தமிழகக் கல்வி வளர்ச்சிக்கு உண்மையிலேயே பெரும்பாடுபட்டவர் நெ.து.சுந்தரவடிவேலு. அவரது கனவையும் உழைப்பையும்தான் காமராஜர் தன் ஆயுதமாகக் கொண்டிருந்தார். ஏதேதோ அரசியல்தலைவர்களின் , சாதித்தலைவர்களின், மதப்பரப்புநர்களின் பெயர்களைச் சொல்லி அவரில்லேன்னா நான்லாம் மாடும் மேச்சிட்டிருந்திருப்பேன் என்று சொல்லும் தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் அறியாத பெயர் அவருடையது.
தமிழகக் கல்வித்துறைச் செயலர் என்னும் உயர்பதவியில் இருந்த சுந்தரவடிவேலு ஐரோப்பாவின் சர்ச் ஸ்கூல் , கம்யூனிடி ஸ்கூல் போன்ற அமைப்புகளை நேரில் சென்று ஆராய்ந்து அந்த பாணியில் தமிழகத்தில் உருவாக்கிய பஞ்சாயத்துப் பள்ளிகளால்தான் இங்கே கல்விப்புரட்சி ஏற்பட்டது. அதற்காக தன் முழுவாழ்க்கையையும் அர்ப்பணித்தார். பின்னர் வந்த திராவிட ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மறைக்கவும் பட்டார்.
சுந்தரவடிவேலு குறித்து தொடர்ந்து எழுதிவந்துள்ளேன். அனைத்து பெருமைகளையும் அரசியல்வாதிகளுக்கு அளித்துவிடாமல் உண்மையிலேயே அரும்பணியாற்றிய அதிகாரிகள், அறிஞர்களை நினைவுகூரும்போதே நாம் அவர்களைப்போன்றவர்கள் உருவாக வாய்ப்பளிக்கிறோம்
சுந்தரவடிவேலு நினைவாக வழங்கப்படும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அவரது நினைவைப்போற்ற முன்வந்த விழாக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.