரை எதிர்கொண்டு அழைத்தேன். முகமனுக்குப்பின் அவர் என்னிடம் துவாரகையின் சங்கு சக்கர கருட முத்திரை பதித்த தோற்சுருளை அளித்தார். அதில் இளைய யாதவரின் ஆணை தெளிவாக இருந்தது. மந்தணச்சொற்களில் என்னை இங்குள்ள இந்த மலைச்சுனை நோக்கி வரும்படி கூறியிருந்தார். இங்கு வருதற்கான வழியையும் நாளையும் கணித்திருந்தார். அக்கணிப்பின்படி நான் நேற்றுமுன்னாள் இங்கு வந்து காத்திருந்தேன்” என்றான் கதன்.

அர்ஜுனன் அவனுடைய சொற்பெருக்கை கேட்டுக்கொண்டு விரியத்தொடங்கிய காலைவெயிலில் கண் ஓட்டியபடி நடந்தான்.  “தங்களை சந்தித்துவிட்டேன். எண்ணி சொல்லெடுத்துப் பேசவேண்டும் என தூதுமுறை சொல்லும். ஆனால் நீங்கள் என் நெஞ்சை ஆளும் இளைய யாதவரின் நேர்வடிவமென்றே தோன்றியது. நான் சொன்னவை அவரது செவிகளுக்காக” என்றான். “இங்கு என்னை சந்திக்க நேருமென்று சொல்லப்பட்டதா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கு நீங்கள் இருப்பீர்கள் என்றும் உங்களிடம் இச்செய்திகளை விரித்துரைக்கும்படியும் எனக்கு ஆணை” என்றான் கதன்.

அர்ஜுனன் “நீங்கள் மதுராவிலிருந்து கிளம்பி எவ்வளவு நாட்களாகின்றன?” என்று கேட்டான். “பன்னிருநாட்கள்” என்றான் கதன். அர்ஜுனன் “இத்திசை நோக்கி நான் திரும்ப முடிவெடுத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இங்கு நான் வருவேனென்று எப்படி கணக்கிட முடிந்தது?” என்றான். கதன் நகைத்து “பாரதவர்ஷத்தையே ஒரு பெரும் சூதுக் களமென கண்டு விளையாடுபவர் அவர் என்கிறார்கள். தன் உளம் நிறைந்த ஒருவரின் தடத்தை அறிவதா அவருக்கு கடினம்?” என்றான். அர்ஜுனன் சட்டென்று நகைத்து “ஆம்” என்றான்.

பிரபாசதீர்த்தத்தின் இறுதிப்பாதைவளைவில் இருந்தது சுகீர்த்தி என்னும் விடுதி. கற்தூண்களால் ஆன மண்டபத்தைச் சுற்றி நோன்புக்காலத்திற்காக போடப்பட்டிருந்த ஓலைக்கொட்டகைகளில் பயணிகள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். உச்சிவெயிலில் உடல் வியர்த்து வழிய கதன் “உணவு அருந்தி இளைப்பாறாமல் மேலும் செல்லமுடியாது” என்றான். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இனிமேல் தீர்த்தமுகம் அருகேதான் என நினைக்கிறேன்.”

அருகே சென்ற வணிகன் நின்று “வீரரே, நீர் ஓடும்புரவியில் ஏறும் பயிற்சி கொண்டவராகக்கூட இருக்கலாம். இனிமேல் இப்பாதையில் ஏறுவதற்கு ஒருவேளை அப்பயிற்சிகளும் போதாமலாகும்” என்றான். கதன் கவலையுடன் “செங்குத்தான பாதையோ?” என்றான். “பாதையே இல்லை. பன்னிரு இடங்களில் தொங்கவிடப்பட்ட கயிறுகள் வழியாக ஏறிச்செல்லவேண்டும். நான்கு பெரும்பாறைவெடிப்புகள் நடுவே கட்டப்பட்ட வடமே பாலமாக உள்ளன. அவற்றில் நடந்துசெல்லவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பலநூறுபேர் அங்கு விழுந்து மறைகிறார்கள்.”

கதன் அச்சத்துடன் “நான் படைப்பயிற்சி பெற்றவன் அல்ல” என்றான். “அஞ்சவேண்டாம், உம்மை அங்கு கொண்டுசென்று சேர்ப்பது என் பணி” என்றான் அர்ஜுனன். “உடல் வலிக்குமோ?” என்றான் கதன். “வலிக்காமல் செல்ல நான் ஆவனசெய்கிறேன். கவலைவிடுக!” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் அச்சத்துடன் மேலேறிச்சென்ற மலையடுக்குகளை நோக்கினான். மழையில் கருமைகொண்ட பெரிய உருளைப்பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றென ஏறி அமர்ந்து மாளா அமைதியில் மூழ்கியிருந்தன.

அவர்கள் விடுதியை அடைந்தனர். அங்கே பெரிய படகு ஒன்று வைக்கப்பட்டு அதில் குளிர்ந்த மோர் கலக்கி வைக்கப்பட்டிருந்தது. ஓலைத்தொன்னைகளிலும் கொப்பரைகளிலும் அதை அள்ளி அருந்திக்கொண்டிருந்தனர் பயணிகள். கரியதாடிகளில் வெண்ணிறமான நீர்மணிகள் உருண்டு வழிந்தன. “பெருங்கூட்டம் இருக்கும் போலிருக்கிறதே” என்றான் அர்ஜுனன். “வீரரே, சௌராஷ்டிர மண்ணை ஒரு செந்நிறக்கொடி என்கிறார்கள். அதில் பொறிக்கப்பட்ட முத்திரை இந்தப் பிரபாசம். இங்கு ஒருமுறை வந்துசென்றவனே அங்கு வீரன் என கருதப்படுகிறான்” என்றான் வணிகன்.

“அஷ்டசிரஸ் சௌராஷ்டிரத்தின் மணிமுடியின் உச்சி. அங்கு குடிகொள்கிறான் அறத்தேவனாகிய பிரபாசன். தர்மதேவனுக்கு பிரபாதை என்னும் மனைவியில் பிறந்தவன். பிறந்ததுமே தன் தந்தையிடம் அவன் கேட்டான், அவரது பணி என்ன என்று. இறப்பு என்று அவர் சொன்னார். ஏனென்றால் அழிவும் இறப்புமே அறத்தை நிலைநாட்டும் வழிகள். எந்தையே அழிவின்மையை அடையும் வழி என்ன என்று மைந்தன் கேட்டான். அழிவின்மை தேவர்களுக்குமட்டும் உரியது என்றார் தந்தை. உபதேவர்கள் கூட யுகமுடிவில் அழிபவர்களே என்றார். அதை நான் அடைவேன் என்றான் பிரபாசன்.”

“ஆயிரம் ஆண்டுகாலம் பிரபாசன் தவம்செய்தான். அவன் முன் தோன்றிய சிவனிடம் அழிவின்மை என்னும் வரம் கேட்டான். நீ அறத்தின் தேவன். ஐந்துகோடி வழக்குகளை உனக்கு அளிக்கிறேன். அனைத்திலும் அறம் பிழைக்காது தீர்ப்புரைத்தாயென்றால் நீ தேவன் எனப்படுவாய் என்றார் சிவன். நூறு யுகங்கள் அத்தனை வழக்குகளுக்கும் நல்ல தீர்ப்பை உரைத்தான். ஒருமுறைகூட துலாமுள் அசையவில்லை. அவனைப் பாராட்டிய சிவன் நீ எட்டு வசுக்களில் ஒருவனாக அழிவின்மை கொள்க என்றார். பிரஹஸ்பதியின் தங்கையாகிய வரையை மணந்து எட்டு வசுக்களில் ஒருவராக அமர்ந்தார் பிரபாசன். மண்ணிலும் விண்ணிலும் நீதிக்கு அவரே நிலையான சான்று.”

“இங்கே எட்டுகுன்றுச்சிகள் உள்ளன. எட்டாவது உச்சி இது. முதல் முடியில் தரன், இரண்டாவதில் துருவன். பின்னர் சோமன் கோயில்கொண்டிருக்கிறார்கள். அகஸ், அனிலன், அனஹன், பிரத்யூஷன் ஆகியோர் தொடர்ந்த மலைமுடிகளில் இருக்கிறார்கள். இறுதியான உயர்முடியில் பிரபாசனின் ஆலயம் உள்ளது. அங்குதான் அக்னிசரம் என்னும் அருவி மலையிடுக்குகளில் இருந்து கொட்டுகிறது. அது அனலுருவான புனல்” என்றான் வணிகன். “ஆகவே இங்கே நீராடுவது அக்னிஷ்டோம வேள்விசெய்த பயனை அளிக்கும்.”

“அந்த அருவியின் நீரை அருந்தினால் கள்மயக்கு ஏற்படும். ஏனென்றால் மலையுச்சியில் தேவர்களின் சோமம் ஊறும் சுனையில் எழுவது அது. ஆகவே அதற்கு சோமதீர்த்தம் என்றும் பெயர்உண்டு” என்றான் இன்னொருவன். “ஆகவே இந்திரனுக்கு மிக விருப்பமான நீர் இது என்கிறார்கள். இந்திரன் இம்மலைமுடிமேல் வந்திறங்கும்போது அவனுடைய அழகிய ஏழுவண்ண வில் இதன் மேல் எழுந்திருப்பதை காணலாம். இந்த நீரை அருந்தி நிலையழிந்து அதன் கரையிலேயே விழுந்து பலநாட்கள் துயின்றவர்கள் உண்டு. மிகையாக அருந்தினால் உயிருண்ணும் நஞ்சு அது.”

அனலில் சுட்ட அப்பங்களும் வஜ்ரதானியத்தையும் வெல்லத்தையும் போட்டு சமைத்த இன்கஞ்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. தொன்னைகளில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய ஏவலர் “பார்த்து… கொதிக்கிறது” என்றனர். “நாங்கள் அங்கே அனலில் நீராடவிருக்கிறோம்… இது என்ன?” என்றார் ஒருவர். “சொல்லாதீர் கர்க்கரே, என் உடல் கூசுகிறது” என்றார் அவர் அருகே இருந்த ஒருவர். “அனல் என்றால் அனலேதானா?” என்றார் ஒருவர். “பின்னர் என்ன நினைத்தீர்? புராணத்திலுள்ள அனல் உடலைச் சுடாது என்று நம்பிவிட்டீரோ?” என்றார் ஒருவர். சிலர் சிரித்தனர்.

சூடான கஞ்சியை உடல் வியர்த்துவழிய குடித்தபின் கதனும் அர்ஜுனனும் வந்து வெளியே விரிக்கப்பட்டிருந்த சருகுமெத்தைமேல் படுத்துக்கொண்டனர். மேலே விரிந்திருந்த தழைப்பரப்பு வழியாக ஊசிகளாக சூரியஒளி வந்து கண்மேல் விழுந்தது. அர்ஜுனன் கண்மயங்கினான். நீண்ட புரவிப்பாதையில் அவன் சென்றுகொண்டிருந்தான். அவனுக்காக புரவியோட்டிக் கொண்டிருந்தவன் இளைய யாதவன் என்று கண்டான். விரைவு விரைவு என அவன் கூவ தேரோட்டி திரும்பிப் பார்த்தபோதுதான் அது ஒரு பெண் எனத்தெரிந்தது. சுபத்திரை. “நீ ஏன் மயிற்பீலி சூடியிருக்கிறாய்?” என்று அவன் கேட்டான். “நான் அவர்தான்” என்று அவள் சொன்னாள்.

அவர்களை விடுதிக்காரர்களே கூவி எழுப்பினர். “கிளம்புங்கள். வெயில் சாய்ந்துவிட்டால் பின்னர் மலையேற முடியாது.” அர்ஜுனன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு கிளம்பினான். கதன் “நான் ஏன் பிரபாசதீர்த்தம் வரவேண்டும்? அங்கே நான் செய்யவேண்டிய பிழைபோக்குச் சடங்கு என ஏதுமில்லை” என்றான். அர்ஜுனன் “எனக்கு உள்ளது” என்றான். “ஏன்?” என்றான் கதன். “அதைச்செய்தபின்னரே நான் என் மூத்தவர் முகத்தை ஏறிட்டு நோக்கமுடியும்.”

கதன் விழிகள் மாறின. “குருதிப்பிழை, வஞ்சப்பிழை, களவுப்பிழை, பெற்றோர்பிழை, ஆசிரியர்பிழை, பெண்பிழை, பிள்ளைப்பிழை என பிழைகள் ஏழு” என்றான். “நீர் எப்பிழை செய்தீர் என நான் கேட்கலாமா?” அர்ஜுனன் விழிகளை திருப்பி “பெண்பிழை” என்றான். கதன் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. நீண்டநேரம் கடந்த பின்னர் “நானும் நீராடியாகவேண்டும்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாதது கண்டு “இது தந்தைப்பிழை” என்றான். அர்ஜுனன் “அதில்லாத மானுடர் எவர்?” என்றான்.

மலைச்சரிவு செங்குத்தாக மேலேறிச்செல்லத் தொடங்கியது. நடப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலின் மொத்த எடையையும் முழங்கால் தசையில் முதலில் உணர்ந்தனர். பின்னர் நுரையீரலில் அவ்வெடை தெரிந்தது. பின்னர் அத்தனை எண்ணங்களிலும் அந்த எடை ஏறி அமர்ந்தது. தலைக்குள் குருதி வெம்மையாக கொப்பளிப்பதை உணர்ந்தனர். காதுமடல்கள் அனலாக எரிந்தன.

யானைவிலா போலத்தெரிந்த மலைப்பாறைமேல் ஒரு இரும்புச்சங்கிலியை சரிவாகப்போட்டதுபோல படிநிரை தெரிந்தது. படிகள் அல்ல, நான்கு விரற்கடை ஆழத்துக்கு பாறையில் குழிசெதுக்கப்பட்டிருந்தது. கைகளை ஊன்றி நடுங்கும்கால்களை தூக்கிவைத்து மேலே சென்றனர். பேச்சொலிகள் நின்று விட்டன. அஞ்சி திரும்பிவிட எண்ணியவர்கள் பின்னால் வருபவர்களின் நிரையைக் கண்டு திரும்பமுடியாதென்று உணர்ந்து மேலும் அஞ்சினர். “செல்க!” என பின்னால் வந்தவர்கள் அவர்களை ஊக்கினர்.

ஒருவன் நிலையழிந்து அலறியபடி சரிவில் உருண்டு கீழே செல்ல அவனைப்பிடிக்க அறியாமல் கைநீட்டிய பிறிதொருவனும் நிலையழிந்து அவனைத் தொடர்ந்தான். அவர்களின் அலறல்களில் அத்தனைபேரின் கால்களும் நடுங்கத்தொடங்கின. கதன் நிலையழிய அர்ஜுனன் அவன் தோளை மெல்லத்தொட்டான். அவன் நிலைகொண்டு நீள்மூச்சுவிட்டான்.

பாறைச்சரிவில் பிடிக்க ஏதுமிருக்கவில்லை. உருண்டு சென்று கீழே பிறிதொரு பாறைமேல் விழுந்து உடல்கள் உடைந்து துடித்து அமைந்தார்கள். முதல் வீழ்ச்சியை கண்ணால் பார்த்தபின் அத்தனை கால்களும் நடுங்கத்தொடங்கின. “பார்த்து பார்த்து” என்று கூவினர். “எங்கே பார்ப்பது?” என்று எவரோ சொல்ல எவரோ சிரித்தனர். இன்னொருவன் கால்தவறி விழ அவனைப் பிடிக்க இயல்பாக கைநீட்டிய இன்னொருவனும் தொடர்ந்தான். “இங்கே துணைவர்கள் இல்லாமல் நாம் செல்வதில்லை என்னும் ஆறுதல் எழுகிறது” என்றான் முதலில் வேடிக்கையாகப் பேசியவன். சிலர் சிரித்தனர். “சங்கரே, வாயைமூடும்” என்றான் ஒரு முதியவன்.

அடிக்கொரு முறை ஒவ்வொருவராக கால்தவறி அலறியபடி உதிர்ந்து விழத்தொடங்கினர். கதன் “என்னால் முடியாது இளைய பாண்டவரே” என்றான். “இங்கு பிறர் எவருமில்லை என்று எண்ணுங்கள்” என்றான் அர்ஜுனன். “மலையை பார்க்காதீர். எதிரே உள்ள ஒரே ஒரு படியை மட்டுமே பாருங்கள். அதைமட்டுமே எண்ணுங்கள்.”

“என்னால் முடியவில்லை” என்றான் கதன். “இங்குள்ள படிகள் உங்கள் அகநுண்சொல்நிரை. ஒவ்வொரு படியும் அதன் ஓர் ஒலிப்பு. அதை மட்டும் நெஞ்சுகுவித்து அறியுங்கள். காலம் விலகட்டும். திசைகள் அழியட்டும்” என்றான் அர்ஜுனன். கதன் “ஆம். வேறுவழியில்லை” என்றான். சற்றுதொலைவு சென்றதும் அர்ஜுனன் “இளைய யாதவரை பார்த்தீரா?” என்றான்.

“இங்கு எப்படி பேசுவது?” என்றான் கதன். “இங்கு வருவது வரை பேசிக்கொண்டிருந்தோமே. அப்போது கால்களை நெஞ்சுணர்ந்து வைத்தீரா என்ன? கால்கள் அறியும் நடையை நெஞ்சு அறியாது” என்றான். “போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் அறியவேண்டியவை கைகள்தான்.” கதன் “அங்கே நீர் வேறெதையாவது நினைப்பீரோ?” என்றான். “இல்லை, ஒன்றை மட்டும்தான்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி. “அதைச்செய்யும்போது களத்தையும் எண்ணிக்கொள்வதுண்டு.”

கதன் சிரித்தான். “சொல்லும்” என்றான் அர்ஜுனன். “அவரை சந்திக்கும்படி இளைய யாதவர் தங்களுக்கு ஆணையிட்டுள்ளார்” என்றான் கதன். “எங்கு?” என்றான் அர்ஜுனன். “ஆணையில் அது இல்லை. ஆகவே அது துவாரகையாக இருக்கலாம்” என்றான் கதன். “அல்ல, துவாரகையல்ல” என்றான் அர்ஜுனன். “துவாரகை என்றால் அதை சொல்லியிருப்பார்.” கதன் “ஏன்?” என்றான். “அவர் துவாரகையிலிருந்து இவ்வோலை அனுப்பப்பட்ட அன்றே கிளம்பியிருப்பார். மதுராவுக்கோ மதுவனத்துக்கோ. மிக அருகே எங்கோதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான்.

கதன் புன்னகைத்து “அவ்வண்ணமெனில் அவர் உள்ளத்தடத்தை தாங்கள் உய்த்துணர வேண்டுமென எண்ணுகிறார்” என்றான். “எங்கு நிகழ்கிறது இந்த மணத்தன்னேற்பு?” என்றான் அர்ஜுனன்.  “முறைமைப்படி அது மதுவனத்தில் சூரசேனரின் அவைக்களத்தில்தானே நிகழும்?” என்றான் கதன். அர்ஜுனன் “ஆம்” என்றபின் ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.

அத்தனைபேரும் கால்பழகிவிட்டமையால் இயல்பாக ஆகிவிட்டிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொள்ளத் தொடங்கினர். “சென்றவர்கள் ஆவியாக எழுந்து இந்நேரம் பிரபாசதீர்த்தத்தில் நீராடத் தொடங்கிவிட்டிருப்பார்கள். அவர்கள் சென்றதுதான் குறுக்குவழி” என்றான் சங்கன். “நீரும் அவ்வழியே செல்லவேண்டியதுதானே?” என்றான் ஒருவன். “செல்ல எண்ணினேன், ஆனால் ஆவியை நீர் நனைக்குமா என்ற ஐயம் வந்தது” என்றான் சங்கன். பலர் சிரித்தனர்.

“ஏன் சிரிக்கிறார்கள்?” என்றான் கதன். “அச்சத்தை வெல்ல முதலில் நகைத்தனர். இப்போது உண்மையான உவகையுடன் சிரிக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “மாண்டவர்கள் தோற்றார்கள். நான் வென்று இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன், இதுவே இங்குள்ள ஒவ்வொருவரின் உள்ளமும் கொள்ளும் எண்ணம். போர்க்களத்திலிருந்து மீளும் வீரர்கள் இறந்தவர்களை எண்ணி உவகை கொள்வதை கண்டிருக்கிறேன்.” கதன் “நான் அவ்வண்ணம் எண்ணவில்லை” என்றான். “முதியவர்களையும் நோயுற்றவர்களையும் நோக்குங்கள். பிறர் இறக்கும் செய்திகள் அவர்களுக்கு ஆறுதலையும் அகத்துள் உவகையையும்தான் அளிக்கின்றன.”

மலைமேல் மூக்கு என நீண்டிருந்த பாறைகளில் இருந்து முடிச்சுகள் போடப்பட்ட வடங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றைத் தொற்றி மேலே சென்றார்கள். மலைமுடிகளை இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றுப்பாலத்தை நீர்த்துளி கொடிச்சரடில் செல்வதுபோல கடந்தனர். “மெல்லமெல்ல கால்கள் பழகிவிட்டன போலும்” என்றான் கதன். “இல்லை, கால்களுக்கு நெஞ்சம் விடுதலைகொடுத்துவிட்டது” என்றான் அர்ஜுனன். “பயிற்சி என்பது உறுப்புகளிலிருந்து உள்ளத்தை விலக்கும் கலைமட்டுமே.”

பிரபாசதீர்த்தத்தை தொலைவிலேயே உணர முடிந்தது. அடுமனையிலிருந்து எழுவதுபோல கண்ணுக்குத் தெரியாத நீராவி வந்து முகத்தில் பரவியது. வெண்முகில்போல எழுந்து கிளைவிரித்து குடைசூடி வான்சரிவில் நின்றது. பாறைவளைவுகளில் வியர்த்து ஊறி நீர் வழிந்தது. இரு கரியபாறைகளின் இடுக்கு வழியாக உள்ளே நுழைந்தபோது பாறைகள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே ஆழமற்ற சுனை தெரிந்தது. அதிலிருந்து வெண்ணிற ஆவி எழுந்து வளைந்தாடியது. அதனூடாக மறுபக்கம் தெரிந்த கரியபாறை அலையடித்தது.

மலை மேலிருந்து மெல்லிய வெண்ணிறப் பட்டுத்துணிபோல சிறிய அருவி ஒன்று சுனைநீர் மேல் விழுந்துகொண்டிருந்தது. மிகுந்த உயரத்திலிருந்து விழுந்தமையால் காற்றில் அருவியின் கீழ்நுனி அலையடித்து சிதறிப்பறந்தது. நீர்விழுந்த இடத்தைச்சுற்றியிருந்த பாறைகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டின. சுனை ஆழமற்றது எனத்தெரிந்தது. அடித்தளத்தின் கூழாங்கற்பரப்பு மிகமேலே எழுந்து தெரிந்தது. அங்கிருந்த வேறுபாட்டை அதன்பின்னர்தான் அர்ஜுனன் அறிந்தான். அப்பாறைகளில் எந்த வகையான செடிகளும், பாசிகளும் வளர்ந்திருக்கவில்லை. நீருக்குள் மீன்களோ தவளைகளோ நீர்ப்பூச்சிகளோ இல்லை.

“கனவில் விழும் அருவிபோலிருக்கிறது” என்றான் கதன். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “தெரியவில்லை. இது உயிரற்றது என்று தோன்றுகிறது. இருக்கமுடியாதது…” என்றான். “ஏனென்றால் இங்கே செடிகளோ உயிர்களோ இல்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், உண்மை” என்றான் கதன். “இதற்குள் நெருப்பு வாழ்கிறது என்கிறார்கள்…” அர்ஜுனன் “ஆம், கந்தகத்தின் நெடி அடிக்கிறது. மேலே எரிமலைவாய் இருக்கக்கூடும். அதிலிருந்து வரும் நீர் இது” என்றான்.

“கொதிக்கும் என நினைக்கிறேன்” என்றபடி குனிந்து சுனையைத்தொட்ட கதன் “குளிர்ந்திருக்கிறது” என்றான். அர்ஜுனனும் வியப்புடன் குனிந்து நீரைத்தொட்டான். சூழ்ந்து வந்தவர்கள் கைகளைக்கூப்பியபடி கண்ணீருடன் சுனைநீரில் இறங்கினர். “ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பிழைகள் செய்தவர்கள்…” என்றான் கதன். “வியப்பாக உள்ளது, இத்தனை கடுந்தொலைவு ஏறிவரும்படி பெரிய பிழைகளா அவை?”

அர்ஜுனன் “பிழைகள் பெரியவை அல்ல. இத்தனை தொலைவுக்குச் சென்று அவர்கள் அதை செய்திருக்கிறார்கள். அந்தத் தொலைவை அவர்கள் திரும்பக் கடந்தாகவேண்டும் அல்லவா?” என்றான். விம்மி அழுதபடியும் உடல்நடுங்கியபடியும் நீரிலிறங்கி அருவியை நோக்கி சென்றனர். அதன் கீழே நின்று நனைந்தபின் விலகினர். ஒருவன் “ஆ” என்று அலறியபடி விழுந்தான். நீர் புகைந்து மேலெழுந்தது. “ஏன் ஏன்?” என்றான் கதன்.

“பிழைசெய்தவர்கள் சிலரை இந்த அருவி தண்டிக்கும் வீரரே” என்றான் வணிகன். “எப்போது இதில் கொதிநீர் வருமென எவராலும் சொல்லமுடியாது. பிரபாசன் முடிவெடுப்பான் அதை.” அர்ஜுனன் புன்னகைத்து “இங்கு இத்தனை தொலைவுக்கு ஏன் வருகிறார்கள் என்று புரிகிறதல்லவா? தெய்வமே வந்து தண்டித்தாலொழிய இவர்களுக்கு நெஞ்சு ஆறாது” என்றான். கொதிநீர் விழுந்து சுட்டவனை இருவர் அள்ளி குளிர்நீரிலிட்டு ஆறச்செய்தனர். அவன் பற்களைக் கடித்து அலறலை தன்னுள் அடக்கிக்கொண்டான்.

கைகள் கூப்பியபடி அர்ஜுனன் சென்று அருவிக்குக் கீழே நின்றான். அவன்மேல் குளிர்நீர் கொட்டியது. அவன் பெருமூச்சுடன் திரும்பும் கணத்தில் கொதிநீரின் ஓர் அலை அவன் தோளை அறைந்தது. அவன் அருகே நின்றவன் அலறிவிழுந்தான். அவன் அசையாமல் நின்றபின் மெல்ல இறங்கி குளிர்நீருக்குள் மூழ்கினான். கதன் அருவியில் நீராடிவிட்டு சுனையில் பாய்ந்து அணுகி “அஞ்சிவிட்டேன்… உங்கள்மேல் கொதிநீர் விழுந்தது அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எரிகிறதா?” என்றான் கதன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“நீர்விழுந்த கணத்தில் உணர்ந்தேன். துவாரகை அருகே உள்ள ரைவத மலையில்தான் இளைய யாதவர் இருக்கிறார். நான் அங்கு செல்ல வேண்டும்” என்றான் அர்ஜுனன். “எங்ஙனம் அறிந்தீர்?” என்றான் கதன். “அறிந்தேன். பின்னர் அதற்கான சொல்லூழ்கையை கண்டடைந்தேன். அவர் தனித்து வந்திருப்பார். அவரை அறியாத மாந்தர் உள்ள இடத்திலேயே தங்கியிருப்பார். ரைவத மலையின் தொல் குடிகளான குஜ்ஜர்கள் இளைய யாதவர் எவரென அறியாதவர். வெறும் ஒரு மலைவணிகராக முன்னர் அங்கு சென்று சின்னாள் தங்கிய வரலாறும் அவருக்குண்டு.”

கதன் “ஆம், சரியாகத்தான் தெரிகிறது” என்றான். “ரைவத மலையில் மக்கள் அவரை தங்களவர் என்று என்றும் வரவேற்பார்கள். மணத்தன்னேற்பு நிகழும் வரை அங்குதான் இருப்பார்” என்று அர்ஜுனன் சொன்னான். கதன் “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் ஒற்றைப்பறவையின் இரு சிறகுகள் என்று சூதன் ஒரு முறை பாடினான். ஒரு சிறகசைவது பிறிதொரு சிறகுக்கு எப்படி தெரிகிறது என்று பறவையே அறியாது என்பார்கள்” என்றான்.

அர்ஜுனன் புன்னகைத்தான். சுனையிலிருந்து கைகூப்பியபடி ஏறி நீர் சொட்டும் உடையுடன் சென்று அங்கிருந்த பிரபாசனின் சிறிய ஆலயத்தை அணுகினர். கல்லால் ஆன பீடத்தின்மேல் வலக்கையில் துலாக்கோலுடன் இடக்கையில் அறிவுறுத்தும் சுட்டுவிரலுடன் அமர்ந்திருந்தான் பிரபாசன். இடது மேல்கையில் வஜ்ராயுதமும் வலதுமேல்கையில் தாமரையும் இருந்தன. அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். ஒரு கணம் எவரோ பிடரியை தொட்டதுபோலிருந்தது.

திடுக்கிட்டு விழித்து “ஆ” என்றான். “என்ன?” என்றான் கதன். “இந்த இடம்தான்” என்றான். “ஏன்?” என்றான் கதன். “இளைய யாதவரையும் மூத்த யாதவரையும் இங்கே கண்டேன்.” கதன் விளங்காமல் “இங்கா?” என்றான். “ஆம், இங்குதான். ஓர் உருவெளிக்காட்சி. அவர்கள் இருவரும் ஆடையில்லாமல் இங்கே நீராடுகிறார்கள். மலரூர்தி ஒன்று மேலிருந்து இறகுதிர்வதுபோல அவர்களை நோக்கி இறங்குகிறது. அதில் அவர்கள் இருவரும் ஏறிக்கொள்கிறார்கள்.”

கதன் திகைத்து சொல்லிழந்து வாய்திறந்து நின்றபின் “அப்படியென்றால்?” என்றான். “இங்குதான்” என்றான் அர்ஜுனன்.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைதமிழ் இந்துவுக்கு நன்றி
அடுத்த கட்டுரைகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2