ஜெ,
அசோகமித்திரனின் “இன்று” படித்தேன்.
அசோகமித்திரனுக்கே உரிய மனிதர்கள், தீவிரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு இன்று கால் வலியை பற்றி பேசிக் கொண்டிருப்பவர், சுதந்திர போரட்ட வீரர்களின் ஒய்வில்லத்தை குடிக்கவும் பெண்களோடு இருக்கவும் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள், மூன்று குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட, வேலைக்கும் தினசரி சிக்கல்களுக்கும் நடுவே தடுமாறி குழந்தையின் ஒரு காலை இழக்கும் மனிதன், சாகும்பொழுதும் கொசுவத்தை இழுத்து முன்னால் விட்டு இறுக்கிக் கொள்ளும் பெண், அவள் கூட எல்லோரும் அவளை விபச்சாரி என்று அழைக்கும்படியான ஒரு வாழ்கை வாழ நேர்ந்தது (அவள் பெயர் “சீதா”) கடைசியில் எல்லாவற்றிலும் அர்த்தமே இல்லை என்று உணரும் இரண்டு நண்பர்கள், அதை விட வலியான, அவர்களை கல்யாணம் செய்து கொள்ளுங்கள், போலீசிடம் வம்புக்கு போகாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டு, விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும், தூக்கமே வராத அம்மா. இவர்கள் அனைவருமே அசோகமித்திரனுக்கே உரிய உலகில் இருந்து வருகிறார்கள், அதை விட அபாரம் இவர்களைக் கொண்டு இவர் டால்ஸ்டாய் மீது தொடுக்கும் பதில்தான்.
டால்ஸ்டாய் குறித்த உரையில் ஆரம்பிகிறது “இன்று”. அனைத்து அத்தியாயங்களுக்கும் டால்ஸ்டாயின் தலைப்புகளையே பயன்படுத்தியிருக்கிறார்.முதலில் டால்ஸ்டாயின் அமரத்துவம் (ஆன்மிகம்) பற்றி பேச துவங்கி பின்பு இன்று டால்ஸ்டாய்க்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று முடிகிறது முதல் அத்தியாயம். ஆனால் நாவல் முழுவதும் டால்ஸ்டாயின் தரிசனம் வேறு ஒரு பார்வையில் கிடைகிறது. நேர் எதிராக.
டால்ஸ்டாய் லட்சிய மனிதர்களின் லட்சிய உலகத்தை பற்றி, எளிய மனிதர்களின் அபத்த உலகை பற்றி பேசுகிறார். அவருக்கு எதிராக இவர் இந்த மனிதர்களை முன் வைக்கிறார். வரலாற்றின் மீதான சிரிப்பு டோல்ஸ்டோயின் போரும் அமைதியும் எனில், டால்ஸ்டாயின் மீதான அசோகமித்திரனின் சிரிப்பு “இன்று”. அந்த சிரிப்புக்கு பின் இருக்கும் வருத்தமே அவரை நவீனத்துவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. மாவு பொம்மையில் ஊசி குத்தும் மந்திரவாதியை போல போராட்டம், விடுதலை, இலட்சியம், காமம், அரசியல், தியாகம் என மனிதனை ஆட்டுவிக்கும், அல்லது மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் அனைத்து தரிசனங்களின் மீதும் தன் சிரிப்பை செருகி வைத்து போகிறார். அத்தனை துயரமான சிரிப்பு.
டால்ஸ்டாய் சாதாரண சம்பவங்களின் தொகுதியிலிருந்து ஒரு சாரத்தை காண்கிறார், எளிய நிகழ்வுகளிலிருந்து (தனி மனித) வாழ்க்கையின் நீள அகலத்திற்கு சென்று அங்கிருந்து காலத்திற்கு சென்று சேர்கிறார். அசோகமித்திரன் நேர் எதிர் திசையில் வந்த சேர்கிறார். ( போரும் அமைதியும் “காலமும் வாழ்க்கையும்” என்றே நினைவில் வருகிறது ) டால்ஸ்டாயின் தலையணை அளவுள்ள காலத்தின் நூலிலிருந்து ஒரு பக்கத்தை “இன்று” என பிரித்து எடுத்து வைக்கிறார். எதிர் எதிர் தரிசனங்கள் போல பட்டாலும் அசோகமித்திரனின் துளி டால்ஸ்டாயின் நதியிலிருந்து எடுக்கப்பட்டது என்பது இரண்டும் ஒன்றின் வேறு வேறு பார்வையே என்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் கண்ணுக்கு தெரியாத சாரமிருக்கிறது என டால்ஸ்டாய் கூறுகிறார், அசோகமித்திரனோ கண்ணுக்குத் தெரியதாதாலேயே, அப்படி ஏதுமில்லையே, இருந்தால் நல்லதுதான்னு நேக்கு தோன்றது என்று கூறுகிறார். முதல் அத்தியாயம் முடியும் பொழுது “டால்ஸ்டாய் குறித்த இரண்டு உரைகளையும் சேர்த்து படித்து பார்க்கும் பொழுது அவனுக்கு சிரிப்பாக வந்தது, சிரித்து முடித்ததும் வருத்தமாக இருந்தது” என்றும், வேறொரு இடத்தில வரும் “நான் இருக்கும் வரை காலமே அணு” என்று முடியும் கவிதையும் இதையே அவரது தரிசனமாக முன் வைக்கின்றன என்று தோன்றியது.
சுந்தர ராமசாமியிடம் நீங்கள் அவர் எழுதும் முறை குறித்து சொல்லிய பொழுது அவர், நீங்கள் சொன்னால் ஆச்சா? என்று கேட்டதாக “நினைவின் நதியில்” நூலில் ஓரிடத்தில் வருகிறது. “இன்று” அசோகமித்திரன் டால்ஸ்டாயிடம் அதே கேள்வியை கேட்கும் இடம். அசோகமித்திரனை உங்களுக்கு பிடித்ததில் ஆச்சரியமே இல்லை, டால்ஸ்டாய்க்கும் பிடித்திருக்கும்.
ஏ.வி மணிகண்டன்
இன்று பற்றி கேசவமணி எழுதிய விமர்சனம்
அசோகமித்திரன் நேர்காணல்