ஊட்டி சந்திப்புக்குக் கிளம்புவதற்கு முன்னர் மலையாள இயக்குநரும் எழுத்தாளருமான மதுபாலிடம் பேசினேன். ‘எதற்காக இந்த கூட்டத்தை நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘வழக்கமாக அமைப்புகள்தான் இம்மாதிரி சந்திப்புகளை நிகழ்த்தும். தனிஎழுத்தாளர்கள் நடத்துவதில்லை’’
நான் சொன்னேன், ‘ஆம். அது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் எனக்குமுன்னர் பலர் ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி பல அரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறார். கலாப்ரியா நிகழ்த்தியிருக்கிறார். க.நா.சு சில அரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறார். மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றால் மலையாள சிந்தனையாளர் எம்.கோவிந்தன். அவர் மிகவெற்றிகரமான பல கூடுகைகளையும் மிகப்பெரிய மாநாடுகளையும் தன் நண்பரான ஃபாக்ட் நிர்வாக இயக்குநர் எம்.கெ.கெ நாயரின் உதவியுடன் நடத்தியிருக்கிறார். சுந்தர ராமசாமி அவரது வாழ்க்கையின் திருப்புமுனை என்பது அம்மாநாட்டில் எழுத்தாளர்களைச் சந்தித்ததுதான் என்று சொல்லியிருக்கிறார்’’
ஆம், அமைப்புகள்தான் இலக்கியக்கூட்டங்களை நிகழ்த்த வேண்டும். சாதாரணமாகச் சொன்னால் அதுவே முறை. அவற்றுக்கு அது மிகமிக எளிய வேலை. உதாரணமாக தஞ்சை தமிழ்ப்பல்கலை போன்ற ஒருமாபெரும் அமைப்பு ஒரு நல்ல இலக்கியக்கூடுகையையை உருவாக்கினால் அது எப்படி இருக்கும். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் அப்படி எதையுமே எந்த அமைப்பும் செய்ததில்லை. அவர்களின் சம்பிரதாயமான கருத்தரங்குகளைத்தவிர. ஏன் நாம் இப்படி ஒரு அரங்கை நடத்த அவர்களிடம் இடம்கூட கோர முடியாது. நாராயணகுருகுலம் அளிக்கும் இலவச இடம் இல்லாமல் இந்த கூடுகை சாத்தியமே அல்ல.
தமிழைப்பொறுத்தவரை இக்கணம் வரை இலக்கியமென்பது தனிநபர் முயற்சிகளிலேயே உயிர்வாழ்ந்துவருகிறது. சிற்றிதழ்கள், இலக்கியக்கூட்டங்கள், சந்திப்புகள் எல்லாமே சில தனிநபர்களின் ஊக்கம், அவர்களின் நண்பர்களின் ஒத்துழைப்பு மூலமே முன்னகர்ந்து வருகின்றன. படைப்புகளை எழுதுவதோடு விமர்சனத்தையும் எழுத்தாளர்களே எழுதவேண்டிய நிலை இங்கே உள்ளது. ஆகவேதான் க.நா.சு முதல் பிரமிள், சுந்தர ராமசாமி வரை அத்தனைபேரும் விமர்சனம் எழுதினார்கள். அவர்களே இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்தார்கள்.
என்னைப்பொறுத்தவரை இந்த இலக்கியக்கூடலை ஒரு விடுமுறையாகவும் எடுத்துக்கொள்கிறேன். ஆகவே இது அன்றாடச்செயல்களில் இருந்து ஓய்வு அளிப்பதாக, நட்பார்ந்த சூழலில் ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். இதை ஒரு மலையடிவாரத்தில் நடத்த வேண்டுமென எண்ணுவதற்கான காரணமும் இதுதான். அவ்வாறு நமக்கு முழுக்க புதியதாக இருக்கும் சூழலில் மட்டுமே நம் மனம் விடுதலை கொள்கிறது. குற்றாலம் ஊட்டி ஒகேனேக்கல் போன்ற சூழல் இல்லாமல் இந்த சந்திப்புக்கான உளச்சூழல் அமையாது.
இந்நிகழ்விற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் இந்நோக்கம் கொண்டவையே. இப்போது நிகழ்வில் கலந்துகொண்ட எவருக்குமே அந்நிபந்தனைகளைப்பற்றி மாற்றுக்கருத்து இருக்காதென நான் அறிவேன். அவற்றுக்கான தேவை என்ன என்று அவர்களே புரிந்துகொண்டிருப்பார்கள். வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரும் ஐம்பத்தைந்து பேர் ஒரே இடத்தில் கூடி விவாதிப்பதற்கு அவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ளும் சுயக்கட்டுப்பாடுகள் சில இல்லாமல் சாத்தியமே இல்லை.
கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் தொழிற்சங்கப் பின்னணி கொண்டவர்கள். அவர்கள் என்னிடம் இத்தகைய ஒரு பயனுள்ள கூடுகைகள் ஏன் தொழிற்சங்கச்சூழலில் இன்றுசாத்தியமாக இல்லை என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் கூறிய மூன்று காரணங்கள் எனக்கும் ஏற்புடையனவாக இருந்தன. ஒன்று, இன்று தொழிற்சங்க கூடுகைகளில் சமத்துவம் இல்லை. தலைவர்கள் உயர்தரவிடுதிகளில் தங்க பிறர் மண்டபங்களில் தங்குகிறார்கள். இரண்டு மது அருந்துவது இப்போது அனுமதிக்கப்படுகிறது. மூன்று பேசும் விஷயங்களில் கட்டுப்பாடில்லாமல் கூட்டங்கள் நெடுநேரம் அர்த்தமே இல்லாமல் நீள்கின்றன.
நான் சொன்னேன், ’எண்பதுகள் வரைக்கூட தொழிற்சங்கச்சூழலில் இந்நிலைமை இல்லை. நட்பார்ந்த உற்சாகமான கூடுகைகள் சாத்தியமாகி இருந்தன, சரிவு அதன் பின்னர்தான்’ ஊட்டி அரங்கில் போடப்பட்ட நிபந்தனைகள் மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகளைக் இல்லாமலாக்குவதற்கானவை மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டினேன். குறிப்பாக அனைவரும் அரங்குக்கு வெளியிலும் மது அருந்தக்கூடாது என்பதும் ஒரே இடத்தில் தங்க வேண்டும் என்பதும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை. ஒரே இடத்தில் தங்கும்போது சிலர் மது அருந்தினால் பிறருக்கு அது துன்பமாக அமையும். ஒரே இடத்தில் தங்கி ஒரே உணவை உண்ணாமல் சமத்துவம் சாத்தியமில்லை.
ஒரே இடத்தில் தங்கவேண்டுமென்ற நிபந்தனையை சிலர் ஏற்க இயலாது என்றார்கள். நான் அதில் சமரசம்செய்ய தயாராக இருக்கவில்லை. காரணம் அந்த தயக்கத்துக்குப் பின்னால் உள்ள மனநிலை அந்தஸ்து சம்பந்தமானது. ஒரு மூன்றுநாள் கூட பிறருக்குச் சமானமாகத் தங்க மனம் இடம்கொடுக்கவில்லை என்றால் அதன்பின்னர் அவர்களால் அப்படி என்ன இலக்கிய விவாதம் செய்துவிட முடியும்?
உண்மையில் இந்த சந்திப்பில் அரங்குகளை விடவும் வெளியே நிகழ்ந்த நட்புப்பரிமாற்றமே மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்று பலர் மீண்டும் மீண்டும் கூறினார்கள். அது நான் மிக நன்றாக அறிந்த ஒன்று, அதற்காகவே அந்த நிபந்தனை. பெரும்பாலான சமயங்களில் நாம் சகமனிதர்களை ஐயப்படுகிறோம். அவர்களிடம் நம்மை திறந்துகொள்ள தயங்குகிறோம். கவனமாக இருக்கிறோம். நம் லௌகீக வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொண்டது இது. அங்கே இது தேவையும் ஆகிறது.
ஆனால் அதையே நாம் இயல்பாக இத்தகைய கருத்துப்பரிமாற்றங்களில் செய்யும்போது உண்மையான மனப்பரிமாற்றத்துக்கு பெரும் தடையாக ஆகிறது. அந்நிலையில் எதிர்க்கருத்து கொண்டவர்கள் மேல் சட்டென்று கசப்பும் கோபமும் உருவாகக்கூடும். அதன் பின் நிகழ்வது விவாதம் அல்ல, அகங்காரப்போர் மட்டுமே. பல கூட்டங்களில் அதை மட்டுமே காண்கிறேன். ஒரே இடத்தில் சேர்ந்து படுக்கும்போது, சேர்ந்து உண்ணும்போது மெல்லமெல்ல அந்த இறுக்கம் தளர்கிறது. ஐயங்கள் அகல்கின்றன. அந்த நட்புச்சூழலில் மட்டுமே உண்மையான கருத்துப்பரிமாற்றம் நிகழும். ஊட்டியில் இந்த அரங்கிலும் என் கண்ணெதிரில் முதல்நாள் இருந்த சம்பிரதாயத்தன்மை விலகி இரண்டாம்நாள் நட்பும் உற்சாகமும் உருவாவதைக் கண்டேன். கருத்து எதிரிகள் மாறி மாறி கேலிகளை பரிமாறிக்கொள்வதைக் கண்டேன்.
இலக்கியம் என்ற அறிவியக்கத்தில் நம்பிக்கை கொண்டு அங்கே கூடிய அந்த ஐம்பதுபேருமே சராசரியானவர்கள் அல்ல. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் லௌகீக உலகம் இருக்கும். அங்கே நட்புகளும் உறவுகளும் இருக்கும். ஆனால் ஒரு சமான சிந்தனையாளனை அங்கே அவர்கள் காண முடியாது. சில நட்புகள் இருக்கலாம். ஆனால் தன்னைப்போன்ற ஐம்பதுபேரைக் காண நேர்வதும் அவர்களிடம் பேசி சிரித்து மூன்றுநாள் தங்க நேர்வதும் சாதாரண வாய்ப்பு அல்ல. ஊட்டிக்கு வந்த மிகப்பெரும்பாலானவர்கள் அதை என்னிடம் உணர்ச்சிகரமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
அனைத்துக்கும் மேலாக நாஞ்சில்நாடன்,தேவதேவன் போன்றவர்களுடன் உடனுறைந்து பழகி சிலநாட்களைச் செலவிட நேர்வது எளிய விஷயம் அல்ல. நம் நாட்டில் கோடிக்கணக்கான பேருக்கு அது ஒரு பொருட்டே அல்ல என நானும் அறிவேன், நான் சொல்வது இலக்கியம அறிந்த நுண்ணுணர்வுள்ள வாசகர்களைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை அவர்கள் நாம் வாழும் காலகட்டத்தின் மகத்தான மனிதர்கள். சென்ற இருபது வருடங்களில் நான் அவர்கள்டன் இருந்த ஒவ்வொரு கணமும் அற்புதமான கணமாகவே இருந்துள்ளது. என்னை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களின் நூல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அவர்களைப்போன்றவர்களிடம் பழகும் அனுபவம் முற்றிலும் வேறானது. அவர்களிடம் உள்ள பேரன்பும் நகைச்சுவையும் விவேகமும் வேறெங்கும் கிடைப்பன அல்ல. பெரியாரை துணைகோடல் என சான்றோர் சும்மா சொல்லவில்லை.
தேவதேவனும் நாஞ்சில்நாடனும் வேறு வேறு இயல்புகொண்டவர்கள். ஆனால் அவர்களின் ஆளுமை இலக்கியத்தின் நுட்பமான ஒரு புள்ளியில் சந்திக்கிறது. அதை பிரபஞ்ச தரிசனம் என்றே சொல்வேன். மானுட உணர்ச்சிகள் வழியாக நாஞ்சில்நாடனும் கவித்துவக் கணங்கள் வழியாக தேவதேவனும் அங்கே செல்கிறார்கள். உச்சியில் இருவரும் ஒன்றே. அறிவார்த்தமும் கவித்துவமும் நகைச்சுவையும் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுபவர்கள். கொஞ்சம் பிரக்ஞை உடையவர் என்றால் ஒருவர் தாங்கள் சமகாலத்து வரலாற்றுநாயகர்களின் முன்னால் நிற்பதை உணர்ந்துகொண்டிருக்க முடியும்.
இந்தக்கூடுகை வழியாக தன் பெரும்பித்துக்குள் அலையும் தேவதேவனுக்கு நாம் எதை அளிக்க முடியும்? தேவதேவனும் நாஞ்சில்நாடனும் நமக்கு அளிக்க வந்தவர்கள். அதற்காகவே அவர்கள் வந்து எவ்வித மனத்தடையும் இல்லாமல் அனைவருடனும் தங்கி உரையாடினார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்வதே இல்லை. அவர்கள் என் முன்னோடிகள். ஆகவே நான் கோருவதை எனக்கு அளிக்க கடமைப்பட்டவர்கள். உரிமையுடன் அவர்களை அழைத்தேன். எளிய வருமானம் கொண்ட தேவதேவன் அவர் செலவில்தான் வந்தார். அது அங்குவந்த வாசகர்களுக்கும் இளம் படைப்பாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை அங்குவந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றே விரும்பினேன். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது வாழ்நாள் அனுபவமாக அமைந்தது என்றார்கள்.
’தனக்கு ஒரு தனி அறை அளித்தால் வருகிறேன்’ என ஒரு நண்பர் எழுதியிருந்தார். அவர் ஒரு சிறு தொழிலதிபர். அங்கே வந்த அத்தனை பேரின் அத்தனை தனிப்பட்ட கோரிக்கைகளுக்கும் வசதிசெய்யப்பட்டது, ஏற்கனவே அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் நிபந்தனை விதித்த ஒருவரைக்கூட சேர்த்துக்கொள்ளவில்லை. வசதிப்படாது என்று சொல்லிவிட்டோம்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், வருவதாக இருந்தவர்கள் அத்தனைபேரையும் விட பலமடங்கு பெரிய செல்வப்பின்னணி கொண்டவர் சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] அவரளவுக்கு கல்வித்தகுதி கொண்ட எவரும் அந்த அரங்கில் பங்கு கொள்ளவில்லை. அவரளவுக்கு நவீன சிந்தனைகளை அறிந்த, அவரளவுக்கு இன்றைய உலகின் புதுச்சிந்தனையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட எவரும் அங்கே வரவில்லை, வருவதாகவும் இருக்கவில்லை. ஆனால் மூன்று நாட்களும் நிகழ்ச்சியில் அவர்தான் டீ போட்டு பரிமாறினார். குப்பைகளை அள்ளி கூட்டிப்பெருக்க கூட நின்றார். அனைத்து கழிப்பறைகளையும் அவரே கழுவினார். அனைவரும் தூங்கியபின் தூங்கி விழிப்பதற்குள் விழித்தார். நாளெல்லாம் சமையலறையில் இருந்தார். இந்தக்கூடுகை கருத்துக்களுக்காக மட்டும் அல்ல. ஆளுமைகளை அறிவதற்காகக்கூடத்தான். ஒரு மூன்றுநாளாவது இலக்கியத்தின்பொருட்டு கொஞ்சம் எளிமையை கடைப்பிடிக்க முயலாத ஒருவர் எப்படி எதைக் கற்றுக்கொள்ள போகிறார்?
ஊட்டி கூட்டம் குறித்த நிபந்தனைகள் எல்லாமே அந்த மனநிலை இல்லாதவர்களை தவிர்க்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவை மட்டுமே. அவ்வாறு அவர்களை தவிர்த்தமையால்தான் கூட்டம் இத்தகைய தீவிரமான படைப்பூக்கத்துடன் நிகழ முடிந்தது. அதை அங்கே வந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள். நிபந்தனைகளை ஏற்று ஊட்டிக்கூட்டத்துக்கு வருவதாகச் சொன்ன அத்தனைபேருமே அழைக்கப்பட்டிருந்தார்கள். எவருமே தவிர்க்கப்படவில்லை. அரசியல், மத, இலக்கிய தரப்புகள் எதுவும் கணக்கில் கொள்ளப்படவில்லை. 60 பேர் ஆனபின்புதான் ஒரு 12 பேரிடம் இடமில்லை என்று சொல்ல நேர்ந்தது.
வந்திருந்த சிலருக்கு நிகழ்ச்சிகள் கொஞ்சம் புரியாமல் இருந்ததாகச் சொன்னார்கள். அது இயல்பே. இலக்கியத்தில் ஏற்கனவே அறிமுகப்பயிற்சி உடையவர்களுக்காக நிகழ்ந்த அரங்குகள் இவை. முழுமையாகப் புரியாவிட்டாலும் தங்களுக்கு பெரிய திறப்பாக அமைந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் அரங்கும் உத்தேசித்தது.
நிகழ்ச்சி நான் நினைத்தை விட மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. அதற்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்த சபையினரையே நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். குறிப்பாக நாஞ்சில்நாடன் நடத்திய கம்பராமாயண அரங்கு என் இருபதாண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில் நான் பங்கெடுத்த இலக்கிய அரங்குகளில் மிகச்சிறந்த சிலவற்றில் ஒன்று. எப்படி எவர் சொன்னாலும் கம்பன் உயிருடன் எழுந்துவருவான். அது அவனது கவி வல்லமை. அத்துடன் நம் காலத்தின் பெரும் படைப்பாளி ஒருவருடைய உணர்ச்சிகரமான ஈடுபாடு இணைந்தபோது அந்த கணங்கள் உயர்தர உணர்வெழுச்சிகளால் ஒளிவிட்டன.
இரவுகளில் ராமச்சந்திர ஷர்மா பாடிய பாடல்கள் இச்சந்திப்பின் முக்கியமான பரவசமாக அமைந்தன. மரபிசைப்பாடல்கள். மரபிசை சாயல் கொண்ட திரைப்பாடல்கள். ஒருகட்டத்தில் இளையராஜா பாடல்களுக்கான அரங்காக அது மாறியது. ராஜாவின் அற்புதமான பாடல்களை நினைவுகூர்ந்து நினைவுகூர்ந்து ஓரிரு வரிகளாக தாவித்தாவிப் பாடிக்கொண்டே சென்ற அந்த குளிர்ந்த இரவு நினைவில் என்றும் வாழும்.
இந்த நிகழ்ச்சியில் என் பங்கு என்பது அனேகமாக ஒன்றும் இல்லை என்பதே உண்மை. என் ஊட்டி நண்பர் நிர்மால்யா கடந்த 14 வருடங்களாக நான் ஊட்டியில் நடத்தும் எல்லாகூட்டங்களையும் முழுமையாக அவரே பொறுப்பேற்று செய்துவருகிறார். இம்முறை அரங்கசாமியும் கிருஷ்ணனும் விஜயராகவனும் அவருக்கு துணைநின்றார்கள்.அவர்களுக்கு நன்றி சொல்லி அன்னியப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் என் வாழ்நாள் உறவுகள்
ஜடாயு கட்டுரை
சிறில் அலெக்ஸ் பதிவு http://cyrilalex.com/?p=544
http://picasaweb.google.co.in/sethupathi.arunachalam/Ooty2?authkey=Gv1sRgCM__36OLzYyr7gE#
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJmLaxman
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJMCyril