அம்போலிகாட்டில் காலையில் மழையில் நனைந்த தெருவில் இறங்கி குளிருக்கு கைகளை மார்பில் இறுக்கியபடி டீ குடிக்கச்சென்றோம். பெரும்பாலான டீக்கடைகள் நீலநிற பிளாஸ்டிக் படுதாவால் பொட்டலமாகக் கட்டப்பட்டிருந்தன. ஒரு டீக்கடையில் பால் அப்போதுதான் கொதிக்க ஆரம்பித்திருந்தது. டீ குடித்தபடி முந்தையநாள் பெய்த மழையை நினைவுகூர்ந்தோம். களைப்பில் தலைக்குமேல் தகரக்கூரையில் விழுந்த அதன் ஓலத்தையும் மீறி தூங்கிவிட்டிருந்தோம்
எனக்கு அவசரமாக ஒரு சினிமா வேலை. தவிர்ப்பதற்கு பயணம் முழுக்க முயன்றுகொண்டிருந்தேன். பதினேழாம் தேதியிலிருந்து இருபதாம் தேதிக்கு ஒருவழியாக ஒத்திப்போட்டேன். அதற்குமேல் தாங்காது. கோவாவில் இருந்து சென்னை திரும்ப டிக்கெட் போட்டேன். என்னை கோவாவுக்கு கொண்டு சென்று ஏற்றிவிட்டுவிட்டு அவர்கள் கார்வார் வழியாக உடுப்பி சென்று பெங்களூர் மீள்வதாகத் திட்டம்.
காலையில் அம்போலிகாட்டில் இருந்த ஓர் அருவியைச்சென்று பார்த்தோம். சாலையோரமாக கொஞ்சமாக நீர் கொட்டிக்கொண்டிருந்தது. சாலையோரமாக மறுபக்கம் இறங்கிய மலைச்சரிவையும் விரிந்து கிடந்த காட்டுவெளியையும் பார்ப்பதற்கான பார்வைமாடங்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் நின்று பச்சைமரக்கூட்டங்கள் மீது இளவெயில் பரவுவதை நோக்கிக்கொண்டிருந்தோம்
அங்கே காலையுணவே இல்லை. பாவ்பாஜி வடாபாவ் இரண்டும்தான். பொரித்த பச்சைமிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டால் நான்குநாட்களுக்கு காந்தல் இருக்கும். நான் இரவில் பழங்கள் என்பதனால் காலையில் கொலைப்பசி இருக்கும். குரலே கீழே சென்றுவிடும். ஆகவே அதைச்சாப்பிட்டுவைத்தோம்.
பதினொருமணிக்குக் கிளம்பி கோவா வந்தோம். செயிண்ட் சேவியர் கதீட்ரலையும் அருகிலிருந்த போம் ஜீஸஸின் பஸிலிக்காவையும் பார்த்தோம். நான் மூன்றாவது முறையாக இங்கு வருகிறேன். எனக்கு மிகமிகப்பிடித்தமானவை இந்த இரு தேவாலயங்களும். ஒரு சிறு கூழாங்கல் என்னும் தலைப்பில் இங்கு வந்த அனுபவத்தை முன்பு ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். நானும் சண்முகமும் வசந்தகுமாரும் நாஞ்சில்நாடனும் 2007ல் இங்கே வந்தோம். அதன்பின்னர் இப்போதுதான் வருகிறேன்.
போம் ஜீஸஸ் தேவாலயம் இப்பகுதியிலுள்ள சிவந்த சேற்றுமணல்பாறையை வெட்டி அடுக்கிக் கட்டப்பட்டது. அதன் அற்புதமான செம்மண் நிறம் பார்க்கப்பார்க்க பரவசம் அளிக்கக்கூடியது. உள்ளே இருக்கும் ஆல்டர் இந்தியாவின் மிக அழகிய மரச்சிற்பங்களில் ஒன்று. மிகமிக நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் மேல் தங்கரேக்கு பூசப்பட்டது. மனிதனை சிறுமைகொள்ளச்செய்து கிருமியென உணரச்செய்யும் மகத்தான உயரம்.1605ல் கட்டி முடிக்கப்பட்டது இந்தப்பேராலயம்.
போம் ஜீஸஸ் பஸிலிக்காவில்தான் செயிண்ட் சேவியரின் உடல் பேணப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பொதுத்தரிசனத்திற்காக அது வைக்கப்படும். அதன் புகைப்படங்களைப் பார்க்கமுடியும். பழங்காலத்தில் முதுமக்கள்தாழியில் வைக்கப்பட்ட தொன்மையான தந்தைகளைப்போல ஓர் உடல். அந்த கல்லறை ஃப்ளாரன்ஸின் சிற்பியான கியோவன்னி பட்டிஸ்டா ஃபோகினியால் வடிவமைக்கப்பட்டது.
மதிய உணவுக்குப்பின் மூன்று மணிக்கு விமானநிலையம் வந்துவிட்டேன். இன்னும் ஒருநாள்தான் பயணம் நிறைவுற என்றாலும் பாதியிலிலேயே நண்பர்களை விட்டுவிட்டுக் கிளம்பியது சோர்வளித்தது. ஆனால் எல்லா பயணங்களின் முடிவிலும் அடுத்த பயணம் பற்றிய கனவு வந்துவிடுகிறது. அது நிறைவளித்தது.