சிங்கப்பூருக்கு…

lee kuan u 2015 03 18

அன்பு ஜெ,

வணக்கம். இரண்டு முறை சிங்கப்பூர் வந்திருக்கிறீர்கள். மூன்றாம் முறையாய் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு வருவதாகச் செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மூன்றாம் முறையும் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

இந்த நாட்டின் நவீன சிற்பியாய் இருந்த திரு லீ குவான் யூ மறைந்தபோது அவரைப்பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என நினைத்தேன். காரணம், தமிழக மாவட்டங்களிலும் இந்திய அரசிலும் சில அனுபவங்களை விதைத்துவிட்டுச்சென்றது மட்டுமல்லாமல், அறிந்தோ அறியாமலோ அவர் இந்தியஞான மரபின் வேர்த்தன்மையைக் கொண்டவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுகுறித்து தங்களது உள்ளுணர்வை அறிந்துகொள்ள ஆசை.

மக்களின் ஜனநாயக வாழ்க்கையை அடகு வைத்து பொருளாதார வளம் பெருகச்செய்தார் என்று வல்லினத்தில் திரு.அ.மார்க்ஸ் எழுதிய இக்கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவை இரண்டும் சமதளத்தில் இயங்க இயலுமா? உங்களது கருத்து என்ன? http://vallinam.com.my/version2/?p=2062

அன்புடன்

எம்.கே.குமார்
MK_KUMAR_SINGAPORE

அன்புள்ள குமார்,

மீண்டும் சிங்கப்பூர். நடுவே சிலமுறை மலேசியா வந்தேன், சிங்கப்பூருக்கு இது மூன்றாம் முறை. அருண்மொழியும் வருகிறாள். முதல்முறை வந்தபோது அவளும் வந்ததை நினைவுகூர்வீர்கள் என நினைக்கிறேன். இனிய நாட்கள். அந்தப்புகைப்படங்களில் இளமையாக இருக்கிறேன். சித்ரா அப்படியேதான் இருக்கிறார்கள்.

லீ குவான் யூ பற்றி சித்ரா எழுதிய ‘சிங்கப்பூரின் கதை’ நூலில்தான் விரிவாக வாசித்தேன். அவரை ஒரு நல்லெண்ணம்கொண்ட சர்வாதிகாரி என்று சொல்லலாம். Benevolent Nepotism என்பது எளிதில் வரையறைசெய்யக்கூடியது அல்ல. உள்முரண்கள் குறைவான சிங்கப்பூர் போன்ற மிகச்சிறிய வணிகநாட்டுக்கு அது நல்விளைவுகளை அளித்தது.

இந்த அளவுக்குமேல் சிங்கப்பூரைப்பற்றி எனக்கு உறுதியுடன் சொல்லும்படி ஏதும் தெரியாது. நான் நண்பர்களுடன் வந்து தங்கிய சிலநாட்களின் மனப்பதிவுகளும் சில நூல்களுமே ஆதராங்களாக உள்ளன. இந்தியாவின் நிலப்பகுதிகளை தொடர்ந்த ஆர்வத்துடன் பல்லாண்டுகளாகக் கவனிப்பதைப்போல நான் சிங்கப்பூரை கவனித்ததில்லை என்பதே உண்மை. ஆகவே நான் ஏதும் சொல்லவில்லை.

பட்டினியையும் தேக்கநிலையையும் அகற்றி பொருளியல் நிறைவை சிங்கப்பூருக்கு அளித்தமை லீ குவான் யூ அவர்களின் சாதனை. அரைநூற்றாண்டுக்காலமாக நீளும் இன ஒற்றுமையை உருவாக்கியதும் சாதனையே. இவ்வளவே என் மனப்பதிவு.

சமீபகாலமாக சிங்கப்பூர் அதன் ஜப்பானியபாணி அதிதீவிர நடைமுறைக்கல்வி முறையிலிருந்து விலகி அமெரிக்கபாணி கல்விமுறைக்குச் செல்வதும், நூல்வாசிப்பையும் சிந்தனையையும் பெருக்க பெரும்பணம் செலவிட்டு எடுக்கும் முயற்சிகளும் மிக முக்கியமான முன்னுதாரணங்கள். தென்கொரியாவும் அவ்வகையில் முக்கியமான பாய்ச்சல்களை நிகழ்த்தி வருகிறது என்கிறார்கள்

மீண்டும் சந்திப்போம்

ஜெ


சிங்கப்பூரில் சிலநாட்கள்
சிஙக்கப்பூர் கடிதங்கள்
சிங்கப்பூர் வாசிப்பியக்கம்
முந்தைய கட்டுரைசிற்றிதழ் என்பது…
அடுத்த கட்டுரைசொல்புதிது வெ.சா சிறப்பிதழ்