பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 4
தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப் பரப்பி காம குரோத மோகம் என்னும் மூன்று பகடைக் காய்களை ஆடும் அந்த ஆட்டம் முற்றிலும் நிகர் நிலையில் முடியவேண்டும் என்பது அளகாபுரியின் தெய்வ ஆணை. அது குலையுமென்றால் நிகர்நிலையழியும் .
செந்நிறமும் கருநிறமும் பொன்நிறமும் கொண்ட காய்களை மாறி மாறி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கையில் சித்ரரேகை இறுதியாக உருட்டிய பகடையின் எண் மேலெழுந்து குபேரனை வென்றது. புன்னகையுடன் “அரசே, வென்றேன்” என்றபோது திகைத்து எழுந்து குனிந்து காய்களை பார்த்தான். “எங்கு பிழைத்தது நம் கணிப்பு?” என்று அறியாது திகைத்தான். “நானறியேன். என் வழக்கப்படி ஆடினேன்” என்றாள் அரசி.
காலமும் காலம் கடந்ததும் ஆகி எங்கும் நிற்கும் அனைத்துமான ஒன்றை அறிந்த நாரத முனிவரை அழைத்து வர ஆணையிட்டான் செல்வத்துக்கிறைவன். முனிவர் வந்து வணங்கி “அப்பகடைக் களத்தை காட்டுக!” என்றார். கூர்ந்து நோக்கி “அரசே, உங்கள் விழி தொடாத பிறிதொரு காய் ஒன்று இங்கு உருண்டுள்ளது” என்றார். “இது செல்வத்தின் களம். காம குரோத மோகம் என்னும் மூன்று காய்கள் மட்டுமே இங்கு உருள்பவை” என்றான் குபேரன்.
கையால் தொட்டு எடுத்துக்காட்டி “வண்ணமோ வடிவமோ அற்ற இந்தக் காய் உருண்டுள்ளது. இதன் எண்களும் கலந்து இதன் ஆட்டம் நிகழ்ந்துள்ளது” என்றார் நாரதர். ஒளியை வெட்டி செய்தது போலிருந்த அப்பளிங்குக் காயை நோக்கி “இது எதனால் ஆனது?” என்றான் குபேரன். “காமமும் குரோதமும் மோகமும் நிறைக்க ஒண்ணாத விடாய் ஒன்றால் ஆனது. அருந்தவ முனிவர் அடைந்து அருந்தும் அமுதம் மட்டுமே அணைக்கும் தழல் அது” என்றார். “இக்களத்தில் எங்ஙனம் வந்தது?” என்றார். அரசி திகைத்து “நான் ஒன்றும் அறியேன்” என்றாள்.
“முனிவரே, இது பொருள் விழைவுகளின் பெருவெளி மட்டுமே. பொருளெல்லாம் பொன்னால் அளவிடப்படுவதென்பதனால் பொன்னால் நிறைக்கப்படாத விழைவுகள் என இங்கு இருக்க முடியாது.” “பொன் தொடா விழைவென்பது மெய்மைக்கும் முழுமைக்குமானது அரசே” என்றார் நாரதர். “எவர் கொண்டுள்ளார் இங்கு அவ்விழைவை?” என்றான் குபேரன்.
நாரதர் “சூரியன் இல்லா உலகு இது. தன்னொளி கொண்டதுபோல் இங்குள்ள ஒவ்வொன்றும் சுடர் விடுபவை. எனவே நிழலற்றது அளகாபுரி என்று நீ அறிவாய். பொன்னொளி சென்று மறையும் ஆழமொன்றை தன்னுள்ளே கொண்டவர்கள் நிழல் சூடி இருப்பார்கள். அவர்களை தேடிக் கண்டடைய வேண்டும்” என்றார்.
தன் புஷ்பக விமானத்தில் ஏறி குபேரன் அளகாபுரியின் தெருக்கள்தோறும் ஊர்ந்தான். அங்கே பொற்தூண்கள் சூழ்ந்த பேரிசை மண்டபத்தில் பொன் முரசுகள் ஒலிக்க பொற்பட்டாடை அணிந்து நடனமிட்டுக் கொண்டிருந்தனர் கலைஞர்கள். சூழ்ந்து அமர்ந்து அதை நோக்கி மகிழ்ந்திருந்த தேவர்களின் நடுவே அவர்கள் அறியாது நுண் வடிவை நோக்கியபடி அவன் சுற்றிவந்தான். அங்கு தரையில் கரிய ஐந்து வடிவங்கள் கிடப்பதை கண்டான். அந்நிழல் வடிவங்கள் மேல் பொன்வடிவென அமர்ந்த ஐவரை அணுகி அவர்கள் முன் சினம் கொண்டு எரிந்த விழிகளுடன் தோன்றினான்.
“எங்கு வாழ்கிறீர்களோ அங்குள்ளவற்றால் நிறைவுறும் விழைவுகளே உண்மையானவை. இங்கு நீங்கள் கொண்டுள்ள விழைவு பொன்னால் நிரப்பப்படாதது என்பதனால் பொருந்தா இருப்பு கொண்டீர்…” என்றான். “இப்போதே என்னுலகிலிருந்து விலகுங்கள்!” அஞ்சி எழுந்து கைகூப்பி “இவ்விழைவு எங்களுள் ஊறுவது எங்கள் பிழையால் அல்ல. இவ்வண்ணம் இதை அமைத்த தெய்வங்களின் பிழை” என்றாள் வர்கை.
“ஆம்” என்று பெருமூச்செறிந்து குபேரன் சொன்னான் “பொருள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு துளி நீர் இருப்பதுபோல. பொருட்கள் தம் வடிவம் இழந்து நீர்மை கொள்ள விழைவது அதனால்தான். காலவெளியில் முடிவின்றி இருக்கவிடாமல் பொருள்களை அலைவுறச் செய்யும் அகம் அதுவே. அத்துளி எழுந்தபின் இங்கு நீங்கள் இருக்க இயலாது. உங்கள் உளம் விரும்புவது பிறிதொன்று. இவ்விழைவுடன் நீங்கள் எங்கு எழ வேண்டுமோ அங்கு செல்க!” என்றான்.
பொன்னின் தலைவனின் சொற்களைக் கேட்டு மறுமொழி உரைப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து ஐந்து எரியும் மீன்கள் என விழுந்து பாரத வர்ஷத்தின் தெற்கே மகாநதிக் கரையில் இருந்த தேவாரண்யம் என்னும் பசும் பெருங்காட்டில் இருந்த ஐந்து சுனைகளில் அலையெழுப்பி மூழ்கினர். குளிர்ந்து தேவகன்னியராக எழுந்தனர்.
ஐந்து தேவகன்னிகள் குளிர்ச்சுனைகளில் இருந்து எழுந்ததைக் கண்டு, அங்கு உலாவிய மான்கள் விழிசுடர்ந்தன. யானைகள் துதிக்கை நீட்டி நீள்மூச்செறிந்தன. பறவைகள் கலைந்து எழுந்து வாழ்த்தொலி கூவின. வான் நோக்கும் ஆடிகள் போன்ற அகஸ்தியம், சௌஃபத்திரம், பௌலோமம், காரண்டமம், சுப்ரசன்னம் என்னும் ஐந்து சுனைகள் ஆடி தன் பாவையை உமிழ்வது போல தம் பரப்பிலிருந்து அவர்களை ஈன்றன.
இலை செறிந்த மரக்கிளைகளால் முற்றிலும் வான் மறைக்கப்பட்ட தேவாரண்யம் பகலிலும் இருண்டு குளிர்ந்து தன்னுள் தான் மறைந்து கிடந்தது. அங்கு வாழ்ந்த விலங்குகள் தங்கள் விழியொளியாலேயே நோக்கின. தடாகங்கள் தங்கள் ஆழங்களிலிருந்தே ஒளியை கொண்டிருந்தன. உச்சிப்பொழுதில் அத்தடாகத்தின் உள்ளிருந்து எழுந்த தேவகன்னிகள் அது இரவென்றே எண்ணினர்.
தங்கள் விழியொளியால் அக்காட்டை நோக்கியபடி அதில் ஒழுகி அலைந்தனர். இலை நுனிகளைத் தொட்டு அசையவைத்தனர். விம்மி காற்றில் நின்ற மலர்களைத் தொட்டு மலர வைத்தனர். உள்ளிருந்து அதிர்ந்த முட்டைகளைத் தட்டி விரிசல் விட வைத்தனர். ஈரச்சிறகுகளுடன் கோதுமை அலகுடன் வெளிவந்து மலர்க்காம்புக் கால்களை எடுத்து வைத்து தள்ளாடி உடல் சிலிர்த்த குஞ்சுகளின் மென்தூவிகளை விரல்களால் நீவி காயவைத்தனர். கிளைகளை உலுக்கி காற்றில் விளையாடினர். உதிரும் மலர்களை அள்ளி வழிந்த நீரோடைகளில் இட்டு நூலில்லா மாலையாக்கி மகிழ்ந்தனர்.
பின்பு பூத்த சரக்கொன்றை ஒன்றின் கீழ் பொன்மலர் பாயில் படுத்து இளைப்பாறினர். துயிலில் அவர்கள் அமராவதியின் ஒளி மிகுந்த தெருக்களை கண்டனர். அங்கு அவர்கள் கண்ட அத்தனை தேவர் விழிகளும் இமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் இதழ்கள் அனைத்திலும் விழைவு ஒரு சொல்லென ஓடிக் கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் பார்க்காத கணத்தில் அவர்களின் கால்கள் மண்ணை தொட்டன.
நடுவே உயர்ந்த மாளிகை உப்பரிகையில் அமர்ந்து தன் துணைவியுடன் நாற்களமாடிய இந்திரனின் அருகே இருபுறமும் இரு தெய்வங்கள் நின்றிருந்தன. சங்கும் சக்கரமும் ஏந்திய தெய்வம் வெண்ணிற ஒளி கொண்டிருந்தது. மான் மழுவேந்தி மறுபக்கம் நின்றிருந்தவனோ இருண்டிருந்தான்.
தேவியின் இருபுறமும் கரிய ஆடையுடுத்து விழிமணிமாலையும் தாமரையுமென ஒருத்தி நின்றாள். வெண்கலை உடுத்தி பொற்றாமரைகள் ஏந்தி நின்றிருந்தாள் ஒருத்தி. அவர்களின் களத்தில் பாம்புகளும் பறவைகளும் கருக்களாக அமைந்திருந்தன. அவற்றினூடாக சிற்றுருவம் கொண்டு தேவர்களும் மானுடரும் ஊர்ந்து கொண்டிருந்தனர்.
இனிய இசையொன்று கேட்டு அவர்கள் எழுந்தபோது காடு நிலவொளியில் ஊறி பளபளத்துக் கொண்டிருப்பதை வர்கை கண்டாள். “எடீ, எழுந்திருங்களடி!” என்று தன் தோழியரை தட்டி எழுப்பினாள். ஒவ்வொருவரும் எழுந்து “அமராவதிக்கு மீண்டுவிட்டோமா?” என்றார்கள். “ஆம், இது அமராவதியே” என்றாள் சமீசி.
“இல்லையடி, நிலவெழுந்துள்ளது” என்றாள் லதை. “ஒரு நிலவு இத்தனை ஒளியை உருவாக்குமா என்ன?” என்றாள் சௌரஃபேயி. “நிலவொளியென்றால் நிழல் விழவேண்டுமே! இங்கு ஒவ்வொன்றும் பளிங்கென மாறியுள்ளது. ஊன்விழி காணும் ஒளியல்ல இது” என்றாள் ஃபுல்புதை.
வர்கை “இங்குள ஒவ்வொன்றும் தன்னுளிருந்தே அவ்வொளியை கொண்டுள்ளது. தன்னொளி கொண்டவை மட்டுமே நிழலின்றி நிற்கமுடியும். எழுக! அது என்னவென்று பார்ப்போம்” என்றாள். அக்காட்டினூடாக விழி துழாவி அவர்கள் நடந்தனர். ஒளி கொண்டிருந்தன மரக்கிளைகள். பளபளத்தன இலைகள். சுடர்ந்தன மான் விழிகள். வெண் நெருப்பென அலைந்தன புரவிகளின் பிடரி மயிர்கள்.
தன்னருகே அதிர்ந்த இலையொன்றை சுட்டி “இவ்விலை ஒரு நாவென மாறி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறது” என்றாள் லதை. வர்கை அவ்விலையை நோக்கி தன் விழியை காதாக்கினாள். “அது காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொண்டுள்ளது” என்றாள். அக்கணமே அவர்கள் அனைவரும் அங்குள்ள அனைத்தும் அம்மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டனர்.
“காட்டின் கோடி நாக்குகளுக்கும் காயத்ரியை கற்றுத்தந்த முனிவர் எவர்?” என்றாள் வர்கை. “அங்கு எங்கோ அவர் எழுந்தருளியுள்ளார்” என்றாள் ஒருத்தி. மான் விழியொன்றை நோக்கி “இவை ஒரு திசை நோக்கி நிலைத்துள்ளன” என்றாள் வர்கை. “இங்குள விழிகள் அனைத்தும் அத்திசையை நோக்குகின்றன. ஆதலினால் அங்குளார் அம்முனிவர்.” அவ்விழிகள் சுட்டிய திசை நோக்கி தென்றல் சுமந்த புகைச்சுருள்களென அவர்கள் சென்றனர்.
அங்கே ஆலமரத்தின் அடியில் இலைச்சருகுகளால் கட்டபட்ட சிறு தவக்குடில் ஒன்றை கண்டனர். தொலைவிலிருந்து அதை நோக்கி கணித்தனர். தன் விழி மூடி அறிந்து மீண்ட வர்கை “அவர் பெயர் பூர்ணர். காசியப குலத்துதித்த அருந்தவ முனிவர். நூறாண்டு காலம் இங்கு தவம் செய்து தன் அரவுப்புற்றில் இருந்து நாகமணியை நெற்றிப்பொட்டிற்கு எடுத்து ஆயிரம் இதழ் அலரச்செய்தவர். இங்குள தண்ணொளி அவரது சகஸ்ரத்தில் எழுந்த பெருநிலவின் ஒளியே” என்றாள். “நான் அச்சம் கொள்கிறேனடி. சென்றுவிடுவோம்” என்றாள் லதை.
“இல்லையடி. நாம் தீரா விடாய் ஒன்றினால் இங்கு வந்துளோம். அதைத் தீர்க்கும் சொல் இவரிடமே உள்ளது போலும். இல்லையேல் நாம் இங்கு எழ வாய்ப்பில்லை” என்றாள் வர்கை. “வருக! அதை அவரிடமே கேட்போம்” என்று நால்வரும் எழ கை நீட்டி அவர்களை தடுத்தாள் வர்கை. “விழைவற்று எஞ்சாது முழுமைகொண்ட உள்ளத்தால் இவ்வொளியை அடைந்துள்ளார் இம்முனிவர். இவரை வென்று அச்சொல்லை அடைவது எளிதல்ல” என்றாள்.
“என்னடி செய்வது?” என்றாள் லதை. “நிகர் உலகொன்றை படைத்து திரிசங்குவை அங்கு அமர்த்தும் தவவலிமை கொண்டிருந்த விஸ்வாமித்திரரே நம்மவள் ஒருத்தி முன் காமம் கொண்டு அடிபணிந்த கதைகளை நாமறிவோம். மெய்த்தேடிகளென இவரை வெல்ல நெடுநாளாகும். காமினிகளென இவரை வளைக்க ஒரு நொடியே போதும்” என்றாள் வர்கை. “அத்தனை கதைகளிலும் அரும்படிவர் தவம் கலைந்தது நிகழ்ந்துள்ளது. ஆனால் தவம் கலைத்தவள் எதையும் பெற்றதில்லை” என்றாள் சௌரஃபேயி. “ஆம். இவர் தவம் கலைத்து நாம் அடைவதொன்றில்லை” என்றாள் சமீசி.
“இல்லையடி, முற்றிலும் சொல்லின்மை கொண்ட ஒருவர் அடையும் முழுமை இவர் கொண்டுள்ளது. இவர் வாய்திறந்து நமக்கு அருளவேண்டுமென்றால் இந்த இறைநிலை கலைந்தே ஆகவேண்டும். நமக்கு வேறு வழியில்லை” என்றாள் வர்கை. எண்ணி குழம்பியபின் வர்கையின் சொல்லை அவர்கள் ஐவரும் நோக்கினர். வர்கை “என்ன செய்வதென்று அறியேன். கடலென தவப்பேராற்றல் கொண்ட இவரை எங்ஙனம் வெல்வேன்?” என்று ஏங்கினாள். கண்மூடி நெஞ்சில் கைவைத்து “விண் உலாவியாகிய நாரதரே, உங்கள் அடிபணிந்து இதை கோருகிறேன். அருள்க!” என்றாள்.
இசை முழங்க அங்கு ஒரு மலர்மேல் தோன்றிய நாரதர் “சொல்க கன்னியே!” என்றார். “இவ்வருந்தவத்தோனை எப்படி வெல்வேன்?” என்றாள் வர்கை. “தவம் முதிரும்தோறும் முனிவரை வெல்வது எளிதென்று உணர்க! பேராவல் கொண்டு தவம் நாடி வரும் இளைஞன் ஒருவனை வெல்ல உன்னால் இயலாது. அவன் விழைவதனைத்தும் காலத்துக்கு முன்னாலெங்கோ உள்ளன என்பதால் ஒரு கணமும் பின்னால் திரும்பிப் பார்க்க மாட்டான்” நாரதர் சொன்னார்.
“ஆனால் இங்கு அமர்ந்து விழைவுகளை ஒவ்வொன்றாக உதிர்த்து தவத்தின் முடியேறி அமர்ந்திருக்கையில் இவர் இழந்ததே மிகுதி. எனவே ஒராயிரம் அழைப்புகளாக அவரது கடந்த காலம் பின்னால் விரிந்துள்ளது. கன்னியே, முள்முனையில் நெல்லிக்கனி என்று முழுமை கொண்ட தவத்தை சொல்கிறார்கள். அதைத் தொட்டு உருட்டுவது மிக எளிது. நீ சென்று அழைத்தால் திரும்பாமலிருக்க அவரால் இயலாது” என்றார் நாரதர்.
“அது முறையோ?” என்றாள் வர்கை. “இப்புவியில் தன் இயல்பான விழைவொன்றை தொடர்ந்து வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இங்குள்ள அனைத்தும் நுகர்கனிகளும் விளையாட்டுப் பொருட்களும்தான். பாதையில் துணைவரும் தோழமைகள் அவை. ஆனால் தன்னை ஒறுத்து தவநிலை கொண்டு இறையளித்த எல்லையைக் கடக்க உன்னும் ஒருவர் தெய்வங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். அவருக்கு இங்குள்ள அனைத்தும் எதிரிகள் என்றே ஆகும். விண்ணும் மண்ணும் அளிக்கும் அமுதங்கள் அனைத்தும் நஞ்சாகும்” என்றார் நாரதர்.
“அறிக! முழுமைதேடும் தவ முனிவர்கள் முன் நஞ்சு கொண்டெழ நாகங்களுக்கு ஒப்புதல் உள்ளது. விழைவை ஏந்திவந்து சூழ தேவர்களுக்கு ஆணை உள்ளது. காமம் சுமந்து முன் சென்று நிற்க தேவகன்னியர் கடமை கொண்டுள்ளார்கள். தெய்வங்களுக்கு உகந்ததையே நீ செய்கிறாய். செல்க!” என்றார். தலைவணங்கி “அவ்வண்ணமே” என்று சொல்லி அவள் ஒசிந்து நடந்து தன் நான்கு தோழியருடன் முனிவர் வாழ்ந்த தவக்குடிலுக்குள் நுழைந்தாள்.
அப்போது பூர்ணர் தன் உள்ளே எழுந்த ஒளிப்பெருவிழியின் நடுவே ஊசி முனையால் தொட்டு எடுக்கும் அளவுக்கு சின்னஞ்சிறிய கரும்புள்ளி ஒன்றைக் கண்டு அதை நெருங்கிக் கொண்டிருந்தார். அணுகும்தோறும் அது ஒரு பெரும் சுழியின் மையம் என்பதை உணர்ந்தார். சுழிமையத்தை நேர்கோட்டில் அணுக முடியாது. பல்லாயிரம் கோடி காதங்கள் அதற்கு சுற்றும் வளைந்து சென்றன. அகலத்தில் தொலைவும் அணுக்கத்தில் விரைவும் என்றான புரிசுழல் பாதையில் தானெனக் கொண்ட அனைத்தும் தெறித்து விலகி பின்னெங்கோ சென்று மறைய தனித்து பின் தனித்து பின் தனித்து தனித்திருப்பதென்பதும் பறக்க அவர் சென்று கொண்டிருந்தபோது மிகத்தொலைவில் எங்கோ ஐந்து விண்மீன்களை கண்டார்.
அவை மேலும் மேலும் என ஒளி கொண்டு அணுகி வந்தன. தன் போதத்தின் துளி ஒன்றைத் தெறித்து புரிசுழல்பாதையில் பின்னுக்கு அனுப்பி விழிகள் என்றாக்கி அவ்வெரிவிண்மீன்களை நோக்கவிட்டு முன்சுழல் பாதையில் தொடர்ந்தார். விழி திறந்த பூர்ணரைக் கண்டு வணங்கி நின்ற வர்கை “அருந்தவ முனிவரின் அடிகளை வணங்கினேன். இக்காட்டில் எழுந்த ஐந்து அரம்பையர்கள் நாங்கள்” என்றாள். “இத்தவக்குடிலில் உங்களுக்கென்ன வேலை? வெளியேறுங்கள்!” என்றார் பூர்ணர். “ஆலமர்ந்துள்ளதால் தங்களை ஆசிரியரெனக் கொண்டோம். தங்கள் அடி பணிந்து எங்கள் ஐயம் ஒன்றை தீர்க்கும் பொருட்டு வந்தோம்” என்றாள்.
“விலகுங்கள்! நான் புலன்ஒறுத்து அகம் அவித்து முதல்முழுமை நோக்கி சென்று கொண்டிருப்பவன்” என்றார் பூர்ணர். “அருளறிவு தேடி வரும் மாணாக்கர்களை விலக்குவது ஆசிரியருக்கு அழகல்ல. எங்கள் வினாக்களை எதிர் கொள்ளுங்கள்” என்றாள். “அதற்குரிய நேரம் இதல்ல. இது என் முழுமையின் தருணம்” என்றார் பூர்ணர். “தங்கள் முழுமை எங்கள் சொல்லால் கலையுமென்றால் அது அத்தனை நொய்மையானதா?” என்றாள் லதை.
“சொல்லெடுக்காதீர்கள். விலகுங்கள்…” என்று சினந்தார் பூர்ணர். “அவ்வண்ணமே விலகுகிறோம். ஆனால் எங்கள் ஐயங்களை இங்கு விட்டுச் செல்கிறோம். இங்கு அவை விளையாடட்டும்” என்று சொல்லி தன் குழல்சூடிய வெண்முல்லை மலர்களை அள்ளி தரையிலிட்டுவிட்டு திரும்பி தன் தோழியரை நோக்கி “வாங்களடி” என்றபடி தவக்குடிலை விட்டு வெளியே சென்றாள் வர்கை. பிறரும் தாங்கள் சூடிய மலர்களை உதிர்த்துவிட்டுச்சென்றனர்.
அம்மலர்களிலிருந்து அவர்கள் முளைத்தெழுந்தனர். ஐவரும் ஐநூற்றுவர் ஆயினர். காமம் கனன்ற விழிகள் விரிந்து அவரை நோக்கின. செவ்விதழ்கள் களியாடின. மென்முலைகள் எழுந்தமைந்து மூச்செறிந்தன. திகைத்த பூர்ணர் “உள்ளே வருக!” என்று அவளை அழைத்தார். அவள் சிரித்தபடி வந்து நின்றாள். “உங்கள் வினாக்களை கேளுங்கள்” என்றார் பூர்ணர்.
வர்கை தலைவணங்கி “தங்கள் அருள் கொள்ளும் நல்லூழ் கொண்டவளானேன். இது முதல் வினா” என்றாள். அவர் தலையசைக்க “முதல்நிறைவின்மை என்பது எது? எனென்றால் அதுவே வாழ்வைச் செலுத்தும் முதல் வினா” என்றாள். பூர்ணர் சினம் மின்னிய விழிகளுடன் திரும்பி அருகே நின்ற சௌரஃபேயியை நோக்க அவள் புன்னகையுடன் வணங்கி “எவ்வினாவின் முன் ஒருவன் தன் இறுதியை காண்கிறான்?” என்றாள்.
பூர்ணரின் நிலையழிவைக் கண்டு புன்னகைத்த சமீசி “எவ்விடையில் அவன் முதல்நிறைவை காண்கிறான்?” என்றாள். ஃபுல்புதை “எவ்விடையில் ஒருவன் வினாவென்பது பொய் என உணர்கிறான்?” என்றாள். லதை “எவ்வினாவுக்கு தன்னையே விடையென்று நிகர்வைக்கிறான்?” என்றாள்.
சினந்தெழுந்து “வெளியேறுங்கள்! இதை வினவவா இங்கு வந்தீர்கள்?” என்று பூர்ணர் கூவினார். இடை ஒசிந்து பற்களில் இளநகை கூட்டி நாவால் இதழ் நீவி வர்கை சொன்னாள் “எங்களை இங்கு கொண்டு வந்தமை வினாக்களே. இவ்வினாக்களை நிறைக்காமல் எங்கும் செல்லவியலாது நீங்கள்.”
கோடி யோஜனை தொலைவிலிருந்து எரிந்து வந்து விழுந்து அதிர்ந்து விழித்து உடல் விதிர்த்து அங்கு நின்றார் பூர்ணர். கடந்து வந்த வழி தோறும் மீண்டும் நடந்து சென்றாலொழிய அவ்வினாக்களுக்கு விடை அளிக்க முடியாதென்று உணர்ந்தார். கால் தளர்ந்து மீண்டும் ஆலமரத்து வேர்க்குவையில் அமர்ந்தார். வேர் பின்னி நிறைந்தது போல் வழிந்த சடை முடிக்கற்றையை அள்ளி தன் வெற்றுடலை மறைத்து கால் மடித்து அமர்ந்தார். பெருமூச்சுடன் கண்களை மூடி ஏங்கினார்.
பின்பு சீற்றம் கொண்டு பாதாள நாகமென அனல்சீறி விழி கனன்று “நீங்கள் அறிந்து இதை நிகழ்த்தவில்லை. என் முழுமைக்கு முன் வந்த தடைக்கற்கள் நீங்கள். ஆயினும் நீங்கள் இழைத்த பிழைக்கு ஈடு செய்தே ஆகவேண்டும். அகல்க! ஐவரும் ஐந்து முதலைகளென மாறி இங்குள ஐந்து தடாகங்களில் வாழுங்கள். காலம் உங்களை காற்று பாறையை என கடந்து செல்லட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.
திகைத்த வர்கை “முனிவரே, உங்கள் தவம் கலைத்து எங்களுடன் களியாட்டுக்கு அழைக்கவே விழைந்தோம். களியாட்டன்றி பிறிதொன்றும் அறியாத தேவகன்னிகைகள் நாங்கள். பெரும்பிழை செய்துவிட்டோம்” என்றாள். “அகல்க! நீங்கள் விழைந்த வினாவிற்கு விடையுடன் எவன் வருகிறானோ அவனிடமிருந்து பெற்று மீள்க!” என்றார் பூர்ணர். “தேவ…” என்று லதை கை கூப்ப “இனி ஒரு சொல் தேவையில்லை” என்றார் பூர்ணர்.
ஐவரும் அழுத விழிகளுடன் தளர்ந்த காலடிகளுடன் திரும்பினர். “நீரிலும் இன்றி நிலத்திலும் இன்றி இனி எத்தனை யுகங்களடி!” என்றாள் சௌரஃபேயி. “எண்ணி எண்ணி விழிநீர் வழிய காத்திருப்பொன்றே வாழ்தல் என எஞ்சும் போலும்” என்றாள் சமீசி. நடந்து செல்கையிலேயே ஐவரும் முழந்தாளிட்டு மண்ணில் அமர்ந்து கை பரப்பி கால் பரப்பி முதலைகள் என ஆனார்கள். சிப்பியடுக்கியதுபோல் செதில் எழுந்து காரைப்பழம்போல் விழி உறுத்து வெண்பற்கள் எழுந்த விரிவாய் திறந்து தவழ்ந்து வால் திளைக்க சென்று அத்தடாகங்களில் இறங்கினர்.
அகத்தியத்தில் வர்கை இறங்கினாள் சௌஃபத்ரத்தில் சௌரஃபேயியும் பௌலோமத்தில் சமீசியும் காரண்டமத்தில் ஃபுல்புதையும் சுப்ரசன்னத்தில் லதையும் முதலைகள் ஆனார்கள். தவம் கலைந்த பூர்ணர் தன் தவக்குடில் விட்டிறங்கி தன் கைகளாலேயே சடை முடிகற்றைகளை பறித்து வீசி அருகில் இருந்த சுனையில் நீராடி எழுந்து தேவாரண்யத்தை விட்டு விலகிச் சென்றார். வடமலைக்கு சரிவில் ஏறி பனிமுடிகளை அடைந்து அங்கு தன் உடல் நீத்து பிறிதொரு பிறப்பெடுத்து அவர் தவம் தொடர்ந்தார்.
தேவாரண்யத்தின் இருண்ட காட்டில் வேட்டைக்கு வந்த வேடர்களையும் கானாட வந்த இளவரசர்களையும் தவம் கொள்ள வந்த முனிவரையும் அங்கு ஐந்து சுனைகளில் வாழும் பெரு முதலைகள் கவ்வி இழுத்து நீராழத்திற்கு கொண்டு சென்று உண்டன. கண்ணுக்குத் தெரிந்தும் காட்சியிலிருந்து மறைந்தும் விளையாடி உயிர் கொள்ளும் அந்த முதலைகளின் கதைகள் பரவியபோது தேவாரண்யத்தின் திசைக்கே எவரும் செல்லாமலாயினர். நூற்றாண்டுகளில் முட்புதர்களும் தழையும் வளர்ந்து தேவாரண்யம் ஒற்றைப் பெரும் பரப்பாக மாறி மூடியது.
பின்பு அக்கதைகளும் மறைந்தன. கதைகளால் மட்டுமே நினைவில் நிறுத்தப்படுபவை நிலங்கள் என்பதால் அந்நிலத்தையும் எவரும் அறியாதாயினர். அறியா நிலங்களைத் தேடி எவரும் வருவதில்லை என்பதனால் அந்நிலம் இல்லாமலாயிற்று. எங்கோ எவரோ தன் ஆழ் கனவில் மட்டும் கண்டு அஞ்சுவதாக மாறியது. ஐந்து விழிகளென குளிர்ச்சுனைகள். அந்நீர்பரப்பில் வால் அளைந்து கரை எழுந்து வாய் திறந்து நிற்கும் பெரு முதலைகள். ஒவ்வொரு கணமும் எண்ணி எண்ணி அவை விழி நீர் உகுத்துக் கொண்டிருந்தன.
மணிபூரக நாட்டிலிருந்து மலை வணிகர் குழாமுடன் இறங்கி பிரம்மபுத்ரையின் பெரும்பெருக்குக்கு வந்து படகிலேறி வங்க நாட்டை அடைந்து கலிங்கம் புகுந்து மகாநதியில் ஒழுகிய அம்பிகளில் ஏறி தண்டகாரண்யத்தைக் கடந்து பதினெட்டு ஆயர் சிற்றூர்களில் வாழ்ந்து வேசரநாடு செல்லும் பொருட்டு அவ்வழி வந்தான் இளைய பாண்டவன். நெஞ்சில் விழுந்த நீள்தாடியும், புறா அலகு போல் எழுந்த நகங்களும், தோளில் புரண்ட சுரிகுழல் கற்றைகளும் நூறுமுறை தீட்டிய அம்பு நுனி போன்ற விழிகளுமாக வேங்கை என நடந்து அவன் வந்தான்.
வேசர நாட்டுக்குச் செல்லும் பாதை எது என்று வணிகரிடம் வினவினான். அவர்கள் சுட்டிய வழியில் சற்று நடந்தபோது தன் தலைக்கு மேல் வட திசையிலிருந்து தென் திசைக்கு வலசை போகும் பறவைகள் செல்லும் நேர் வழி ஒன்றைக் கண்டான். “அவ்வழியே நாம் ஏன் செல்லக்கூடாது?” என்று வணிகரிடம் கேட்டான். “அதை யாமறியோம். இதுவே வழி என்று எம் முன்னோர் சொல்லிலும் நினைவிலும் நாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்” என்றனர் வணிகர். “அது வணிகரின் வழி. வீரரின் வழி என்றும் புதியது” என்றான் அர்ஜுனன். “இந்தப் பாதை எதையோ கரந்து செல்கிறது. பிறர் அறியாத ஒன்றை. ஒரு வேளை அதை அறிவதற்கென்றே எனது இப்பயணம் அமைந்திருக்கலாம்.”
“வீரரே… வானாளும் புள்ளின் வழியல்ல மண் தொட்டு நடக்கும் மானுடரின் வழி. இது யானை செல்லும் பாதை. இதுவே உறுதியானது” என்றார் வணிகர். “எனது வழி காற்றில் மிதக்கும் அம்புகளுக்குரியது. அம்புகளும் பறவைகளே” என்று புன்னகைத்து வலசைப் பறவைகளின் நிழல் தொட்டுச் சென்ற பாதையில் அர்ஜுனன் நடந்தான். பன்னிரு நாட்கள் புதர்களை ஊடுருவிக் கடந்தான். புதர்களில் தாவி மறிந்து அவன் தேவாரண்யத்தின் கரையை அடைந்தான். அங்கு அவனுக்கென காத்திருந்தன ஐந்து சுனை முதலைகள்.