விவிலியம், புதிய மொழியாக்கம்

இந்திய ஞானமரபை பொறுத்தவரை பைபிளின் மொழியாக்கம் ஒரு புதிய பாய்ச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். பைபிள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது ஒரு செறிவான, தூய மொழியாக்கம் என்ற நோக்குடன் செய்யப்படவில்லை. மாறாக எளிய, அடித்தட்டு மக்களுக்கும் அம்மொழி புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் ஒரு மதத்தின் ஆதார நூல் கல்வியறிவில்லா ஒருவரே நேரிடையாக வாசித்துப் பொருள்கொள்ளும்படி வெளிவந்தது அதுவே முதல்முறை.

அந்தக்கருத்து மார்ட்டின் லூதர் கிங்-கின் மொழியாக்கக் கொள்கையை ஒட்டியது. அவர் தன்னுடைய பைபிள் மொழியாக்கம் ‘சந்தை மொழி’யில் இருந்தாகவேண்டும் என்று எண்ணினார். ஏனென்றால் சந்தைகளில்தான் பைபிள் அதிகமும் பிரச்சாரம் செய்யப்பபட்டது. ஆரம்பகால தமிழகத்துக் கிறித்தவச் செய்தியாளர்கள் பெரும்பாலும் டச்சு மிஷனைச் சேர்ந்தவர்கள். அவர்களில் அதிகமானோர் ஜெர்மனி, இத்தாலி தேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் மார்ட்டின் லூதர் கிங் அழுத்தமான பாதிப்பைச் செலுத்தினார்.

உதாரணமாக, ஆரம்பகால கிறித்தவச் செய்தியாளர்களில் முக்கியமானவரான இரேனியஸ் மார்ட்டின் லூதர் கிங்கை மேற்கோள் காட்டி பைபிளை வரிக்கு வரி மொழியாக்கம்செய்ய வேண்டிய தேவைகூட இல்லை என்று சொல்லி மிக எளிய பேச்சுவழக்கு பைபிள் மொழியாக்கம் ஒன்றைச் செய்திருக்கிறார். இவரது கல்லறை திருநெல்வேலியில் உள்ளது. அந்தத் தெருவைப்பற்றி ‘ரெயினீஸ் அய்யர் தெரு’ என்று வண்ணநிலவன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்

பைபிள் மொழியாக்கங்கள் பல உண்டு. அனைத்திலுமே இந்த அடித்தட்டு மொழி என்ற கோட்பாடு செயல்பட்டுள்ளது. இலங்கையில் செய்யப்பட்ட மொழியாக்கமே இன்றுள்ள பரவலான பைபிள் வடிவமாக உள்ளது. இதன் மொழியாக்கத்தில் ஆறுமுக நாவலரும் பங்கேற்றுள்ளார். தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்ட வரலாற்றை சரோஜினி பாக்கியமுத்து எழுதிய ‘விவிலியமும் தமிழும்’ என்ற நூலில் கானலாம்.

பழைய பைபிளின் நடை பேச்சுவழக்கில் அமைந்திருந்தபோதிலும்கூட நூற்றாண்டு தாண்டிய போது அது பழைமையும் அன்னியத்தன்மையும் கொண்டதாக மாறியது. இதற்கான காரணம்  தமிழில் உருவான மொழிமறுமலர்ச்சியே. பைபிள் மொழியக்கம் செய்யப்பட்ட காலம் தமிழில் உரைநடை உருவாகி வந்துகொண்டிருந்த தொடக்க கட்டம். சொற்றொடர் அமைப்புகள் செய்யுளில் இருந்து முழுக்க விலகாத தன்மையுடன் இருந்தன. உரைநடைக்கான தனி இலக்கணம்கூட உருவாகவில்லை. அவை படிப்படியாக உருவாவதற்கு செய்தி மொழியாக்கங்களும் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், ஆறுமுக நாவலர் போன்றவர்களின் முயற்சிகள் உதவின.

எந்த ஒரு மொழியிலும் முன்னகர்வு என்பது தீவிரமான இலக்கியப்படைப்பாளிகளினாலேயே நிகழமுடியும். தமிழைப்பொறுத்தவரை பாரதியே நவீன உரைநடையின் திருப்புமுனைப்புள்ளி.  நவீன உரைநடை உருவாவதற்கான மூன்று அடிப்படைகளில் பாரதி முன்னோடியாக வழிகாட்டினார். ஒன்று, படைப்பூக்கத்துடன் புதிய வகை சொற்றொடர்களை உருவாக்குதல். இரண்டு, புதிய கலைச்சொற்களை தமிழில் உருவாக்குதல் மூன்று, செய்தி,சட்டம்,அரசியல் எல்லா துறைகளுக்கும் மொழியை பயன்படுத்த முனைதல்.அதன்பிறகுதான் நவீன உரைநடை உருவாகி இன்றுள்ள வளர்ச்சியை அடைந்தது.

பைபிள் அக்கால மக்கள் மொழியில் அமைந்தது. அக்கால பண்டித மொழி மட்டுமல்ல மக்கள்மொழியும் சம்ஸ்கிருதம் மேலோங்கியதாகவே இருந்தது. பல சம்ஸ்கிருதச் சொற்கள் ஒலித்திரிபும் மொழித்திரிபும் கொண்டு புழக்கத்தில் இருந்தன. இப்போதும் பிரபலமான பைபிள் அந்த மொழியில்தான் உள்ளது. அக்காலத்தைய ‘மக்களிலக்கிய’மான   மதன காமராஜன் கதை, பட்டிவிக்ரமார்க்கன் கதை, வினோத ரஸ மஞ்சரி போன்றவையும் அதே மொழியில்தான் உள்ளன. ஆனால் அவையெல்லாம் இப்போது வழக்கொழிந்துவிட்டன. அக்கால மொழியில் இன்றும் புழக்கத்திலிருக்கும் ரே நூல் பைபிளே. ஆகவே அந்த மொழி பைபிள் மொழி என்றே சிலரால் நம்பப்படுகிறது. அந்தப் பழமையை ஒருவகைக் கவற்சியாகக் காண்பவர்கள் உண்டு.

சாதாரணக் கிறித்தவர்களைப் பொறுத்தவரை அந்த மொழி பைபிளுக்கே உரிய தனிமொழி, ஆண்டவனின் மொழி. அது மொழியாக்கம்தான்  என்ற எண்ணம்கூட சாதாரண கிறித்தவர்களிடம் இல்லை. அதன் விநோதமான சொல்லாட்சிகள் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகத்தன்மையுடன் ஒலிக்கின்றன. உதாரணமாக, ஆணை என்ற சொல்லானது அந்த பைபிளில் கல்பனை என்றே வரும். வாக்குறுதி என்பது வாக்குதத்தம் ஆக இருக்கும்.

ஆனால் இப்படியே சென்றால் காலப்போக்கில் பைபிள் சாதாரணமாக வாசிக்க முடியாத ஒன்றாக, பைபிள் பண்டிதர்களால் மட்டுமே பொருள்புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக ஆகிவிடும் என்ற எண்ணம் பரவலாக உருவாகியது. இப்போதே முப்பது வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் பைபிளை புரிந்துக்கொள்வது கடினமாக இருக்கிறது ‘உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்ற வசனத்தில் கனம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று ஓர் இளம் கிறித்தவ நண்பரிடம் கேட்டேன். பெற்றோரின் அழுத்தத்துக்கு பணிந்து நடக்கவேண்டும் என்று பொருள் சொன்னார்.

ஆகவே பைபிளுக்கு மீண்டும் ஒரு மொழியாக்கம் தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. விவிலிய சங்கங்களின் கூட்டமைப்பு [United Bible Societies] மற்றும் வத்திக்கான் கிறித்தவ ஒன்றிப்புச் செயலகமும் [ Vatican Secretariat of Christian unity ] இணைந்து 1968ல் ஒரு பொது பைபிள் தேவை என உணர்ந்து ஓர் கொள்கை முடிவை வெளியிட்டன. அதன் அடிபப்டையில் 1972ல் தமிழில் ஒரு பொதுவான புதிய பைபிள் மொழிபெயர்ப்புப்பணி தொடங்கியது.

1995ல் இந்த பைபிளின் முதல் பதிப்பு வெளியாகி இதுவரை இருபது பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. சென்ற இருபது வருடக்காலத்தில் தமிழில் நிகழ்ந்த பிரம்மாண்டமான தமிழ்ச்சாதனைகளில் ஒன்று என்று இந்த மொழியாக்கத்தை ஐயமில்லாது சொல்லலாம். அனைத்துத் தரப்பினரும் ஒரு பேரிலக்கியத்தைப் படிக்கும் மன எழுச்சியுடன் வாசிக்கத்தக்க அற்புதமான நூல் இது. தமிழ் மொழியின் அழகும் நுட்பங்களும் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நூலில். அத்துடன் இது பைபிள் சார்ந்த விரிவான ஆய்வின் வெளிப்பாடும்கூட.

மொழியாக்கத்துக்கு மேற்கொண்ட சில அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி நூல்முன்னுரை குறிப்பிடுகிறது. ஒன்று, இது வரையிலான மொழியாக்கங்கள் கிரேக்க ஆங்கில எபிரேய மொழிகளில் உள்ள பைபிள்களில் இருந்து மாறி மாறி மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தன. இந்நூலில் பழைய ஏற்பாடு எபிரேய பாடமான பிபிலியா எபிராயிக்கா நூலையும் புதிய ஏற்பாடு விவிலிய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட கிரேக்க பாடத்தையும் மூலநூலாகக் கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவான பாடவேறுபாட்டுக் குறிப்புகளும் கொடுக்கபப்ட்டுள்ளன.

இரண்டு, இந்நூலின் மொழி திசைச்சொற்களையும் கடினமான சொற்களையும் கலப்புச் சொற்களையும் தவிர்த்து இயல்பான எளிய தூய தமிழில் ஆக்கப்பட்டிருக்கிறது. கலைச்சொற்களும் பெயர் உச்சரிப்புகளும் மூலபாடங்களை ஒட்டி, அதற்கென அமைக்கபப்ட்ட நிபுணட்குழுவினரின் ஆய்வுக்குப் பின்னர், உருவாக்கபப்ட்டிருக்கின்றன

மூன்றாவதாக, முந்தைய மொழியாக்கங்களில் உள்ள பல சொல்லாட்சிகள் இன்றுள்ள பொதுவான நாகரீகமுறைகளுக்கு பொருந்தாமல் இருப்பதனால் அவை மாற்றபட்டுள்ளன. உதாரணமாக குருடன் என்ற சொல்லாட்சி பார்வையற்றோர் என்று மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான கூற்றுக்கள் ஆண்களை முன்னிலைப்படுத்தியவையாக இருந்தவை மாற்றப்பட்டு இருபாலருக்கும் உரித்தானவையாக ஆக்கப்பட்டுள்ளன. தமிழில் உள்ள சிறப்பியல்பான மரியாதைப் பன்மை பெரும்பாலான மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறைத்திட்டத்துக்கு எதிராவவர்காளைக் குறிக்கவும், பழித்துரைக்கபப்டும்போதும், மிகநெருக்கமானவர்களைச் சொல்லும்போதும் மட்டுமே ஒருமைவிகுதி உள்ளது.

இந்த பைபிள் இவ்வாறு ஆரம்பமாகிறது ‘தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபோது மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின்மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரள்மீது கடவுளின் ஆவி அசைந்தாடிக்கொண்டிருந்தது. அப்போது கடவுள் ஒளி தோன்றுக என்றார். ஒளி தோன்றிற்று’

ஆதியாகமம் என்று முதலில் அழைக்கப்பட்ட முதல் அத்தியாயம் இம்மொழியாக்கத்தில் ‘தொடக்கநூல்’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல யாத்திராகமம் ‘விடுதலைப்பயணம்’ என்றும் எண்ணாகமம் ‘எண்ணிக்கை’ என்றும் உபாகமம் ‘இணைச்சட்டம்’ என்றும் மொழியாகம் செய்யபப்ட்டுள்ளது

கிறித்தவர்களின் முக்கியமான சொல்லான பரலோகராஜ்யம் என்பது ‘விண்ணரசு’ என்று மொழியாக்கம்செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மொழிவுகள் மாற்றமடைந்துள்ளன. ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடம் வாருங்கள்’ என்ற மொழிவு ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று ஆகியிருக்கிறது.

பிரசங்கம் என்பது சொற்பொழிவு அல்லது பொழிவு ஆக மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளது. நற்செய்தி[சுவிசேஷம்] நிலைவாழ்வு[, மறைநூல், முன்னறிவிப்பு [தீர்க்கதரிசனம்] போன்ற ஏராளமான தமிழ்ச்சொற்கள் பயின்று வருகின்றன. ஆனால் சவால், சபித்தல் போன்ற பிறமொழிச்சொற்களும் சில இடங்களில் உள்ளன. அவை அடுத்த பதிப்புகளில் மாற்றப்படக்கூடும்.

இந்நூலின் முக்கியமான இன்னொரு சிறப்புகூறு, இது ஓர் ஆய்வுநூலாகவும் உள்ளது என்பதே. இதில் உள்ள முன்குறிப்புகளும் ஆய்வுக்குறிப்புகளும் பைபிளை ஆண்டவனின் நேரடி வார்த்தை என்று கண்மூடித்தனமாக நம்புகிறவர்களுக்கு சீற்றம் கொடுப்பவையாக உள்ளன. உதாரணமாக, மத்தேயும் எழுதிய நற்செய்திக்கான முன்னுரையில் ‘கிரேக்க மொழிபேசும் யூதர்கள் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறிஸ்தவர்கள் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சி அடைந்து இருந்தனர். இச்சிக்கல்களுக்கு தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது’ என்ற கூற்று ஒரு மரபான கிறித்தவரைக்கொந்தளிக்க வைத்ததைக் கண்டேன்.

எல்லா கிறித்தவ சபைகளில் இருந்தும் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மொழியாக்கம் இது என்றாலும் இப்போது கத்தோலிக்கர்களில் ஒரு சாரார் அன்றி பிறர் இந்த பைபிளை ஏற்றுக்கொள்வதாகத்தெரியவில்லை. குறிப்பாக தென்னிந்தியத் திருச்சபையினர் இந்நூலை முழுவேகத்துடன் நிராகரிக்கிறார்கள். கடவுளின் சொற்கள் மாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். பழகிப்போன மொழியை விட்டு நீங்கமுடியாத சிக்கலே அவர்களிடம் உள்ளது என்பதே உண்மையாகும்.

ஆனால் இந்நூல் காலப்போக்கில் தன் இடத்தைக் கண்டுகொள்ளும் என்றே தோன்றுகிறது. தொன்மையான செவ்வியல் நூல்களுக்குரிய எளிமையான கவித்துவம் இந்த மொழியாக்கத்திலேயே சிறப்பாக வெளிவந்திருக்கிறது

கடலின் ஊற்றுவரை
நீ போனதுண்டோ?
ஆழியின் அடியில்
நீ உலவினதுண்டோ?
சாவின் வாயில்கள்
உனக்குக் காட்டப்பட்டனவோ?
இருள் உலகின் கதவுகளைக்
கண்டதுண்டோ நீ?
அவனியின் நிலப்பரப்பை
நீ ஆய்ந்தறிந்ததுண்டோ?
அறிவிப்பாய் அதிலுள்ள
அனைத்தையும் அறிந்திருந்தால்!

ஒளி உறைவிடத்துக்கு
வழி எதுவோ?
இருள் இருக்கும்
இருப்பிடம் எங்கேயோ?
அதன் எல்லைக்கு அதனை
அழைத்துப்போவாயோ?
அதன் உறைவிடத்துக்கு
நேர்வழி அறிவாயோ?

ஆம், அறிவாய்!
அன்றே நீ பிறந்தவனன்றோ?
ஆமாம், ஆண்டுகளும்
உனக்கு அதிகமன்றோ?

[யோபு 38]

போன்ற வரிகளின் வழியாக செல்லும் அனுபவமென்பது மெய்ஞானம் மொழியச் சந்திக்கும் தீவிரமான கவித்துவத்தை நமக்குக் காட்டித்தருவதாகும்.

[திரு விவிலியம், Tamilnadu Biblical Catechetical & Liturgical Centre, Tindivanam India 604002]

முந்தைய கட்டுரைகண்டனக் கவிதைப் போராட்டம்.
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்