ஜெ,
வெசா பற்றிய அஞ்சலிகள்…எத்தனை முரண்கள் இருந்தாலும் அவர் ஆளுமையை அனைவருமே போற்றுகின்றனர்.அவரது கட்டுரைகள் நூல்கள் நிறைய வாசித்திருக்கிறேன்.நாட்டார் கலைகள் பற்றிய அவரது பதிவுகள் நான் விரும்பிப்படித்தவை.
நான் பகிர எண்ணுவது இதைத்தான்,இலக்கியவாதிகளின் மறைவு எனக்குள் சட்டென ஒரு மன வெறுமையை உண்டாக்கிவிடுகிறது.ஜெயகாந்தன் மறைவு ஏற்படுத்திய தாக்கம் குறைய எனக்கு நீண்ட நாள் ஆனது.வெசாவின் மறைவில் அவரைப் பற்றியே வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
பொதுவாக மரணங்களை நான் கடந்து சென்றுவிடுவேன்.நான் முன்பு மருத்துவத் துறையில் இருந்தது காரணமாயிருக்கலாம்.உறவுகள் நட்புகள் இடையிலான மரணங்கள் வருத்தமுறச் செய்யும்.அத்துடன் சரி. இந்த ஆண்டு துவக்கத்தில் என்னுடன் எட்டாண்டுகள் பணியாற்றும் தோழி ஒருவரின் கணவர் அகால மரணமடைந்தார்.என்னை விட இரண்டு வயதுதான் மூத்த தோழி அவர்.தினமும் ஒன்றாகவே உணவைப் பகிர்ந்து உண்போம்.அந்த மரணம் கூட எனக்கு மன வருத்தம் மட்டுமாகவே கடந்தது.நானே என் மனம் இத்தனை எளிதானதா என்று எண்ணினேன். ஆனால் ஜேகேயின் மறைவு அதை உடைத்தது.இரண்டு நாட்கள் எதுவுமே செய்யமுடியாமல் நிலையற்றிருந்தேன்.எப்பொழுதும் வாசிப்பு இலக்கியம் என்றே இருப்பதால் இவ்வாறு ஆகிறேனா?அவர்களின் படைப்புகள் விவாதங்கள் எப்பொழுதும் உடனிருப்பதால் உள்ளத்தில் அவர்கள் நம்முடனே இருப்பதாக எண்ணுகிறோமா.எழுத்துத் துறையைச் சார்ந்தவர்களின் இழப்புகள் என்னுள் உருவாக்கும் பாதிப்புகள் எதனால் என்று சிந்தித்தவாறே இருக்கிறேன்.என் மன விரிவுகளை எண்ணங்களை உருவாக்குபவர்கள் என்பதாலா.எவ்வாறாயினும் அவர்களின் எழுத்துகள் உண்டாக்கும் தாக்கங்கள் வாழ்வில் எதிரொலித்தவாறே இருக்கும்.
நன்றி
மோனிகா மாறன்.
வெங்கட் சுவாமிநாதனை நான் சிலமுறை டெல்லியில் சந்தித்திருக்கிறேன். நான் இளைஞன் அப்போது. ஆகவே அணுகி பழக முடியவில்லை. அவருடன் நடந்த எல்லா சந்திப்புகளும் மிகவும் பயனுள்ளவை. ஒருமுறை கலஹாரி திரை ஓவியங்கள் பற்றி விரிவாகப்பேசினார். இன்னொரு முறை அலர்மேல்வள்ளி பற்றிய பேச்சு வந்தது. ஒருமுறை விஸ்வ வியாபி கணேஷா என்னும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பிள்ளையார் சிலைகளைப் பார்த்துக்கொண்டு சென்றபோது அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவரா என்றுகேட்டேன். இல்லை, நான் நாத்திகர் என்று சொன்னார். ஆனால் திமுக நாத்திகம் இல்லை, இந்து முறைப்படி வந்த நாத்திகம் என்றும் நாத்திகர் என்பதை விட ஜடவாதி என்று சொல்வதே சரி என்றும் சொன்னார். பெரியவர்கள் மறையும்போது நம்முடைய அன்றாட வாழ்க்கைச்சிக்கல்களை விட்டுவிட்டு அவர்களுடன் கொஞ்ச நேரத்தைச்செலவழித்திருக்கலாம் என்று தோன்றும். இப்போதும் அப்படித்தான் தொன்றுகிறது
ஜெ,
வெங்கட் சாமிநாதனைப்பற்றிய உங்கள் அஞ்சலிக்கட்டுரையின் கீழே இருந்த நீண்ட கட்டுரைகளை வாசித்தேன். உண்மையில் அவரைப்பற்றி என்க்கு பெரியதாக ஒன்றும் தெரியாது. இலக்கியத்தையே இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இலக்கியவிமர்சனத்தை ஏன் இப்போது வாசிக்கவேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் இந்துத்துவ தளங்களில்தான் எழுதினார் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதோடு என் ஆர்வம் போய்விட்டது. நடுநிலையுடன் எழுதப்படாத எழுத்துக்களை ஏன் கடுமையாக உழைத்து வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. குறிப்பாக விமர்சனம் என்பது தனிப்பட்ட ரசனை சார்ந்து வரவேண்டுமே ஒழிய ஏதாவது அமைப்பின் குரலாக இருக்கக்கூடாது. திகசியை நான் வாசித்ததில்லை. காரணம் இதுதான். வெங்கட் சாமிநாதனையும் வாசிக்கவேண்டியதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்
சிவராமன்