இரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்

1

மலைகள் பேசிக்கொண்டால் எப்படி ஒலிக்கும்? சின்னஞ்சிறு சீவிடை எவரும் பார்த்திருக்கமாட்டார்கள். எறும்பளவே இருக்கும். ஆனால் காட்டை நிறைப்பது அதன் ஒலி. அத்தனை சிறிய உயிர், அவ்வளவு ஓசையெழுப்பித்தான் தன்னை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படியென்றால் மலைகள் மௌனத்திற்கு அருகே செல்லும் மெல்லிய ஓங்காரத்தால்தான் பேசிக்கொள்ளும்போலும்.

‘பனிவயல் உழவு’ என்னும் திருமாவளவனின் கவிதைகளை வாசித்தபோது இதைத்தான் எண்ணிக்கொண்டேன். அவரது கவிதைகளை நான் வாசித்தகாலகட்டத்தில் ஈழப்போர் உச்சத்திலிருந்தது. புலம்பெயர்தல், மரணங்கள், துரோகங்கள், வஞ்சங்கள், கதறல்கள் காற்றில் நிறைந்திருந்தன. அன்று பெரும்பாலான ஈழத்து இலக்கியவாதிகளின் ஊடகம் கவிதையாகவே இருந்தது. அது உடனடியானதும், நேரடியானதுமாக இருந்தது. அலுமினிய உறையைக் கிழித்து வலிநிவாரண மாத்திரையை வாய்க்குள் போட்டுக்கொள்வதுபோல அவர்கள் எழுதினர்

அந்தக்கவிதைகள் அனைத்துமே வன்மையான குரலில் பேசுபவை. கொந்தளிப்பவை. அறைகூவுபவை. தலையிலறைந்துகொண்டு அழுபவை. மாறாக திருமாவளவனின் கவிதைகள் மலைகள் பேசும் மௌனத்துடன் இருந்தன. அதனாலேயே அவற்றின் துயர் வன்மையானதாக எழுந்து திசைகளை நிறைத்து நின்று உலுக்கியது.

அவருக்கு நான் எழுதிய முதல் கடிதத்தில் ‘கண்ணெதிரே முகில் என தெரிவது நூற்றாண்டுகளென அசைவில்லாதிருக்கும் ஒன்று என்று தெரியும் கணத்தின் சோர்வை தனிமையை செயலின்மையை அளிப்பவை உங்கள் கவிதைகள்’ என சொன்னேன். இன்று ஈழப்போரும் அதன் இழப்புகளும் நினைவாக மாறிக் கடந்துவிட்டிருக்கையில் சென்றகாலத்தின் இருட்டிலிருந்து மென்மையாகக் கேட்கும் நீள்மூச்சு போல ஒலிக்கிறது திருமாவளவனின் கவிதை. கவிதையின் மென்மையான நெடுமூச்சு என்பது புயல்களைப்போல நம்மைச் சூழ்ந்துகொள்ளக்கூடியது.

பனிவயல் உழவு என்னும் சொல்லே சுட்டுவதுபோல திருமாவளவனின் கவிதைகள் புலம்பெயர்ந்து அன்னியநாடொன்றில் வாழ்வதன் அவலத்தைச் சொல்பவை. பனி அவரது கவிதைகளில் அழுத்தமான படிமம். அது சவக்கச்சை போல வெம்மையாக மௌனமாக நிலத்தை மூடியிருக்கிறது. வானாக மாறித் தொங்குகிறது.

இலை உதிர்த்த
வில்லோ மர எலும்புக் கூட்டின் மேல்
குந்தியிருக்கிறது
சூரியக் குருவி
சன்னலின் விலகிய திரையினூடு
படுக்கையறையில்
பெருகி வழிகிறது
அதன் கழுகுப் பார்வை
அறை நிறைக் சூரியக் குருவி

[சூரியக்குருவி]

பனியுருகி நிலம் பூத்து எழும் சித்திரங்களையும் திருமாவளவன் அடிக்கடிக் கையாண்டிருக்கிறார். அது அவர் ஏங்கிய ஒரு தொடக்கத்திற்கான படிமம். குளிர்நாட்டு மக்களுக்கு பனியுருகுதல் என்றால் அது வசந்தத்திற்கான தொடக்கம். பசுமை, புதுமலர்கள், பறவைகள், இளவெயில். ஆனால் பலசமயம் திருமாவளவனின் கவிதைகளில் பனித்திரை விலகி மீண்டும் ஒன்றும் நிகழாது குளிர்ந்து கிடக்கும் மண்ணும் சோர்வூட்டும் இயற்கையும்தான் வெளிப்படுகிறது

மெல்லக் கழிந்தது
நிலவற்ற இரவும் பேய் மழையும்.
ஒரு புதிய காலையில் விழித்தேன்
உறைபனித் தடம் அழித்து
மூச்செடுக்கிறது நிலம்
இலையுதிர் காலத்துதிருந்து
பனிக்கீழ் உறைந்து
அழுகிய இலைகளின் நாற்றத்தை பூசி
கொண்டாடித் திரிகிறது காற்று
கண்களை இறுகமூடி அகந்திறந்தேன்
மனசின் அடிஆழத்துள் உறங்கிக்கிடக்கிது
என் கருப்புப் பூனை.
[பொன்னி]

எப்போதும் விடாது தொடரும் அந்தக் கறுப்புப்பூனையின் மௌனம் அவரது கவிதைகளில் மட்டுமல்லாமல் அவரது சிரிப்பில்கூட இருந்தது என்று இப்போது அவர் மறைந்தபின்னர் முகத்தை நினைவில் எடுக்கும்போது தோன்றுகிறது.

தனிமையின் குறிப்புகள் என்றே திருமாவளவனின் கவிதைகளை வரையறை செய்துவிட முடியும். அது பிரிவோ இழப்போ உருவாக்கும் தனிமை அல்ல. இருப்பின் இன்றியமையாத தனிமை. மௌனமாக, பசியாக, வெளிக்காட்சியின் வெறுமையாக, பெரிய பொருளேதும் இல்லாத ஒரு நினைவாக மீண்டும் மீண்டும் திருமாவளவன் தனிமையைச் சித்தரிக்கிறார்

இன்று
தனித்தேன் சிறுபொழுதே
எனினும்
கரும்பூனையின் ஒற்றைச் சிறுவிழியும்
சாம்பற் சிறுபறவை நினைவும்
துரத்த
துயிலின்றி
குளிர்பற்றி எரியும் இக் கானகவெளியில்
பசித்திருக்கிறேன்.
நான்.
[பசி]

வாழ்க்கையின் பல வண்ணங்களை ,முரண்களைச் சித்தரித்த கவிஞன் அல்ல அவர். ஒருவகையில் இலையுதிர்காலத்துப் பறவை. உதிர்ந்த இலைகளுக்குமேல் எலும்புக்கையெய எழுந்த மரங்களில் அமர்ந்து மீண்டும் மீண்டும் அது ஒரே குரலில் ஒரே பாடலைத்தான் பாடிக்கொண்டிருந்தது. அதன் குரல் அந்தக்காட்டின் கண்ணிரை தானும் சுமந்திருந்தமையால்தான் அச்சொற்கள் அத்தனை நனைந்து ஈரம்கொண்டிருந்தன.

புறச்சூழலை வரையறைசெய்து திருமாவளவனைப்புரிந்து கொள்ளலாம்தான். ஈழப்போர். அகதிவாழ்வு. அன்னியநாட்டின் தனிமை. நடைமுறைவாழ்வின் தோல்வி. ஆனால் கவிதை அவற்றின் நேரடி எதிரொலி அல்ல. அவருள் இருந்து அவற்றை எதிர்கொண்ட அந்த நுண்மையை பற்றியே கவிதை வாசகன் அடையாளம் காணமுடியும்

அதை இங்கே அப்புறச்சூழலுக்கு எவ்வித அறிமுகமும் இல்லாத நான் என்னுடையதென உணர்கிறேன். அந்த மாயமே அவரது கவிதைகள் மேல் தீராத வசீகரத்தை அளிக்கிறது. அதை ஒரு விமர்சகனின் மொழியில் பிரபஞ்சத்தின் ஈவிரக்கமற்ற அலட்சியம் என்று சொல்வேன்.

இயற்கையாக , உறவுகளாக , வானாக, மொழியாகச் சூழ்ந்திருக்கிறது பிரபஞ்சம். அதை சொல்லிச் சொல்லி பழக்கி எடுக்கலாம். எண்ணி எண்ணி நம்முடையதென்று கற்பனை செய்துகொள்ளலாம். அதற்கப்பால் எனக்கென்ன என்றும் நீ யாரோ என்றும் அது விரிந்து கிடக்கிறது. அந்த உள்நுழைய முடியாத முழுமைக்கு முன் திகைத்து நின்று பின் கழிவிரக்கம் கொண்டு இறுதியாக மெல்லிய துயரப்புன்னகையுடன் அமையும் திருமாவளவனை நாம் அவரது கவிதைகளில் காண்கிறோம்

அவரது கவிதைகளில் சிறந்தது என எனக்கு இப்போது தோன்றுவது இது. வாழ்க்கை முடிவுற்று கவிஞனின் மொத்தக்கவிதையும் ஒற்றைப்பிரதியாக ஆகும்போது அவற்றின் சாராம்சமாக சில வரிகள் எழுந்து வந்து நிற்கும் நானே அவர் என. இது அத்தகையது

தேன்சிட்டு

பழத்தோட்டத்தின் நடுவில்
தனிமரம்
நான்.
அண்மைச் சிலநாளில்
எனைத் துயிலெழுப்ப வந்து குதித்தது
தேன்சிட்டு
கூடிழைக்கப் புல்லிதழ் பொறுக்கும்
சிறுகுருவியைப் போல்
வருவதும் போவதுமாய்
அதன் வித்தை பார்த்திருக்கிறேன்.
பூநெய் அருந்தி நெகிழ்ந்த தன் கீச்சுக்குரலில்
கிசுகிசுத்து
ஒரு தாதியின் பரிவுகாட்டி
அன்பைச் சொரிந்து
மகிழ்வூடி மறுகணமே
சடுதியில்
விலகிடும் சூக்குமம் எனக்குப் பிடிபடுவதில்லை.
அத்தேன்மொழி கொய்து
சிறிதொரு கவிதையாவது முடைந்திடும்
முயற்சியில் தோற்றேன் பலபொழுது.
தோற்ற பொழுதிருந்து
பார்த்திருக்கிறேன்

இன்றும்
காலை
எனக்குப் புலரவே இல்லை.

.

[குமரிமாவட்டம் வில்லுகுறியில் இருந்து ரோஸ் ஆண்டோவை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் படிகம் கவிதைக்கான இதழில் வெளிவந்த கட்டுரை

தொடர்புக்கு : [email protected]

q
திருமாவளவன் கவிதைகள் கலாநிதி சுப்ரமணியன் கட்டுரை

=============================================================

அஞ்சலி திருமாவளவன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71
அடுத்த கட்டுரைமுன்னுரையியல்