என் நினைவறிந்த நாள் முதல் விவாதங்களின் மையத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். நான் மதித்த எழுத்தாளர்களான எம்.கோவிந்தன், க.நா.சு, பி.கே.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி , ஜெயகாந்தன்போல. விவாதங்களை உருவாக்குவதென்பது எழுத்தின் அவசியங்களில் ஒன்று. அவை அறிவார்ந்த தளத்தில் நிகழ்கையில் ஒட்டுமொத்த விளைவு எப்போதும் பண்பாட்டுக்குச் சாதகமானதே.
ஆகவே ஒரு விவாதம் அவசியமான எங்கும் அதை உருவாக்க முயல்கிறேன். அதை வெறுமே அபிப்பிராயமாக இல்லாமல் இலக்கிய- பண்பாட்டு -வரலாற்றுப் பின்புலம் சார்ந்த ஒரு பார்வைக்கோணமாக வைக்கிறேன். அவற்றை விவாதிப்பவர்கள் ஏற்றோ மறுத்தோ அந்த பின்புலத்தை விவாதிக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். அவர்கள் தங்கள் தர்க்கங்களுக்கு ஏற்ப அவற்றை மறு அடுக்கு செய்து காட்டலாம்.
விவாதங்கள் வெறுப்பையே பெரும்பாலும் உருவாக்குமென அறிவேன். ஏனென்றால் கருத்தை உடன்பாடு மறுப்பு என்பதன்றி விருப்பு வெறுப்பு என எதிர்கொள்ளவே பழகியிருக்கிறோம். கருத்தியல்சார்புள்ளவர்களோ உச்சகட்ட வெறுப்பையே உமிழ்கிறார்கள்.அதை பின் தொடரும் நிழலின் குரலில் மிக விரிவாகவே ஆராய்ந்திருக்கிறேன்
ஆனாலும் நெருக்கமானவர்களாக இருந்தவர்கள் சட்டென்று வசைபாடும்போது அவமதிக்கும்போது ஆழமாக மனம் புண்படுகிறது. அதிலும் காலைவேளையில் வரும் கடிதங்களும், சுட்டிகளும். அவற்றை தவிர்க்கமுடிவதில்லை
ஒருநாள் கூட தவறாமல் சென்ற இருபதாண்டுக்கலாமாக எனக்கு வாசகர் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. விஷ்ணுபுரம் வெளிவந்த நாள்முதல் கடிதங்கள் குறைந்ததே இல்லை. வாசகர்கடிதங்களில் பாதியைக்கூட பிரசுரிப்பதில்லை, வாசகர்களுக்கு மனத்தடைகள் பல உண்டு. அத்தனை கடிதங்கள் வந்தும் ஒவ்வொரு கடிதமும் முக்கியமானதென்றே படுகிறது
அதிலும் சற்றே சலிப்புற்று இருந்த ஒரு காலையில் வந்த இக்கடிதங்கள் அளித்த ஊக்கம் அளப்பரியது. மீண்டு சிலகணங்களிலேயே எழமுடிந்தது. மீண்டும் எழுதத்தொடங்கமுடிந்தது.
*
அன்புள்ள ஜெயமோகன்,
பள்ளிநாட்களில் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி அவர் கையொப்பம் அச்சிட்ட புகைப்படம் கிடைத்தபோது மிகவும் பரவசமடைந்தேன். அதை எல்லோருக்கும் காண்பித்து பெருமை பீத்தல் வேறு.
சரியோ தவறோ, அன்றைய முதிராச் சிறுவனின் அந்தப் பரவசம் நிஜம்.
அதே நிஜமான பரவசம் இன்றும். தங்கள் கையெழுத்துடன் கூடிய “வெண்முகில் நகரம்” செம்பதிப்பு இன்று கைக்கு வந்தது.என் பெயரை உங்கள் கையெழுத்தில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன்.
ஆனால், யாருக்கும் இதைக் காட்டக்கூடாதென்றும், இது ஒரு அந்தரங்கமான விஷயம் என்றும் இப்பொழுது தோன்றுகிறது. என் மகளுக்குக் காட்ட வேண்டும். அவளுக்குத்தான் குறை, முந்தைய செம்பதிப்புகளில் என் பெயரில் நீங்கள் கையெழுத்திடவில்லையென. (அவற்றை என் மனைவியின் பெயரில் வாங்கினேன். )
இந்திர நீலத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம், அது அவள் பெயரில் கேட்டிருக்கிறாள்
நன்றி ஜெயமோகன், இன்றைய இனிய நாளுக்காக.
என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு
*
வணக்கம்.
வெண்முகில் நகரம் வரும் என்று எதிர்பார்த்தவாறே பகுதி பகுதியாக முந்தைய வெண்முரசு வரிசைகளை படித்தவாறு இருந்தேன்.
வெள்ளி காலை வெண்முகில் நகரம் வந்து சேர்ந்தது .
சென்ற முறை சந்தோஷ் குமார் என்று கையொப்பம்.
என்னை அறிந்தவர்கள் சந்தோஷ் என்று தான் அழைப்பார்கள் நீங்கள் இந்த முறை சந்தோஷ் என்றே கையொப்பமிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.
கிழக்கு பதிப்பகத்தை சார்ந்தவரிடம் கையெழுத்திட வேண்டும் என்றல்லாம் கட்டாயமில்லை ஆனாலும் என்று சென்ற முறை ஒரு பத்து நிமிடம் பேசினேன் இந்த முறை அப்படி எதுவும் பேசவில்லை அவர் புரிந்து கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது.
என்னால் ஏனோ இணையத்தை பயன்படுத்தி இது போன்ற பெரும் படைப்புகளை வாசிக்க முடிவதில்லை .(இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உங்களின் விஷ்ணுபுர விருது விழாவில் நாஞ்சில் சொன்னாரே கையால் எழுதி முடித்த இறுதி தமிழ் எழுத்தாளனாகவே விருப்பம் என்று அப்படி இந்த பெரிய நூலை கையில் தாங்கி வாசிக்கவே பிரியப்படும் வாசகன் நான் ).
இப்போது திரௌபதியும் பாண்டவர்களும் நெருங்கி அறியும் பகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன் குறிப்பாக பீமன் தன்னிலை அழிந்து திரௌபதியிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் மீண்ட நிலை அறிந்து சகாதேவனும் அர்ஜுனனும் பேசும் கட்சியை மீள மீள நினைத்து கொண்டிருந்தேன் .
உங்கள் பாத்திரங்களை நீங்கள் சில நேரங்களில் கொஞ்சி விட்டுத்தான் எழுதுவீர்களோ என்று தோன்றியது.
கிட்டத்தட்ட இலக்கிய விமர்சனம் என்கிற ஒன்றை செயலிழக்க வைத்து விட்டீர்களோ என்றும் தோன்றியது (ஞானி போன்றவர்கள் இதையும் தாண்டி கருத்து சொல்லலாம் ) அதே போல வாசகனாக என்னுடைய எல்லைகளை நான் அறிகிற அதே வேளையில் அவை பெரிதும் விரிவடைவதையும் என்னால் அவதானிக்க முடிகிறது.
இப்படியே இருந்து விடத்தான் ஆசை.
படைப்புகளில் நெருங்கி அறிகிற உங்களை நேரில் நான் சந்திக்கிற போதெல்லாம் அவை உளறலில் முடிவதை அதிர்ச்சியோடு கவனித்திருக்கிறேன் இதுவும் உளறல்தான் ஆனால் வேறு வகையில்.
நான் உங்களுக்கு கடிதம் எழுத வரும் வழியில் ராகவேந்திர மடத்தில் ஒரு சுவரொட்டியை பார்த்தேன், அம்மன் சத்தியநாதன் என்கிற ஒருவர் ராமாயணம் எழுதியிருக்கிறார், வாசித்து முடித்த ஒன்பதே நாட்களில் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் காணலாமாம் (இவர் முன்பே ராகவேந்திர மகிமை எழுதி பிரபலமானவர் என் குடியிருப்பு பெரியவர் நான் கைகளில் உங்களை வைத்திருப்பதை பார்த்து விட்டு முன்பே சிபாரிசு செய்தவர் முகத்தை இப்போதுதான் பார்கிறேன்) .
சிரித்துக் கொண்டே முடிக்கிறேன்.
மனம் நிறைந்த வணக்கங்களுடன்
சந்தோஷ்.
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு நெகிழ்ச்சியான மனநிலையில் இந்தக் கடிதம். எவ்வித உள்ளடக்கமும் தொடர்பும் இல்லாமல் திடீரென்று அனுப்பப்படும் இந்தக் கடிதத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நூலகத்திலிருந்து எடுத்து வந்த உங்களின் ”பண்படுதல்’ கட்டுரை தொகுப்பு நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு தருணங்களில் உங்களின் இணையதளத்தில் ஏற்கெனவே வாசித்தவைதான். ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கும் போது அந்த நூல் தரும் மனவெழுச்சியும் புதிய அக வெளிச்சங்களும் தகவல்களும் பிரமிக்க வைக்கின்றன. எந்தவொரு சமகால சிக்கல்களையும் விஷயங்களையும் ஒட்டுமொத்த வரலாற்றின் பின்னணியை வைத்துப் பார்க்கும் கற்றலை உங்களிடமிருந்துதான் அறிகிறேன். என்னை அதிகவும் பாதித்த சமகால கலையாளுமைகளில் ஒருவராக உங்களை என்னால் துணிச்சலுடன் குறிப்பட முடியும்.
வேறெந்த தமிழ் எழுத்தாளரையும் விட அதிக அளவில் ஆனால் சமமாக பாராட்டுக்களையும் வசைகளையும் பெற்று வருபவர் நீங்கள். வசைகளையும் எதிர்மறையான எதிர்வினைகளையும் கண்டு சோர்ந்து போகும் நபரல்ல நீங்கள். என்றாலும் அவ்வாறு ஒருவேளை சோர்வூட்டும் தருணங்களில் வாசகர்களின் நன்றிக் கடிதங்களில் மூலம் நீங்கள் அந்த மனநிலையிலிருந்து மீண்டுவரக்கூடும். அந்த நோக்கில் இந்தக் கடிதமும் ஒரு துளியாக பயன்படக்கூடும் என்கிற என் சுய யூகத்தில் இதை அனுப்புகிறேன்.
உங்களின் படைப்பாற்றலின் மூலம் என்னைப் போன்று பல வாசகர்கள் அதிக வெளிச்சம் பெறுவார்கள். எனவே அதை அளித்துக் கொண்டேயிருங்கள் என்பதே எளிய வாசகனாக என் வேண்டுகோள்.
சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.in/
*
மதிப்புமிக்க ஜெவுக்கு ஈரோட்டிலிருந்து வீரா எழுதுவது.
நலம். நலமறிய ஆவல்.
என் மகள் நந்தினியிடம் (6 ம் வகுப்பு படிக்கிறாள்) சமீபமாக காந்தி குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
இன்று உங்களின் ‘மாட்டிறைச்சி, கள், காந்தி முடிவாக…’ என்ற கட்டுரையை அவளைப் படிக்க வைத்தேன்.
அனேகமாக அவளுக்கு உங்களை நான் அறிமுகம் செய்துவைத்தது இதன் மூலமாகத்தான் என்று நினைக்கிறேன்.
மிக எளிமையான ஆழமான கட்டுரை. நன்றி.
மிக்க அன்புடன்
-வீரா
*
அன்புள்ள ஜெயமோகன்,
எனக்கு சிறு வயதில் பள்ளி நூலகம் மூலமாக தான் புத்தக அறிமுகம் கிடைத்தது, அதன் பிறகு கல்லூரி நாட்களிலும் பிறகு வேலை தேடிய நாட்களிலும் ,வேலை கிடைத்த பிறகும் பெரியதாக இலக்கிய அறிமுகம் இல்லை. தற்போது 35 வயது , கடந்த 3 -4 வருடங்களாக உங்களை வலைத்தளம் மூலமாக அறிவேன். என்னுடைய பல கேள்விகளுக்கு தங்கள் வலைத்தளத்தில் பதில் கிடைத்தது ஆனால் மேலும் பல கேள்விகள் தோன்றின விடை தேடுகிறேன் என்னுள். நான் பேச வந்தது சமீபத்தில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாசித்தேன் . ஒரு கேள்வி , யோகத்தை மதவழிபாடுகளில் இருந்து பிரித்து அதன் தூய நிலையில் நிறுவ ஜே.கிருஷ்ணமூர்த்தி ,ஓஷோ போன்றவர்கள் முயன்றது போன்ற தோற்றம் உள்ளது. நான் அறிந்த வரையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி எந்த ஒரு கோட்பாடுஉடனும் தன்னை இணைத்து கொள்ளாதவர் . இதை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
மேலும் ,இந்த விடுமுறையில் இந்தியா வந்தபோது உங்களுடைய ரப்பர் , காடு , ஊமைச்செந்நாய் போன்ற புத்தகங்களை வாங்கி வந்தேன். விஷ்ணுபுரம் போன வருடம் வாங்கினாலும் , அது இப்போது என் அக்காவின் வீட்டில் உள்ளது. இந்த டிசம்பரில் படிக்க ஆசை , பார்க்கலாம்
காடு நாவல் மிகுந்த நுட்பமான விவரணைகள் கொண்டது சிறப்பான வாசிப்பு அனுபவத்தை எனக்கு அளித்தது . கடந்த சில நாட்களாக காட்டை பற்றி என் மனைவிடம் பேசிகொண்டே இருகிறேன், பல மரங்களின் பெயரும்,வித்தியாசமான அனுபவங்களை கொண்ட குட்டபனை நான் வியந்தேன்,மேரி , ரொசலம்,அய்யர் , அம்பிகா அக்கா, மாமா ,இருவர்கள் என பல வித்தியாசமான கதை மாந்தர்கள் . மலையத்தி அழகை கற்பனையில் கொண்டுவந்தாலும் , அவள் முகம் என் நினைவில் இல்லை..
அடுத்தக படிக்க “பிறகு” எடுத்து வைத்து இருகிறேன். காடு மறு படியும் ஒரு முறை வாசிக்க ஆசை , பார்க்கலாம்.
நன்றி
உலகநாதன்
*
சார்,
இவங்க உங்க வெண்முரசின் இளம் வாசகி :))
சுந்தரவடிவேலனின் குழந்தை , வெண்முகில் நகரம் நாவலை வைத்திருக்கிறாள் …
ராதாகிருஷ்ணன்