நேற்று மதியம் பூனாவிலிருந்து கே.ஜே.அசோக்குமாரும் காமராஜ் மணியும் வந்தனர்.. மகாபலேஸ்வரில் இரவு அவர்களும் எங்களுடன் தங்கினர். காமராஜ் மணி மருத்துவத்துறையில் ஆராய்ச்சி செய்கிறார். அசோக் குமார் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். சொல்புதிது குழுமத்தில் இருக்கிறார்.
மகாபலேஸ்வர் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம். ஆனால் பருவமழையை ஒட்டித்தான் சுற்றுலா. பருவமழை பொய்த்தமையால் பெரும்பாலான விடுதிகள் காலியாகக் கிடந்தன. ஆகவே அடித்துப்பேசி இரண்டாயிரத்தைநூறு ரூபாய்க்கு பதினொருபேர் தங்குவதற்கு ஓர் விடுதியை அமர்த்திக்கொண்டோம். நான் என் கட்டுரையை எழுதிவிட்டு உடனே தூங்கிவிட்டேன்.
காலையில் கிளம்பி பெரும்பாலும் காரிலேயே பயணம்செய்தோம். பேச்சு நடந்தது. வழியில் தோஸிகர் என்னும் அருவியைப்பார்த்தது மட்டும்தான் இன்றைய சுற்றுலா. சதாராவிலிருந்து 20 கிமி தொலைவிலுள்ளது தோஸிகர். வழக்கமாக பெய்யும் ஜூன் முதல் செப்டெம்பர் வரையிலான பெருமழைக்காலத்திற்குப்பின் இங்கே ஏழு பேரருவிகள் விழுவது வழக்கம். இம்முறை நான்கு அருவிகள். நான்குமே குறைவான நீருடன் விழுந்தன.
தோஸிகர் அருவி ஒரு பெரிய மலைப்பள்ளத்துக்கு அப்பால் எழுந்த செங்குத்தான மலைவிளிம்பில் இருந்து பள்ளத்துக்குள் விழுந்தது. அருகே நெருங்க முடியாது. மலைவிளிம்பில் கட்டப்பட்ட பல காட்சிமேடைகளில் நின்று அருவிகளைப் பார்க்கலாம். மிக உயரத்திலிருந்து விழும் அருவி ஜோக் நீர்வீழ்ச்சியையும் நம்மூர் கொல்லி அருவியையும் நினைவுறுத்தியது. வெண்ணிற இறகுகள் போல அலை அலையாக விழுந்தது.
தோசிகரிலிருந்து நேராக கர்நாடக எல்லையிலிருந்த அம்போலிகாட் என்னும் இடத்தை அடைந்தோம். இன்றைய நாள் பெரும்பாலும் காருக்குள்தான்
மகாராஷ்டிராவின் சிற்றூர்கள் வழியாக வந்தோம். மழைக்குப்பின் புல்லடர்ந்து பசுமையலைகளாக எழுந்த மலைகளின் மடிப்புகளில் அரைத்தூக்கத்தில் கிடந்தன கிராமங்கள். சித்திரங்களில் வரையப்படும் அமைதியான விவசாய வாழ்க்கை. பெரும்பாலும் ஆங்காங்கே சும்மா அமர்ந்திருந்தனர். மாடுகள் அசைவற்றதுபோல மேய்ந்துகொண்டிருந்தன.
மலையுச்சிகளில் பெரிய மின்னுற்பத்திக் காற்றாடிகள் தூக்கத்திலென சுழன்றன. இங்குள்ள மலைகள் நம்மூர் மலைகள் போல கூம்புகள் போன்றவை அல்ல.உயர்ந்த தட்டுகள் போல விளிம்புதெரிய நிற்பவை. சரிவுகள் முழுக்க புற்கள் கதிர்விட்டும் பூத்தும் நின்றன. வெயிலே இல்லை. ஆனால் மழையும் இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட ஒளியில் தெரியும் பசுமை போல உள்ளத்தை குளிரச்செய்யும் காட்சி இல்லை
அம்போலிகாட் அருகே ஒரு மலைச்சரிவில் காரிலிருந்து இறங்கி செழித்துகிடந்த புல்வழியாக நடந்து மேலேறி நின்று நோக்கினோம். பச்சைத்தழை கால்பட்டு கசங்கும் வாசனையில் மாலை மயங்குவதைக் கண்டோம்.
அம்போலிகாட் கோவா அருகே உள்ள ஒரு மலைக்கிராமம். குறைவாகச் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். மாலை ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம். வழிநெடுக மழை தூறல்விட்டு விளையாடிக்கொண்டிருந்தது. அம்ப்போலி காட்டில் அறை எடுத்து தங்கியதும் உடைந்து கொட்டத்தொடங்கியது.
மேலும் படங்கள்
Thoseghar Falls