‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 6

தேவாரண்யம் சொற்கள் செறிந்து உருவான இருளால் ஆனதே என்று அர்ஜுனன் அறிந்தான். மண்ணில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள் எழுப்பிய ரீங்காரம். கிளைகளிலும் இலைகளிலும் செறிந்த பறவைகளின் ஓசையும், புதர்களை ஊடுருவி ஓடிய சிறு விலங்குகளின் சலசலப்பும், கிளை ஒடித்து மரம் விலக்கி செல்லும் களிறுகளின் காலடிகளும், புதர்களை துள்ளிக் கடக்கும் மான்களின் அமறலும், கொம்புகள் முட்டிக் கொள்ளும் காட்டெருமைகளின் முக்காரமும், முழவொலி எழுப்பும் கரடிகளும், குகைக்குள் உறுமிய புலிகளும் கிளைகளை உலைத்து பாய்ந்தமைந்து குமுறிய மந்திகளும் இலைகளுக்கு மேல் எழுந்து வானில் சிறகடித்துக் கூவி அமைந்த புட்களும் இலைசொட்டி ஒலை மேல் விழும் தாளமும் கொண்டு ஒரே சமயம் ஓராயிரம் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது அது. சொல் பெருகி சொல்லின்மையாகி செறிந்து நின்றது.

இரு கைகளையும் நீட்டி சொற்களை விலக்கி சொற்களில் முட்டிக் கொண்டும் சொற்களால் வருடப்பட்டும் சொற்களால் கீறப்பட்டும் சொற்களில் தடுக்கி சொற்களில் கால் வைத்தும் அவன் நடந்து கொண்டிருந்தான். இருள் காலத்தையும் இடத்தையும் மறைத்துவிடுவதை அறிந்தான். அவன் கால் நின்ற வெளிக்கு அப்பால் அவன் காலை ஏற்கும் வெளி அக்கால் சென்று பதியும் கணத்திலேயே நின்ற இடம் மடிந்து எழுந்து வந்தது. அவன் சென்றபின் நின்றவிடம் இல்லாமலாயிற்று. சென்று கொண்டே நின்ற இடத்தில் தொங்கிக் கிடப்பதென தோன்றியது. சூழ்ந்தொலித்த பல்லாயிரம் சொற்கள் திரண்டு ஒற்றை சொல்லாயின. பொருளின்மை கூர்ந்த அவ்வொற்றைச் சொல் பிளந்து பிளந்து பொருள் பெருகிய பலகோடி சொற்களாகிறது என்பதை உணர்ந்தான். ஒவ்வொரு சொற்பொருளிலும் இலைக் காம்பின் நுனியில் அது பிரிந்து உதிர்ந்ததன் வடு எஞ்சுவது போல் பொருளின்மை மிஞ்சியிருந்தது.

இருளுக்குள் மெல்லிய சிறகோசை மட்டுமென அவனைத் தொடர்ந்து சித்திரமென வந்த வர்ணபக்ஷன் “என்னைத் தொடர்க!” என்றது. “நானும் ஒரு சொல்லே.” அவ்வொற்றைச் சொல்லைத் தொட்டு பற்றியபடி அவன் இருளுக்குள் நடந்தான். முடிவிலி வரை நீட்டிக் கட்டிய வலையின் ஒற்றைச்சரடு வழி செல்லும் சிறு சிலந்தியென. “அச்சம் கொள்கிறாயா?” என்றது வர்ணபக்ஷன். “இல்லை” என்றான். “சிறு அச்சம் நன்று. இல்லையேல் உன் உடல் கொண்ட வடிவ எல்லைகள் கரைந்து இவ்விருளில் பரவி மறைந்து இருளாவாய்” என்றது வர்ணபக்ஷன். “நான் ஐயம் கொண்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

சிறகடித்துச் சுழன்று வந்து “அதுவும் நன்றே” என்ற வர்ணபக்ஷன் “வருக! இது மூன்றாவது சுனை. இதை பௌலோமம் என்கிறார்கள். இங்கு சமீசி என்னும் தேவதை முதலை வடிவு கொண்டு வாழ்கிறாள். முதலிரு சுனைகளிலும் தப்பி இங்கு எஞ்சும் உயிர்களை அவள் உண்கிறாள். கால் கொண்டவை முதற் சுனையில் மறைகின்றன. தாவி வருபவை இரண்டாம் சுனையில் உயிர் துறக்கின்றன. இது பறந்தலைபவர்களுக்கான சுனை” என்றது. அந்த இருளில் விழி புதைய “இதன் இயல்பென்ன?” என்றான் அர்ஜுனன்.

“இதை வியானம் என்கிறார்கள். இச்சுனையில் நிறைந்திருக்கும் நீர் எடையற்றது. ஆவி வடிவானது. இக்காடெங்கிலும் ஒவ்வொரு இலையிலும் பரவி குளிர்ந்து சொட்டி வெம்மையால் மீண்டும் ஆவியாகும் நீர் இங்கு வந்து சேர்கிறது. இங்கிருந்தபடியே இக்காடெங்கிலும் நிறைந்துள்ளது இது. ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு தளிரையும் இச்சுனை அறியும்” என்றது வர்ணபக்ஷன். அர்ஜுனன் வியானத்தின் கரையை அடைந்ததை தன்மேல் வந்து பட்ட நீராவியிலிருந்து அறிந்தான். முதல் மழைக்குமுன் அறைகளுக்குள் வரும் வெம்மை கொண்ட காற்றென தோன்றியது. அவன் உடல் வியர்த்து ஆடை நனைய முதுகோடை வழியே வழிந்தது.

உடல் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியபோது அந்த ஆவியும் மேலும் குளிர்ந்தது. பின்பு செவிமடல்களிலும் புருவங்களிலும் மூக்கு நுனியிலும் வியர்வை சொட்ட அருவியின் நீர்ப் புழுதிப் பரப்பை கடந்துசெல்வது போல அவன் அச்சுனையை அணுகினான். காற்றே நீரென்றாகியிருந்த போதிலும் தொண்டை விடாய் கொண்டு பரிதவித்தது. “இனி நான் வருவதற்கில்லை. சிறகுகள் நனைந்து என்னை மண்ணில் வீழ்த்திவிடும்” என்றது வர்ணபக்ஷன். “ஆம், நீ இங்கிரு” என்றபடி அர்ஜுனன் முன்னால் நடந்தான். நீராவி செறிந்து முகில் என்றாயிற்று. இரு கைகளாலும் அதைக் கலைத்து முன் செல்ல பட்டுத்திரை என்றாயிற்று. கையை வீசி அம்பால் அதைக்கிழித்து முன் சென்றான். குளிர்ந்த பிசினென ஆயிற்று. அதில் புதைந்திறங்கி வியானத்தின் சேற்றுப் பரப்பை அடைந்தான்.

விழிகூர்ந்து அந்த ஏரியின் நீர்விளிம்பை நோக்க முடிந்தது. மலைக்குவைக்குள் விழுந்து கிடக்கும் முகில்பிசிறு போல் தெரிந்தது. கால் எடுத்து வைத்து அதை அணுகி இரு கைகளாலும் அச்சுனை மேல் படர்ந்திருந்த ஆவிப்புகைப்படலத்தை விசிறி நகர்த்தினான். கருமைக்குள் இளங்கருமை வெண்மையென விழிமாயம் காட்டியதை வியந்தபடி குனிந்து நீர்ப்பரப்பை பார்த்தான். அள்ளி இரு கைகளிலும் கோரியபோது நீரின் தொடுகை உளதா இலதா என்று உளம் ஐயம் கொண்டது. “மைந்தா, அதை விலக்கு” என்று குந்தியின் குரலை அவன் கேட்டான். உடலின் தோல் செவிப்பறையென மாற பிடரி மெல்ல சிலிர்க்க அசையாது நின்றான்.

“நீ கொண்ட விழைவு முதிர்ந்து நான் எழுந்தேன். பெருவிழைவுடன் உன் கால் சுற்றிய நாகம் நான்” என்றாள் குந்தி. “இளையவனே, என் மேல் நான் கொண்ட ஐயமே உன்னை மூன்றாமவன் என விலக்கி நிறுத்தியது. ஆனால் ஒரு கணமும் உன் வில்லை நான் மறந்ததில்லை.” பெருமூச்சுடன் “ஆம், நான் அதை அறிவேன். என் வாழ்நாளெல்லாம் காடுகளில் அலைவதே ஊழ் என்று உணர்கிறேன்” என்றான். “அரண்மனையில் நீ இருக்கையில் உன்னை காடு நோக்கி விலக்குகிறேன். அரண்மனையில் என்னை விட்டு உன்னுடன் காடுகளில் நானும் அலைகிறேன்” என்றாள் குந்தி. “அறிவேன்” என்றான் அர்ஜுனன்.

“மைந்தா, நீ உரு நான் நிழல். உன் கால் தொட்டுச் சென்ற மண் அனைத்திலும் உடல் தொட்டுச் சென்றவள். சாயும் பொழுதுகளில் பேருருக்கொண்டு உச்சிப் பொழுதில் உன் காலடியில் மறைந்து என்றும் உன்னுடன் இருப்பவள். இதை விலக்கு. உன்னை உள்ளிழுத்து இங்கொரு நிழலென ஆக்கிவிடும் இச்சுனை” என்றாள். அவன் கண்மூடி தன்னை தொகுத்தான். தன் உடலை வாளென்றாக்கி பல்லாயிரம் வலைப்பின்னல்களை வெட்டிச்சென்றான். புன்னகைத்து “விலகிச் செல்! இன்னும் நூறாயிரம் அறைகளைத் திறந்து அங்கே இன்மையென உன்னை உணர்வதே என் ஊழ்” என்றபடி அந்நீரை தலையில் விட்டான். அக்கணமே முதலையெனப் பாய்ந்து அவனை பற்றிக் கொண்டாள் சமீசி.

முதலையின் வால் சுழன்று அவனை அறையவந்த கணத்தில் அதன் நுனியை தன் காலால் மிதித்து சேற்றுடன் இறுக்கி இரு முன்னங்கால்களையும் பற்றி உடலைச் சரித்து தலையால் அதன் நெஞ்சில் ஓங்கி முட்டி அதை அடிவயிறுகாட்டி விழச்செய்து அக்கணமே புரண்டு அதைத் தூக்கி புல்வெளி நோக்கி வீசினான். அங்கு நின்றிருந்த மரத்தில் மோதி பட்டையில் உரசும் ஒலியுடன் சரிந்து விழுந்து சில கணங்கள் நெளிந்து துடித்தபின் முன்காலை ஊன்றி பெண்ணென எழுந்தது. சமீசி “இக்கணம் என் தவம் நிறைவுற்றது. இவ்வாழம் வரை மானுடர் எவரும் வந்ததில்லை. இதை வெறும் அலையென மாற்றும் பேராழம் ஒன்று உனக்கு வாயில் திறப்பதாக!” என்று வாழ்த்தி முகில் பிசிறுகளாக காற்றில் படர்ந்து மறைந்தாள்.

எழுந்து சரிவில் ஏறி மேலே சென்றான். நீள்மூச்சுடன் காட்டுக்குள் நடந்தான். அவன் கால்கள் உடலை சுமக்கமுடியாமல் தள்ளாடின. சிறகடித்து அவன் தலைக்குமேல் பறந்து சுழன்று வந்து கிளைநுனியில் அமர்ந்து “பஞ்சதீர்த்தத்தின் நான்காவது சுனை இனிமேல்” என்றது வர்ணபக்ஷன். “நோக்கு!” அர்ஜுனனின் தலைமேல் வந்து சிறகடித்து கூவி அழைத்தது. “இதற்கு காரண்டமம் என்று பெயர். இதில் வாழ்கிறாள் பெருவல்லமை கொண்ட முதலையாகிய ஃபுல்புதை. முன்பு இங்கு முனிவரின் தீச்சொல்லால் வந்திறங்கிய ஐந்து தேவதைகளில் ஒருத்தி.” அர்ஜுனன் “அவள் எத்தகையவள்?” என்றான்.

“இளைய பாண்டவனே, இனியவையும் சிறந்தவையும் மட்டும் செறிந்து உருவானவர்கள் தேவர்கள். ஆனால் தீச்சொல்லால் தலைகீழாக திருப்பப்பட்டு இவ்வண்ணம் உருக்கொள்கையில் அவ்வினிமையும் நன்மையும் அதே அளவு பேருருக்கொண்ட தீமையாக மாறுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அடியில் அதன் இருண்ட புறமொன்று உள்ளது என்பர் என் குலத்துப் பாடகர். இங்கு நிலத்திழைந்து வரும் உயிர்களை உண்ணும் ஆறாப்பெரும் பசி கொண்டு ஃபுல்புதை வாழ்கிறாள். அவளை வெல்கையிலேயே முனிவர் சென்று நின்று திகைக்கும் கரிய பெரிய நதியின் கரையை அடைந்து பாய்ந்து நீந்தி நீ மறுகரை செல்கிறாய். அவ்வண்ணம் ஆகுக!”

அர்ஜுனன் “பெருந்தவத்தின் தருணத்தில் மாமுனிவர் காணும் அவ்விருள்கணத்தை நாணிழுத்து அம்பு பூட்டி குறி நோக்கி நின்று ஏவுவிரலை அசைப்பதற்கு முந்தைய கணம் வில்லாளியும் உணர்வதுண்டு” என்றான். “ஆம், அது ஒரு கணநேரத்தவமே” என்றது வர்ணபக்ஷன். “சிறகுளது என்றுணர்ந்து அன்னை அமைத்த கூட்டிற்கு வெளியே வந்து நின்று, விரிந்த வானை நோக்கி கழுத்து தூக்கி, அலகு திறந்து கூவி, பாய்ந்தெழுந்து காற்றில் மிதப்பதற்கு முந்தைய கணம் ஒவ்வொரு பறவையும் அதை உணர்ந்திருக்கும்.”

“இதன் பெயரென்ன?” என்றான் அர்ஜுனன். “இதை சமானம் என்கிறார்கள். இதுவரை நீ நோக்கிய மூன்று சுனைகளின் நீர் அளவுகள் இச்சுனையால் நிகர் செய்யப்படுகின்றன. அம்மூன்றுக்கும் நடுவில் அமைந்துள்ள இச்சுனை தன் பல்லாயிரம் நுண்ணிய துளை வழிகளால் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துள்ளது. இச்சுனை இருக்கும்வரை பிற மூன்றும் நீர் ஒழிந்து வெறுமை கொள்வதில்லை” என்றது வர்ணபக்ஷன். அர்ஜுனன் பறவையின் வழிகாட்டலில் நோக்கி கால்வைத்து மெல்ல நடந்தான். “இது ஒரு மாயவெளி என்கிறார்கள். இதன் எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் பால் திரிந்து உருமாறுகிறார்கள். இன்னும் சில கணங்களில் நீ அதை உணர்வாய்.”

அர்ஜுனன் “அது எனக்கு புதிதல்ல, மேலும் அதையே எதிர்பார்த்தேன்” என்றான். புதர்களை வகுந்து செல்லச் செல்ல இலைகளின் அடியில் வெண்ணிற ஒளி ததும்புவதை கண்டான். மரங்களின் மறுபாதிகளில் பால்வழிவது போல் ஒளிவழிந்தது. உருளைக்கற்கள் உடைந்த முட்டையின் பாதி ஓடு போல் தெரிந்தன. வழிந்தோடிய சிற்றோடைகள் வெண்பட்டு நாடா என நெளிந்தன. “வெண்பளிங்கு போன்றது இந்தச் சுனை” என்றது வர்ணபக்ஷன். “இவ்வெல்லையை நான் கடக்க விழையவில்லை. பெண்ணாக உணர்ந்தபின்பு என்னை நான் மீட்டுக் கொள்வேனா என்று எனக்கு ஐயம்.”

அர்ஜுனன் தன் கண்முன் மெல்லிய வெண்ணிற எல்லைக்கோடு போல் தெரிந்த ஒளிவட்டத்தைக் கடந்து அப்பால் சென்றான். அவ்வொளி பட்டு தன்னுடல் சற்றே குழைந்து நெளிந்தாடியதை அறிந்து மேலும் ஒரு அடிவைத்தபோது தன் இடைகுழைவதை தோள் நெகிழ்ந்துள்ளதை கைகள் நெளிவதை அறிந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் மாறிக் கொண்டிருந்தது. தோள்மறைய நீள்குழல் எழுந்தது. குமிழ் முலைகள் வளர்ந்தன. அணிகள் செறிந்த கைகள். நூபுரம் ஒலித்த கால்கள்.

இடை ஒசிய நடந்து சுனைச் சரிவில் இறங்கி சேற்றுப் பரப்பை அடைந்தான். பாற்கலம் என தெரிந்தது அப்பெருஞ்சுனை. அதை அணுகி குனிந்து அந்நீர்ப்பரப்பை நோக்கினான். அதில் தெரிந்த முகம் எங்கோ அவன் கண்டதாக இருந்தது. முழங்காலில் கையூன்றி மேலும் குனிந்து நோக்குகையில் சிறு வியப்பொலியுடன் அம்முகத்தை அடையாளம் கண்டான். அது இளம் குந்தியின் முகம். அவ்விழிகளை நோக்கி நின்றபோது அந்நீர்ப்பாவை பேசுவது போல் “திரும்பிச்செல் மைந்தா! இவ்வாழம் வரை நீ வந்ததே வெற்றிதான். பின்னால் ஏதுமில்லாத யோகியரின் பயணமிது. இல்வாழும் மானுடர்க்குரியதல்ல. அடைந்தடைந்து சென்று நிறைவுறுவது வாழ்க்கை. திறந்து திறந்து சென்று ஒடுங்குவது ஞானத்தின் பாதை” என்றது குரல்.

“என் மைந்தனல்லவா? என் மடியிலிட்டு நான் முலையூட்டிய செல்வனல்லவா? எவ்வன்னை தான் தன் மகன் துறந்து செல்வதை விழையமுடியும்? அவ்வண்ணம் அவன் துறப்பது முதலில் அவன் அன்னையை அல்லவா? என்னை விலக்கும் விழியொன்று உன்னில் அமைந்தால் அக்கணம் நான் இறந்தேன் என்றல்லவா பொருள்? இதோ இங்கு நிறைந்திருப்பது என் முலை நிறைந்த பாலென்று கொள்க. உனக்கு நான் ஊட்டியது சிறிதே. உனக்கென ஊறி நிறைந்தது இப்பெரும் வெள்ளம்.”

அர்ஜுனன் தன் அருகே அவள் அணுகுவதை உணர்ந்து “விலகு!” என்றான். “என் கண்ணீரைக் கடந்து வந்தாய். இம்முலைப்பாலை கடப்பாயா?” என்றாள் குந்தி. “விலகு!” என்றவன் திரும்ப அங்கு மணிமுடியும் பொற்கவசமும் மஞ்சள் பட்டாடையும் அணிந்து நின்ற பாண்டுவை கண்டான். “எந்தையே, நீங்களா?” என்றான். “இல்லை, நான் உன் அன்னை” என்றான் பாண்டு. “உன்னை ஆணென வந்து போர்முனையில் சந்திக்க விழைந்தவள். உன்னைக்கொல்லும் மைந்தனைக் கருவுற விழைந்தவள். உன்னுடன் நீந்திய ஆழத்தில் உன் விழிநோக்கி விண்ணின் சொல்லை கற்றவள்.”

“அன்னையே” என அவன் சொல்ல அச்சொல்லைமீறி நெஞ்சு முன்னால் பாய்ந்தது. அந்நீரை அள்ளி தலையில் விட்டான். அக்கையசைவு முடிவதற்குள் தன் மேல் பாய்ந்த முதலையை குனிந்து தலையால் முட்டி மறுபக்கம் சரித்து குனிந்து அதன் வாலைப்பற்றி மும்முறை சுழற்றி அப்பால் காட்டில் வீசினான். தொலைவில் ஒரு பாறை இடுக்கில் விழுந்து துடித்து புரண்டெழுந்து நின்றாள் ஃபுல்புதை.

“இளையோனே, இங்கு உயிர்கள் கருணையால் தளையிடப்பட்டுள்ளன. அதையும் வென்று செல்பவனே முமுமையை அடையும் தகுதி கொண்டவனாகிறான். உன் விழைவின், தேடலின் இரக்கமற்ற வாளால் இக்கருணையை வெட்டிச் சென்றாய். நான்காவது சிறையை உடைத்திருக்கிறாய். விண்ணிறைந்துள்ள அமுதத்தில் ஒரு கோப்பை என்றோ உனக்கும் அளிக்கப்படும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றுரைத்து வெண்புகைப்படலமென அலைவுற்று மறைந்தாள்.

காட்டில் அர்ஜுனன் நடக்கையில் மிகவும் களைத்திருந்தான். “ஐந்தாவது சுனையை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம்” என்றது வர்ணபக்ஷன். “இங்கொரு மண்குன்று மேல் அமைந்துள்ளது இச்சுனை. ஐந்தில் மிகச்சிறிய சுனை இதுவே. விண்ணிலிருந்து பெய்யும் நீர் மட்டுமே உள்ளே செல்லக்கூடியது. ஐந்தில் விண்கதிர் ஒளிபடும் ஒரே சுனையும் இதுதான். விண்மீன்களை சூடிப் பரந்திருக்கும் இவ்வாழத்தில் வாழ்கிறாள் லதை எனும் தேவதை. ஐவரில் நிகரற்ற அழகி அவளே என்கின்றன எங்கள் பாடல்கள். அவள் வாழும் இச்சுனையை ஒளியெழில் கண்டு மகிழ்ந்து சுப்ரசன்னம் என்றழைக்கின்றனர். ஒளியே நீரென அங்கு தேங்கியுள்ளது என்கிறார்கள்.”

“அங்கு செல்லும் வழியில் உன் விழிகள் விண்மீன்களென பூப்பதை உணர்வாய். அங்குள ஒவ்வொரு மரமும் மலரென மாறியிருக்கும். கற்பாறைகள் கனிகள் போல் தெரியும். காமம் கொண்ட பெண்ணுடலின் கதுப்புத் தசை போல் தரை துடிக்கும். நறுமணமும் இன்னிசையும் நிறைந்த காற்று வீசும். அச்சுனை மேல் நிலவு விழுகையில் மட்டுமே தேவாரண்யம் எனும் இக்காடு முற்றிலும் அமைதி பெறும்” என்றது வர்ணபக்ஷன். “செல்க! வென்று மீள்க!”

நீர்த்துளிகள் உதிரும் ஒலிகளும் மெல்ல தேய்ந்தமிழ இன்மையென்றே ஆகி பின் இருப்புணர்ந்து மீளும் முடிவிலி என நிறைந்த பேரமைதி. “அகல்வெளியில் காடும் இணைந்து மறையும் தருணம் இது. இது இங்கிருப்பதை அப்போது மட்டுமே விண்ணகம் அறியும்” என்றது வர்ணபக்ஷன். “இதன் இயல்பு யாது?” என்றான் அர்ஜுனன்.

“உத்தானம் என்று இதை சொல்கிறார்கள். மண்ணில் உள்ள நீரை விண் உறிஞ்சி உண்கிறது என்று அறிந்திருப்பாய். இக்காட்டில் ஊற்றென்றும் ஓடையென்றும் ஆவியென்றும் நீர்த்துளியென்றும் இளமழையென்றும் நிறைந்திருக்கும் நீரை வானம் அள்ளி எடுத்துக்கொள்வது இச்சுனையிலிருந்தே. புலரியில் கதிரவனின் முதல்கதிர் பட்டு ஒளி கொள்கிறது. பின்னர் உச்சியில் வெம்மை கொண்டு ஆவியாகிறது. அந்தி சரிந்தபின் விண்ணில் விண்மீன்கள் தெளியும்போது ஓசையின்றி நீர் மேலெழுந்து செல்வதை உணரமுடியும். தேவாரண்யத்தின் நெற்றிப்பொட்டில் அமைந்துள்ளது இச்சுனை.”

அர்ஜுனன் புதர்களை விலக்கி தன் முன் எழுந்த அச்சிறு குன்றை நோக்கி நின்றான். அதன் உச்சியில் ஓர் சுனை உண்டு என அங்கிருந்து எண்ணவும் முடியவில்லை. “அங்கு செல்வது உகந்ததல்ல இளைய பாண்டவனே. அது ஒருவழிப்பாதை. இவ்வெல்லை கடந்து அங்கு சென்றவை அனைத்தும் அங்கிருந்து விண்ணால் உறிஞ்சப்பட்டு மேலெழுந்து மறையும். முடிவிலியை அறிந்தவை அனைத்தும் முடிவிலி என்றாகும் என்றறிந்திருப்பாய். முடிவெனப்படுவதே உருவென்றாகிறது. உருக்களால் நிறைந்தது இப்புவி” என்றது வர்ணபக்ஷன்.

“இவ்வெல்லை வரை வந்ததே உன்னை இப்புவி கண்ட பெரும் யோகிகளில் ஒருவனாக்குகிறது. இதைக் கடந்து அப்பால் நீ செல்லவேண்டுமென்பதில்லை” என்றது வர்ணபக்ஷன். “நானறியேன், ஒருக்கால் இதுவே நான் தேடி வந்ததாக இருக்கலாம். நான் தேடுவது இங்கே மறைந்து அழிவதே என்றுகூட இருக்கலாம்” என்ற அர்ஜுனன் அவ்வெல்லையைக் கடந்து சிறு குன்றின் மேலேறினான். வியத்தகு காட்சி ஒன்றை பின்னரே அவன் கண்டான். அக்கூம்பு வடிவக்குன்றின் நான்கு திசைகளிலிருந்தும் காற்று மேல் நோக்கி எழுந்து கொண்டிருந்தது. மணலும் புழுதியும் மெல்ல மேல் நோக்கி ஒழுகி எழுந்தன. சற்று நடக்கையில் எழுவதா விழுவதா நிகழ்கிறது என்று அவன் விழிமயங்கியது.

அவனருகே வந்த வர்ணபக்ஷன் “இவ்வெல்லைக்கப்பால் கடக்க எனக்கு ஒப்புதல் இல்லை. வாழ்க!” என்று சொல்லி திரும்பி மறைந்தது. மேலே செல்லச் செல்ல கால்தசையின் விசையின்றியே அவனுடல் மேலே சென்று கொண்டிருந்தது. கண்காணா சரடொன்றால் கட்டி தூக்கப்படுவது போல் அவன் சென்று நின்ற முகடுக்கு நடுவே முழுவட்ட வடிவ சுனை ஒன்றிருந்தது. அதற்குள் ஒளி மட்டுமே நிறைந்திருந்தது. பின்னர்தான் அதை நீரென்று உணர்ந்தான். நீரென்று விழி நோக்குவது நீர்ப்பாவைகளின் பரப்பையே என்று கற்றிருந்தான். எதையும் எதிரொளிக்காத நீர் இன்மையென்றே இருந்தது.

சுனை விளிம்பில் மெல்ல நடந்திறங்கி மெல்ல நீர்விரிவை அடைந்தான். குனிந்து அதில் ஒரு கையை அள்ளினான். ஒளியை கையால் அள்ள முடியுமென்று கண்டு குழந்தைக்குரிய களியில் பொங்கியது அவன் உள்ளம். அருகே அவன் உள்ளத்தால் எதிர்நோக்கிய குந்தியின் உருவம் எழுந்தது. “மைந்தா, வேண்டாம். இதைத் தொட்டபின் அங்கு யாதொன்றும் எப்பொருளும் கொள்வதில்லை. பொருளனைத்தையும் ஊடுருவிச்செல்லும் நோக்கு ஒருவனுக்கு இருக்குமென்றால் பொருளென புவியில் எவை எஞ்சும்? பொருளென்பவை விழிக்கு அவை அளிக்கும் தடையால் ஆனவை அல்லவா? விலகு!” என்று அவள் ஒலியின்றி சொன்னாள்.

“உன் விழைவுக்கு நிகர்விழைவு கொண்டு எதிரே நிற்கும் ஆடிப்பாவையென என்னை நீ இதுவரை கண்டதில்லை” என்றாள் குந்தி. அர்ஜுனனின் தோள்களும் கைகளும் நடுங்கின. “சொல்லுக்குச் சொல் தோளுக்குத் தோள். வில்லுக்கு என் வில்லும் நிகர் நிற்கும். உன் அம்பின் கூர்முனையை என் அம்புமுனை சந்திக்கும்.” அவன் மெல்லிய குரலில் “விலகு!” என்றான். மீண்டும் தன் உள்ளத்தின் அடியாழத்தில் எங்கோ சொன்னான். விலகு விலகு விலகு என்று அவன் ஆழத்தின் ஆயிரம் குகைகள் அச்சொல்லை எதிரொலித்தன.

“ஒரு கணத்தின் பல்லாயிரம் கோடியில் ஒன்றென ஆகிய தேவகணத்தால் மட்டுமே நீ என்னை வெல்ல முடியும். உன் அம்பு நுனியின் புள்ளியில் அமைந்த மாநகரத்தின் நடுவே அமைந்த மாளிகையின் குவைமுகடின் உச்சிக் கொடிமர நுனியில் பறக்கும் ஒரு கொடி. அதுவே உன் அறிதல் என இருக்கக்கூடும். இங்கு அதைத் தொட்டபின் அதை அறிய நீ மீள்வதில்லை” என்றாள் குந்தி. “விலகு!” என்றான் அர்ஜுனன். அவன் மேல் கவிந்திருந்த வானம் பல்லாயிரம் இடி முழக்கங்களை எதிரொலித்தது.

“மூடா, ஒன்றை விட்டு விட்டு இங்கு வந்துளாய். திரும்பு! அதை அடைந்து மீள்!” என்றாள் குந்தி. அர்ஜுனன் “எதை?” என்று எண்ணிய கணமே அறியாது அவன் விழி திரும்பி அந்நீர்வெளியை நோக்கியது. அதிலொரு பெண் முகம் எழுந்து புன்னகைக்கக் கண்டான். அவன் கையிலிருந்த நீர் மீண்டும் அச்சுனையில் விழுந்ததுமே முதலையென்று உருமாறி லதை அவன் மேல் பாய்ந்தாள். பயின்று தேர்ந்த உடலால் அவளை விலக்கி அவளை நிலையழிந்து மறுபக்கம் சென்று விழச்செய்தான். பாய்ந்து அவள் மேல் விழுந்து இரு கால்களாலும் கைகளாலும் அவளை பற்றிக்கொண்டான்.

அவள் வால் அலைந்து துடிக்க எம்பி விழுந்து துள்ள தன் புயவல்லமையால் அவளைப் பற்றி பன்னிருமுறை புரண்டு சுனை எல்லைக்கு வெளியே வந்து மறுபக்கச் சரிவில் உருட்டி வீசினான். புழுதியில் விழுந்து உருண்டுருண்டு சென்று நிலையழிந்து மூழ்கி நின்று மேலெழுந்து வந்த புழுதியால் உடல் மூடப்பட்டு கிடந்த லதை தன்னுரு மீண்டு அப்புழுதிக்குள் மண்சிலை என பெண் உடல் அமைந்து அவனை நோக்கினாள். “மீள்க! நீ வென்று வர இன்னும் ஒரு களம் உள்ளது. இச்சுனை உனக்கென காத்திருக்கும்” என்றாள். அர்ஜுனன் “அவள் யார்?” என்றான். “அவள் பெயர் சுபத்திரை” என்றாள் லதை. அர்ஜுனன் நீள் மூச்சுடன் “ஆகுக!” என்றான். புழுதி என கலைந்து பரவி லதை விண் மீண்டாள். அர்ஜுனன் தோளில் சிறகடித்து வந்தமர்ந்து “மீள்க!” என்றது வர்ணபக்ஷன்.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்க்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஎன்றுமுள கண்ணீர்
அடுத்த கட்டுரைதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்