நேரடியாக ஒரு கேள்வி, உங்களுக்குச் சாகித்ய அக்காதமி விருது கிடைக்கவேண்டும் என்ற ஆசை உள்ளதா? எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? அதற்காகத்தான் இந்த சத்தமா என்று கேட்கமாட்டேன்
சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்,
நான் சாகித்ய அக்காதமி விருதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அவ்விருதின்மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை இதுவரை வைத்துள்ளேன். அதைப்பெறுவது மரியாதையாக இருக்காது.
ஆனால் இது அவ்விருது கிடைக்காது என்னும் எண்ணத்தால் வரும் துறப்பு அல்ல. வேண்டும் என்றால் அதைப்பெறுவது எனக்கு பெரிய விஷயம் அல்ல. எப்போதுமே. என் தீவிரவாசகர்கள் எல்லா மட்டத்திலும் உண்டு.
இதுவரை அது கிடைக்காததே நான் அதை ஏற்பதில்லை என முன்னரே அறிவித்திருந்தமையால்தான். ஒருமுறை கூட என் பெயர் சிபாரிசில் இல்லாமலிருந்ததில்லை. ஒருமுறைகூட இறுதிப்பரிசீலனைக்குச் சென்றதும் இல்லை
பலமுறை சாகித்ய அக்காதமியின் பொறுப்பிலிருந்தவர்கள் என்னிடம் நான் ஏற்றுக்கொள்வேன் என்றால் அம்முறை அதை அளிப்பதற்கு தயாராக இருப்பதாக பேசியிருக்கிறார்கள்.
ஒருமுறை டெல்லி விமானநிலையத்தில் சாகித்ய அக்காதமியின் பொறுப்பிலிருந்த ஒருவர் என்னைக் கண்டு ‘இந்த முறை உங்கபேருதான் வந்திச்சு.நான் சிபாரிசு பண்ணியிருக்கேன்” எனறு சொன்னார். “நீங்க என் பேரை ஆரம்பத்திலேயே தவிர்த்தது எனக்குத் தெரியும் சார்” என்றேன் சிரித்தபடி.
அவர் சீற்றமடைந்து “ஆமா, நான் இருக்கிற வரை நீங்க வாங்கமாட்டீங்க” என்றார். நான் அவர் கண்களைப்பார்த்து “சரி, நீங்களும் உங்க ஆட்களும் இந்த வருஷம் எனக்கு குடுக்கக்கூடாதுன்னு என்ன செய்யமுடியுமோ செய்ங்க. நான் இந்த வருஷம் சாகித்ய அக்காதமி விருத வாங்கறேன். வாங்கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?” என்றேன்
முகம் வெளிறி “நீங்க நெனைச்சா என்ன வேணுமானாலும் செய்யலாம். எல்லாம் மலையாளத்தானுங்க” என்று நகர்ந்துவிட்டார். சிரித்துவிட்டேன்
ஜெ