மேயோகிளினிக் :உடல்நலக்கையேடு

இவான் இல்யிச்சின் பிரபலமான மருத்துவவிமரிசன நூலில் அவர் நவீன மருத்துவம் என்பது கிட்டத்தட்ட பழங்காலத்து மந்திரவாதம் போல ஆகிவிட்டிருப்பதாகச் சொல்கிறார். பழங்குடிகளில் மந்திரவாதியே உச்ச அதிகாரம் கொண்டவன். அவனை பழங்குடி மன்னன் கூட ஒன்றும் செய்துவிட முடியாது. அவன் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவன். காரணம் அவன்செய்வதென்ன என்று எவருக்கும் தெரியாது. அவன் மனிதர்களின் அச்சத்தைப் பயன்படுத்திக் கொள்பவன்.

தமிழ்ச்சூழலில் நவீன மருத்துவம் என்பது எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாத, முழுக்க முழுக்க லாபநோக்கம் கொண்ட, அற அடிப்படையே இல்லாத ஒரு அதிகாரக்கட்டமைப்பாக பூதாகர வடிவம் கொண்டிருக்கிறது. சராசரி மனிதர்களின் வாழ்நாள் சேமிப்புகளை முழுக்க முழுக்க மருத்துவம் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் இத்தனை பிரம்மாண்டமான மருத்துவத்தொழில் கட்டுமானத்தால் இந்தியாவின் சராசரி ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறதா என்றால் முற்றிலும் எதிர்மறையான பதிலையே சொல்லவேண்டியிருக்கிறது. பொதுச்சுகாதாரம் உதாசீனப்படுத்தப்படுவதனால் ஏற்படும் நோய்களும்  லாபவெறி கொண்ட மருத்துவத்தால் ஏற்படும் எதிர்விளைவுகளும் இரு பெரும் நோய் ஊற்றுகளாக நம் சமூகத்தை சூறையாடிக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஒரு சாதாரண விஷயத்தை நாம் கவனிக்கலாம். இங்கே நோயில்லாமல் இருப்பவர்கள் இயல்பாகவே நோய் வராதவர்கள். நோய் வந்து முழுக்குணமடைந்து, மருந்தின் உதவி இல்லாமல் வாழ்பவர்கள் அனேகமாக கிடையாது. எளிய கிருமித்தொற்று அல்லாத ஒரு நோய்க்காக நமது மருத்துவர்களை நாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அதன் பின் வாழ்நாளெல்லாம் மருத்துவர்களின் அடிமைகள். வசூல்ராஜாக்களுக்கும் சம்பாதித்துக் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள்.

இதற்கு முக்கியமான காரணம் மருத்துவ அறிமுகம் இல்லாமை. நோயைப்பற்றிய ஓர் எளிய விளக்கத்தைக்கூட நமது மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அளிப்பதில்லை. விளக்கம் கேட்டால் எரிச்சலும் கடும் சினமும் கொள்பவர்கள்தான் நம்முடைய மருத்துவர்கள். பத்து வருடங்களாக ஸ்பாண்டிலிட்டிஸ் நோய்க்கு மருத்துவம் செய்யும் என் அலுவலக ஊழியர் ஒருவருக்கு அவர் சந்தித்த நான்கு மருத்துவர்களும் என்ன நோய் என்றே விளக்கவில்லை. அதை மருத்துவரிடம் இருந்து கேட்டறிய தொழிற்சங்கத்தோழர் கூடவே சென்று சற்றே மிரட்டிக் கேட்கவேண்டியிருந்தது.

நம்முடைய மக்களுக்கு நவீன மருத்துவம் நோய்களை எப்படி வகுத்துக்கொள்கிறது எப்படி குணப்படுத்துகிறது என்ற புரிதலே கிடையாது. நவீன மருத்துவர்கள் எளிய விளக்கங்களைக்கூட அளிப்பதில்லை. அவர்களைப்பொறுத்தவரை எளிய மக்கள் அவர்கள் பொருட்படுத்திப் பேசவேண்டிய உயிர்களே அல்ல, வெறும் உடல்கள்தான்.அவர்கள் பலபடிகள் மேலே நிற்கும் செல்வந்தர்கள், உயர்குடிகள், அறிவுஜீவிகள்.

அத்துடன் அவர்கள் மருத்துவத்தை ஆங்கிலத்திலேயே கற்பதனால் அவர்களுக்கு எளிமையாக தமிழில் மருத்துவத் தகவல்களைச் சொல்லும் பழக்கமே கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டிகளில் பிரபல மருத்துவர்கள் பேசுவதைக் கேட்டால் இதை உணரலாம். ”ஆக்சுவலி இந்த நெர்வ் நம்ம ஸ்பைனல் கார்டுக்குள்ளே இருந்து ஸ்கல்லுக்குள்ள எண்டர் பன்றப்ப இட் ஹேஸ் எ ஸ்மால் ஸ்டிரிக்ஷன் ஆன் தேட் பிளேஸ்…ஸோ…”. இவர்கள் அந்த நோயாளிக்கு எதைச் சொல்லிப்புரிய வைப்பார்கள்?

ஆனால் இந்த நாட்டு மருத்துவர்கள், அற்புத மருத்துவர்கள், தங்கள் கருத்துக்களை விரிவாக விளக்குகிறார்கள். நோயாளியிடம் உரையாடுகிறார்கள். இந்த ஒருகாரணத்தாலேயே நமது மக்களுக்கு இவர்களிடம் நெருக்கமும் இவர்கள் சொல்லும் அரைவேக்காட்டு மருத்துவம் மீது நம்பிக்கையும் உருவாகிவிடுகிறது. தொலைக்காட்சியிலேயே இதைப்பார்க்கலாம். மலர்மருத்துவம், கல் மருத்துவம் செய்கிறவர் நல்ல தமிழில் பேசுகிறார். அவர் பேசுவது புரியும். இதய நோய் நிபுணர் வந்து பேச ஆரம்பித்தால் நாம் அவர் டையில் குத்தியிருக்கும் கிளிப்பையும் அவரது பொன்முலாம் மூக்குக்கண்ணாடியையும்தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். வேறு எந்த இடத்தை விடவும் அரைவேக்காட்டு மருத்துவம் தமிழ் நாட்டில் கொடிகட்டிப் பறப்பதற்கு நமது நவீன மருத்துவர்களின் ஆணவமும் உயர்வற்க தோரணையுமே காரணம்.

நோய்களைப்பற்றி அங்கே இங்கே கிடைத்த அரைகுறை ஞானத்துடன் ஆலோசனைகள் வழங்குவது விவாதிப்பது தமிழ்நாட்டில் அதிகம்.. கொஞ்சம் நாட்டு மருத்துவம் கொஞ்சம் கேள்விப்பட்ட மேலைமருத்துவம் எல்லாம் கூட்டிக்கலந்து கருத்துக்களை அள்ளி விட்டுக்கொண்டே இருப்பவர்களை நாம் காணலாம். சென்ற வாரம் பேருந்தில் ஒருவர் இன்னொருவரிடம் கல்லீரல் கெட்டியாக ஆவதனால்தான் சர்க்கரை நோய் வருகிறது என்று ‘அறிவியல் தர்க்கத்துடன்’ விளக்கினார். சீனி சாப்பிட்டால் கல்லீரல் கெட்டியாக ஆகும். வேப்பிலையை தினமும் காலையில் ஒரு வாய் சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு மருந்தே தேவை இல்லை. இந்த மருத்துவ அரட்டை காரணமாக நம்மிடையே நோய்களைப்பற்றி இருக்கும் தப்பு எண்ணங்களுக்கு அளவே கிடையாது.

இன்று தமிழில் மருத்துவம் குறித்த கல்வி மக்களிடையே மிக மிக இன்றியமையாதது. படித்தால் புரியக்கூடிய எளிய தமிழில் எழுதப்பட்ட நம்பகமான மருத்துவ நூல்கள் தமிழில் நிறைய வந்து மக்களிடையே பிரபலமாக ஆகவேண்டும். இதிலும் சில சிக்கல்கள் உள்ளன. தமிழில் உள்ள மருத்துவ நூல்களில் கணிசமானவை பயனற்றவை. ஒன்று திறன் இல்லாத நடையில் வளவளவென்று எழுதப்பட்ட நூல்கள். அல்லது மருந்துவரின் அதிகப்பிரசங்கம். நான் சமீபத்தில் வாசித்த ஒரு மருத்துவ நூலில் எதற்கெடுத்தாலும் திருக்குறள் விளக்கம். போதாக்குறைக்கு அடுக்குமொழிகள் ,அசட்டு நகைச்சுவைகள். மருத்துவ நூலை மருத்துவம் அறியத்தான் படிக்கிறார்கள். இலக்கிய ஞானம்பெறுவதற்காக அல்ல.

தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த மருத்துவ நூல் என்றால் க்ரியா வெளியீடாக வந்த ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ என்ற மொழிபெயர்ப்புதான். ஆனால் க்ரியா அந்நூலை தொடர்ச்சியாக வெளிக்கொண்டுவந்து பிரபலப்படுத்தவில்லை. விலையையும் மிக அதிகமாக வைத்திருந்தார்கள். அதற்கு இணையான நூல் இப்போது அடையாளம் பதிப்பக வெளியீடாக அவ்ந்திருக்கும் ‘மேயோ கிளினிக்- உடல்நலக்கையேடு’ என்ற நூல்.

கிட்டத்தட்ட எல்லா நோய்களைப்பற்றியும் சுருக்கமான குறிப்புகளைக் கொடுக்கும் நூல் இது. அவசர சிகிழ்ச்சை,பொதுவான நோய்க்குறிகள்,பொதுவான பிரச்சினைகள்,குறிப்பிடத்தக்க அறிகுறிகள், மனநலம், ஆரோக்கியமாக வாழ்தல், ஆரோக்கியமான நுகர்வோர்,குழந்தைகள் இளைஞர்கள் உடல்நலம், நாம் எப்படிப்பேசுகிறோம் போன்ற பல தலைப்புகளில் நோய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது சுயமருத்துவம் குறித்த நூல் அல்ல. நோய்களை அடையாளம் கண்டுகொள்வது, எந்த இடத்தில் மருத்துவரை நாடவேண்டும், என்னென்ன சுயதடுப்புமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று விவரிக்கும் நூலாகும்.

உதாரணமாக ‘முதுகும் கழுத்தும்’ என்ற தலைப்பில் முதலில் ‘உடலமைப்பியல்’ என்ற உபதலைப்பு. அதில் முதுகு முள்ளெலும்பிகள் தண்டுவடம் இடைவட்டு தசைகள் என சிறுதலைப்புகளில் விரிவான விளக்கம். ‘கழுத்து மற்றும் முதுகுப்பிரச்சினை ‘என்ற அடுத்த தலைப்பில் பொதுவான நோய்க்கூறுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. பொதுவான எச்சரிக்கைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மருத்துவ உதவி என்ற தலைப்பில் மருத்துவரிடம் செல்லவேண்டிய கட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தலைப்பு பொதுவான முதுகுப்பிரச்சினைகள். முதுகுவலிக்கான பயிற்சிகள் படங்களுடன்  விளக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவர் வில்லியம் வோரல் மேயோ மற்றும் அவரது மகன்கள் வில்லியம் ஜெ மேயோ சார்லஸ் ஜெ மேயோ ஆகியோரின் முயற்சியில் 1900 த்து தொடக்கத்தில் அமெரிக்காவில் ரோஸெஸ்டரில் மேயோ கிளினிக் தொடங்கப்பட்டது.இன்று பலநூறு கிளைகளுடன் விரிந்து பரந்துள்ள ஒரு நிறுவனம் இது. 1983 முதல் மேயோ கிளினிக் ஆரோக்கியம் குறித்த செய்திகளை மக்களிடையே கொண்டுசெல்வதற்காக செய்திமடல்களையும் நூல்களையும் வெளியிட ஆரம்பித்தது. அதன் வெளியீடான இந்தக் கையேடு உலகப்புகழ்பெற்றது. இதன் பொது ஆசிரியர் ·பிலிப் ஹாகென் எம்.டி.

தமிழாக்கத்தின் பதிப்பாசிரியர் சிவசுப்ரமணிய ஜெயசேகர். தமிழிலக்கிய வாசகர்களுக்கு இவரை நினைவிருக்கக் கூடும். காலச்சுவடு இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதைவிட, தமிழ் வழி மருத்துவக்கல்விக்காகப் போராடுபவர் என்ற அளவில் மேலும் அறியப்பட்டிருக்கிறார். தமிழில் மருத்துவ முதுகலை படிப்பின் தேர்வை எழுதி அதற்காக நீண்ட தனிநபர் சட்ட போராட்டத்தை நிகழ்த்தி வென்றவர் இவர். மதுரை அருகே ஒரு சிறு கிராமத்தில் பணிபுரிகிறார். தமிழாக்கத்தில் எம்.எஸ், தி.கு.ரவிச்சந்திரன் ஆகியோர் உதவியிருக்கிறார்கள். எம்.எஸ் பிரதிமேம்பாடுசெய்ய ராஜமார்த்தாண்டன் பிழை திருத்தியிருக்கிறார்.

நம் வீடுகளில் இருக்க வேண்டிய, வீட்டில் உள்ள அனைவருமே அவ்வப்போது புரட்டிப்பார்க்க வேண்டிய நூல் இது.

அடையாளம் வெளியீடு. 1205/1, Karuppur Salai, Puthanatham 621310. Trichy Dist,Tamilnadu.

கொட்டம்சுக்காதி

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

இயற்கை உணவு : என் அனுபவம்

நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்

நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்

ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைஇதழாளர்கள்:ஒரு கடிதம்