கல்பூர்கி, தாத்ரி, சாகித்ய அகாடமி

akademi

ஜெ

நீங்கள் அரசியல் கருத்துக்களைப்பேசுவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். பெரும்பாலும் பேசுவதுமில்லை. மோடி தெர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலிலும் சரி அதற்கு முன் த்ரீ ஜி ஊழல், கனிமொழி கைது போன்றவை பெரிதாகப்பேசப்பட்டபோதும் சரி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அவை விவாதங்களை தொடர்ச்சியாக உருவாக்கி உங்கள் பணிகளை சீர்குலைக்கும் என நினைக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் இந்த சாகித்ய அக்காதமி விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் விவகாரத்தில் மட்டும் ஏன் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அது கலாச்சார- இலக்கிய அரசியல் என்று சொல்லலாம். ஆனால் அதற்குள் அரசியல் உள்ளது. அந்த அரசியலுக்கு மட்டும் உங்கள் எதிர்வினையைச் சொல்லியாகவேண்டும் அல்லவா?

சரவணன்

எம்.டி 5
அன்புள்ள சரவணன்,

நான் அரசியல் கருத்துக்களை விவாதிப்பதை தவிர்க்கிறேன். ஏனென்றால் எங்கும் எப்போதும் அதுவே பேசப்படுகிறது. அதை மட்டுமே பேசும்,அதற்கு மட்டுமே எதிர்வினையாற்றும் ஒரு பெரிய வட்டம் உள்ளது. அவர்களுடன் உரையாடத்தொடங்கினால் பின்னர் வேறெதையுமே யோசிக்க, பேச முடியாது. அப்பட்டமான நேரடியான வெறுப்புக்குரலில் மட்டுமே பேசத்தெரிந்தவர்கள் அவர்கள். மாற்றுத்தரப்பை முட்டாள்தனம், அயோக்கியத்தனம் என்று மட்டுமே பார்க்கத்தெரிந்தவர்கள்.

இந்தியச்சூழலில் பொதுவாக அரசியல் எப்போதுமே இரு பெரும் தரப்புகள்தான். மூன்றாம் தரப்பு என்பதே கிடையாது. எப்போதுமே எல்லாம் எரிந்துகொண்டிருப்பதுபோன்ற ஒரு பிரமையை உருவாக்கி ‘அணைக்க வருகிறாயா? இல்லையென்றால் நீதான் கொளுத்தியவன்’ என்று கூச்சலிடுவது இவர்களின் வழக்கம். வருடம்தோறும் அப்படி இரு குவியங்களாக தங்களை தொகுத்துக்கொள்வார்கள் அரசியலாத்மாக்கள். எவர் எங்கிருப்பார் என அந்த தொகுப்புதான் தீர்மானிக்கும். அதற்கான நியாயங்களை அழகாக உருவாக்கி வைத்திருப்பார்கள். ‘தீ எரியிறப்ப சாக்கடையான்னு பாக்கமுடியுமா தோழர்? அள்ளி ஊத்தி அணைக்கவேண்டியதுதானே?” ஒருமுறையேனும் பாரதிய ஜனதாவுடன் குலவியவர்கள்தான் இங்குள்ள அத்தனை முற்போக்கினரும்.

தொலைக்காட்சி விவாதங்கள், செய்தித்தாள்கட்டுரைகள், இணையவிவாதங்கள், டீக்கடைகள் என பேசிப்பேசி ஏராளமான வாதங்களை இருதரப்பும் உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த அனைத்துத் தரப்புகளுடனும் எவரும் வாதிட்டு நிறைவடைய முடியாது. பேசிப்பேசி இரு தரப்புக்குமே தங்கள் வாதங்கள் முழுமையானவை என்று தோன்றியிருக்கும். ஆகவே விவாதங்களில் மிதமிஞ்சிய ஆவேசமும் கசப்பும் வெளிப்படும். அவமதிக்கப்படாமல் இவ்வகை விவாதங்களில் ஈடுபடுவது சாத்தியமே அல்ல. இரு தரப்புமே மிகத்தார்மீகமான மிம அவசியமான நிலைபாட்டை தாங்கள் எடுத்திருப்பதாக நம்புவதனால் அவமதிப்பது என்பது தவிர்க்கமுடியாதது என்றும் தங்கள் தார்மீக ஆவேசத்தின் விளைவு அது என்றும் நம்புகிறார்கள். ஆகவே வேறுவழி இல்லை. நம் அரசியல் விவாதங்கள் இணையத்தில் அல்ல எங்கு நடந்தாலும் பேசாமல் கேட்டுவிட்டு ஒதுங்கிவிடுவதே மேல்.

இந்த அளவுக்கு இல்லை என்றாலும் சினிமா விவாதங்களும் வீண்பேச்சுதான். சினிமாவை விவாதிப்பதற்குத் தேவையான மேலதிக வாசிப்போ சமூகப்புரிதலோ இல்லாத நிலையில் சினிமாவிவாதம் என்பது சினிமாவில் தொடங்கி சினிமாவிலேயே முடிகிறது. அதுவும் வீண்தான். ஆகவே சினிமாவிவாதங்களையும் தவிர்க்கிறேன்.

1

இலக்கியவிவாதங்களிலும் இதெல்லாம் ஓரளவுக்கு உண்டு என்றாலும் ஒட்டுமொத்த பெறுபயனாக நான் நினைப்பது இலக்கியத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை அது நினைவூட்டுகிறது, இலக்கியத்தின் விவாதநீட்சியை நிலைநிறுத்துகிறது, அடிப்படை இலக்கியக் கொள்கைகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது என்பதைத்தான். ஆகவே எல்லா இலக்கியவிவாதங்களிலும் நான் அவ்விஷயம் சார்ந்த வரலாற்றை, இதுவரை நிகழ்ந்த உரையாடல்களை, அடிப்படையான கொள்கைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

பண்பாட்டு விவாதம் என்பதனால் மட்டுமே கல்பூர்கி கொலை முதல் மாட்டிறைச்சித்தடை, சாகித்ய அக்காதமி விருது மறுப்பு வரை எதிர்வினையாற்றுகிறேன். அதிலும் ஏற்பு மறுப்பு அல்ல என்னுடைய தரப்பு. அதன் பின்புலம் என்ன என்பதையே முதன்மையாகச் சொல்கிறேன். இத்தகைய விவாதங்களில் இருந்து வாசகன் பெறும் மதிப்பு என்பது அதன் வழியாக நினைவுறுத்தப்படும் வரலாற்று, பண்பாட்டுப்பின்புலமும் கொள்கைகளும்தான். ஆகவேதான் இந்தவகையான விவாதங்கள் கொந்தளித்து ஓயும்போது இதுசார்ந்து எழுதிக்குவிக்கப்பட்டவை பெரும்பாலும் பொருளிழந்து பழைய குறிப்புகள் ஆகின்றன. என் கட்டுரைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன.

கல்பூர்கி படுகொலை, தாத்ரி படுகொலை ஆகியவற்றை இணைத்து ஓர் அரசியல் அலை கிளப்பப் பட்டுள்ளது. அது பண்பாட்டுத்தளத்தில் நிகழ்வதனால் அதன் உள்ளடக்கம், அதன் இரு தரப்புகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு நான் கருத்துச் சொல்கிறேன். ஏதேனும் ஒரு தரப்பை எடுத்து கூச்சலிடுவதல்ல என் வேலை. ஆகவே இரு தரப்பும் என்னை வசைபாடுகிறார்கள். அரவிந்தன் நீலகண்டனும் யமுனா ராஜேந்திரனும் கிட்டத்தட்ட ஒரே குரலில் என்னை வசைபாடுவதைக் காணலாம். என் தரப்பு சீரானது என்னும் உறுதியை எனக்கு அது அளிக்கிறது.

என் எண்ணங்களை தொகுத்து இவ்வாறு சொல்கிறேன். கல்பூர்கி கொலை, தாத்ரி கொலை இரண்டுமே வன்மையாகக் கண்டிக்கத்தக்க நிகழ்வுகள். இந்தியா எதன் அடையாளமோ அதற்கு எதிரானவை. அவநம்பிக்கைகளை உருவாக்குபவை ஆகையால் முளையிலேயே கிள்ளப்படவேண்டிய நச்சுக்குருத்துக்கள்.

இவ்விரு நிகழ்வுகளுமே காங்கிரஸும் சமாஜ்வாதியும் ஆளும் மாநிலங்களில் நடந்தவை. ஒரு குற்றநிகழ்வாக கண்டு நேரடியான கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுகளுக்கு உள்ளது. அவை அதைச் செய்துள்ளன. அவை அரசால் பொருட்படுத்தாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மை அல்ல. கல்பூர்கி கொலையில் இன்னமும்கூட தெளிவான சான்றுகள் சிக்கவில்லை என்றாலும் மாநில அரசின் காவல்துறை தீவிரமாகவே செயல்படுகிறது. காங்கிரஸ் அரசு என்பதனால் இன்றுவரை சரியாகக் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றாலும் கர்நாடக அரசு மீதோ காவல்துறைமீதோ நம் எழுத்தாளர்கள் குற்றம்சாட்டவில்லை.

இதில் பாரதிய ஜனதாக்கட்சியின் பிழைகள் என்ன? கல்பூர்கி கொலையை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். கல்பூர்கிக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள உதிரி சாதிய -இந்துத்துவக் குழுக்களின் வன்முறைப்பேச்சு பாரதிய ஜனதா தரப்பின் குரலாக தேசிய ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டது.அதையொட்டியே எதிர்ப்புகள் எழுகின்றன

அப்படியென்றால் அந்த உதிரிக்குழுக்களை மிகத்தீவிரமாக பாரதிய ஜனதா கண்டித்திருக்கவேண்டும், அவர்களை அன்னியப்படுத்தியிருக்கவேண்டும், அதைச்செய்யவில்லை. இணையத்தில் எழுதும் உதிரிகளின் பொறுப்பற்ற வெறுப்புக்குரல்களும் பாரதிய ஜனதாவின் குரலாக ஆகிவிட்டன. பாரதிய ஜனதா தேசிய அளவில் வெளிப்படையாக தன் நிலைப்பாட்டை பதிவுசெய்து அவற்றுக்கு முடிவுகட்டியிருக்கவேண்டும். அதைச்செய்யதவரை அவை பாரதியஜனதாவின் தரப்பே.

மிரட்டல்களை விடுத்த இந்துத்துவ உதிரிகளை வெறும் கிரிமினல்களாகக் கண்டு கைதுசெய்து குற்றவியல் நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்திருக்கவேண்டும். அவர்களும் அதைச்செய்யவில்லை. அவர்கள் காங்கிரஸ் அரசு என்பதனால் அது எவருக்கும் தவறாகத் தெரியவுமில்லை.

தாத்ரி படுகொலையில் பாரதிய ஜனதாக் கட்சி தெளிவான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. அதை மழுப்பும் விதமாக கருத்துச்சொன்ன அதன் அமைச்சர்கள் வெளிப்படையாகக் கண்டிக்கப்படவில்லை. ஆகவே அதை பாரதிய ஜனதா ஆதரிப்பது போல அல்லது மௌனம் சாதிப்பதாக தோன்றுகிறது.

g
இவ்விரு நிகழ்வுகளும் நாட்டில் அன்றாடம் நிகழும் சிறிய குற்றச்செயல்கள் அல்ல. பல்வேறுபட்ட இனக்குழுக்களும் மதக்குழுக்களும் வாழும் இந்தியா போன்றநாட்டில் , அரசியல்வாதிகள் அவநம்பிக்கைகளைப் பயிரிடுவது நடந்துகொண்டிருக்கும்போது, இத்தகைய செயல்கள் எப்போதும் நிகழ்பவைதான். ஆனால் சில நிகழ்வுகள் குறியீட்டுமுக்கியத்துவம் கொண்டுவிடுகின்றன. அவை தேசமும் உலகமும் கவனிக்கக்கூடியவை ஆகிவிடுகின்றன. அவற்றில் தெளிவான திட்டவட்டமான நிலைபாடுகளை அரசும் ஆட்சியாளர்களும் முன்வைத்தாகவேண்டும். அதை மோடி செய்யவில்லை. ஆகவேதான் இந்த அரசியல் எதிர்ப்பு நீடிக்கிறது. அதை அவர் செய்யவேண்டும். அதற்காக இந்த எதிர்ப்பு பயன்படுமென்றால் நான் இதை வரவேற்கிறேன்.

வடஇந்தியா மாட்டிறைச்சி விஷயத்தில் ஒற்றைத்தரப்பாகவே உள்ளது. ஆகவே கடுமையாகக் கண்டிக்க பீகார் தேர்தல் சூழலில் காங்கிரஸும் லல்லுவும்கூட தயங்கிக்கொண்டிருக்கையில் பாரதிய ஜனதாவின் மௌனம் புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்களின் தேர்தலரசியலின் அடித்தளத்தை அவர்கள் எளிதில் இழக்கமாட்டார்கள், அவர்களும் அரசியல்வாதிகள் மட்டுமே

சாதாரணமாகக் கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரியும். பாரதிய ஜனதாவின் தலைமைக்கும் அதன் வேர்ப்பரவலாக அமைந்துள்ள இந்துத்துவச் சிற்றமைப்புகளுக்கும் இடையே தெளிவான ஒரு முரண்பாடு உருவாகியிருக்கிறது. பாரதிய ஜனதா ஒரு தெளிவான முதலாளித்துவ பொருளியலை, திட்டவட்டமான நிர்வாகத்தை உருவாக்க முயல்கிறது. மாறாக இந்துத்துவக் குழுக்கள் அதிகாரத்தைச் சுவைக்க விரும்புகின்றன. தங்கள் சொந்த திட்டங்களைச் செயல்படுத்த விரும்புகின்றன .நாங்களும் உள்ளோம் என காட்டுகின்றன. முக்கியமாக, தலைமைக்கு

சென்றகாலங்களில் சத்தம்போட்டுக்கொண்டிருந்த அசோக் சிங்கால், வினய் கட்டியார், தொகாடியா போன்றவர்களின் குரல்கள் அடக்கப்பட்டுவிட்டன என்பதை காணலாம். அதேசமயம் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துத்துவத் தீவிரக்குரல்களை தலைமை விட்டுவைத்துள்ளது, அல்லது நேரம்பார்த்திருக்கிறது. அதன் அரசியல் வெளிப்படையானது.

பாரதிய ஜனதாவின் அரசு சார்ந்த ‘அஜண்டா’ அல்ல இந்தக்குழுகக்ளுடையது. அவை அரசின் செயல்திட்டத்துக்கு எதிராகவே செயல்படுகின்றன. ஆனால் கட்சி தேர்தல்களில் இவற்றை நம்பியிருக்கவும் வேண்டியிருக்கிறது. எந்தப்பெரிய அமைப்பும் இத்தகைய முரணியக்கங்கள் வழியாகவே செயல்படும். இந்த முரணியக்கமே இன்றைய அரசின் செயல்பாடாக உள்ளது. இதை ஒற்றைப்படையாக ஆக்கி இந்த இந்துக்குழுக்களே பாரதிய ஜனதா என்று காட்டுவது அதன் எதிர்ப்பாளர்களுக்கு வசதியான அரசியல் உத்தி. அவர்கள் அதைச்செய்கிறார்கள். அதில் பிழையும் இல்லை. எதிரியின் பலவீனமான இடமே எப்போதும் இலக்காக ஆக்கப்படும். ;

எழுத்தாளர்களைத் தாக்குவதற்கு எதிராக எழுத்தாளர்கள் குரல்கொடுப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் இவ்வெதிர்ப்பால் என்ன பயன்? ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. ஏன்? இந்த எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் சென்ற தேர்தலில் மோடிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பொதுக்கோரிக்கை விடுத்தார்கள். அப்போதே அவர்களின் நடுநிலைமை அழிந்துவிட்டது. தனிமனிதர்களாக அவர்கள் அரசியலில் ஈடுபடுவதைப்போன்றதல்ல அது. அது எழுத்தாளர்களாக தங்களை முன்வைத்து அவர்கள் செய்தது. அப்போதே அவர்கள் கட்சி –தேர்தல் அரசியலில் ஒரு தரப்பாக ஆகிவிட்டனர். மோடியோ பாரதியஜனதாவோ அவர்களை எதிர்க்கட்சியாக மட்டுமே பார்க்கமுடியும். சமன்செய்து சீர்தூக்கிச் சொல்லும் சான்றோராக பேசும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர்.

இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில் மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல்கும்பல்தான் இது. சென்ற ஆட்சிக்காலத்தில் அவர்களை அண்டிவாழ்ந்து லாபங்களை அடைந்தவர்கள், இப்போது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் என்றே பாரதிய ஜனதா இதை நோக்குகிறது. நீங்கள் அரசியல்களத்தில் நுழைந்துவிட்டீர்கள் என்றால் அரசியல்ரீதியாகவே கையாளப்படுவீர்கள்.

கல்பூர்கி கொலை பற்றியும் மாட்டிறைச்சிக்க்காக நிகழ்ந்த கொலை பற்றியும் நான் என் வன்மையான எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறேன். அவ்வெதிர்ப்பையும் அதற்கான வசைகளையும் நீங்கள் இணையத்தில் வாசிக்கலாம்.ஆனால் இந்த அரசியல் எதிர்ப்பை ஒட்டி இலக்கியவாதிகளை அவமதித்தும் வசைபாடியும் எழுதும் அரசியல் உதிரிகள்தான் எரிச்சலைக் கிளப்புகிறார்கள்.

ஒரு வருடம் முன்பு முந்தைய காங்கிரஸ் அரசில் மிக உயர்பதவியில் இருந்த ஒருவரைச் சந்தித்தேன். 2009ல் ஈழப்படுகொலை நிகழ்ந்தபோது ஒரு தமிழக அமைச்சராவது ராஜினாமா செய்யலாம், ஒரு சில எம்பிகளாவது பதவிதுறக்கலாம் என காங்கிரஸ்காரர்களே விரும்பினார்கள் என்றும் அவரே அதை அவர் திமுகவிடம் பேசினார் என்றும் சொன்னார்.

ஏனென்றால் காங்கிரஸுக்குள் இருந்து தமிழர்கள்மீதான தாக்குதலை ஒட்டிய கடுமையான அழுத்தத்தை அவர்கள் தலைமைக்கு அளித்துக்கொண்டிருந்தனர். தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பும் விரக்தியும் உருவாகிறது, தேசஒற்றுமைக்கு ஊறு விளையலாம், காங்கிரசே காணாமல்போய்விடலாம் என்றும் வாதாடினார்கள். அப்படித்தான் அவர்கள் சொல்லமுடியும். ஆனால் தலைமை தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை என்று சுட்டிக்காட்டியது. தமிழகத்தின் தனியுரிமைபற்றி அதிதீவிரமாகப்பேசும் பிராந்தியக்கட்சிகள்கூட மௌனமாக உள்ளனவே என்றது.

திமுகவிடம் பலமுறை தனிப்பட்ட முறையில் மன்றாடியதாகவும் தலைமை சொல்லவேண்டும் என எம்பிக்கள் சொன்னார்கள் என்றும் தலைமை அவ்விஷயத்தைப் பேசவே விரும்பவில்லை என்றும் அநத காங்கிரஸ் முக்கியஸ்தர் சொல்லி வருந்தினார். இங்கே ஒரு பஞ்சாயத்துத்தலைவர் கூட ராஜினாமா செய்யவில்லை. உண்மையில் ராஜினாமா மூலம் எதிர்ப்பைத்தெரிவிப்பதற்கான மிகச்சரியான இடம் அதுதான்

நாம் அனைவரும் அறிந்த வரலாறு அது. நூற்றாண்டுக்காலம் நினைவில் நிற்கும் அத்தகைய வரலாற்றுத் தருணத்தில்கூட பதவியை துறக்கும் அடையாளச்செயலைச் செய்யத் தயங்கிய திமுக கட்சியின் மேடைப்பிரச்சாரகர்கள், அதையொட்டி ஒரு வார்த்தை சொல்லத் தயங்குபவர்கள், அந்த மௌனத்திற்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் இன்று சாகித்ய அக்காதமி விருதைத் துறக்காத எழுத்தாளர்கள் மானங்கெட்டவர்கள் என்று எழுதுகிறார்கள். இந்த அரசியல்வேடம் மிகமிக அருவருப்பானது.

அதாவது அரசியல்வாதிகள் தங்கள் லாபங்களுக்காக அவ்வப்போது வேடங்களை மாற்றிக்கொள்ளலாம், அவர்கள் எதையும் இழக்கவேண்டியதில்லை. அதற்கான அனைத்து தர்க்கங்களையும் உருவாக்கி அளிப்பார்கள் இந்த பிரச்சாரகர்கள். ஆனால் விருதுபெறும் இலக்கியவாதிகள்தான் இங்கே ஊழல்வாதிகள், அயோக்கியர்கள்.

அரசியல்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் தொடர்ச்சியாக மாறிமாறிப் போராட்டங்களை உருவாக்கிக்கொண்டேதான் இருக்கும். எப்போதும் அலைகளை உருவாக்கி நிலைநிறுத்தும். அதையொட்டி அனைத்து தளங்களிலும் பேச்சு நிகழும்படி பார்த்துக்கொள்ளும். இந்தச்செயல்திட்டத்தின் ஒருபகுதியாக நின்றிருக்க திட்டவட்டமாக மறுப்பவனே எழுத்தாளனாக இருக்கமுடியும். தன்னுடைய சொந்தச் செயல்திட்டத்தை அவன் முன்னெடுக்கவேண்டும். என் நோக்கில் ஒரு கூட்டு மனுவில் கையெழுத்திடுவதேகூட தன் சுயத்திற்கு இழுக்கு என நம்புபவர்களே பெரும்பாலான எழுத்தாளர்கள்.

கூட்டம் கூடுவது, கோஷமிடுவது, சேர்ந்து செயல்படுவது, எல்லாரும் செய்வதற்கக ஒன்றைச்செய்வது, பொதுவான குரல்களை தானும் எதிரொலிப்பது போன்றவை எழுத்தாளனுக்குரிய செயல்கள் அல்ல என்பது என் எண்ணம். ‘நான் வேறு’ என அவன் எண்ணாத வரை அவனுக்குத் தனித்தன்மை வரப்போவதில்லை. எவரும் நோக்காத ஒன்றை நோக்கும் திறனே எழுத்தாளனை உருவாக்குகிறது. அரசியல்வாதியின் பின்னால் கொடிதூக்கிப்போக எழுத்தாளன் துணியும்கணம் அவன் சாகிறான். பிழைகளைச் சொல்லும்போது, முட்டாள்தனமாக இருக்கும்போது, ஏன் குற்றவாளியாக இருக்கும்போது கூட அவன் கலை அவனைக் கைவிடாது. ஊர்வலத்தில் ஒருவனாக ஆகும்போது அவனும் பிறிதொருவனாக ஆகிவிடுகிறான்.

கல்பூர்கி கொலைக்காக, தாத்ரி படுகொலைக்காக குரலெழுப்பும் எழுத்தாளர்களின் தரப்பை நான் மறுக்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் அரசியல் எழுத்தாளர்கள். என்றும் அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள். சாரா ஜோசஃபோ சச்சிதானந்தனோ அரசியலுக்கு அப்பால் சென்றவர்களே அல்ல. அரசியல் எழுத்து என்பது இலக்கியத்தின் ஒரு வகை அவ்வளவுதான்

எம்.டி.வாசுதேவன் நாயரோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, யு.ஏ.காதரோ, புனத்தில் குஞ்ஞப்துல்லாவோ எம்.முகுந்தனோ எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். சச்சிதானந்தனைச் சுட்டிக்காட்டி எம்.டி.வாசுதேவன் நாயரை எவரும் பிழைப்புவாதி என அங்கே வசைபாடவுமில்லை. நான் சொல்லவிழைவது அதை மட்டுமே.

முந்தைய கட்டுரைபுதியவிழிகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32